மொழியாக்கப் படைப்பாளி

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பவர்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளனர். இப்போது தமிழ்ப் பத்திரிகைகளும், தொலைக்காட்சி அலைவரிசைகளும், செய்தி நிறுவனங்கள் பலவும் ஆங்கில அறிக்கைகளையே நம்பி இருக்கின்றன. 
பத்திரிகைக்கான மொழிபெயர்ப்பும், இலக்கியப் படைப்புக்கான மொழிபெயர்ப்பும் வெவ்வேறானவை. இலக்கிய மொழிபெயர்ப்புக்குக் கூடுதல் திறமை வேண்டும். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு செல்லும் இலக்கியப் படைப்புகள் மிகமிகக்குறைவே.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் என்று இருவழி மொழிபெயர்ப்பையும் திறம்படச் செய்யக்கூடியவர்கள் மிக மிகக் குறைவானவர்களே. அவர்களை விரல்விட்டு எண்ணி
விடலாம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் அண்மையில் காலமான கே.எஸ் என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கே.எஸ். சுப்பிரமணியன்.
திருநெல்வேலி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்த இவர், தொடக்கத்தில் சென்னை ராமகிருஷ்ண மாணவர் இல்லத்தில் சேர்ந்து படித்தவர். அந்த முறையில் இவரை நான் அறிவேன். இங்கு தங்கியிருந்து படித்தவர்கள் எப்படிப்பட்ட உயர் பதவிகளையெல்லாம் வகித்திருக்கிறார்கள் என்று குறிப்பிடும்போது, மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இவர் பெயரையும் நான் குறிப்பிட்டிருக்கிறேன். 
இவர் பெüதிகத்திலும் சரித்திரத்திலும் முதுகலை பட்டம் பெற்றவர். அத்துடன் நிர்வாகவியல் படிப்பையும் முடித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொடக்கத்தில் இந்திய அரசாங்கப் பணியில் ஐ.ஆர்.ஏ.எஸ். பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தவர். 
பின்னர் பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவை தலைமையிடமாகக் கொண்ட "ஆசிய வளர்ச்சி வங்கி'யில் உயர் அதிகாரியாகப் பொறுப்பேற்று அவ்வங்கியின் இயக்குநராக உயர்ந்து பின்னர் ஓய்வு பெற்றார். 
பின்னர் 1998-இல் சென்னை திரும்பிய இவர் முழு நேர இலக்கியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எந்த இடத்திலும் தான் இன்னார் என்று வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். சக படைப்பாளிகளுடன் எப்போதும் இனிமையாகப் பழகுவார்.  
ராமகிருஷ்ண மடம் தொடர்புடைய விழாக்களில் இவரைப் பார்த்திருக்கிறேன். அப்போதும்கூட இவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பது எனக்குத் தெரிய வரவில்லை. அவர் மிகவும் அடக்கமானவர் என்பதால் தன்னை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற அறிமுகம் 2008-இல்தான் கிடைத்தது. 
அந்த வருடம் அவர் எழுத்தாளர் ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக "நல்லி திசை எட்டும்' நூல் வழங்கிய விருதினைப் பெற்றார். 
மதுரையில் நடந்த விழாவில், அப்போதைய கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு இவருக்கு "நல்லி திசை எட்டும்' விருதினை வழங்கினார். அதன் பிறகு எங்கள் பழக்கம் நெருக்கமானது. அவர் நூல்களை நான் படித்திருக்கிறேன். 
பொதுவாக தமிழ் இலக்கிய உலகிலும், கல்லூரி பல்கலைக்கழகப் பேராசிரியர் வட்டங்களிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இலக்கியப் படைப்புகளைக் கொண்டு செல்வதற்கு உரைகல்லாக அறியப்படுபவர்கள் ஜெயகாந்தனின் படைப்புகளையும், நா. பார்த்தசாரதியின்  படைப்புகளையும் மொழிபெயர்த்தவர்களே ஆவர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், ஜெயகாந்தனின் அதிக படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரிய கே.எஸ். சுப்பிரமணியன்.  
சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தவர். அந்த அமைப்புக்காக இவர் மகாகவி பாரதியார் படைப்புகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சங்க இலக்கியங்களில் உள்ள பெண் கவிஞர்களின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 
ஜெயகாந்தன் தவிர அசோகமித்திரன் போன்ற வேறு சில படைப்பாளிகளின் கட்டுரைகளையும், நவீன கவிஞர்களின்  கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். தரமான மொழிபெயர்ப்பு என்ற அளவிற்கு அவருடைய மொழிபெயர்ப்புகள் முத்திரைப் படைப்புகள் என்பதை ஒரு மொழிபெயர்ப்பு ஆர்வலன் என்ற முறையில் நான் உறுதியாகச் சொல்வேன். 
இவரது மறைவு மொழிபெயர்ப்பு உலகத்திற்கு ஒரு இழப்பு என்று சொன்னால் அது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com