மரபுநிலை திரியின்...

சைவக் கோயில்கள் சைவ ஆகமங்களின் அடிப்படையிலேயே எழுப்பப்படுகின்றன.

கோயிலைத் தழுவிய குடிகள்
 குடிகளைத் தழுவிய கோயில்
 என்பதே தமிழர் நெறி, "திருக்கோயில் இல்லாத ஊர் என்பது ஊர் அல்ல, காடு' என்பது அப்பர் வாக்கு. பொதுவாக, திருக்கோயில்களுக்கு பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்பது சாத்திரம். சில கோயில்களில் சற்று முன்னோ பின்னோ நிகழ்வது உண்டு. தஞ்சைப் பெரிய கோயிலுக்குக் கடந்த 1996-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இருபத்து மூன்று ஆண்டுகட்குப் பின்னர், இப்போதுதான் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் நாள் குடமுழுக்கு நிகழ இருக்கிறது.
 சைவக் கோயில்கள் சைவ ஆகமங்களின் அடிப்படையிலேயே எழுப்பப்படுகின்றன. சைவ மூல ஆகமங்கள் 28 இருந்தபோதிலும் குறிப்பிட்ட ஒரு சில ஆகமங்களின் அடிப்படையிலேயே பெரும்பாலான கோயில்கள் கட்டப்படுகின்றன. ஒரு கோயில் எந்த ஆகமத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதோ, அந்த ஆகமத்தின் அடிப்படையிலேயே அக்கோயிலுக்கான தினசரி வழிபாடுகள், மாதாந்திர, வருடாந்திர திருவிழாக்கள் அமையும். அவ்வாலயக் குடமுழுக்கும் அவ்வாகமத்தின் அடிப்படையிலேயே நிகழும்.
 தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் "மகுடாகமம்' என்னும் ஆகமத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட கோயில். (சிதம்பரம் நடராஜர் கோயிலும் மகுடாகம அடிப்படையில் உருவானது. திருநெல்வேலி நெல்லையப்பர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் போன்ற கோயில்கள் காமிகாகம அடிப்படையில் எழுப்பப்பட்டவை.) எனவே, மகுடாகம முறையிலேயே பெரிய கோயிலின் தினசரி பூஜைகளும் திருவிழாக்களும் குடமுழுக்கும் நடைபெற்று வருகின்றன.
 கடந்த 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கும் மகுடாகம அடிப்படையில் நடைபெற்றது. இவ்வாண்டும் அவ்வாறே நடத்திட முடிவு செய்து கடந்த மாதம் பாலாலய பணிகள் ஆகம முறைப்படி நடைபெற்றன.
 குடமுழுக்கு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் சிலர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் நிகழ்த்த வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். இது தமிழுக்கு ஏற்றம் தரும் செயல் என எண்ணி அரசியல் கட்சியினர் பலரும் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எதிரான கருத்துகளும் வராமல் இல்லை. அரசின் அறநிலையத்துறை "தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு, தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இருமொழி வழியிலும் நடைபெறும்' என்று அறிவித்துள்து.
 தொன்றுதொட்டு ஒரு குறிப்பிட்ட முறையில் நடைபெற்று வரும் ஒரு நிகழ்வை - அதுவும் இறைவன் தொடர்பான, கோயில் சார்ந்த - ஒரு மரபை திடீரென சிலர் மாற்ற முனைவது சரியா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
 "ராஜராஜன் ஒரு தமிழ் மன்னன். எனவே, தமிழ் வழியில் குடமுழுக்கு செய்வதே சரி' என்று கூறுகிறார்கள். ராஜராஜன் தமிழ் மன்னன்தான். ஆனால், அவன் வடமொழி வெறுப்பாளனோ பிராமண வெறுப்பாளனோ அல்லன். தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகளையும் அதிகம் நேசித்தவன். அருண்மொழித்தேவன் என்ற இயற்பெயர் கொண்ட ராஜராஜனுக்கு, தில்லைவாழ் அந்தணர்கள்தான் "ராஜராஜன்' என்னும் பட்டத்தை அளித்தனர். ராஜராஜனின் குலகுருவாக இருந்தவர் ஓர் அந்தணர். பன்னிரு திருமுறைகளையும் கண்டெடுத்ததால், "திருமுறை கண்ட சோழன்' என்று ராஜராஜன் புகழ் பெறுவதற்குக் காரணமாக இருந்தவரும் ஓர் அந்தணர்தான்.
