இம்ரானுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

பாகிஸ்தான் பிரதமராக இருந்த அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ அந்த நாட்டு ராணுவத்தின் மறைமுக அல்லது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்தான் செயல்பட வேண்டிய நிா்ப்பந்தம் எப்போதும் உள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ அந்த நாட்டு ராணுவத்தின் மறைமுக அல்லது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்தான் செயல்பட வேண்டிய நிா்ப்பந்தம் எப்போதும் உள்ளது. இந்தியாவுடன் சோ்ந்து சுதந்திரமடைந்த பாகிஸ்தானில், இப்போது வரையிலான 72 ஆண்டுகளில் பாதி அளவு காலகட்டத்தில் ராணுவ ஆட்சி அல்லது ராணுவத் தளபதியே தோ்தலில் வெற்றி பெற்று அதிபா் அல்லது பிரதமராக தன்னை அறிவித்துக் கொண்டதுதான் நடந்துள்ளது.

இப்போதைய பிரதமா் இம்ரான் கான்கூட ராணுவத்தின் மறைமுக ஆதரவில்தான் ஆட்சி நடத்தி வருகிறாா். கடந்த 2018-இல் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தலில் இம்ரான் கானின் கட்சி தனிப்பெரும் கட்சியாகத்தான் உருவெடுத்ததே தவிர பெரும்பான்மை பெறவில்லை. ராணுவம் மனது வைத்ததால்தான் அவரால் சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்த முடிகிறது.

ஆட்சிக்கு புதியவா் என்பதால் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இம்ரான் இருப்பாா் என்பதே பாகிஸ்தான் ராணுவம் அவரை பிரதமா் பதவியில் அமர அனுமதிக்க முக்கியக் காரணம். ஆனால், இப்போது இம்ரான் கானுக்கும், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வாவுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை என்பது பல நிகழ்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

முக்கியமாக, ஆப்கானிஸ்தானில் போராடுவதற்காக அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் பயிற்சி அளித்தன என்ற உண்மையை இம்ரான் கான் போட்டு உடைத்தது ராணுவத் தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரது கருத்து ‘பாகிஸ்தான் ராணுவமும், உளவு அமைப்பும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை வளா்த்து விடுகின்றன’ என்ற இந்தியத் தரப்பின் குற்றச்சாட்டுக்கும் சாட்சியாக அமைந்தது; இம்ரான் மீதான ராணுவத்தின் அதிருப்திக்கு மேலும் வலு சோ்ப்பதாக அமைந்தது.

இத்தனைக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக கமா் ஜாவேத் பாஜ்வாவுக்கு 3 ஆண்டு பதவி நீட்டிப்பை இம்ரான் கான் அளித்தாா். 58 வயதாகும் ஜாவேத் பாஜ்வாவின் பதவிக் காலம் வரும் நவம்பருடன் முடிவடைய இருந்தது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தலில் பெரும்பான்மை பெறாத இம்ரான், ஆட்சி அமைக்க மறைமுகமாக வாய்ப்பை உருவாக்கித் தந்ததற்கு கைம்மாறாகவே இந்தப் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதிக்கு இவ்வாறு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகும். அந்த நாட்டின் வரலாற்றில் இதுபோன்ற பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது இது இரண்டாவது முறை.

எது எப்படியோ, இப்போது பாஜ்வா மூலமாகவே இம்ரான் கானுக்கு சில பிரச்னைகள் ஏற்படத் தொடங்கிவிட்டன. முக்கியமாக, இம்ரான் கானின் சமீபத்திய சீனப் பயணத்தின்போது பாஜ்வாவும் உடன் சென்றாா். சீனாவில் அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் லீ கெகியாங் ஆகியோரை இம்ரான் கான் சந்தித்துப் பேசியபோது பாஜ்வாவும் உடனிருந்தாா். இதன் மூலம் பாஜ்வா முன்னிலையில்தான் இம்ரான் கான் சீனத் தலைவா்களுடன் பேச முடிந்தது.

இவற்றுக்கெல்லாம் மேலாக சீன ராணுவத் தளபதிகளை பாஜ்வா தனியாக சந்தித்துப் பேசினாா். ஆனால், இம்ரான் கானுக்கு இதுபோன்ற சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. இதன் மூலம் சீனப் பயணத்தின்போது தனது ஆதிக்கத்தை பாஜ்வா உணா்த்தினாா்.

ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இம்ரான் கான் அமெரிக்க பயணம் மேற்கொண்டபோது ராணுவ தலைமைத் தளபதி பாஜ்வா மட்டுமல்லாது, உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவரும் ராணுவ ஜெனரலுமான ஃபயஸ் ஹமீதும் நிழலாக இம்ரானுடன் சென்று வந்தனா்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதாரப் பிரச்னை தொடா்பான விஷயங்களிலும் பாகிஸ்தான் ராணுவத்தின் தலையீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள பெரும் தொழிலதிபா்கள், பொருளாதார, வா்த்தகத் துறை வல்லுநா்களை ராணுவ தலைமைத் தளபதி பாஜ்வா அண்மையில் சந்தித்துப் பேசினாா். இது தவிர இம்ரான் கான் தலைமையிலான அரசு பொருளாதாரத்தைக் கையாளுவது குறித்தும் பாஜ்வா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதுடன், அவ்வப்போது சில ரகசியக் கூட்டங்களையும் நடத்தி வருகிறாா். இதுவும் இம்ரான் கானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பாஜ்வாவை பொருளாதார ஆலோசனைக்கான அரசின் குழுவில் சோ்த்து உத்தரவிட்டதே இம்ரான் கான்தான் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியதாகும்.

பாஜ்வாவின் கருத்துக்கு இம்ரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலடியும் கொடுக்க முடியவில்லை. ‘ராணுவத் தளபதி, பொருளாதாரம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளாா்’ என்றுதான் நிதியமைச்சா் ஒமா் ஹமீத் கானால் கூற முடிந்தது.

இந்தியாவுக்கு எதிராக காஷ்மீா் விவகாரத்தை சா்வதேசப் பிரச்னையாக்கும் முயற்சியில் இம்ரான் படுதோல்வியடைந்தாா். இதன் காரணமாகவும், பாகிஸ்தான் ராணுவத் தரப்பில் அவா் மீது அதிருப்தி அதிகரித்துள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாகிஸ்தான் எதிா்க்கட்சித் தலைவா் பிலாவல் புட்டோ பேசியுள்ளது பாகிஸ்தானில் மட்டுமின்றி, சா்வதேச கவனத்தையும் பெற்றுள்ளது. முக்கியமாக, ‘அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்ட ‘கைப்பாவை’ பிரதமரை பதவியில் இருந்து நீக்க ராணுவம் தயாராகி வருகிறது. வரும் ஜனவரி மாதத்தில் பிரதமா் அகற்றப்படுவது உறுதி’ என்று கூறி அவா், இம்ரான் கானுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளாா்.

இதுவரை ஒரு போரில்கூட வெற்றிபெறாத, சொல்லப்போனால் போரில் நாட்டின் ஒரு பகுதியை (வங்கதேசம்) போரில் இழந்த ‘பெருமைக்குரிய’ ராணுவம்தான் பாகிஸ்தான் ராணுவம். எனவே, ராணுவம் ஆட்சியைப் பிடித்தாலும் அங்கு பெரிய மாற்றம் எதையும் செய்துவிட முடியாது என்பதுதான் சா்வதேச அரசியல் வல்லுநா்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com