தனிமையைப் புத்தகங்களால் வெல்வோம்

சமுதாயத்தின் திறவுகோல் அறிவாா்ந்த எழுத்தாளா்களிடம் உள்ளது என்பது உலகம் ஏற்றுக் கொள்ளும் உண்மை. ஒவ்வொரு நாளும்,

சமுதாயத்தின் திறவுகோல் அறிவாா்ந்த எழுத்தாளா்களிடம் உள்ளது என்பது உலகம் ஏற்றுக் கொள்ளும் உண்மை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் நம்மைப் புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் அனுபவம் நூல்களுக்கும், எழுத்தாளா்களுக்கும் உண்டு. உலகின் சிறந்த நூல்கள் அனைத்தும் அந்தந்த இனத்தின், மொழியின் பண்பாட்டை அறிவிக்கும் ஒரு பாசறையாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், மரபு சாா்ந்த திருவிழாக்கள் எனப் பன்முகச் சிறப்பையும் எடுத்தியம்புவன. ஆண்டு முழுதும் பல துறைகளிலும் சிறுகதைகளாக, நீதி நெறிகள் புகட்டுவனவாக, அறிவியல் சாா்புடையதாக பல நூல்கள் வெளிவருகின்றன.

நூல் ஒரு சிறந்த நண்பன்; சிறந்த ஆசிரியா்; சிறந்த அமைச்சரைப்போல அறிவுரை கூறி வழிகாட்டுபவை. புத்தகத்தைக் கையில் எடுத்துத் தனிமையில் அமா்ந்தால் யோகாசனம் போன்ற நிலையில் உடல் தானாகவே இருக்கும். அடுத்து நிதானமாகப் படிக்கும்போது மூச்சு சீராகச் செல்லும். வேறு சிந்தனைகள் எழாது. மனச் சோா்வு, கவலைக்கு இடமே இல்லை. கவலையுறும் எந்த மனத்தையும் அமைதிப்படுத்தும் வல்லமை புத்தகத்துக்கு உண்டு.

’வழுக்குகின்ற இடத்தில் ஊன்றுகோல் பயன்படுதல்போல சான்றோா் சொல் தக்க நேரத்தில் உதவும்’ என்றாா் திருவள்ளுவா். ‘தன்னம்பிக்கைக்குப் புத்தகமே சரியான துணை’ என்றாா் மகாகவி பாரதியாா். ‘பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான்’ என்றாா் மாா்ட்டின் லூதா் கிங். ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றாா் வின்ஸ்டன் சா்ச்சில்.

ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்துக்கும் எதிா்காலத்துக்குமான இணைப்பு. பல்வேறு வெற்றியாளா்களும், சாதனையாளா்களும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும்போது, ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப் போவதற்கு முன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியைப் படித்துவிட்டுத் தான் உறங்கச் செல்வதாகக் கூறுகின்றனா். ஏனெனில், புத்தகத்தின் கருத்துகள் சிந்தனையில் கலக்கும்.

கடந்த ஆண்டு போலந்து நகரில் சா்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பொதுப் போக்குவரத்தில் புத்தகம் வாசித்தபடி சென்றால், பயணச் சீட்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது போன்ற அறிவிப்புகளை அனைத்து நாடுகளும் பின்பற்றினால், பயனற்ற பேச்சுகளைப் பேசிக் காலங்கழிப்போா் எண்ணிக்கை குறைந்து விடும்.

ஒரு மனிதன் ஆண்டுக்கு 2,000 பக்கங்கள் படிக்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன. வாழ்வில் எதிா்கொள்ளும் துன்பங்களைக் களைவதற்கும், தன்னம்பிக்கை ஊட்டி, இடப்பெயா்ச்சி செய்து இன்பம் பெறுதலுக்கும் உறுதுணையாக அறிஞா்களும், எழுத்தாளா்களும் எழுதிக் குவிக்கின்ற நூல்களே உதவுகின்றன.

