வாழ்க்கை வாழ்வதற்கே

 தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்த சின்ன திரை நடிகை ஒருவரின் தற்கொலை செய்தி கடந்த இரு நாள்களாக ஊடகங்களில் பரபரப்பாக வலம் வருகிறது. இப்போதுதான் என்றில்லை. அண்மைக் காலமாகவே தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதே உண்மை. 
ஒரு புள்ளிவிவரப்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது ஒவ்வொரு 40 விநாடிக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்டோ போர்களிலோ இறப்பவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் தற்கொலை செய்துகொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
இந்தியாவில் கடந்த 2018 -ஆம் ஆண்டை விட 2019 -ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் அதிக எண்ணிக்கையில் தற்கொலை நிகழும் நாடாக இந்தியா விளங்குகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், "தற்கொலையின் தலைநகரம் இந்தியா' என்று அழைக்கப்படுகிறது. 
இந்தியாவில் தற்கொலை அதிக அளவில் நிகழும் மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்திய மாநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. தற்கொலை என்பது மனிதன் கடவுளிடம் "நீ என்ன என்னை வெளியேற்றுவது? நானே வெளியேறுகிறேன்' என்று கூறுவது போன்றதாகும். 
தோல்வி, ஏமாற்றம், அச்சம், நிராகரிப்பு போன்ற நிகழ்வுகள் தரும் ஏமாற்றம், மன அழுத்தம், மன உளைச்சல், மனச் சோர்வு போன்றவை தற்கொலைக்கான முக்கிய காரணங்கள். இன்றைய இளைய தலைமுறையினர் இவ்வித நிகழ்வுகளை அதிகமாக எதிர்கொள்ள நேரிடுகிறது. இந்தியா போன்ற வளரும் நாட்டில் இது மிகப்பெரிய அவலம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
தற்கொலை செய்யத் துணிபவர்கள், தங்களது முடிவை ஏதேனும் ஒரு வகையில் முன்கூட்டியே வெளிப்படுத்துகின்றனர் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். விடைபெறுவது போல் பேசுவது, பதற்றமாக இருப்பது, எந்த ஒரு செயலிலும் ஈடுபாடில்லாமல் இருப்பது, தங்களுக்கு மிகவும் பிடித்த பொருளை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவது போன்றவை தற்கொலைக்கான அடையாளங்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நம் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது சமூகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. விவசாயிகள் மட்டுமல்ல, தொழிலதிபர்கள், காவல்துறையினர், இசைக்கலைஞர்கள், திரைப்படத் துறையினர் இப்படி சொல்லி கொண்டே போகலாம். சில மாதங்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  
தற்கொலை சம்பவங்கள் நடப்பதற்கு பெரும்பாலும் குடும்பப் பிரச்னைகளே காரணமாகின்றன. ஏன் இந்த விபரீத முடிவு? தற்கொலை என்பது ஒருவர் தன்னை தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம். தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றச் செயலாகக் கருதக் கூடாது என்ற நிலையை நோக்கி நம் சமூகம் பயணிக்க தொடங்கி விட்டது.
இந்திய அரசியல் சாசனத்தின்படி ஒருவருக்கு தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமையோ அதிகாரமோ கிடையாது. இதுதான் சட்டம். அதையும் மீறி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்று, ஆனால் அதில் தோல்வியுற்று அவர் மீட்கப்பட்டால் இந்திய தண்டனை சட்டம் 309-ஆவது பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்படும். அவருடைய செயலுக்காக அபராதத்துடன் சிறை தண்டனையும் வழங்கப்படும்.
தற்கொலையை அடிப்படையாக வைத்து சில மிரட்டல் சம்பவங்களும் ஆங்காங்கே நடப்பது உண்டு. சமீபத்தில் பழனி அருகே கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினரும், போலீஸ் அதிகாரிகளும் அவரது வீட்டிற்குச் சென்றபோது, அந்த இளைஞரும் அவரின் குடும்பத்தினரும் "கரோனா பரிசோதனை செய்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்' என்று மிரட்டியுள்ளனர்.
இந்த உலகத்தில் பிறக்கும்போது நம்முடைய மூளையில் எந்த ஒரு தகவலும் இருக்காது. நம் மூளை தகவலை சேகரிக்கும் என்றால் அதனால் தகவலை அளிக்கவும் முடியும். இந்த முறையை நாம் கையாண்டால் தற்கொலையிலிருந்து விடுபடலாம். தற்கொலை எண்ணத்தை மன நோயாகக் கருதி ஒருவர் சிகிச்சை எடுத்துக்கொண்டால், அவர் தனது விலைமதிக்க முடியாத உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.
பலரும் தற்கொலைக்கு எதிராக தன்னார்வ அமைப்புகளை உருவாக்கிஅதன் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகின்றனர். அந்த அமைப்பினர், தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்களால் தங்களின் வாழ்வில் நேரிட்ட அனுபவங்களையும் அவற்றிலிருந்து தாங்கள் எப்படி மீண்டு வந்தோம் என்பதையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்துவதோடு, தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் கற்றுத் தருகின்றனர். 
நம் வீட்டில் எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து செல்லும்போது நாம் கையை வைத்து அதன் பாதையைத் தடுப்போம். அப்போது அந்த எறும்புகள் சற்றும் மனம் தளராமல் தங்கள் பயணத்தை வேறு பாதை வழியே தொடரும். அது போலவேதான் மனிதனும் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் தடைகளையெல்லாம் தாண்டி தன் பயணத்தைத் தொடர்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
 ஓட்டப் பந்தய வீரன்போல ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் வெற்றியடையும்வரை போராடுவதற்கான துணிவைப் பெற வேண்டும். தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம். வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்குத்தான், சாவதற்கல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com