பெண்ணே நீ மகத்தானவள்!

குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறுவது தொடங்கி, பாலியல் தொடர்பான பிரச்னைகள் வரை அனைத்திலும் பெண்கள் தங்கள் விருப்பத்தை

பெண்களைப் போற்ற வேண்டியதன் அவசியத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறது  மனுதர்மம்:

யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ராபலா: க்ரியா:
அதாவது, எங்கு பெண்கள் போற்றப்படுகிறார்களோ, அங்கு தேவர்கள் மகிழ்ச்சியோடு  இருப்பார்கள். எங்கு பெண்கள் போற்றப்படுவது இல்லையோ, அங்கு செய்யும் கிரியைகள் எல்லாம் பலன் தராது போகும். எந்தக் குலத்தில் பெண்கள் போற்றப்படுகிறார்களோ, அந்தக் குலம் விருத்தியடைந்த வண்ணமாகவே இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்கிறது மனுநீதி.
பொருளியல் சார்ந்து பெண்கள் மதிக்கப்படத் தொடங்கியிருக்கும் இன்றைய காலத்தில் பண்பாட்டுத் தளத்தில் பெண்கள் உரிமை என்ற பெயரில் கலாசாரத்துக்கும் சமூகக் கட்டமைப்பிற்கும் ஒவ்வாத கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறுவது தொடங்கி, பாலியல் தொடர்பான பிரச்னைகள் வரை அனைத்திலும் பெண்கள் தங்கள் விருப்பத்தை அல்லது ஆண்களுக்குச் சமமாக தாங்களும் நடந்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இடதுசாரி சிந்தனையாளர்கள் பலரும், முற்போக்கு சிந்தனையாளர்கள் என கூறிக்கொள்வோரும், திராவிடச் சிந்தனையாளர்களும் கருத்துகளை முன்வைக்கிறார்கள். மேடைப்பேச்சுகள் தொடங்கி திரைப்படங்கள் வரை அனைத்து நிலைகளிலும் இதுபோன்ற உரையாடல்களும் கருத்துகளும் பரிமாறப்படுகின்றன.

குடும்ப அமைப்பில் இருந்து விலகுவது, விரும்பிய மனிதருடன் உறவுகொள்வது என்பதெல்லாம் சுதந்திரத்தின் பாற்பட்டது என்பதான சிந்தனை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. ஓர் அமைப்பை உடைப்பதற்கு முன் அதற்கு நிகரான அல்லது அதற்கு மாற்றான, அதனினும் சிறந்த அமைப்பை சிந்தனையை முன்வைக்க வேண்டும்.

அப்படி ஏதும் இல்லாமல் தொடர்ந்து குடும்ப அமைப்பைச் சிதைப்பது அல்லது தான் விரும்பியபடி ஆணுக்கு நிகராகப் பலரோடு பெண்  வாழ்வது என்பது எந்த இடத்துக்குச் சமூகத்தை இட்டுச் செல்லும் என்று இவர்கள் சிந்திக்கவில்லையா அல்லது அத்தகைய ஆபத்தான இடத்துக்கு இந்தச் சமூகத்தைத் தள்ளுவது இவர்களது நோக்கமா? 
இதற்கு விடை காணும்போது மேற்கத்திய சிந்தனைகள் பாரத தேசத்துக்கு, தமிழ்ச் சமூகத்திற்கு எந்தநாளும் பொருந்தாதவை என்ற உண்மை விளங்கும். பல திருமணங்கள் அல்லது "லிவிங் டுகெதர்' என்று சொல்லப்படும் திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இணைந்து வாழ்வது - இவையெல்லாம் அடுத்த தலைமுறையை என்னவாக உருவாக்கும்? அந்தக் குழந்தைகளுக்குக் குடும்பம் இருக்காது, தந்தை என்ற உறவு எந்த இடத்தில் அல்லது எந்த நிலையில் இருக்கும்? இந்தக் கேள்விகளுக்குப் பெண்ணியவாதிகளும், முற்போக்குச் சிந்தனைவாதிகளும் விடை தரத் தயாராக இருக்கிறார்களா?
அறிவுத்தளத்தில் ஆணும் பெண்ணும் நிகராக இருக்க வேண்டும். அதை நோக்கிய பயணத்தை ஒரு சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே முற்போக்கான சிந்தனையாக இருக்கமுடியும். அதை விடுத்து ஆண் மைய சமூகத்தில் ஆண் புரியும் குற்றங்களை, ஆண் எடுத்துக்கொண்டிருக்கும் குற்றங்கள் புரிவதற்கான வெளியை, சலுகைகளை நோக்கிப் பெண்களும் நகர்வது அறிவுடை சமூகத்துக்கு ஏற்றதுதானா?
மகாகவி பாரதியார் குறிப்பிட்டதைப் போல கற்பு நெறி என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம். ஆண் - பெண் இருவருமே ஒழுக்கத்தோடும், பண்போடும் வாழவேண்டும் என்று வலியுறுத்துவது அறிவுடைமையா அல்லது குற்றங்களைப் புரிவதற்கான உரிமை இருவருக்கும் சமமாக இருக்கவேண்டும் என்று வாதிடுவது அறிவுடைமையா என்பதற்கு திராவிடச் சிந்தனையாளர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களும் பதில் அளிப்பார்களா?
இன்றைக்கு தேசத்தின் முன்னேற்றத்தில், உற்பத்தியில் பெண்களும் பெரும் பங்கு கொண்டிருக்கிறார்கள். ஆனால், நமக்கான மரியாதை எப்படி இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டாமா? நம்முடைய தாய்மார்கள் அந்த நாளில் பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஆண்கள் எழுந்து பெண்களுக்கு இடம் தந்தார்கள். 

