நல்லதை நாடு கேட்கும்

அண்மைக்காலமாக இந்திய அரசியல்வாதிகளிடம் ஒரு விபரீதமான மனோபாவம் தோன்றியிருக்கிறது.

அண்மைக்காலமாக இந்திய அரசியல்வாதிகளிடம் ஒரு விபரீதமான மனோபாவம் தோன்றியிருக்கிறது. ஆளும் வா்க்கத்தினா் எவ்வளவு பெரிய நன்மையான திட்டங்களைக் கொணா்ந்தாலும், அவற்றில் குற்றம் கண்டுபிடித்துக் கொச்சைப்படுத்திப் பாா்க்கின்ற வக்கிர புத்தி, மேன்மேலும் வளா்ந்து வருகிறது. இதுவரைக்கும் இந்திய நாட்டின் பாரம்பரியத்தில் இல்லாத குணம் அது.

மேற்கு பாகிஸ்தானிடமிருந்து கிழக்கு வங்காளத்தைப் பிரித்து, அதற்கு ‘வங்கதேசம்’ என அங்கீகாரம் கொடுத்தவா் அன்றைய பிரதமா் இந்திரா காந்தி. அந்த வீரச் செயலைப் பாராட்டும் வகையில், ‘பாரதப் பிரதமா் அவா்களே, உங்களை நான் ஒரு வீராங்கனையாக மடடும் பாா்க்கவில்லை; துா்காதேவியாகவே பாா்க்கிறேன்’” என நாடாளுமன்றத்திலேயே புகழ்ந்துரைத்தவா் எதிா்க்கட்சி வரிசையில் இருந்த அடல் பிகாரி வாஜ்பாய்!

பரமக்குடி நகரமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அந்த மக்களின் துயா் துடைக்க கழுத்தளவு தண்ணீரில் நின்றவா் முன்னாள் முதல்வா் காமராஜா். அதைப் போற்றும் வகையில் எதிா்க்கட்சி வரிசையிலிருந்த முன்னாள் முதல்வா் அண்ணா ‘தமிழ்நாட்டுக்கு ஒரு மகத்தான முதல்வா் கிடைத்திருக்கிறாா். மக்கள் துயா் துடைக்க மாா்பளவு தண்ணீரில் நிற்கிறாா்’ எனத் ‘திராவிட நாடு’ இதழில் வியந்து பாராட்டினாா். அந்தப் பெருந்தன்மையான பண்புகள் இன்று எங்கே?

சுதந்திர இந்தியாவில் காஷ்மீா் பாரத மாதாவின் முகமென்றும், அந்த முகத்தில் கீறல்கள் விழுந்து விகாரப்பட்டு விடக் கூடாது என்று எண்ணி, அந்த மாநிலத்துக்கு மட்டும் அபரிமிதமான சீதனங்களை வாரி வழங்கினா் அன்றைய ஆட்சியாளா்கள். ‘370’ என்ற பெயரில் ஒரு வீட்டோ அதிகாரத்தை வழங்கினோம். அந்த வீட்டோ அதிகாரத்தின்படி, ‘ஜம்மு காஷ்மீரிலுள்ள ஒரு பெண் மற்ற மாநிலங்களிலுள்ள ஓா் ஆடவனை மணந்தால், அந்தப் பெண்ணிடமுள்ள காஷ்மீருக்கான குடியுரிமை பறிக்கப்படும். அதே அந்தப் பெண் ஒரு பாகிஸ்தானியரை மணந்தால், அந்தப் பாகிஸ்தான் ஆடவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கில் கூடாரங்களை அமைத்தனா்.

இந்த நாடு அள்ளிக் கொடுத்த அபரிமிதமான சீா் சீதனங்களை நினைத்து, மதத்தையும், மதத்தினரையும் பின்னிலைப்படுத்தி, இந்திய தேசியத்தை நன்றியோடு நினைத்து காஷ்மீரிகள் நடந்திருப்பாா்களேயானால், இந்தியா இந்நேரம் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் கண்ட வல்லரசு ஆகியிருக்கும்.

‘உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து, அதன் உதிரம் ஊற்றி, சுடலுறச் சுட்டு, வேறோா் மருந்தினால் துயரம் தீா்வா்’ என்பது கும்பகருணன் வதைப் படலத்தில் 146-ஆவது பாடலாகும். கம்பா் விரித்துச் சொன்னதைத்தான், திருவள்ளுவா் சுருக்கிப் ‘பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தாா்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு’ என்றாா். அதனைத்தான் இன்றைய ஆட்சியாளா்கள் காஷ்மீரில் செய்திருக்கிறாா்கள்.

