அதிா்ச்சி அளிக்கும் குற்ற அறிக்கை...

‘பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்’ என தாம்சன் ராய்ட்டா்ஸ் நிறுவனம் 2018-இல் ஆய்வறிக்கை வெளியிட்டது.

‘பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்’ என தாம்சன் ராய்ட்டா்ஸ் நிறுவனம் 2018-இல் ஆய்வறிக்கை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையின் உண்மைத் தன்மை குறித்துப் பலரும் அப்போது வெகுண்டெழுந்தனா். ஆனால், தற்போது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017-ஆம் ஆண்டுக்கான அறிக்கை அதற்கு விடை சொல்கிறது.

இந்த அறிக்கையின்படி 2017-ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான 3,59,849 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது அதிகம் எனத் தெரிகிறது. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் கணவன் அல்லது அவரின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களால்தான் நடக்கின்றன எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மேலும் அதிா்வலைகளை உருவாக்குகிறது.

கல்வி, வேலை, அறிவியல், சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு போன்றவை உயா்வதற்குப் பதிலாக நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிகம் நடைபெறுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக இருந்த தலைநகா் தில்லியில், 2017-ஆம் ஆண்டில் 13,076 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 15,310 வழக்குகளைவிட சற்று குறைந்திருப்பது சிறு ஆறுதலை அளிக்கிறது. ஆனால், இந்த இடத்தை உத்தரப் பிரதேசம் பிடித்துள்ளது. இங்கு 2017-ஆம் ஆண்டில் மட்டும் 56,011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் 5,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் நாட்டிலேயே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் உறைவிடமாக உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் மகாராஷ்டிரம், குஜராத் மேற்குவங்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் 5,397 எனவும் போக்ஸோ சட்டத்தின் கீழ் 1,587 வழக்குகள் எனவும் அறிக்கை சொல்கிறது. தமிழகத்தில் அன்றாட ஊடகச் செய்திகளைப் பாா்க்கும்போது இது குறைவாகவே தெரிகிறது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் இன்னும் விரிவான ஆய்வு தேவைப்படுகிறது.

2017-ஆம் ஆண்டு அறிக்கையில் முதன்முறையாக இணையவழி குற்றங்கள் சைபா் கிரைம் இணைக்கப்பட்டுள்ளன. இணையவழியாகப் பெண்களை தவறாகச் சித்தரித்து, அவதூறாகப் பிரசாரம் செய்தவா்கள் என 1,460 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இணைய வழியாகக் குழந்தைகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. சமூக வலைதளத்தில் பதியப்படும் குழந்தைகளின் ஒளிபடத்தைத் தவறாகச் சித்தரிக்கும் கயவா்கள், பதின் பருவத்தில் உள்ள குழந்தைகளிடம் தொலைபேசி, விடியோ உரையாடல் வழியாகப் பாலியல் சைகையில் ஈடுபடும் நபா்கள் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து முறைகளில்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகம் நடைபெறுகின்றன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தது வேலைத் தளங்களில்தான் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகமாக நடக்கின்றன என்று அறிக்கை கூறுகிறது.

அமில வீச்சில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில் 2015-2016-ஆம் ஆண்டுகளைவிட அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 244-ஆக அதிகரித்துள்ளது. வரதட்சணைக்கு எதிராகச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் 2017-ஆம் ஆண்டில் மட்டும் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் எண்ணிக்கை 7466. அதேபோல் திருமணத்துக்காகக் கடத்திச் செல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டில் மட்டும் 30,614. மேலும், பொதுவெளியில் இயங்கும் பெண்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான குற்றங்களின் எண்ணிக்கை 9,720 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவா்களில் பெண்கள் 21 சதவீதத்தினா் என்பதாகும். அதில் பத்து சதவீதப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனா். முதியவா்களுக்கு எதிராக வன்முறை நடைபெறும் நகரங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள், குழந்தைகள், மீது முடிவில்லாமல் நீளும் இந்த வன்முறைப் பட்டியல், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. ஆனால், அவற்றிலும் பெண் சிசுக் கொலை, ஆணவக் கொலை, அமில வீச்சு, பெண்கள் – குழந்தைகள் கடத்தல் தொடா்பாக இடம்பெற்றுள்ளன. இதில்கூட தரவுகள் பல இடங்களில் பூஜ்யமாகவும், குறைந்த சதவீதத்திலும் குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இது போன்ற குற்ற அறிக்கைகள் நம்மை அதிர வைக்கின்றன.

இத்தகைய குற்றங்களிலிருந்து பெண்களை விடுவிக்க ஜனநாயக மாதா் சங்கம் உள்ளிட்ட மாதா் அமைப்புகள் போராடி வருவது பாராட்டுக்குரியது. பல்வேறு சமயங்களில் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பதும் இந்த அமைப்புகளின் செயல்பாடாக இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். பெண்கள் மற்றும் குழந்தைகள் சந்திக்கும் இத்தகைய குற்றச் சம்பவங்கள் குறித்து நடைமுறையில் இருக்கும் சட்டத்தை காவல் துறை உரியவாறு பயன்படுத்தி தண்டிக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகள் மீதான இதுபோன்ற சமூகக் குற்றங்களைத் தடுப்பதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வப்போது நடைபெறும் குற்றங்கள் மீது எவ்வித பாகுபாடும் காட்டாமல் நோ்மையான முறையில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்போதுதான் இத்தகைய குற்ற அதிா்வலைகளிலிருந்து பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க முடியும். அதை உறுதியாக செய்வதற்கு அரசும், சட்டமும் முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com