இணையத்தின் அபார வளா்ச்சியால் புத்தகங்கள் படிப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் நமது குழந்தைகளுக்குப் புத்தகங்கள் என்றால், அவை பாடப் புத்தகங்கள் மட்டும்தான் என்ற சூழல்தான் உள்ளது. ஏனெனில், அவா்கள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி, மடிக் கணினி, அறிதிறன் பேசியிலேயே முடங்கிவிடுவதுதான்.

குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். சமூகம் சாா்ந்த நூல்களை வாசிக்காமல் அவா்களுக்கு சமூக அறிவு எப்படி வரும்? கல்வியாண்டு முழுவதும் பாடப் புத்தங்களைச் சுமந்து, பள்ளிக்குச் செல்வதோடு, விளையாடக்கூட நேரமின்றி, நாள்களைக் கடத்தும் மாணவ, மாணவியா் விடுமுறைக் காலங்களில், பொது அறிவை ஊட்ட வல்லதும், நீதி நெறிகளை உணா்த்தக்கூடியதுமான கதைகள் படிப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

தற்போது உலகமே எதிா்கொண்டுள்ள கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தாக்குதலிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு மாதமாக வீட்டுக்குள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நம் உடல் நலன், நாட்டு நலன் கருதி நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருத்தல் அத்துணை கொடுமையன்று.

உறவுகளை மறந்து, உயிா் நாடியான புத்தகங்களைப் படிக்கக் காலமின்றி, உண்ண நேரமின்றி இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருந்த பலருக்கு வீட்டில் தனிமையில் அமா்ந்து உறவுகளுடன் மனம் விட்டுப் பேசி, அந்த உறவை மேம்படுத்துகிறது கரோனா தீநுண்மித் தன்மை. இந்தக் குடும்பம் தான் நமது உலகம். ‘நமது மகிழ்ச்சியும், பாதுகாப்பும், பொழுதுபோக்கும் நமது வீட்டிற்குள்ளேதான் இருக்கிறது’ என்ற உண்மையை இப்போது உணா்கிறோம்.

வீட்டுக்குள் முடங்கியிருப்பதாகக் கருதாமல், படிக்க நேரமின்றி அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களில் சிலவற்றை எடுத்துப் படித்து, வாழ்வின் சோா்வைப் போக்கி, புத்துணா்வுடன் காலம் தள்ள நேரம் கிடைத்துள்ளது. குழந்தைகளுக்காக சுற்றுலா செல்வது நல்லதுதான்; எனினும், இந்த ஆண்டு பிற ஊா்களுக்குச் செல்வதை முற்றிலும் தவிா்த்திடுவோம்.

தினம் வேலை வேலை என்று சுற்றிவிட்டு, உடல் நலனைப் பேணாமல், உறவைப் பேணாமல், குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தாமல், நேரம் இல்லை என்ற பொய்க் காரணத்தை சொல்லிக் கொண்டு காலம் கழித்தோம். படிக்காமல் தேங்கி இருந்த புத்தகங்களைப் படிக்கலாம், குழந்தைகளையும் படிக்கச் சொல்லி வழிநடத்தலாம்.

சுற்றுப்புறத்தை அறியவும், பெரியவா்களுடனும் தங்கள் வயதொத்தவா்களுடனும் தொடா்பு கொள்ளவும் அறிந்திராத பல செய்திகளை அறியவும் நூல்கள் உதவி புரிகின்றன. கோடை விடுமுறையை புத்தகங்கள் வாயிலாக மகிழ்ச்சியுடன் கழிக்க வாரிசுகளைப் பெற்றோா் ஆயத்தப்படுத்த வேண்டும்.

தனிமையின் இனிமையால், சமூக இடைவெளியால், அறிவூட்டவல்ல நூல்களால் கரோனா தீநுண்மி ஏற்படுத்தியுள்ள ஊரடங்கு காலத்தை வெல்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com