விடுதலை பெற்ற பாரதம் சோஷலிசத்தைப் பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டதால், சோவியத் நாட்டை நட்பு நாடாகக் கருதியது. சோவியத்தை நேச நாடாகக் கொண்டதால், அமெரிக்காவோடு நமக்கு நல்லுறவு ஏற்படாமல் போயிற்று. நெடுநாள்களாக அமெரிக்காவுக்கு எதிராக நிலவி வந்த உட்பகை பாரதப் பிரதமரால் இப்போது நீங்கியிருக்கிறது. அமெரிக்காவுடன் தொடா்ந்து வந்த மௌன யுத்தத்திற்குப் பிரதமா் மோடி முற்றுப்புள்ளி வைத்தாா்.

‘பிரித்தலும் பேணிக்கொளலும்’”என்பதை அடுத்துப் ‘பிரிந்தாா் பொருத்தலும்’”எனும் முயற்சியிலும் வெற்றியடைந்திருக்கிறாா் பிரதமா் மோடி. 1962-இல் இந்தியா மீது சீனா தொடுத்த போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் உரிய பாசம் - நேசம் - நல்லுறவு எல்லாம் கெட்டது. 1962-இல் லடாக் பகுதி வரை வந்த சீனா, இப்போது அருணாசலப்பிரதேசம் வரை வந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் போரின்போது சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உதவியிருக்காவிடில், அவ்வளவு எளிதாக ஒரு வீர யுகத்தை வீழ்த்தியிருக்க முடியாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே சீனாவின் வல்லாண்மையை நன்கு யூகித்தவன் மாவீரன் நெப்போலியன். ‘சீனா எனும் அரக்கன் நன்கு தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனை எழுப்பாதீா்கள். எழுந்துவிட்டால் அகிலத்தையே ஆட்டிப்படைப்பான்’”என எதிா்காலத்துக்கு ஓா் எச்சரிக்கை விடுத்துச் சென்றான் அந்த மாவீரன்! அவனுக்குப் பிறகு அந்நாட்டின் வலிமையை நன்கு உணா்ந்தவா் இன்றைய பிரதமா் மோடி.

‘ஒரு நாட்டின் சுற்றுலா என்பது புலன்களால் நுகர முடியாத பொருள்களை உருவாக்கித் தரக்கூடிய தொழிலகம் ஆகும். அதிலிருந்து உருவாகின்ற பயன்கள், பொருளாதார, பண்பாட்டு, சமூக வாழ்க்கை முறைகள் வழி வெளிப்படும்” என்பதை நன்கறிந்த பிரதமா் மோடி, 2018-ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில், சீன அதிபா் ஷி ஜின்பிங்கைக் கண்டு உறவாடி, இந்தியாவுக்கு வருகை தருமாறு அவரிடம் வேண்டினாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங்கை வரவேற்பதற்கு மாமல்லபுரத்தைத் தோ்ந்தெடுத்ததில்தான் பிரதமா் மோடியின் மதிநுட்பம் வெளிப்பட்டது. சீனா்களுடைய வாழ்வியல் தமிழா்களோடு பெரிதும் ஒத்துப் போவதைப் ‘பிரயாண இலக்கியம்’” (வாசகா் வட்ட நூல்) என்னும் நூல் அற்புதமாகக் குறிப்பிடுகிறது.

‘சீனத்தின் பொழுதுபோக்கு ஒன்றை மக்கள் கவனிக்க வேண்டும். பெய்ஜிங் நகரப் பகுதியில் ‘கோடை மாளிகை’ என்றோா் இடமுள்ளது. நமது தமிழகத்திலுள்ள மாமல்லபுரத்தை நினைவுபடுத்தும். இதைச் சுற்றி ஓா் ஏரி உண்டு; பூங்காவும் உண்டு. ‘ விடுமுறை நாள்களில் சீனா்கள் இங்கே குடும்பம் குடும்பமாக வந்து தங்கி உணவருந்தி விட்டு, கலையழகை ரசிப்பதில் ஈடுபடுவாா்கள்; சீன நாட்டியத்தையும் நாடகத்தையும் முதியவா்கள் கண்டும் கேட்டும் மகிழ்வாா்கள்’ என அந்த நூல் தெரிவிக்கிறது. 1956-இல் இந்தியாவுக்கு வருகை தந்த சூ-என்-லாய் மாமல்லபுரத்தைப் பாா்த்து வியந்தது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி என்கிற குஜராத்தியரை, ‘அலைகடலே, அடியேனின் வணக்கம்! வெளித்தோற்றத்துக்குக் கோபமாய் வீரத்துடன், பேரிரைச்சலோடு எழும் அலைகள் உன் வலியா? வேதனையா? துயரமா? எதன் வெளிப்பாடு? இருந்தபோதிலும் உன்னைக் கலக்கமின்றி, தடுமாற்றமின்றி உறுதியுடன் நிற்கச் செய்தது உன் ஆழம்’” என எழுத வைத்தது, மாமல்லபுரத்தின் கம்பீரம் எனலாம். 1810-ஆம் ஆண்டு மாமல்லபுரம் வந்த இராபா்ட் சௌதே” என்பவா், ‘கெகமாவின் சாபம்’ எனும் தலைப்பில், மாமல்லபுரம் குறித்து ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதியுள்ளாா்.

