சாகசப் பயணம் வேண்டாம்!

அண்மையில் நிறைவடைந்த சாலை பாதுகாப்பு வாரத்தில் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரசாரம், ஊர்வலம், நாடகம், போட்டிகள், பரிசுகள் என


அண்மையில் நிறைவடைந்த சாலை பாதுகாப்பு வாரத்தில் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரசாரம், ஊர்வலம், நாடகம், போட்டிகள், பரிசுகள் என அனைத்தும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நடைபெற்றன.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், போக்குவரத்துக் காவல் துறையும் போட்டி போட்டுக் கொண்டு பாதுகாப்பு வாரம் முழுவதும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.
2019-இல் 2 . 21 லட்சம் சாலைவிதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.3 கோடி வசூலானதாக திருப்பூர் மாநகர ஆணையர் தெரிவித்துள்ளார்.  ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் ஒரு நகரத்தில் இத்தனை விதிமீறல் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவில் எத்தனை லட்சம் விதிமீறல், எத்தனை கோடி வருமானம்?

ஆனால், சாலை விதிமீறல்கள்தான் விபத்துகளுக்குக் காரணம் என்பதை எப்போது மனிதர்கள் உணர்கிறார்களோ, அப்போதுதான் விபத்துகள் படிப்படியாகக் குறையும்.  இதில் அதிகாரத்தில் உள்ளவர்கள், முக்கியப் பதவி வகிப்பவர்கள், முக்கியப் பிரமுகர்கள் எனப் பலரும் தங்கள் பிரபலத்தைக் காட்ட, சாலைகளில் விதிமீறல் செய்கிறார்கள்.   ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் தவிர  வேறு யாருக்கும் போக்குவரத்து விதிமீறல் கூடாது என்கிற நிலை வர வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை வைத்து  பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்றன என்பது என்னவோ உண்மைதான்.  ஆனால், விதிமீறல் செய்து,  சாலை விபத்தில் உயிரிழக்கும் மாணவர்கள் எத்தனை பேர்?  பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்வதற்கு எவ்வித அனுமதியும் இல்லை.  ஆனால், பெற்றோர் தங்கள் குழந்தையின் மீதுள்ள பாசத்தினால் கேட்டவுடன் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்.  

பிளஸ் 1,  பிளஸ் 2 மாணவர்களின் நேர மேலாண்மை பொருட்டு ஒருவேளை பெற்றோர் இரு சக்கர வாகனம் வாங்கித் தந்தாலும்,  ஓட்டுநர் உரிமம் தேவைப்படாத பேட்டரி (மின்கல) வாகனம் வாங்கித் தருவதே உத்தமம்.  ஆனால், மாணவர்கள் ஓட்டி வரும் அதிநவீன இரு சக்கர வாகனங்கள் சாலைகளில் சீறிப் பாய்ந்து செல்லும்போது நமது அடிவயிறு கலங்குகிறது.  ஆனால், பெற்றோருக்கு எவ்வித மன உறுத்தலும் இல்லை என்பதுதான் வேதனை.  இப்படி சீராட்டி, பாராட்டி வளர்த்த தங்கள் மகனோ, மகளோ இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்படும் எதிர்பாராத விபத்தினால் உயிரிழக்க நேர்ந்தால், பிறகு வருந்தி என்ன பயன்?
18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ஓட்டுநர் உரிமம் பெற முடியும் என்ற விதி இருக்கும்போது அதுவரை தங்கள் மகன் அல்லது மகள் சைக்களில் சென்று வருவதுதான் நல்லது எனப் பெற்றோர் கருத வேண்டும். உடலுக்கும் நல்லது; சுற்றுச்சூழலுக்கும் நல்லது'  பாதுகாப்பானதும்கூட. ஆண்டு ஒன்றுக்கு லட்சம் ரூபாய்க்குமேல் செலவழித்து படிக்க வைக்கும் தங்கள் பிள்ளைகளை  வீணாக சாலை விபத்துகளில் பலி கொடுப்பதை எங்ஙனம் ஏற்றுக் கொள்வது?  ஏறக்குறைய 25 லட்சம் ரூபாய்க்கு மேல் வாரிசுக்குச் செலவழித்து  உயர் கல்வி வரும் நேரத்தில் விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதன் மூலம் எல்லாம் வீணாகிவிடும்.   எத்தனை லட்சம் செலவழித்தாலும் திரும்பக் கிடைக்காதது உயிர்.  இதைப் பெரும்பாலோர் உணர்வதே இல்லை.

அந்தப் பிள்ளை உயிரோடிருந்தால் உயர் கல்வி முடித்து, சிறந்த தொழிலதிபராக,  சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் முக்கியமான மருந்தைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக, பல்லாயிரம் உயிரைக் காப்பாற்றும் மருத்துவராக என இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற முடியும்.  ஓர் எதிர்பாராத இழப்பின் மூலம், இறப்பின் மூலம் எல்லா வாய்ப்புகளையும் குழி தோண்டிப் புதைத்துவிடத்தான் முடிகிறது.
விபத்துக் காப்பீடு  அல்லது அரசு தரும் இழப்பீடு மூலம் கிடைக்கும் நிவாரணத் தொகை என்பது,  அந்த உயிரிழப்புக்கு ஈடான தொகையாக இருக்க முடியுமா ?  உயிரின் விலை என்பது அவ்வளவுதானா?   உயிரோடிருந்தால் ஒருவரால் கோடிக்கணக்கில் தனக்கும் சமூகத்துக்கும் பலவித நன்மைகளைச் செய்துவிட முடியும்.  இது தனது கண்டுபிடிப்பினால், தொழில், திறமைகளினால் சாத்தியமாகும்.  எனவே, உயிரின் மதிப்பு என்பது அளவிட முடியாதது.  இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை  நாம் சர்வசாதாரணமாக புள்ளிவிவரங்களாக செய்தித்தாள்களில் படித்துவிட்டு நகர்ந்து விடுகிறோம்.  உண்மையில், இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடைபெற்றால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இணையாக அல்லது அதைவிட மேலாக இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள்  ஏற்படுகின்றன. ஏறக்குறைய ஆண்டுதோறும் 1.5 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுவதாக மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 7.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகவும் அதிர்ச்சியான தகவல்.

விதிமீறல் என்பது தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாதது மட்டுமல்ல.  வாகனங்களில் கூடுதல் பாரம், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, வேகம், ஒருவழிப் பாதையில் செல்வது, வண்டிகளை முறையாகப் பராமரிக்காதது, மது அருந்தி விட்டு ஓட்டுதல் போன்ற பல காரணங்கள்.   இந்தியாவில் இத்தனை கோடி வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும்போது முறையான சாலை வசதிகள் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.  இருந்தாலும், படிப்படியாக ஆறு வழிச் சாலை, இணைப்புச் சாலை என நவீன முறைகளில் வேகமாக சாலை வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
எத்தனை வேகமான வாகனங்கள் வந்தாலும், சாலை வசதிகள் இருந்தாலும் பாதுகாப்பான பயணம் என்பதை அனைவரும் மனதில் கொண்டு பயணித்தால், விபத்தினால் நமக்கும் பாதிப்பில்லை; நம்மால் அடுத்தவர்களுக்கும் பாதிப்பில்லை என உணர்ந்து செயல்படுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com