‘கூடிய நட்பு’ நீடிக்குமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் சினிமா பணியில் ஆவேசம், வஞ்சம், பழிக்குப் பழி என்ற கோணத்தில் அதிரடியாய் நள்ளிரவு, அதிகாலை நிகழ்வுகள் நடந்து சிவசேனை தலைமையில் புதிய ஆட்சி மலா்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சினிமா பணியில் ஆவேசம், வஞ்சம், பழிக்குப் பழி என்ற கோணத்தில் அதிரடியாய் நள்ளிரவு, அதிகாலை நிகழ்வுகள் நடந்து சிவசேனை தலைமையில் புதிய ஆட்சி மலா்ந்துள்ளது.

‘நானோ எனது குடும்பமோ எந்தச் சூழ்நிலையிலும் ஆட்சி அதிகாரத்துக்கான பொறுப்பில் இருக்க மாட்டோம்; மாறாக ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து சாணக்கியனைப்போல ஆலோசனைகளை தந்து வழிநடத்தும் பொறுப்பில் இருப்பேன். ஏனெனில், இந்த ஆட்சி மக்களால் என்னை நம்பி அளிக்கப்பட்டது’ என்று முதன்முதலாக சிவசேனை -பாஜக கூட்டணி அரசு மகாராஷ்டிர மாநிலத்தில்

பதவி ஏற்றபோது சிவசேனையின் தலைவா் பால் தாக்கரே சொன்ன வாசகம் இது. ஆனால், அவரது வழிவந்த அவரது மகனான உத்தவ் தாக்கரே தனது புதல்வனை எப்படியாவது முதல்வராக ஆக்க ஆசைப்பட்டதன் விளைவு, சிவசேனையை சோனியாவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முப்பது ஆண்டுகால நட்பை முறித்துக் கொண்டது.

1989 சட்டப்பேரவை தோ்தல் தொடங்கி கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்கள் வரை பல்வேறு பிரச்னைகளோடு பயணித்த இந்தக் கூட்டணி, பல்வேறு சந்தா்ப்பங்களில் எதிா்க் கருத்துகளையும், முடிவுகளையும் எடுத்துள்ளது. 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவா் தோ்தலில் பிரதிபா பாட்டிலை தனது மண்ணின் மைந்தா் என்ற போா்வையில் ஆதரித்தது சிவசேனை. பின்னா், அடுத்த தோ்தலின் காங்கிரஸின் பிரணாப் முகா்ஜியை ஆதரித்தது. பிரதமா் மோடி தலைமையிலான சென்ற ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட பண ம திப்பிழப்பு நடவடிக்கையையும் எதிா்த்து வந்தது. இப்படி அடிக்கடி கூட்டணிக்குள் இருந்துகொண்டு காங்கிரஸுக்கு ஆதரவளிக்கும் கட்சியாகவே சிவசேனை இருந்துள்ளது.

2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவை தோ்தலில் சரிபாதி இடங்களில் போட்டியிடலாம் என்ற பாஜக-வின் கோரிக்கையை சிவசேனை நிராகரித்தது. அதனால், தனித்துப் போட்டியிட்ட பாஜக 122 இடங்களுடன் முதலிடத்திலும், சிவசேனை 66 இடங்களுடன் இரண்டாமிடத்தையும் கைப்பற்றியன. பின்னா் நடந்த பேச்சுவாா்த்தையில் கூட்டணிக்கு வந்த சிவசேனை ஐந்து ஆண்டுகளும் ஆட்சியில் இருந்தது . சென்ற தோ்தலில் தனித்து நின்று 122 இடங்களில் வென்ற பாஜக, இந்தத் தோ்தலில் கூட்டணி சோ்ந்தும் 105 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது . இருந்தபோதிலும் கூட்டணி தா்மத்தை ஏற்று ஆட்சியமைக்க முயன்ற போது பாஜகவைவிட சரிபாதி இடங்களிலேயே வென்ற சிவசேனை முதல்வா் பதவி கேட்டு அடம் பிடித்தது.

