இசை மகா சமுத்திரம்!

 டிசம்பர் மாதம் பிறந்துவிட்டாலே, நம்முடைய பாரம்பரிய சங்கீதம், நம் செவிகளை மட்டுமன்றி, கண்களையும் திறக்கச் செய்யும். இம்மாதக் குளிரினாலும், மழையினாலும் ஏற்படும் வாட்டத்தைப் போக்கி, மலர்ச்சியையும், குதூகலத்தையும் தரவல்லது நம் சங்கீதம். அதிலும் நெல்லை மாவட்டம் விளாத்திக்குளம் சுவாமிகள் இசைத்த ஆலாபனைகள், இன்றைக்கும் செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கின்றன.
 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென்பாண்டி நாட்டைத் தமது ராக ஆலாபனையால் கட்டிப்போட்டவர், இசை மகா சமுத்திரம் விளாத்திக்குளம் சுவாமிகள் எனும் நல்லப்ப சுவாமிகள். இவர் தேசிய பாரம்பரியத்தில் வந்தவர். வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு தூக்கிலே தொங்கிய பாளையக்காரர் காடல்குடி குசல வீரகஞ் செயபாண்டியரின் வழித்தோன்றல் இவர். மகாகவி பாரதியாரின் தேசியப் பாடல்களைத் தெருவெங்கும் முழங்கியதோடு பாரதியாரின் உற்ற நண்பராகவும் திகழ்ந்தவர்.
 விளாத்திக்குளம் சுவாமிகள் காடல்குடி கிராமத்தில் 1889 செப்டம்பர் 24-ஆம் நாள் சோமசுந்தர ஜெகவீரகஞ் செயபாண்டியன் - கோவம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். வாழ்க்கை முழுவதும் நாதோபாசனையின் திருவுருவமாகத் திகழ்ந்த நல்லப்ப சுவாமிகள், எந்த குருநாதரிடமும் ராகம், தாளம் பயின்றதில்லை. குமரகுருபரரைப்போல, தெய்வத்தின் சந்நிதியிலேதான் அந்தத் தெய்வீகக் கலையைக் கற்றார். நாகசுர மேதை மன்னார்குடி பக்கிரிசாமிப் பிள்ளையை மட்டுமே தம்முடைய மானசீக குருவாக ஏற்றார்.
 விளாத்திக்குளம் சுவாமிகள், மகாகவி பாரதியாரின் "பாருக்குள்ளே நல்ல நாடு' பாடலை இசையமைத்துப் பாடியதைக் கேட்ட பாரதியார், சுவாமிகளின் தோள்களைத் தட்டி, "சபாஷ் பாண்டியா! பாடு பாண்டியா பாடு' என்றார். தெய்வீக மேடைகளில் பக்திப் பாடல்களையும் தேசிய மேடைகளில் பாரதியார் பாடல்களையும் பாடி வந்ததால், ஆங்கில அரசின் பார்வை சுவாமிகள் மேல் பதிந்தது. மகாகவி பாரதியார் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தபோது, நல்லப்ப சுவாமிகளும், சங்கரநயினார் கோவில் அருகிலுள்ள எட்டுச்சேரியில் தலைமறைவு ஆயினார்.
 விளாத்திக்குளம் பகுதியிலுள்ள துலாக்கிணறு இறைத்து ஊற்றும் நீருக்கடியில் அமர்ந்து ராகங்களை சாதகம் செய்வார். 72 மேளகர்த்தா ராகங்களிலும், ஹிந்துஸ்தானி இசையிலும், மேனாட்டு இசையிலும் நுட்பமாகப் பாடும் ஆற்றல் பெற்றவர். அதனால் மக்கள் அவரை "இசை மகா சமுத்திரம்' என்றே அழைத்தனர்.
