அபராத உயர்வு தீர்வல்ல!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., முத்தலாக் விவகாரம், காஷ்மீருக்கான சிறப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., முத்தலாக் விவகாரம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து எனப் பல கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்போது மோட்டார் வாகன திருத்தச் சட்டம் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவுதான் என்றாலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அபராதம் கடுமையாக உள்ளது என்பதே உண்மை.
புதிய சட்டம் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் வாகனத்தை ஓட்டினால் இனி ஒரு பெரும் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, இந்தத் தொகை சாதாரணமாக ஒருவர் தங்கள் வாகனத்துக்கு ஒரு மாதத்துக்குப் போடும் பெட்ரோல், டீசலுக்கான தொகையைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
உதாரணமாக, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இனி ரூ.5,000 அபராதமாகச் செலுத்த வேண்டும். பொதுவாக, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் ரூ.100 லிருந்து ரூ.10,000 வரை உள்ளது. தலைக்கவசம்  அணியாமல்  பிடிபட்டால் அதற்கான அபராதம் ரூ.100-ஆக இருந்தது. ஆனால், இப்போது அது ரூ.1,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, அபராதம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தில்லியில் போக்குவரத்து விதிகளை மீறிய ஒரு வாகன ஓட்டிக்கு அவர் வைத்துள்ள இரு சக்கர வாகனத்தின் விலையைவிட அதிகமாக அபராதம் போடப்பட்டது. லாரியில் அதிக சுமை ஏற்றிவந்ததற்காக லாரி டிரைவர் ஒருவருக்கு ரூ.1,47,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் லுங்கி அணிந்திருந்ததற்காக  லாரி ஓட்டுநருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்படி விநோத சம்பவங்கள் தொடர்கின்றன.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகை மிகக் கடுமையாக உள்ளதால் குஜராத், கர்நாடகம், உத்தரகண்ட் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களும் பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் இதை முழுமையாகச் செயல்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.
சாலை விபத்துகளால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவே விதிகள் கடுமையாக்கப்பட்டு, அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வாதம் சரியானதுதான். ஆனால், சாதாரண மக்கள் இதை எப்படித் தாங்குவார்கள் என்பதுதான் கேள்வி.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் போடாமல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களுக்காக அபராதம் விதிப்பது போக்குவரத்து விதிமீறல்கள் மீதான மொத்தக் குற்றங்களில் சுமார் 5 சதவீதம்தான். இப்போது இவற்றுக்கு அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டிருப்பதால், போக்குவரத்துப் போலீசாரிடம் சிக்கினாலும் அதிகாரப்பூர்வ அபராத ரசீது போடுவது குறைந்துவிடும். அதாவது, ஊழலுக்கே வழிவகுக்கும்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிக கட்டணம் அபராதமாக விதிக்கப்படுவதாக அமைச்சர் கட்கரி குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த நாடுகளில் போக்குவரத்து விதிகளைக் கண்காணிக்கும் போலீஸார் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.  மேலும், அங்கு தனிநபர் வருமானம் அதிகமாக உள்ளதால் அதற்கு ஏற்றவாறு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாலைகளும் மிக நேர்த்தியாகப் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் போக்குவரத்து விதிகளைக் கண்காணிக்க போலீஸார் எண்ணிக்கையும் அதிகம் இல்லை, மக்களின் தனிநபர் வருமானமும் அதிகரிக்கவில்லை.
வாகன ஓட்டிகளுக்கு உரிமம் வழங்குவதில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சரியான நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. அரைகுறையாக ஓட்டத் தெரிந்தவர்களும் எளிதில் உரிமம் பெற்று விடுகிறார்கள். வாகனங்களை ஓட்டிக் காண்பிப்பதுடன் உரிமம் பெறுபவர்களின் பணி முடிந்து விடுகிறது. அவர் முறையாகப் பயிற்சி பெற்றவரா, அவருக்கு போக்குவரத்து விதிகள் முழுமையாகத் தெரியுமா என்பதையெல்லாம் பார்ப்பதில்லை. இவை சட்டத்தில் இருந்தாலும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
போக்குவரத்து ஆய்வாளர் நாள்தோறும் குறைந்தது 100 விண்ணப்பங்களைப் பரிசீலித்து உரிமம் வழங்க வேண்டும் என்றால் அதற்கான போதிய நேரம் அவருக்கு இருப்பதில்லை. அதனால் அவர் 5 நிமிஷங்களில் ஒருவரின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து முடிவு செய்து விடுகிறார். உரிமம் வாங்க வருபவரின் திறமையைச் சோதிக்க ஐந்து நிமிஷங்கள் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 1.5 லட்சம். சுமார் 3 லட்சம் பேர் பலத்த காயமடைந்து முடமாகிவிடுகின்றனர்.
வெளிநாடுகளில் ஓட்டுநர் உரிமம் பெற வாகனத்தை ஓட்டிக் காண்பித்தல், கண் பரிசோதனை தவிர போக்குவரத்து தொடர்பான பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.  அந்த நாடுகளில் 45 சதவீதம் பேர்  தேர்ச்சி பெறுவதில்லை. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற கடுமையான நடைமுறை இல்லை.
நமது நாட்டில் பல நகரங்களில் சாலைகள் தரமாக இல்லாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது. பல இடங்களில் சாலைகளில் வேகத்தடை இருக்கும் இடங்களிலும், போக்குவரத்து சிக்னல் இருக்கும் இடங்களிலும் வண்ணக்கோடுகள் மூலமான எச்சரிக்கை இல்லை. சில இடங்களில் போக்குவரத்துக்கான சிக்னல்களும் சரிவர இயங்குவதில்லை. இரவு நேரங்களில் சாலைகளில் விளக்குகள் இல்லாததால் போதிய வெளிச்சமின்மையும் விபத்துகளுக்குக் காரணமாகிறது.
எனவே, சாலை விபத்துகளைக் குறைப்பதற்கு அபராத கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமே தீர்வு ஆகாது. போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகளும் மக்களும் முறையாகப் பின்பற்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com