இன்றைக்கு எத்தனை பேர் அதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறோம்?
சம உரிமை என்று எப்போது குரல் கொடுக்கத் தொடங்கினோமோ, அப்போதிருந்து நமக்கான மரியாதை தொலைந்து கொண்டிருக்கிறது. பெண்ணியக் கருத்தாக்கங்கள் பெண்களுக்கு மரியாதையற்ற சமூகத்தில் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை. நாம் மரியாதையோடு நடத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அந்த மேற்கத்திய சிந்தனைகளைப் பெருமை என்று கருதி பேசத் தொடங்கிய பின் நாம் நம் பாதுகாப்பை, மரியாதையைத் தொலைத்திருக்கிறோம்.
பெண்கள் கல்வியிலும் உற்பத்தியிலும் பங்கு கொண்டிருந்தது, பங்கு கொண்டிருப்பது இன்றைக்கு ஏற்பட்ட புதிய நிலை அல்ல; விவசாய சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சம உழைப்பைத் தந்தவர்கள்தான். இன்றைய இயந்திர உலகில் நமக்கான இடத்தைப் பிடிப்பதற்கு பெரும் பிரயத்தனங்களைப் பெண்கள் மேற்கொள்கிறோம். அதே நேரத்தில் நம்முடைய கலாசாரத்தின் வேர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

குடும்பம் எனும் அமைப்பு சிதையும்போது தேசம் பாழ்பட்டுப் போகும் என்பது மட்டுமல்ல, பாதுகாப்பற்றுப் போகப்போவது பெண்ணும், பெண்மையும்தான். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை; இன்னும் பெண்களைத் தாயாக மதித்துப் போற்றும் ஆண்களே இங்கு பெரும்பான்மை.
அண்மையில்கூட இதற்கான சான்றினைத் தமிழகம் கண்டது. திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் ஒரு பெண்ணைக் காப்பதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தார் யாகேஷ் (22) என்ற இளைஞர். ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் வேறு மார்க்கத்தில் வாகனம் செல்கிறது என்பதை உணர்ந்து தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிட,  இரு சக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணைக் காப்பதற்காக யாகேஷ் விரட்டிச் சென்று பயம் கொண்டிருந்த பெண்ணைக் காக்க முயன்றார். பெயர் அறியாத பெண்ணைக் காத்து, இந்தச் சம்பவத்தில் தன் இன்னுயிரை இழந்தார்  யாகேஷ்.