 "கரஹரப்ரியா', "சண்முகப்ரியா' ராகங்களில் சுவாமிகள் பாடும் பாடல்களைக் கேட்ட ஊர் மக்கள் மெய்சிலிர்த்துப் போயினர். சுவாமிகள் "பிலஹரி' ராகத்தை விசிலிலேயே ஆலாபனை செய்வதைக் கேட்ட பெரியவர்கள், "மைனாவைப் போல பாடும் ஆற்றல் பெற்றவர்' எனப் பாராட்டியிருக்கின்றனர். கர்நாடகச் சங்கீதத்தை "நம்ம சங்கீதம்' என அடிக்கடி கூறுவார் சுவாமிகள்.
 உரிய காலத்தில் சுவாமிகளுக்கு செல்லம்மாள் என்பவரோடு திருமணம் நடந்தது. வாழ்க்கைத் துணை நலத்தைப் போல மக்கட்பேறும் உரிய காலத்தில் வாய்த்தது. லெளகீக வாழ்விலும் ஆன்மிக வாழ்க்கையே வாழ்ந்தார் விளாத்திக்குளம் சுவாமிகள்.
 சுவாமிகளுக்கு கம்பீரமான தோற்றம், ஆறடிக்குக் குறையாத உயரம், கறுத்த மேனி, ராஜ அம்சத்தோடு கூடிய முகப்பொலிவு, தீட்சண்யமான கண்கள், ஏறிய நெற்றியில் திருநீற்றுப் பூச்சு, கழுத்தில் ருத்திராட்ச மாலை, கண்டத்தில் ஏக ருத்திராட்சம், வெள்ளை கதர் வேஷ்டி, மஞ்சள் நிறத் துண்டோடுத் திகழ்ந்தார். அவைக்கு வரும் நேரங்களில் பச்சை நிறத்தில் பீதாம்பரமும் அணிவதுண்டு. சிவப்பு நிறப் பட்டுத்துணியால் தைக்கப்பட்ட திருநீற்றுப்பை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.
 கச்சேரியில் அமரும்போது, அவரது பின்புறம், சிங்கத்தின் பிடரிபோல் நிமிர்ந்து நிற்கும். சப்பணம் போட்டு அமர்ந்து தலையை நாலா பக்கமும் திருப்பி ஒரு புன்னகையோடு கச்சேரியைத் தொடங்கும்போது, ஒரு ராஜ கம்பீரம் தெரியும். காவடிச் சிந்து, திருப்புகழ்ப் பாசுரங்களை இசைக்கும்போது, அவையினர் மெய்மறந்து கேட்டிருப்பர்.
 சுவாமிகள் தோடி ராகத்தை கம்பீரமாகப் பாடத் தெரிந்தவர் என்பதோடு, தோடி ராகத்தின் தோற்றத்தையும் முதன் முதலில் எடுத்துச் சொன்னவர் ஆவார். அனுமன் தாவும் போதெல்லாம் எழுப்பும் ஓசை தோடி. அதனால் அதற்கு அனுமத்தோடி என்றே பெயராம். அத்தோடியை சுவாமிகள் பாடும்போது அவருடைய முகமும், அனுமனைப்போலக் காட்சியளிக்குமாம்.
 "தோடி ராகத்தை சுவாமிகள் பாடியதன் ஒரு பகுதிதான், திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம் பிள்ளை வாசித்த "தோடி'. சுவாமிகளின் தோடி ராகத்தைச் செவிமடுத்த இராஜரத்தினம் பிள்ளை, சுவாமிகளை திருவாவடுதுறைக்கே அழைத்துப்போய், அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கியதோடு, பல சிறப்புக்களையும் செய்து வழியனுப்பி வைத்தார்.
