இசையெனும் இறை இன்பம்!

முத்தமிழில் நடுவாக நின்று ஏனைய இரண்டினையும் இசைவிப்பது இசைதான். இறைவனையே ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் இசை வடிவானவனாக உருவகித்துப் போற்றுகிறது

முத்தமிழில் நடுவாக நின்று ஏனைய இரண்டினையும் இசைவிப்பது இசைதான். இறைவனையே ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் இசை வடிவானவனாக உருவகித்துப் போற்றுகிறது தமிழ் மரபு. இசையோடு கூடிய பண்ணுக்காக இறைவன் செய்த திருவிளையாடல்களைப் பக்தி இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.
 கலைக்கூடங்களான கோயில்களில்தான் இசை பெரிதும் ஆராதிக்கப் பெற்றது. இனிமையும், மங்கலமும் பொங்க ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும் இசை இறைவனையே உயிர்பெறச் செய்தது. ஆனால், தற்காலத்தில் கருவிகளின் செயற்கை ஒலிகள் மட்டுமே கோயில்களில் முனகலாகக் கேட்கின்றன.
 பண்டைக் காலங்களில் இசைக் கலைஞர்கள் பலர் குழுமியிருந்த தலமாக இசைக் கருவூலமாக திருக்கோயில்கள் விளங்கியிருந்தன. அங்கு பல வகையான இன்னிசைக் கருவிகள் ஒன்றுகூடி முழங்கிக் கொண்டிருந்தன. இன்றைக்கு அவையாவும் ஏறக்குறைய மறைந்தே விட்டன.
 திருக்கோயில் விழாக்கள் கொண்டாடுவதில் தமிழர்கள் விருப்பமுடையவர்கள். குழல் ஒலி, யாழ் ஒலி, கூத்தொலி, ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு என்று திருப்பல்லாண்டு இசைபடப் பாடுகிறது.
 திருக்கோயில் வளாகத்தில் தமிழோடு இசைப் பாடல்கள் ஓதப்பெற்றன. திருக்கோயில்களில் பாடவ்யம், கானபாடி, உடுக்கை வாசிப்போர், கொட்டி மத்தளம் வாசிப்போர், முத்திரைச் சங்கு ஊதுவார், பக்கவாத்தியார், காந்தர்வர், உவைச்சர் என்றெல்லாம் பல இசைக் கலைஞர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு பொழுதுக்கும் உரியவாறு பண்களையும் நிர்ணயித்திருந்தனர்.
 குரலிசை, வாத்திய இசை முதலானவை திருக்கோயில்களிலேயே வளர்ந்தன. ஊசற்பாட்டு, திருஅம்மானை, திருபொற்சுண்ணம் முதலிய இசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்தன.
 இசை வெறும் பொழுதுபோக்கு மட்டுமன்று. ஆன்மாவுக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை இட்டு நிரப்பி, இசைவிப்பது. அரிய இறையின்பத்தை அடையும் எளிய சாதனம் இசை.
 திருமுறைகள் அனைத்தும் பண்சுமந்த இசைப் பாடல்களே. இறைநலம் சான்ற இன்பத் தமிழிசைப் பாடல்களாகத் திருமுறைப் பாடல்கள் இருந்தமையால் இறைவனே இத் திருப்பாடல்களுக்கு தனதுரை என ஒப்பம் தந்தான். அதனால் இத் திருப்பாடல்கள் நீரையும் நெருப்பையும் வென்று விளங்கின. பிறந்தநாள் தொட்டு இறக்கும் நாள் வரையிலும் தமிழர்கள் வாழ்க்கையின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இசை இடம்பெற்றிருந்தது.
 கோயில் வழிபாடுகளில் இடம்பெற்று விளங்கிய இசைக் கருவிகள் பல. நாகசுரம், திருச்சின்னம், எக்காளம், முகவீணை, கெüரிகாளம், கொம்பு, நவுரி, ஒத்துநாகசுரம், புல்லாங்குழல், சங்கு, துத்தரி, பலிமத்தளம், கவணமத்தளம், சுத்தமத்தளம், தவில், பேரிகை, சந்திரப்பிறை, செண்டை, டக்கடமாரம், டங்கீ, டமவாத்தியம், டவண்டை, இடக்கை, ஜக்கி, ஜயபேரீ, கனகதப்பட்டை, மிருதங்கம், முட்டு, நகார், பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல், தப்பு, திமிலை, வீரகண்டி, சேகண்டி, வான்காதக்கை, தாளம், பிரம்மதாளம், கைத்தாளம், குழித்தாளம், மணிகைமணி, கொத்துமணி, சேமக்கலம், கிடிகிட்டி, வீணை, கெத்து - இவ்வாறு கோயில் வழிபாட்டில் இடம்பெறும் கருவிகள் பல உண்டு.