 சுவாமிக்கு முன்னர் திருப்பதிகம் விண்ணப்பிக்க 48 பிடாரர்களையும் உடுக்கை வாசிக்க ஒருவரையும் கொட்டு மத்தளம் முழங்க ஒருவரையும் ராஜராஜன் நியமித்தான். (மொத்தம் 50 பேர்). கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கும் இவர்கள் பெயர்கள் எல்லாமே அகோரசிவன், தத்புருஷ சிவன், ஞான சிவன், மனோன்ம சிவன், பூர்வ சிவன், சத்ய சிவன், நேத்ர சிவன், ஓங்கார சிவன் என்றே உள்ளன. இப்பெயர்கள் யாவும் "சிவன்' என்று முடிவதால் சிவதீட்சை பெற்றவர்களையே திருப்பதிகம் பாட ராஜராஜன் நியமித்துள்ளான் என்பது புலனாகிறது.
 "தமிழ் மொழியில் வழிபாடு செய்தால் இறைவனுக்குப் புரியாதா' என்று வினா எழுப்புகின்றனர். இறைவனுக்கு எல்லா மொழிகளும் புரியும். தேவர்கள் எல்லா மொழிகளாலும் இறைவனைத் துதிக்கின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
 "கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டா என்று
 எல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த' என்கிறது திருநல்லம் பதிகம்.
 இறைவனுக்கு மொழிபேதம் இல்லை. இனிய தமிழ்ச் சொல்லும் உயர்ந்த வடசொல்லும் இறைவனின் திருத்தாள் நிழலில் சேர்ந்து பெருமை கொள்கின்றன என்கிறது தேவாரம்.
 தம்மலர் அடியொன்று அடியவர் பரவத்
 தமிழ்ச் சொலும் வடசொலும் தாள்நிழல் சேர... (அச்சிறுபாக்கம் பதிகம்)
 வடமொழி என்று கூறப்படுவது பாரதத்தின் வடதிசையில் பேசப்படும் மொழி என்று எண்ணுவது தவறான புரிதல். வடம் என்றால் ஆல். வடவிருட்சம் என்பது ஆலமரத்தைக் குறிக்கும் (வட ஆரண்யம் - ஆலங்காடு) இறைவன் ஆல மரத்தின் அடியில் இருந்து சனகாதி முனிவர்களுக்கு அறத்தின் பொருளாகிய வேதங்களை அருளினான். (இதனை சம்பந்தர், தனது திருமுதுகுன்றம் பதிகத்தில், "அறங்கிளரு நால்வேதம் ஆலின்கீழ் இருந்தருளி' என்று குறிப்பிடுகின்றார்.) எனவேதான் அது வடமொழி என்றாயிற்று.
 மேலும் வேதமந்திரங்கள் அனைத்தும் வடமொழியே என்று கருதுவதும் பிழையே. வேதங்கள், சொல்லப்பட்டவை, கேட்கப்பட்டவையே தவிர எழுதப்பட்டவையல்ல (எழுதாக்கிளவி). மந்திரங்கள் பலவகை. அவற்றுள் பீஜ மந்திரங்கள் என்பவற்றிற்கு பொருள் கிடையாது. ஆனால் அதிர்வலைகளும் அதனால் விளையும் பலனும் உண்டு. எனவே, இவற்றை வேறு மொழிகளில் மொழிபெயர்க்க இயலாது. வேத மந்திரங்களின் உச்சரிப்புக்கு சற்றொப்ப வடமொழியில் எழுத்துகள் இருந்ததால் அவற்றை வடமொழியில் எழுதி வைத்தார்கள். எனவே, வடமொழியும் வேத மொழியும் வேறு வேறு. இதனைத்தான் அப்பர், "வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்' (சிவபுரம் பதிகம்) என்று தனித்தனியே வடமொழியையும் மறைகளையும் குறிப்பிடுகிறார்.
 ஆகமவழியில் குடமுழுக்கு செய்ய வேண்டியதன் இன்றியமையாமை யாதெனில், ஆகமங்களில்தான் குடமுழுக்குக்கான கிரியைகள் கூறப்பட்டிருக்கின்றன. குடமுழுக்குக்கான பணிகளைத் தொடங்குவதிலிருந்து, குடமுழுக்கு நடைபெற்று நாற்பத்தைந்து நாள்கள் கடந்தபின் மண்டலாபிஷேகம் நடைபெறும் வரை உள்ள ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் தெளிவாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
 தமிழில் பன்னிரு திருமுறைகளிலோ வேறு எந்த நூலிலோ ஒரு கோயிலை கட்டுவிப்பதிலிருந்து அதன் தினசரி பூஜைகள், திருவிழாக்கள், குடமுழுக்கு போன்றவை குறித்த விதிமுறைகள் இல்லை. இறைவனைப் போற்றிப் பாடுவது இருக்கிறது. போற்றிப்பாடுதல் வழிபாட்டில் ஒரு பகுதியாகுமேயன்றி அதுவே வழிபாடாகாது. தமிழில் "தொல்காப்பியம்' இலக்கண நூலாக இருக்கிறது. "தமிழ் விடு தூது' மொழியைப் போற்றுவதாக இருக்கிறது. அப்படித்தான் இதுவும்.
