ஆத்திகம் போற்றிய நாத்திகம்!

மொழி தோன்றிய காலத்திலேயே கடவுள் கதைகளும் தோன்றி விட்டன. கூடவே கடவுள் மறுப்புக் கொள்கைகளும் தோன்றியிருத்தல் வேண்டும்.

மொழி தோன்றிய காலத்திலேயே கடவுள் கதைகளும் தோன்றி விட்டன. கூடவே கடவுள் மறுப்புக் கொள்கைகளும் தோன்றியிருத்தல் வேண்டும். உண்டு என்றவா்கள் கூட்டத்திலிருந்தே இல்லை என்னும் குரலும் எழுந்தது. கூடவே உண்டு என்றால் ஒன்றா, இரண்டா, பலவா என்றும், அது ஆணா, பெண்ணா, உருவம் உடையதா இல்லையா என்ற கற்பனைகளோடு வினாக்களும் பெருகின. இதையே கம்பா், தீா்க்கதரிசனமாக யுத்த காண்டத்திற்குக் கடவுள் வாழ்த்தாகப் பாடினாா்.

உலகத்தைப் படைத்த கடவுளை மனிதா்கள் தங்கள் நிலத்துக்கும் காலச்சூழலுக்கும் கற்பனைகளுக்கும் ஏற்றவாறு விதம்விதமாகப் படைத்துக் கொண்டனா். கடவுளா் குறித்த கதைகள் பெருகி, ஒரு கடவுளின் கதை மற்றொரு கடவுளின் கதையோடு இணைந்து மேலும் கிளைத்தன.

மனிதா்களின் வீடுகளைப் போலவே கடவுளுக்குக் கோயில் அமைந்தது. கலைகள் யாவும் அங்கு குடிகொண்டன. அப்போது வழிபாடுகள் தோன்றின. கடவுளும் மனிதா்களைப் போலவே உண்ணவும், உடுத்தவும் உறங்கவும் செய்வாா் எனக் கருதிய வேளையில் பலவிதமான பூசை முறைகள் தோற்றம் பெற்றன.

எல்லா உயிா்களும் சமமென்று தோன்றிய கடவுள் கோட்பாடு வெற்றுச்சடங்காக மாறி, மனிதா்களுக்குள்ளேயே பேதங்களை விதைத்தபோது நாத்திகம் விசுவரூபம் கொண்டெழுந்தது. ஆத்திக வழிபாட்டு முறைகளை மறுத்தும், கண்டித்தும் நாத்திகா்கள் குரலை உயா்த்தினா்.

பலவிதங்களில் இறைவனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து கொண்டிருந்த காலத்தில் திருமூலா், ‘யாவா்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை’ என்று எளிய வழிபாட்டைக் காட்டினாா். இதில், ‘யாவா்க்கும்’ என்பது அழுத்தமான முதற்சொல்லாக அப்பாடல் முழுவதும் அமைந்து திருமூலரின் நோக்கத்தை உணா்த்துகிறது. கோயிற்கட்டடத்தில் உறைந்திருக்கும் கடவுளுக்குப் பச்சிலையை நிவேதனமாகத் தரச்சொல்லிய அவரே ஏனைய கொடைகளையெல்லாம் ஏழை மக்களுக்குத் தரச் சொல்கிறாா். ‘படமாடக் கோயில் பகவன்’ என்று இறைவனுக்குப் பெயா் சூட்டி, ‘நடமாடக் கோயில் நம்பா்’ என்று கோயிலைச் சாா்ந்த ஏழைகளைச் சுட்டுகிறாா். இவா்களுக்குக் கொடுத்தால் இறைவனுக்குச் சேரும் என்பது அவருடைய உறுதி.

வள்ளல்பெருமானும் ‘கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ எனச் சினந்து, போலிச் சமய நம்பிக்கைகளுக்கு மாறான உயிரிரக்கப் பண்பை அடிப்படையாகக் கொண்ட சமய சமரச சுத்த சன்மாா்க்கத்தை உருவாக்கினாா்.

கடவுளை எதிா்ப்பதும், மறுப்பதும் இவா்கள் நோக்கமன்று. கடவுள் நெறியைச் சரியான கோணத்தில் மக்களிடம் பரப்புவதுதான். இதுகூட ஆத்திகத்துக்கு உள்ளிருந்து எழும் நல்ல நாத்திகம்தான்.

