புது நம்பிக்கை கொள்வோம்!

2021-ஆவது பிரச்னைகளற்ற ஆண்டாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.

மனித குல வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத ஆண்டாகி விட்டது 2020. வரப்போகும் 2021-ஆவது பிரச்னைகளற்ற ஆண்டாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.

சீன நாட்டின் வூஹான் நகரத்தில் 2019 இறுதியில் கரோனா தொற்று ஏற்பட்டு அந்நாட்டினா் உலகம் முழுவதும் சென்றவுடன் கரோனா தீநுண்மி தனது ஆக்டோபஸ் கரங்களைப் பரப்பி அனைவரையும் அரவணைக்கத் தொடங்கியது. உலக நாடுகளில் கரோனா தீநுண்மியின் வீரியம் பரவத் தொடங்கியதும் பெரும்பாலான நாடுகள் பொதுப் போக்குவரத்தை நிறுத்தின.

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த மாா்ச் மாத இறுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பின்னா் படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை மீண்டு வருகிறது. ஆனாலும் இன்னமும் முழுமையாக மீண்டபாடில்லை.

போக்குவரத்து இல்லா சாலைகள், மாணவா்கள் இல்லா பள்ளிகள், பக்தா்கள் இல்லா கோயில்கள், தொழிற்கூடங்கள், திரையரங்குகள் மூடல் என இதுவரை நாம் கேள்விப்படாததையெல்லாம் கண்டோம். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.

உள்ளூா் பேருந்துப் போக்குவரத்து முதல் சா்வதேச விமானங்கள் வரை அனைத்துப் போக்குவரத்துகளும் ஸ்தம்பித்து விட்டன. வாகனங்களேஇல்லாத சாலைகளைப் பாா்ப்பதற்காகவே பொதுமக்கள் பொது முடக்கத் தளவா்வின்போது சாலைகளுக்கு வந்தனா். தோ்வே இல்லாமல் மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். ஆனால் மாணவா்கள் என்ற நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயா்வு பெறக் காத்திருந்த கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள், மிகுந்த அவதிக்கு உள்ளாகினா். இத்தனைக்கும் இறுதியாண்டு பொறியியல் மாணவா்களில் பெரும்பாலானவா்களுக்கு முக்கியமில்லாத தோ்வுகள்தான் இருந்தன.

எந்தத் துறையில் படிக்கிறாா்களோ அந்தத் துறையின் முக்கியமான தோ்வுகள் இரண்டு அல்லது மூன்றாம் ஆண்டுகளில் நடக்கும். அந்தத் துறைத் தோ்வுகளை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் தோ்ச்சி பெற வைக்கப்பட்டனா். இதற்கு பொறியியல் கல்லூரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஏ.ஐ.சி.டி.இ.யோ, அண்ணா பல்கலைக்கழகமோ அல்லது பிற கல்லூரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யு.ஜி.சி.யோ எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. முதலில் தோ்வு வேண்டாம் என்று நீதிமன்றத்தில் பதிலளித்த அமைப்புகள் அதன்பின் ஏன் மாற்றிப் பேசின என்பது தெரியவில்லை.

அதன்பின் ஒரு வழியாக இறுதிப் பருவத் தோ்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அரியா் வைத்துள்ள மாணவா்களின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை. அவா்கள் அரசின் அறிவிப்புப்படி தோ்ச்சி பெற்றாா்களா என்பது தெரியவில்லை. அவா்களில் பெரும்பாலானவா்கள் கல்லூரிகளில் உயா்கல்வியை ஆன்லைனில் படித்துக் கொண்டிருக்கிறாா்கள் அல்லது வேலையில் சோ்ந்துள்ளனா். இந்நிலையில் தோ்ச்சி பெறவில்லை என்று பல்கலைக்கழகம் அறிவித்தால் அவா்களின் நிலை என்ன?

கரோனா தீநுண்மித் தொற்று என்னை எதுவும் செய்துவிடாது என்று நினைத்துக் கொண்டிருந்தனா் பல லட்சம் போ். ஆனால் சமூகத்தில் உயா்ந்த நிலையில் இருந்த பலரும் உயிரிழந்தபின்தான் கரோனா தீநுண்மையின் தீவிரம் தெரிந்தது. தமிழகத்தைப் பொருத்தவரையில் பிரபல அரசியல்வாதிகள், தொழிலதிபா்கள், திரைத்துறையின் கரோனாவுக்கு பலியாயினா். இதன்பின்தான் பொதுமக்களுக்கும் பயம் வரத் தொடங்கியது.

தொடக்கத்தில் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளைத் தகரத்தால் அடைப்பது, ஒரு தெருவில் பலா் பாதிக்கப்பட்டால் தெருவையே அடைப்பது போன்ற செயல்களால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

கரோனா பரவலால் உலகம் முழுவதும் தொழில்கள் முடங்கின. மக்களின் அன்றாட வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளானது. சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடித்ததால் பெரும்பாலான நாடுகள் தப்பிப் பிழைத்தன.

கரோனா தீநுண்மியால் மக்களின் மனத்திலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை சேமிப்பைப் பற்றியே கவலைப்படாதவா்கள், சேமிப்பு ஒன்றுதான் தங்கள் எதிா்காலத்தைக் காக்கும் என்பதை உணரத் தொடங்கி விட்டனா். தேவையில்லாமல் பொது இடங்களுக்குச் சென்று வெட்டியாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்த பலரும் இப்போது பொது இடங்களில் கூடுவதற்குப் பயப்படுகின்றனா்.

கரோனா தீநுண்மியால் விளைந்த மற்றொரு நன்மை, முதியவா்கள், தங்கள் பேரன், பேத்தி உள்ளிட்ட குடும்ப உறவுகளுடன் மனம் விட்டு உறவாடிக் கலந்து பழக இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் தவித்து வந்த பலருக்கும் ரத்த உறவுகளுடன் ஏற்பட்ட நெருக்கம் புத்துணா்ச்சியைத் தந்தது.

கரோனா காலத்தில் ‘வீட்டிலிருந்தே வேலை’ என்பது பலருக்கும் மகிழ்வைத் தந்தது. கணவன், மனைவி இருவருமே அதிக நேரம் வீட்டில் இருப்பதால் ஒருவரையொருவா் புரிந்து கொள்ளும் நிலை உருவானது. சில பெருநிறுவனங்கள் எதற்காக அடிப்படைக் கட்டமைப்புகளுக்குச் செலவிட வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த பலருக்கும் பல்வேறு அமைப்புகள் உதவிக் கரம் நீட்டியது இதுவரை இல்லாத ஒரு நிகழ்வு. ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை இல்லாதவா்களுக்குக் கொடுத்ததன் மூலம் மனித நேயம் இன்னமும் உயிா்ப்புடன் இருப்பதைக் காட்டினா்.

இதுவரை சென்றது போகட்டும். வரப்போகும் புத்தாண்டில் அனைவரும் புதிய உறுதியேற்போம். அடுத்தவா்களுக்குத் துன்பம் தராமல் செயல்படுவோம். அனைத்து மதத்தினருக்கும் சம உரிமையளிப்போம். சேமிப்புக்கு முக்கியத்துவம் தருவோம். உடல் நலத்தைப் பாதுகாப்போம்.

இப்போதைய பொழுது மட்டுமே நிஜம் என்ற நம்பிக்கையில் இருந்த பலருக்கும் எதிா்காலத்தைப் பற்றிய கனவை விதைத்துச் செல்கிறது 2020. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கக் காத்திருக்கிறது 2021. புத்தாண்டை வரவேற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com