 சைவ ஆலயங்களில் தமிழ் வழி குடமுழுக்கு என்று எதுவும் கல்வெட்டில் இல்லை; செப்பேட்டில் இல்லை; ஓலைச் சுவடிகளில் இல்லை; ஆவணங்களில் இல்லை; அருளாளர்கள் வாக்கிலும் இல்லை. ஏனெனில் அப்படி ஒன்று இல்லை. திருமுறைப் பாடல்களிலிருந்து அங்கொங்கும் இங்கொன்றுமாக எடுத்து "தமிழ்வழி' என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. எந்தப் பதிகம் பாடினாலும் முழுமையாக பத்துப் பாடல்களையும் பாட வேண்டும். "பத்தும் பாடவல்லார்' என்றுதான் கூறப்பட்டுள்ளது.
 பன்னிரு திருமுறை பாடிய அருளாளர்களில் எவரும் வடமொழிக்கோ வேத வேள்விக்கோ மாறான கருத்து எதையும் எங்கும் கூறவில்லை. மாறாக வேதங்களையும் வேள்விகளையும் போற்றிப் புகழ்ந்தே பாடியுள்ளனர்.
 "இரு பிறப்பர் முத்தீ ஓம்பும்
 உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர்'
 (அந்தணர்கள் மூன்று வகையான தீயை வளர்த்து வேள்வி புரியும் ஓமாம்புலியூர்) என்றும்,
 "நன்று நகு நாண் மலரால்
 நல் இருக்கு (ரிக்) மந்திரம் கொண்டு
 ஒன்றி வழிபாடு செயல் உற்றவன்'
 (நன்கு மலர்ந்த மலர்கள் தூவி, இருக்கு வேத மந்திரங்களை ஓதி, மனம் ஒருமித்து வழிபாடு செய்தவன்) என்றும் அப்பர் பாடியுள்ளார்.
 ஞானசம்பந்தரோ, "அந்தணர்கள் இயற்றும் வேள்விப் புகையானது, வானத்தில் படர்ந்து இருள்போல செய்விக்கும் வெண்காடு' என்று கூறுகிறார்.
 ("வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே')
 மற்றொரு பாடலில், "உலகப் புகழ் பெற்ற பண்டிதர்கள் பல நாள்களாகப் பயின்று ஓதுகின்ற ஓசையை நன்கு கேட்டு, தேன் சொரியும் சோலையில் உள்ள கிளிகள் வேதங்களின் பொருள் சொல்லும் ஊர் வீழிமிழலை' என்கிறார்.
 பாரிசையும் பண்டிதர்கள் பண்ணாளும்
 பயின்றோதும் ஓசை கேட்டு
 வேரிமலி பொழில்கிள்ளை வேதங்கள்
 பொருள் சொல்லும் மிழலையாமே!
 சுந்தரமூர்த்தி நாயனாரோ, இறைவனை "விடையின் மேல் வருவானை வேதத்தின் ஒலியானை' என்றும், "அரவொலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் விரவிய வேத ஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்திசைப்ப' என்றும் போற்றுகின்றார்.
 தேவார மூவர் மட்டுமல்ல திருவாசகம் அருளிய மாணிக்கவாசகரும் சிவபெருமானை "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்' என்றும் "வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன்' என்றும் புகழ்கின்றார்.
 திருமந்திரத்தில் திருமூலரோ, "வேதத்தை விட்ட அறமில்லை' என்று உறுதிபடக் கூறுகிறார். மேலும் முக்கிய ஆகமங்களான காரணம், காமிகம், சிந்தியம், சுப்பிரம், வீரம், வாதுளம், காலோத்தரம், யாமளம், மகுடம் ஆகியவற்றையும் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.
 பெற்றுநல் ஆகமம், காரணம் காமிகம்
 உற்றநல் வீரம் உயர் சிந்தியம் வாதுளம்
 மற்றுஅவ் வியாமளம் ஆடும் காலோத்தரம்
 துற்று நல் சுப்பிரம் சொல்லு மகுடமே!
 மேலும், வேத ஆகமங்களில் விதிக்கப்பெற்ற நித்திய, நைமித்திக வழிபாடுகள் தப்புமாயின், பொறுக்க முடியாத நோய் மிகுந்து, பூமியில் மழை குறைந்து, போற்றுதற்கு அருமையான அரசரும் போர்த் திறமையில் குன்றுவர் என்றும் கூறுகிறார் திருமூலர்.
 ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
 போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
 கூற்று உதைத்தான் திருக்கோயில்கள்
 எல்லாம்
 சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே!