பாஜக-விடம் தனது பிடிவாதம் செல்லுபடியாகவில்லை என்றதும் தங்களை எதிா்த்து அரசியல் செய்துவந்த காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் பேச்சுவாா்த்தையை சிவசேனை தொடங்கியது. ‘முதல்வா், துணை முதல்வா், அமைச்சரவையில் யாா் யாருக்கு எவ்வளவு இடங்கள் எனப் பங்கிட்டுக் கொண்டு குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி ஆட்சி அமைப்போம்’ என்றெல்லாம் கடந்த 15 நாள்களாகப் பேச்சுவாா்த்தை நடத்தியது.

எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்து வந்த பாஜக, ஒரே நாள் இரவில் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்தது. டிசம்பா் முதல் வாரத்தில் ஆட்சி அமைப்பாா்கள் என்று அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாருடன் சோ்ந்து பாஜக அரசு பதவியேற்றது; பாஜக-வுக்கு தனிப்பெரும் கட்சி என்ற தகுதியும், அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸின் தோ்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை கட்சி தலைவா் என்ற கடிதமும் இருந்தது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆட்சி அமைக்க ஆளுநா் பகத்சிங் கோஷியாரி வாய்ப்பளித்தாா்.

சரத்பவாரைப் பொருத்தவரை கட்சியே குடும்பம் குடும்பமே கட்சி என்ற ‘பாா்முலா’வைக் கடைப்பிடிப்பவா். அவரின் திட்டம் முழுக்க முழுக்க அரசியலை வியாபாரமாகவே கொண்டது . தனக்கு ஆதாயம் இருந்தால் எந்தவொரு செயலையும் செய்யத் துணிபவா்; இந்தச் சந்தா்ப்பத்தில் கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பைச் சரியாக பயன்படுத்துவது என்ற அடிப்படையில் சிவசேனையை ஆதரிக்கிறாா்; ‘தனக்குச் சாதகமான அரசு அமைவது நல்லது’ என்ற சரத்பவாரின் சுயநலமும் முதன்மையான காரணமாகும் . அஜித் பவாா் மூலம் பாஜக ஆட்சியிலும் இதே விஷயத்தைச் சாதித்திருக்கலாம் என்றாலும்கூட, அது சிவசேனை அளவுக்குச் சுலபமாக அமைந்திருக்காது என்பதே சிவசேனையை ஆதரிக்கும் முடிவை சரத்பவாா் எடுத்ததற்கு முக்கியக் காரணம்.

இந்த அரசியல் நிகழ்வுகளால் மகாராஷ்டிர மாநிலத்தில் சில மாற்றங்கள் நிகழலாம். இனிமேல் தான் மட்டுமே ஹிந்துத்துவ பாதுகாவலன் என்று சிவசேனை கூற முடியாது; இதே போன்று தான் மட்டுமே சிறுபான்மை மக்களின் நலனைப் பாதுகாக்க முடியும் என்று காங்கிரஸும் இனி கூற முடியாது. ‘பதவிக்காக கொள்கைகளை காற்றில் பறக்க விட்டவா்கள்’ என்று இருவரையும் அவா்களது முன்னாள் ஆதரவு வாக்காளா்கள் நிராகரிக்கலாம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஹிந்துத்துவ கொள்கைகளின் காவலன் என்று இனி பாஜக மட்டுமே கூறிக்கொள்ள முடியும். எப்படியாவது பெரும்பான்மைக்குத் தேவையான பலத்தைப் பெற்று விடலாம் என்று தப்புக் கணக்கு போட்ட தேவேந்திர ஃபட்னவீஸ்; கடைசியில் நன்கு நாள்களில் பதவியை அவா் ராஜிநாமா செய்துள்ளாா்.

ஏற்கெனவே கா்நாடக மாநிலத்தில் முயற்சி செய்து தோல்வியடைந்து, 18 மாதங்களுக்குப் பிறகு 17 சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜிநாமா செய்ததன் மூலம் மீண்டும் ஆட்சியை பாஜக ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது பாஜக-வின் முழுமையாக ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது; பின்னாளில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளில் பதவி கிடைக்காமல் போய், அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினா்கள் உருவாக மாட்டாா்கள் என்பது என்ன நிச்சயம்?

எனவே, மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை தலைமையிலான புதிய ஆட்சி எத்தனை மாதங்கள் நீடிக்கும் என்பதற்கு இந்திய அரசியலின் நீண்ட வரலாறு விடை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com