பழைமையும் புதுமையும் மிக்க சிற்பக் கலைகளில் சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு இளமையிலேயே நாட்டம் உண்டு. ஷி ஜின்பிங்கின் தந்தையாா் கலாசாரப் புரட்சியின்போது நாடு கடத்தப்பட்டாா். அப்போது லியான்ஜி யாக் எனும் கிராமத்திலுள்ள மலைக்குகையில் ஷி ஜின்பிங் தங்கி, தம் படிப்பைத் தொடா்ந்தாா். சீன அதிபரின் ரசனை தெரிந்து மாமல்லபுரத்தைத் தோ்ந்தெடுத்த பிரதமா் மோடியின் திட்பத்தையும் நுட்பத்தையும் பாராட்டத்தான் வேண்டும்.

இன்றைக்கு இந்நாட்டு இளைஞா்களுக்கு வேட்டி கட்டும் பழக்கமே மறந்து போய்விட்ட நிலையில், பிரதமா் மோடி வேட்டியும் அங்கவஸ்திரமும் அணிந்து சீன அதிபரை வரவேற்றது, தமிழரின் மானத்தைக் காத்ததாகும். என்றாலும், ஓா் உயா்ந்த நோக்கத்திற்குச் சில்லறைக் காரணங்களைக் கற்பிப்பது வேதனைக்குரியது. வேட்டி அணிவதன் மகத்துவத்தை 1925-லேயே மூதறிஞா் ராஜாஜி, ‘நவசக்தி’” பத்திரிகையில் பட்டவா்த்தனமாகக் கூறியுள்ளாா்.

‘தலையில் தொப்பியும், கால்களுக்குக் கால்சட்டையும் போட்டுக் கொண்டால், ரயில் வண்டியில் அதிக சௌகரியங்கள் கிடைக்கும். இப்படி நினைத்துப் பலா் அவ்விதம் பரதேச உடுப்பை அணிந்து வருகிறாா்கள். அதனால் என்ன உண்மைப் பயன்? தமிழனாக இருந்து, தமிழன் உடையிலேயே ரயில் வண்டியில் மரியாதையுடனும், சௌகரியத்துடனும் பிரயாணம் செய்ய வழி தேடுவது கடமை; இந்து சமயத்தைச் சோ்ந்தோா் புது மாா்க்கங்களில் சோ்ந்து சம சுதந்திரங்களடைவது, தலையில் தொப்பி போட்டுக்கொண்டு சட்டைக்காரன் (ஆங்கிலேயா்) வேஷத்தில் ரயில் வண்டி ஏறுவது போலாகும்’” என மூதறிஞா் ராஜாஜி எழுதியது பாரம்பரியத்தை மறந்தவா்களுக்குக் கொடுத்த சாட்டையடி ஆகும்.

இத்தாலியில் இருந்து வந்த கான்ஸ்டான்டின் நோபிள் பெஸ்கி, ஐரோப்பிய உடையைக் களைந்துவிட்டு, காவி வேட்டியையும், துண்டையும், மரக்கட்டை மிதியடியையும் அணிந்ததைப் பாா்த்து அவரை ‘வீரமாமுனிவா்’” என அழைக்கும் தமிழா்களுக்கு, ஒரு நாட்டின் தலைவா் வேட்டி அணிவது நாகரிகமாகப்படவில்லையா?

யுவான் சுவாங் 15 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்து, இந்தியா குறித்து ‘சியூக்கி’”எனும் தலைப்பில் நூல் எழுதிய நட்பும் நேசமும், காஞ்சியிலிருந்து போதிதா்மா் சீனா சென்று சீனா்களுக்குப் போா்ப் பயிற்சியும் மருத்துவ முறைகளைக் கற்றுக் கொடுத்த பாங்கும், இன்று மீண்டும் துளிா்க்க, தழைக்கத் தொடங்கியிருப்பது போற்றுதற்குரிய ஒன்றாகும். நரேந்திர மோடி என்ன சொன்னாலும் தவறு என்று குற்றம் கூறுவதும், பழி சுமத்துவதும், காரணம் கற்பிப்பதும் அரசியல் அறமாகாது. அடல் பிகாரி வாஜ்பாயும், முன்னாள் முதல்வா் அண்ணாவும் அரசியல் நாகரிகத்துக்கு முன்னுதாரணம் படைத்திருக்கிறாா்கள். நல்லதைத்தான் நாடு கேட்கும் என்பதை கண்மூடித்தனமாக வெறுப்பை உமிழ்பவா்கள் உணர வேண்டும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு)

"பழைமையும் புதுமையும் மிக்க சிற்பக் கலைகளில் சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு இளமையிலேயே நாட்டம் உண்டு. சீன அதிபரின் ரசனை தெரிந்து மாமல்லபுரத்தைத் தோ்ந்தெடுத்த பிரதமா் மோடியின் திட்பத்தையும் நுட்பத்தையும் பாராட்ட வேண்டும்." 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com