இரு வேறு இந்தியா...

இந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டில் 20.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக "கேப்ஜெமினி' (பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த

இந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டில் 20.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக "கேப்ஜெமினி' (பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனம்) தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சியானது உலக சராசரியைவிட 12 சதவீதம் அதிகமாகும். இந்திய செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 21 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக அளவில் மிகப் பெரிய செல்வந்தர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 11-ஆவது இடத்தில் உள்ளது. ஆசியக் கண்டத்தில் அதிக அளவில் பணக்காரர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்று ஆசிய வங்கி அறிக்கை (ஏஎஃப்ஆர்) சொல்கிறது. இப்போது இந்தியாவில் 119 பில்லியனர்கள் (ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்திருப்போர்.) உள்ளனர். இந்த எண்ணிக்கை 2027-ஆம் ஆண்டிற்குள் 357-ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செல்வந்தர்கள் அதிக அளவு எண்ணிக்கை உள்ள நாடுகளின் பட்டியலில் 11-ஆவது இடத்துக்கு நாம் முன்னேறியுள்ளோம் என்பதால் இதனை வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? இல்லை என்ற பதிலைத்தான் உறுதியாகச் சொல்ல வேண்டும். காரணம், மேற்கண்ட செய்திகள் வந்த அடுத்தடுத்த நாள்களில்தான் நம் நாட்டில் மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் பணியாளர்கள் அதிகரித்திருப்பதாக பல்வேறு செய்திகள் வந்துள்ளன. பட்டினி நிறைந்த நாடுகளின் பட்டியலில் நாம் 100-ஆவது இடத்தில் இருப்பதையும் செய்தியாக சில நாளிதழ்கள்  வெளியிட்டுள்ளன.


மத்திய அரசின் "தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் சுகாதாரத்தை மேம்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி அரசு, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஏன் முயற்சிக்கவில்லை? குறிப்பாக, நாடு முழுவதும் 13,000 பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. 


இந்த நிலையில், ஆய்வு ஒன்றை மத்தியக் குழு நடத்தியுள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,056 பேர் மட்டுமே சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு 28,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பணிகளைச் செய்து வருவது குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியாளர்களே இல்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு 8,016 பேர் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
உலக அளவில் இரண்டாவது அதிக மக்கள்தொகை உடையது நம் நாடாகும். அதேபோன்று உலகில் அதிக உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், உலக அளவில் பட்டினியால் அதிகம் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளது என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.


20 ஆண்டுகால வேகமான வளர்ச்சிக்குப் பிறகும் உலகில் உள்ள மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவே இந்தியா உள்ளது. எனவே, பிரதமர் மோடி சொல்வதைப் போல வேகமான பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் இல்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க வேண்டிய அந்தத் தொலைவை எப்போது எட்டப் போகிறோம் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் ஏறக்குறைய ஏழை - பணக்காரர்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு இப்போது உச்சத்தில் இருக்கிறது என்கிறார்கள் பிரெஞ்சு பொருளாதார நிபுணர்கள் லூகாஸ் சேன்சல், தாமஸ்பிக்கட்டிங் ஆகியோர். உலகின் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வந்தாலும், சில நாடுகள் சுதாரித்துக் கொண்டு இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்துகின்றன.
ஆனால், நம் நாட்டில் ஒருபக்கம் வருவாய் ஏற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மறுபக்கம் மனிதனின் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் தொடர்கிறது. குறிப்பாக, விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் பிரச்னை, வேலையில்லாத் திண்டாட்டம் என பல அம்சங்களில் மனிதனின் வாழ்வு நிலை பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.


அடிப்படைத் தேவைகளான உணவு, கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீர், சாலை, மின் வசதி போன்றவை எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைத் தரமும் சமச்சீராக உயர்வதில்லை. இது குறித்தெல்லாம் அரசுகள் கவலைப்படுவதில்லை.


சமச்சீர் வளர்ச்சி இருந்தால் மட்டுமே நடுத்தர வர்க்கத்தினரின் வருவாய் அதிகரித்து வாங்கும் சக்தி அதிகரிக்கும். கடந்த 2014-ம் ஆண்டில் தனது தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன் வைத்த கோஷம் "அனைவருடனும் அனைவருக்குமான வளர்ச்சி' என்பதுதான். அது பாஜகவின் இந்த இரண்டாவது ஐந்து ஆண்டுகால (2019-24) ஆட்சியிலும் சாத்தியமில்லை என்று தெரிகிறது. 
நகர்ப்புறங்களில் வேலையின்மை 7.8 சதவீதமாகும். கிராமப்புறங்களில் வேலையின்மை 5.3 சதவீதமாகவும் உள்ளது. இதற்குக் காரணம், மத்திய அரசு பின்பற்றும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைதான். இந்தத் தவறான கொள்கை தொடரும் வரை, செல்வந்தர்கள் தேசம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாமே தவிர ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com