 கிராம தேவதைகளின் வழிபாட்டில் உடுக்கை, பம்பை, கைச்சிலம்பு முதலானவற்றுக்குத் தனித்த இடமுண்டு. கோயிலைத் தவிர இவ்விசைக் கருவிகளை வேறெங்கும் காண்பதும் கேட்பதும் அரிது. கவுத்துவங்கள், சுத்த நிருத்தம், புசங்கத்திராசித நிருத்தம், குறவஞ்சி முதலானவை கோயில்களில் மட்டுமே நிகழ்த்தப் பெற்றவை. அதுபோலவே நாகசுரமாகிய பெருவங்கியத்தில் மட்டுமே இசைக்கப் பெறும் மல்லாரி, ரத்தி, ஒடகூரு, எச்சரிக்கை முதலானவை கோயில் வழிபாட்டில் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
 கோயில்களில் இசை வழிபாட்டில் முன்னிற்கும் நாகசுரம் தொன்மையான வரலாற்றை உடையது. பன்னிரண்டு துளைகளைப் பெற்ற ஒரே குழற்கருவி.
 பன்னிரு ராசிகளில், கோள்கள் ஏழும் சஞ்சரிப்பதற்கேற்ப இதன் பன்னிரண்டு துளைகளின் உதவியால் ஏழு சுரங்களும் அவற்றின் வகைகளும் எழுப்பப் பெறுகின்றன. நாள் முழுதும் கோயில்களில் நாகசுரக் குழுவின் இசை முழங்கிக் கொண்டிருக்கும்.
 நாள் வழிபாட்டுக்கும், திருவிழாக் கொண்டாட்டத்துக்கும் தனித்தனியான இசை மரபு உண்டு. இசைக் கருவிகளும் கலைஞர்களும் இருக்க வேண்டிய திசைகளைக் குறித்தும்கூட வரையறை உண்டு. கிழக்கில் வீணை, தெற்கில் குழற்கருவிகள், வடக்கில் தாளம், மேற்கில் தோற்கருவிகள் என்பது பொதுமுறை. இவற்றுடன் மிருதங்கம், நட்டு முட்டு, பாடுவார்கள், குழல் கருவிகள் இருத்தல் வேண்டும்.
 ஒவ்வொரு மாதத்திற்கும் தகுந்த இசை வழிபாடும் உண்டு. மார்கழிக்குக் காந்தாரம், தைக்கு மேகராகக் குறிஞ்சி, மாசிக்குத் தக்க ராகம், பங்குனிக்குக் கெüசிகம், சித்திரைக்குக் கொல்லிப்பண், வைகாசிக்குச் சீகாமரம், ஆனிக்கு வியாழச்சிரேணி, ஆடிக்குச் சட்பதம், ஆவணிக்குத் தக்கேசசி, புரட்டாசிக்கு ராட்டிரபாஷை, ஐப்பசிக்குத் தாண்டவம், கார்த்திகைக்குக் கெüஞ்சிகம் என்பது ஒழுங்கு. இவற்றில் சில பண்களை இன்று புரிந்துகொள்ளக்கூட இயலவில்லை என்று வருத்தத்தோடு பதிவு செய்கிறார் இசையறிஞர் - ஆய்வாளர் தஞ்சாவூர் பி.எம். சுந்தரம்.
 ஆனால், இன்றோ இசைக் கலைஞர்களுடனே இசை மரபும் மறைந்து வருகிறது. கற்றுத் தருவதற்கு விரும்பினாலும், கற்றுக்கொள்வார் யாருமில்லை. இசையைப் போற்றும் வழக்கம் திருக்கோயில்களில் குறைந்து வருகிறது. கோயிலைக் கடந்து வேறெங்கும் இந்த இன்னிசைக்கு முக்கியத்துவம் இல்லை. மேற்கத்திய நாகரிக இசையின் தாக்கத்தினால் அழிவின் விளிம்பை நோக்கிப் பயணிக்கும் தமிழர்களின் இன்னிசையை ஏற்றுப் போற்றும் காலம் எப்போது வருமோ?
 உலக இசை விழிப்புணர்வு தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) கடைப்பிடிக்கப்பட்டது. உலகமே போற்றும் இசையெனும் இறையின்பத்தை- தமிழர்கள் தம் பழம்புகழை மீண்டும் பெற முயற்சிப்பார்களா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com