 ஒருமுறை சேலம், செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த குலாலர்கள் (குயவர்கள்) தங்கள் விழாவில் கச்சேரி செய்ய சுவாமிகளை அழைத்திருந்தார்கள். மூன்று மணி நேர கச்சேரியில், ஒரு திருவருட்பா பாடலை எடுத்துக்கொண்டு, ஓரிரு அடிகளைப் பாடிவிட்டு இரண்டரை மணி நேரம் ராக ஆலாபனை செய்தார்கள். ஆலாபனையைக் கேட்ட அவ்வூர் மக்கள் சுவாமிகளுக்கு "ஆலாபனை அரசர்' என பட்டம் கொடுத்து சிறப்பித்தனர்.
 மைசூர் தசரா விழாவிற்கு விளாத்திக்குளம் சுவாமிகள் அழைக்கப்பட்டார். சுவாமிகளுக்கு முன் கச்சேரி செய்த வித்வான் இலட்சுமணப் பிள்ளை ஒரே ராகத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் ஆலாபனை செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த மைசூர் மகாராஜா அவருக்குப் பணமுடிப்பும், வைரக்கல் பதித்த தங்க மோதிரமும் பரிசளித்தார். பரிசைப் பெற்றுக்கொண்ட வித்வான், தன்னைப் போல் ஒரு இராகத்தைப் பாடக்கூடிய வித்வான் யாராவது இருந்தால் சொல்லலாம் என்று சவால் விட்டார்.
 எதிரே இருந்த விளாத்திக்குளம் சுவாமிகள், அந்த சவாலை ஏற்று, கரஹரப்ரியா ராகத்தை ஐந்து நாட்கள் ஆலாபனை செய்து வெற்றிக்கொடி நாட்டினார். தோல்வியை ஒப்புக்கொண்ட இலட்சுமணப்பிள்ளை, தாம் மகாராஜாவிடமிருந்து பெற்ற வெகுமதிகளை சுவாமிகளிடம் தந்துவிட்டு, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார். மகாராஜாவும் சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, சுவாமிகளுக்கு பொன்னாடையும், விலையுயர்ந்த தங்க மெடலும் வழங்கி, "கரஹரப்ரியா சக்கரவர்த்தி' எனும் பட்டத்தையும் வழங்கினார்.
 தங்க மெடலைப் பெற்ற சுவாமிகள் தம் இல்லம் செல்லாமல் வடக்கு நத்தம் கிராமத்திலுள்ள ஆறுமுக சுவாமி ஜீவ சமாதிக்கு சென்று, தங்க மெடலை கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்து விட்டார். சுவாமிகள் சில ராகங்களை ஐந்து கட்டைகளுக்கு மேலே பாடுவார். சில ராகங்களை அரை கட்டைக்கும் குறைவாகப் பாடுவார்.
 சுவாமிகளின் வியத்தகு இசைப்புலமையைக் கேள்விப்பட்ட யாழ்ப்பாணத்து ரசிகப் பெருமக்கள் அவரை கச்சேரிக்கு அழைத்தனர். சுவாமிகள் மேற்கொண்ட முதலும் முடிவுமான வெளிநாட்டுப் பயணம் அதுதான்! ஒரு மாதம் அங்குத் தங்கியிருந்து, கண்டி சிவன் கோயில், கதிர்காமம் முருகன் கோயில், கொழும்பு பொன்னம்பல ஈசுவரன் கோயில், திரிகோணமலை கோயில்களிலும் பாடினார்.
 எழுத்தாளர் கு. அழகிரிசாமி "விளாத்திக்குளம் சுவாமிகள் ஆங்கிலப் பண்களை நம் கர்நாடக ராகங்கள் சிலவற்றில் பொருத்திப் பாடினார்கள். சங்கீதத்தில் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் உறவு தேடிக்கொடுத்த பெருமை நம் சுவாமிகளையே சேரும்' எனப் பாராட்டுகிறார்.