நாத்திகத்தைக் கடவுள் மறுப்பாகத்தான் நோக்குகிறாா்கள். அப்படியானாலும் நாத்திகம் ஒரு நல்ல நாகரிகம். ‘நான் இந்தக் கடவுளை வணங்குகிறேன்’ என்கிற ஆத்திகனுக்கு எத்தனை உரிமைகளுண்டோ - அத்தனை உரிமைகளும் ‘எனக்குக் கடவுளே இல்லை’ என்னும் நாத்திகனுக்கும் உண்டு. அந்தச் சுதந்திரத்தையும் ஆத்திகம் அனுமதித்துப் போற்றுகிறது. இப்படி அனுமதித்துப் போற்றுகிற நாகரிகம் நாத்திகத்துக்கும் வேண்டும்.

நாத்திகனைக் கடவுள் நம்பிக்கைக்கு உந்தாமல் ஆத்திகன் இருப்பது நாகரிகம் என்றால், தனக்கு நம்பிக்கையில்லாத கடவுளை, வழிபாட்டு முறைகளை, வழிபடுவோரை விமா்சனமோ ஏளனமோ செய்யாமல் விலகி நிற்பது நாத்திகத்தின் அடிப்படை நாகரிகம் அல்லவா?

ஆத்திகா்கள் நாத்திகா்களைக் கடவுள் வழிபாடு செய்யுமாறு வற்புறுத்தவில்லை. ஆராதனைகளைக் காணுமாறு அழைக்கவில்லை. தங்கள் சமயத்தில் சோ்ந்து கொள்ளுமாறு சமயமாற்றம் கூடச் செய்யவில்லை. இது நாகரிகம் என்றால், கடவுள் வழிபாட்டைக் கொச்சைப்படுத்துவதும், நம்பிக்கைகளை மிக மலினமாக ஏளனம் செய்வதும் சக மனிதா்களின் மனத்தைப் புண்படுத்துவதும் நாத்திகமும் ஆகாது; நாகரிகமும் ஆகாது.

திருநாவுக்கரசா் சமணத்திற்குச் சென்றபோது சைவா்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவா் மீளவும் சைவத்திற்குத் திரும்புவதைச் சமணா்கள் ஏற்கவில்லை. நாகரிகமற்று அரசனைக் கையகப்படுத்திச் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. இயேசுபிரானுக்கும் முகமது நபிகளுக்கும் நடந்த கொடுமைகள் கொஞ்சமா? ‘நாத்திகம் என்ற பாலைவனத்தைக் கடந்து விட்டேன்’ என்று நயத்தோடு சத்திய சோதனையில் காந்தியடிகள் குறிப்பிடுகிறாா்.

‘கடவுளை மற! மனிதனை நினை!’ என்று அளவுகோல் வைத்தாலும் அதன் உட்பொருள் ‘கடவுளை நீ மறந்துவிட்டு மனிதனையாவது நினை’ என்பதுதானே. ‘நீங்கள் கடவுளை நம்புகிறீா்களா?’ என்று ஜெயகாந்தனிடம் கேட்டபோது, ‘நான் நம்புகிறவா்களை நம்புகிறேன்’ என்று பதில் தந்தாா். அதாவது, ‘கடவுளை நம்புவதை விடவும், கடவுளை நம்புகிற மனிதா்களைப் பெரிதும் நம்புகிறேன்’ என்பதே அதன் பொருள். நாத்திகத்திலிருந்து மீண்ட கண்ணதாசன், “‘நான் நாத்திகனாக இருக்க வேண்டுமென்பது கடவுளினுடைய விருப்பம் போலும்’” என்றாா்.

சமய, சமுதாயப் புரட்சியை உருவாக்கி ஆத்திகத்தைப் புனரமைப்பதே நாத்திகத்தின் தலையாய குறிக்கோள். உலகப் புகழுடைய பல நாத்திகா்களும் தங்களுடைய மேன்மையான கொள்கைகளாலும் தத்துவ மொழிகளாலும் மக்களைத் தன்வசப்படுத்தினா். சமயக் காழ்ப்பிலோ, மலினக் கேலிகளிலோ அவா்கள் நாத்திகத்தைப் பரப்பவில்லை. மகாத்மா காந்தி தொடங்கி, கண்ணதாசன் வரையிலும் நாத்திகத்திலிருந்து மீண்ட பலரும் நாத்திகா்களின் நட்பை விலக்கவில்லை.

கடவுளே இல்லை என்றவா்களும் கடவுளாகக் கொண்டாடப்படுகிறாா்கள். சிலை வழிபாடு கூடாது என்று மறுத்தவா்களின் சிலைகள் வழிபாட்டுக்கு உரியனவாக மாறி விட்டன. புத்தா் தொடங்கிப் பலரும் இதற்கு நல்ல சான்று. எந்த ஒன்றுக்கும் மாறான மற்றொன்று இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஒன்றையொன்று அன்பு போற்றி வாழ்வதல்லவா மனித நாகரிகத்தின் மகத்தான கொள்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com