 வேத ஆகமங்களைப் போற்றுவதில் இவர்களைவிட ஒருபடி மேலே இருப்பவர் சேக்கிழார் பெருமான்.
 இறைவன் வழிபாட்டுக்கு, இறைவனே உரைத்தருளிய ஆகமங்களின் உண்மையே தலையாவது என்கிறார்.
 "உம்பர் நாயகன் பூசனைக்கு அவர்தாம்
 உரைத்த ஆகமத்து உண்மையே தலை'
 இதுமட்டுமன்று. பெரிய புராணத்தில் தொண்டை நாட்டுப் பெருமையைக் கூறவந்த சேக்கிழார்,
 தாயானாள் தனியாயின தலைவரைத் தழுவ
 ஆயு நான்மறை போற்ற நின்று
 அருந்தவம் புரிய
 தூய மாதவம் செய்தது தொண்டை நாடு!
 (தாய் போன்ற உமையம்மை, தனித்திருக்கும் தன் தலைவனான சிவபெருமானைத் தழுவுவதற்காக, நான்கு வேதங்களும் போற்ற ஆகமத்தின் வழியில் நின்று தவம் செய்யும்படியான பேறு பெற்றது தொண்டை நாடு) என்று கூறுகிறார்.
 சைவ சமயத்தைப் பொருத்தவரை வேத நூல், சைவ நூல் ஆகிய இரண்டு நூல்களும் இன்றியமையாதவை. பிற நூல்களின் கருத்துகளெல்லாம் இவ்விரு நூல்களின் கருத்துகளுடைய விளக்கமே ஆகும். இதனையே,
 வேத நூல் சைவ நூல் என்றிரண்டே நூல்கள்
 வேறுள நூல் இவற்றின் விரிந்த நூல்கள்
 என்று "சிவஞான சித்தியார்' கூறுகிறது.
 தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழ் வழியில் நடந்து வந்த குடமுழுக்கு பின்னர் வந்த சிலரால் ஆகம முறைக்கு மாற்றப்பட்டது என்னும் கூற்றும் அடிப்படை ஆதாரமற்றது.
 பெரியகோயிலின் தலபுராணமாகப் போற்றப்படும் "ப்ரஹதீஸ்வர மஹாத்மியம்' என்னும் வடமொழி நூலில்
 காரயாமாஸ ந்ருபதி ப்ருஹதீசஸ்ய ஸுலின
 மகுடாகம வாக்யேன சக்ரே
 கும்பாபிஷேசனம்
 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 அதுமட்டுமல்ல, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், தாம் எழுதியுள்ள "பெருவுடையார் உலா' என்ற நூலில்,
 ஆதிசைவர் நீடு மகுடாகமத்தில்
 ஆட்டத்தில்
 ஓதிசைவில் செய்பூசை உட்கொண்டு
 என்று அறுதியிட்டுக் கூறுகிறார். காய்தல் உவத்தலின்றிக் கண்டால் உண்மை விளங்கும்.
 முன்னோர்கள் திருக்கோயில்களைக் கட்டுவித்தார்கள்; வழிபாட்டு முறைகளை வகுத்து வைத்தார்கள். அவற்றை அவ்வாறே பின்பற்றுதலே நம் கடன். நம் விருப்பம்போல் மாற்றியமைப்பதை அவர்கள் மனம் ஏற்காது. காற்றில் கைவிளக்கைக் காப்பது போல் மரபைக் காத்தல் வேண்டும். "மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்' என்கிறது தொல்காப்பியம்.
 திருநெல்வேலி தென்காசி விசுவநாதர் கோயிலை எழுப்பித்த மன்னன் பராக்கிரம பாண்டியன், "என் காலத்திற்குப்பின் இத்திருக்கோயிலை மரபு கெடாமல் எரியும் விளக்கைக் காப்பதுபோல் காப்பாற்றி வரப்போகிறவர்களின் பொற்பாதங்களை நான் இப்போதே என் தலையால் தாங்குகிறேன்' என்று உருக்கமாகக் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளான்.
 பரிசேர் பொழில்அணி தென்காசிக் கோயில் வகுத்து வலம்
 புரிசேர் கடற்புவி போற்ற வைத்தேன்;
 அன்பு பூண்டு இதனைத்
 திரிசேர் விளக்கெனக் காப்பார் பொற்பாதம் என் சென்னி வைத்தேன்.
 வேதம், ஆகமம், தேவாரம், திருவாசகம் அனைத்துமே சிவபெருமானின் விருப்பத்திற்குரியவை. ஒன்றை விடுத்து ஒன்று இல்லை என்பதே உண்மை.
 கட்டுரையாளர்:
 பத்திரிகையாளர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com