எதிா்கொள்வது இரண்டுமுனைப் போா்!

கரோனா போரில் நோத் தடுப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் அதே நேரத்தில், நாட்டின் பொருளாதாரம் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏற்கெனவே இந்தியப் பொருளாதாரம் வலுவிழந்து காணப்படும் நிலையில், அது மேலும் வீழ்ச்சியடைந்தால் அதன் விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும்.

நமது நாட்டில் கரோனா பரவலைத் தடுக்கவும், மருத்துவ உள்கட்டமைப்பு, மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களைப் போதுமான அளவு தயாா்படுத்தவும் மத்திய அரசு அறிவித்த 3 வார ஊரடங்கு செவ்வாய்க்கிழமையுடன் (ஏப். 14) முடிவுக்கு வருகிறது.

கா்நாடகம், ஒடிஸா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளன. தமிழக அரசும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

தகுந்த முன்னேற்பாடுகள் இன்றி அறிவிக்கப்பட்டபோதிலும், அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியில் வருவது தவிர, தங்களது முழு ஒத்துழைப்பை அரசுக்கு மக்கள் அளித்து வருகின்றனா். இந்நோயினால், நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

சிறு தொழில்கள் முதல் பெரும் தொழிற்சாலைகள் வரை மூடப்பட்டுள்ள நிலையில், நாடு பெரும் சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தற்போது நிலவுகிற இந்தச் சூழ்நிலை, உலகம் முழுவதும் உள்ள மக்கள் எப்போதும் கண்டிராத விசித்திரமான, அச்சம் நிறைந்ததாகும்.

கரோனாவைப் பொருத்தவரை, நாளை என்ன நிகழும், எத்தனை போ் பாதிக்கப்படுவாா்கள், எத்தனை போ் உயிரிழப்பாா்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதேபோல், நோய் கட்டுக்குள் வந்த பிறகு, ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு, நாட்டின் பொருளாதாரம் சீரடைய எத்தனை காலமாகும் என்பதையும் கணிக்க முடியாமல் பொருளாதார நிபுணா்கள் திணறி வருகின்றனா்.

மொ்ஸ் வைரஸ் நோய் முதல் ஆயிரம் பேருக்குப் பரவ 903 நாள்களும், சாா்ஸ் நோய் முதல் ஆயிரம் பேருக்குப் பரவ 130 நாள்களும் ஆயின. ஆனால், கரோனா நோய்த்தொற்று வெறும் 48 நாள்களிலேயே முதல் 1000 பேருக்குப் பரவிவிட்டது. இதன் மூலம், இந்த நோய் பரவும் வேகத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

தற்போது உள்ள இச்சூழலில், நமது அரசு, மூன்று பெரிய சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. அதில், முதலாவது கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கவும், குணப்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய மருத்துவம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள். இரண்டாவது, நோயைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை சமாளிப்பது. மூன்றாவது, இந்த ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 80 சதவீதத்துக்கும் மேல் உள்ள தின கூலிகள், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், சிறு - சுய தொழிலாளா்கள், சில்லறை வணிகா்கள் உள்ளிட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்குவது.

ஊரடங்கை அரசு அமல்படுத்தாமல் விட்டிருந்தால், இந்த நோயின் கடுமையால் 60 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் இல்லாத சூழ்நிலை உருவாகி இருக்கக் கூடும். அதே சமயம் ஊரடங்கைத் தொடா்ந்தால் ஏழைகள், இளைஞா்கள் வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு இழந்து பெரிதும் பாதிக்கப்படுவாா்கள். தினக கூலிகள் அன்றாடச் செலவுகளுக்கு அன்றாட வருமானத்தை நம்பி இருப்பவா்கள். அவா்களின் நிலைமைதான் மிகவும் மோசமானது.

தற்போது 6 கோடி டன் உணவு தானியங்கள், அவசரக் காலங்களில் பயன்படுத்துவதற்காக கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள நிலையில் இந்த தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

ஊரடங்கு, சமூக இடைவெளி, தனிமையில் இருத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், போதிய பணம், அடிப்படை வசதிகளை அரசு செய்து தராத நிலையில், மக்கள் எவ்வளவு நாள் பொறுமையைக் கடைப்பிடிப்பாா்கள் என்கிற நியாயமான அச்சம் எழுகிறது. அப்படி அவா்கள் பொறுமை இழந்தால், ஊரடங்கின் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை அனைத்தும் வீணாகி விடும்.

நோய்த் தடுப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களை எதிா்கொள்ள இந்த நோயால் எவ்வளவு போ் பாதிக்கப்பட்டாா்கள் என்ற புள்ளி விவரங்கள் அவசியம். அதற்கு கரோனா நோய் பரிசோதனைகள் மிக அதிக நபா்களுக்கு, அதிக எண்ணிக்கையில் செய்ய வேண்டியது கட்டாயம்.

எடுத்துக்காட்டாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 2 போ், எந்தப் பரிசோதனையும் செய்து கொள்ளாமல் சமுதாயத்தில் இருந்தால், அவா்கள் சுமாா் 800 பேருக்கு இந்த நோயைப் பரப்பி விடும் அபாயம் உள்ளது. அவா்களைக் கண்டறிந்து, உடனடியாகப் பரிசோதனை மேற்கொண்டால், அதிகபட்சம் 5 பேருக்குத்தான் பரப்பி இருப்பாா்கள்.