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்று பேசிக்கொண்டிருக்கும் இதே சமூகத்தில்தான் யாகேஷ் முதலானோரும் வாழ்கிறார்கள். யாகேஷ் ஓர் அடையாளம்தான். அவரைப்போல் எத்தனையோ ஆண்கள் இங்கே உண்டு. ஆணும் பெண்ணும் கூடி வாழக் கடமைப்பட்டவர்கள். ஒருவரையொருவர் எதிராளியாகப் பார்ப்பதும் தன்னிச்சையான செயல்பாடும் இயற்கைக்கு விரோதமானவை.

கல்விக்கூடங்களில் முன்னணியில் நிற்போம். அதே நேரத்தில் பண்புகளையும் கற்றுக்கொள்வோம். பணியிடத்தில் பெருமையோடு பணியாற்றுவோம். அதேசமயம் குடும்பத்துக்கான மதிப்பீடுகளைக் காத்துக் கொள்வோம். சமூக வலைதளங்களில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதற்கென எச்சரிக்கை உணர்வும் அவசியம்.
பாரத தேசத்தில் கொண்டாடப்படுவது தாய்மை. சிதைப்பது அவள் இயல்பல்ல. பெண் உருவாக்குபவள், காப்பவள், அரவணைப்பவள். என்றைக்குத் தன் குழந்தையைக் காட்டிலும் சொந்த விருப்பம் மேலானது என்று பெண் கருதுகிறாளோ, அன்றைக்கு உலகம் அழிவின் பாதையில் வேகமாக நடைபோடும்.

பெண்ணியக் கருத்தாக்கத்தின் நோக்கம் தங்கள் மீதான கட்டுப்பாடுகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறுவது. பெண்கள் மீது செலுத்தி வரும் குடும்ப, சமூக வன்முறைகளை நீக்கி விடுதலை அளிப்பதாகச் சொல்கிறார்கள். பெண்ணைச் சுற்றி உள்ள மாயைகளை, அடக்குமுறையை, சுரண்டலைத் தவிர்த்துப் புதியதொரு தேடலை மீட்டெடுப்பதாகச் சொல்கிறார்கள்.

குடும்பம், உறவுகள் இவற்றிலிருந்து விடுதலை பெற்று அதன் பிறகு என்ன செய்யப் போகிறோம்?  எப்படி நம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறோம்? குடும்பம், உறவுகள், கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டு, அதன் பிறகு தனிமைச்  சிறைக்குள் பெண் தன்னைத்தானே அடைத்துக்கொள்ளப் போகிறாளா? ஆரோக்கியமான மனநிலை அப்போது இருக்குமா? அல்லது ஆண்களை அடக்கியாள அதிகாரம் பெறப் போகிறாளா?
கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடுவது என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் மேலைச் சிந்தனை அதன் பின்விளைவுகள் குறித்துப் பேசாமல் இருப்பது ஏன்? அதன் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியது பெண்தானே. "பெண்ணே நீ மகத்தானவள்' "பெண்ணே நீ புனிதமானவள்' என்றெல்லாம் பாதுகாப்போடும் மரியாதையோடும் நடத்தும் ஒரு சூழலில் இருந்து விடுபட்டு எதை நோக்கி நம் பயணம் அமையப் போகிறது? 
சுவாமி விவேகானந்தர் கூறியதைப் போல் "தாயின் அன்பு மகத்தானது'; அந்தத் தாய்மைக்காக நாம் மதிக்கப்படுகிறோம். பெண் என்பவள் பாதுகாக்கப்பட வேண்டியவள் எனும் பொறுப்புணர்வு இன்னமும் நம் தேசத்து ஆண்களிடம் நிறையவே இருக்கிறது. அன்பால், அறிவாற்றலால் அரவணைக்கும் பார்வையால் இந்த வையத்தை நாம் கட்டி ஆள முடியும். இதை முன்னோர் நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் மறந்துவிட்டு நாளைய விளைவுகளை எண்ணிப் பாராமல் இன்றைய இரவல் சிந்தனைகளைப் பின்தொடர்வதால் அடையப் போவது என்ன? சிந்தித்துச் செயல்படவேண்டிய தருணமிது.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதை மனதில் இருத்தி தீதையும் நன்றையும் சீர்தூக்கிப் பார்த்து செம்மையான பாதையைத் தேர்ந்தெடுப்பது அறிவுத்திறன் கொண்ட பெண்ணின் கடமை.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com