 ஒருமுறை எம்.கே. தியாகராஜ பாகவதர் திருநெல்வேலியில் நாடகத்தை முடித்துவிட்டு, தன்னை குருவாக வரித்துக்கொண்ட ஹரிராம் சேட்டுடன் (சொக்கலால் பீடி கம்பெனி அதிபர்) விளாத்திக்குளம் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. விளாத்திக்குளம் எல்லை தொடங்கியவுடன், காரை விட்டுக் கீழே இறங்கி, ஓட்டுநரிடம் மெதுவாக காரை நகர்த்தச் சொன்னார். "இது விளாத்திக்குளம் சுவாமிகள் இருக்கிற மண். இந்த பூமியிலே நம் பாதம் பட்டாலே புண்ணியம்' எனச் சொல்லி நடந்தவர், நேரே சுவாமிகளுடைய இருப்பிடத்திற்குள் நுழைகிறார். சுவாமிகளைப் பணிவோடு வணங்கி ஆசிர்வாதத்தைப் பெற்று, சுவாமிகளுடைய திருக்கரத்தால் திருநீறு பூசிக்கொண்டு புறப்படுகிறார். இந்த சம்பவத்தை ஹரிராம் சேட் பதிவு செய்திருக்கிறார்.
 இசையரசி கே.பி. சுந்தராம்பாள் விளாத்திக்குளம் வட்டாரத்திற்கு கச்சேரிக்கு வரும்போதெல்லாம், சுவாமிகளின் இருப்பிடம் சென்று, திருநீறு பூசிக்கொண்டு வருவாராம்.
 சுவாமிகளின் தோடி ராகத்தில் சொக்கிப்போன எழுத்தாளர் கி. ராஜநாராயணன், "காலையில் பாடிய தோடி, மத்தியானத்துக்கு வராது. மத்தியானம் பாடிய தோடி, சாயங்காலத்துக்கு வராது. ராத்திரி பாடுகிற தோடியோ, புத்தம் புதிதாக இப்பொழுதுதான் கப்பலில் வந்து இறங்கியது போலிருக்கும். நமக்குத் தெரிந்த ஒரு ராகத்தை, பல்வேறு கோணங்களில், விதங்களில் விசுவரூப தரிசனம் காணும்போது, நாம் மெய் மறந்து போவோம்' என நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்.
 சுவாமிகளுடைய இசை எதுவுமே பதிவில் இல்லாததை எண்ணி வருந்தும் கி. ராஜநாராயணன் "அது ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியாத துரதிர்ஷ்டம் பிடித்த காலம்! எப்படி இன்னொரு கிருஷ்ணாவதாரம் கிடைக்காதோ, அப்படித்தான் இன்னொரு விளாத்திக்குளம் சுவாமிகளும் வரப்போவதில்லை' என எழுதுகிறார்.
 நாகசுர மேதை காருக்குறிச்சி அருணாசலம் விளாத்திகுளம் சுவாமிகளை தம் குருநாதராகவே ஏற்று வணங்கி வந்தார். சுவாமிகள் அமரத்துவம் அடைந்தவுடன், அவர் ""கரஹரப்ரியா ராகத்தை நினைத்தவுடன் விளாத்திக்குளம் சுவாமிகளுடைய நினைவுதான் வரும். கரஹரப்ரியாவைத் தம் புத்திரனை சீராட்டி வளர்க்கும் ஒரு தாயைப் போல் பேணி வளர்த்தார்கள். இந்த ராகத்தை சென்னையில் சுவாமிகள் பாடக்கேட்ட வட இந்திய சங்கீத மேதைகள், "இவர் எங்கள் இசைமேதை ஓங்கார நாதராகவே இருக்கிறார்' எனப் பாராட்டிப் போற்றினர்'' என்று கூறினார்.
 சுவாமிகள் அமரத்துவம் அடைந்த அன்று (25.4.1965) விளாத்திக்குளம் முழுவதும் கடையடைப்பு செய்தனர். சுவாமிகளின் பூத உடல் நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட இசைவாணர்கள் கலந்துகொண்டு, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com