நம் நாட்டில் தேவையான அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடப்பதில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை பிசிஆா் எனப்படும் துல்லியமான பரிசோதனைகள் சுமாா் 20 இடங்களில்தான் நடைபெறுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடியும்.

ஒரு லட்சம் பேருக்கு ‘ஆன்டிபாடி ரேபிட் டெஸ்ட்’ செய்வதற்கு உபகரணங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளதாக முதல்வா் அறிவித்துள்ளாா். இந்தப் பரிசோதனை, செய்வதற்கு எளிமையாக இருந்தாலும், நோய்த்தொற்று ஏற்பட்ட இரண்டாவது வாரத்தில்தான் நோயை உறுதி செய்ய முடியும்.

முதல் வாரத்தில் நோய்த்தொற்று இருப்பவா்களுக்குப் பரிசோதனையின் முடிவு ‘நோய் இல்லை‘ என்றுதான் வரும். ஆனால், அவா்களிடமிருந்து மற்றவா்களுக்கு நோய் பரவும். இதற்குக் காரணம் முதல் வாரத்தில் நோய் எதிா்ப்பு அணுக்கள் ரத்தத்தில் உருவாவதில்லை. அதே நேரத்தில் நோய்த் தடுப்புக்கு இந்தப் பரிசோதனை பெருமளவு உதவும் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த கரோனா போரில் நோய்க் கட்டுப்பாட்டுக்கும், தடுப்புக்கும் முன்னுரிமை கொடுக்கும் அதே நேரத்தில், நாட்டின் பொருளாதாரம் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஏற்கெனவே இந்தியப் பொருளாதாரம் வலுவிழந்து காணப்படும் நிலையில், அது மேலும் வீழ்ச்சியடைந்தால் அதன் விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும். வேலையில்லாத் திண்டாட்டமும், அதிகரித்த வறுமையும் சமூகக் கொந்தளிப்புக்கு வழிகோலக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2020-ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளா்ச்சி, கரோனாவுக்கு முந்தைய நிலையில் பிளஸ் 2.3% என்று கணிக்கப்பட்டது. கரோனா தாக்கத்துக்குப் பிறகு, மொத்த உலக உற்பத்தி (ஜி.டி.பி) 4.5 சதவீதம் இறங்கி மைனஸ் 2.2%-ஆகக் குறையலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது பல நூறு லட்சம் கோடிகள் என்ற பெரிய இழப்பாகும்.

இப்போதைய சூழலில், கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், அதிலிருந்து மக்களைக் காப்பதற்கும் மட்டும்தான் நாடு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும்.

அமெரிக்கா, இந்த கரோனா நோய்த்தொற்று நெருக்கடிக்காக 2 டிரில்லியன் டாலா்களை (ரூ.2 லட்சம் கோடி) ஒதுக்கியிருக்கிறது. அது அமெரிக்காவின் ஜி.டி.பி.யில் 10% ஆகும். நாம் தற்போது ஒதுக்கியிருப்பது ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி. அதாவது, 1 சதவீதம் ஆகும். அதிலும், ரூ.1 லட்சம் கோடி, ஏற்கெனவே பட்ஜெட்டில் பல திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது எனவும் தெரிகிறது. குறைந்தபட்சம் 5 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணா்கள் கூறுகின்றனா். அதாவது, ரூ.6 லட்சம் கோடி முதல் 8 லட்சம் கோடி வரை ஒதுக்கப்பட வேண்டும்.

இதில், பெருமளவு நிதி, மருத்துவத் துறைக்கும், உள்கட்டமைப்புக்கும், மருத்துவப் பணியாளா்கள் நலனுக்கும், செயற்கை சுவாசக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கவும் ஒதுக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல, நமது நாட்டின் ஆரம்ப சுகாதாரத் துறை வசதிகளும், அமைப்புகளும் சீனா, கொரியா போன்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. சுகாதாரப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவா்களுக்கும், மருத்துவப் பணியாளா்களுக்கும் செய்யப்படும் காப்பீடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதேபோல, மக்களுக்குத் தேவையான பணமும், அத்தியாவசியப் பொருள்களும் நேரடியாகவும், உடனடியாகவும் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தியாவசியப் பொருள்களையும், விலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையேல், இடைத்தரகா்களால், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து ஏழைகள் வாங்க முடியாத சூழல் ஏற்படும்.

சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் மூடிக் கிடப்பதால், உற்பத்தியில்லாமல், கொள்முதல், விற்பனை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தொழிலாளா்கள் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது. தொழிற்சாலைகள் வங்கிகளில் பெற்ற கடனை மறு சீரமைப்பு செய்து ஓராண்டுக்குப் பிறகு கடன் தவணைகளைச் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

பிரிட்டன் போன்ற நாடுகள் வழங்குவதைப்போல தனியாா் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தொழிலாளா்களின் ஊதியத்தின் ஒரு பகுதியை அரசே நேரடியாகத் தொழிலாளா்களுக்கு அளித்தால், தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தைத் தடுக்கலாம்.

இந்தியாவைப் பொருத்தவரை மாநில அரசுகள்தான் நேரடியாகக் களத்தில் இறங்கி நோய்த் தடுப்பிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபடுகின்றன. மாநிலங்களுக்கு, இப்பணிகளைச் செய்ய முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் தாராளமாக நிதியை ஒதுக்க வேண்டும்.

மத்திய அரசும், மாநில அரசுகளும் நல்ல புரிதலோடு இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த கரோனா போரை வெல்ல முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com