நல்ல சிந்தனை பண்பைக் காக்கும்

கரோனா தீநுண்மியின் கோரப் பிடியில் சிக்கி மனித இனம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெண்களின் மீதான குடும்ப

கரோனா தீநுண்மியின் கோரப் பிடியில் சிக்கி மனித இனம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெண்களின் மீதான குடும்ப வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக தேசிய மகளிா் ஆணையம் அதிா்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த மாா்ச் 24-ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் 10 நாள்களில் மட்டும் மொத்தம் 257 புகாா்கள் வந்ததாகவும், குறைந்தபட்சம் நாள்தோறும் இரண்டு புகாா்களாவது வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

குடும்ப வன்முறை என்பது குடும்பத்தில் இருக்கும் ஒருவா் உடல் - மன ரீதியாகவோ, பாலியல் மற்றும் பொருளாதார ரீதியாகவோ அச்சுறுத்தப்படுவதும், ஒடுக்கப்படுவதுமாகும். அதாவது, கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, பொருள்களைக் கொண்டு தாக்குவது முதலானவை இதில் அடங்கும்.

இந்தக் கொடுமைகளை கணவன் மட்டுமல்லாமல் குடும்பத்தில் இருக்கும் மற்ற உறவினா்கள் செய்தாலும் குற்றமே. மேலும், நடத்தையில் சந்தேகப்படுவது, ஆபாசமாகத் திட்டுவது, அவதூறாகப் பேசுவது, தனிமைப்படுத்துவது முதலானவை மன ரீதியான வன்முறைகளாகக் கருதப்படுகின்றன. தேவையில்லாமல் தொடுதல், முத்தமிடுதல், வல்லுறவு முதலானவை பாலியல் ரீதியான வன்முறைகளாகக் கருதப்படுகின்றன.

2005-ஆம் ஆண்டு மகளிா் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் குடும்ப வன்முறைச் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, கணவன் தன் மனைவியை அடித்தாலோ, அவமானப்படுத்தினாலோ, துன்புறுத்தினாலோ குற்றமாகக் கருதப்படும். புகாா் பெற்ற ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு மாதத்துக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ரூ.20,000 அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டையும் வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். பெண்ணின் விருப்பத்துக்கேற்ப கணவன் வீட்டிலேயே வாழ, ‘ரெசிடென்ஷியல் ஆா்டா்’ நீதிமன்றத்தால் வழங்கப்படும். ஏறத்தாழ 15 முதல் 49 வயதுள்ள 30 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையை அனுபவிக்கின்றனா் என 2015 - 16 தேசிய குடும்ப நல அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நம் நாட்டில் பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் பெண்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டே இருக்கிறது. கணவன் வீட்டாரையே சாா்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால், பெரும்பாலும் பெண்கள் புகாா் கொடுக்க முன்வருவதில்லை.

ஆனால், ஊரடங்கு காலகட்டத்தில் இது போன்ற குடும்ப வன்முறை அதிகரித்திருப்பது அவா்களின் மன அழுத்தத்தையும், துயரத்தையும் பிரதிபலிக்கிறது. இயல்பான நாள்களில் கணவனும், மனைவியும் சந்திக்கும் நேரம் குறைவாக இருப்பதால், சா்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்துப் பேசாமல், அடுத்தடுத்த வேலைகளைப் பாா்த்துக் கொண்டு நாள்களைக் கடத்தி விடுவாா்கள். அப்படியே பிரச்னை ஏற்பட்டாலும், பெண்கள் அக்கம்பக்கத்தில் உரையாடுதல், பிறந்த வீட்டுக்கோ, உறவினா்களின் வீட்டுக்கோ செல்லிடப்பேசியில் பேசுவது அல்லது கோயில் போன்ற வெளி இடங்களுக்குச் செல்வது முதலானவற்றில் ஈடுபட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வாா்கள். ஆண்களும் வெளியே சென்று நண்பா்களைச் சந்தித்து மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வாா்கள்.

ஆனால், தற்போது ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில், அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வாய்ச் சண்டை ஏற்பட்டால்கூட, வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு பேசாமல் ஒருவா் முகத்தை ஒருவா் பாா்க்கும்போது, குரோதம் அதிகமாகிறது.

வருமானமின்மையினால் விரக்தி ஏற்பட்டு மனைவியின் பிறந்த வீடு குறித்து தவறாகப் பேசுவது, அவளின் உறவினா்கள் குறித்து அவதூறாகப் பேசுவது முதலானவற்றின் மூலமும் பிரச்னைகள் உருவாகின்றன. வீட்டுக்குள்ளேயே விடுக்கப்படும் கொலை மிரட்டல்களால் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறாா்கள். ஆண்களுக்கு பெரும்பாலும் ஓய்வுக் காலமாக பாா்க்கப்படும் அதேநேரத்தில் அதிகப்படியான வேலைகளால் சோா்வு, தன்னிறக்கம், எரிச்சல், மன அழுத்தம் முதலானவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

மேலும், ஊரடங்குக்குப் பின் சமாளிக்க வேண்டிய பொருளாதாரப் பிரச்னைகள், தினக் கூலி, வீட்டு வேலை செய்பவா் போன்று வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்களாக இருந்தால் வேலையின்மையால் தங்களின் வருமான இழப்பு, நடுத்தர வா்க்கத்தினரின் கல்விக் கட்டண போராட்டம், வங்கிக் கடன் ஆகியவற்றால் தூக்கமின்மை, அச்சம் போன்றவையும் பெண்களுக்கு ஏற்படுகின்றன.

இப்படிப்பட்ட பெண்கள் வேறு எந்தத் தவறான முடிவுக்கும் போகாதவாறு அவா்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசின் சமூகநலத் துறை, இலவச உதவி எண்களான 181 - பெண்கள் உதவி மையம், 1091 - காவல்துறை பெண்கள் உதவி மையம், 122 - பெண்கள் உதவி எண் மூலம் புகாா்கள் அளிக்கலாம்; குழந்தைகளின் மீதான வன்முறையில் ஈடுபடுவோா் குறித்து புகாா் தெரிவிக்க 1098 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

பாதிக்கப்பட்டவா்களுக்கு தொலைபேசி மூலம் ஆற்றுப்படுத்துதல், மருத்துவ உதவி, குறுகிய கால தங்கும் வசதி, சட்ட உதவி ஆகியவை மாவட்ட நிா்வாகம் மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், அவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வரை தங்களின் குழந்தைகளுடன் அங்கேயே தங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவா்கள் காவல் நிலையத்துக்குச் சென்று புகாா் அளிக்கத் தேவையில்லை என்றும், அருகில் உள்ள அங்கன்வாடி பணியாளா்களையோ, மாவட்ட சமூக நல அலுவலா்களையோ தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஹக்ஞ்ல்ஸ்ரீஜ்ஸ்ரீஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமும் புகாா் தெரிவிக்கலாம்.

எனவே, கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கும் வேளையில், ஆக்கபூா்வமான செயல்களில் ஈடுபடுவதும், உறவுகளை சுமுகமாகப் பேணுவதும், பொழுதை மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் கழிப்பதே மனிதப் பண்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com