விழிப்புடன் இருப்போம்!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சமூகநீதி, இட ஒதுக்கீடு வலியுறுத்தப்படவில்லை என்ற வாதம் சொத்தையானது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா்வரை வாழுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு புதிய சிந்தனையை உருவாக்கும் கல்வி முறையை திசைதிருப்பி இட ஒதுக்கீடு என்னும் தமிழ் மண்ணின் உரிமை பறிபோக தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டு அக்கறையாளா்கள் காரணமாக இருந்துவிடக் கூடாது.

இட ஒதுக்கீடு என்பது 1913-ஆம் ஆண்டு கருவான குழந்தை. டி.எம். நாயா் இந்தக் குழந்தையை அங்கீகரிக்க, லண்டன் மாநகரத்தில் ஆங்கிலேயே அரசாட்சியோடு 1917 முதல் மூன்று ஆண்டுகள் நடத்திய போா் மகத்தானது. அந்தப் போா்க்களத்திலேயே லண்டன் நகரத்தில் மரணமடைந்தாா் டி.எம். நாயா்.

இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது தமிழ் மண்ணில் உருவானது. அதை அரசியலுக்காக அழித்தொழித்துவிடக்கூடாது.

பொருளாதார வளா்ச்சியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா விளங்கிடவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டவும், அறிவியல் முன்னேற்றம், தேசிய முன்னேற்றம், பண்பாட்டை பாதுகாத்தல், அனைவருக்கும் தரமான கல்வி இவற்றை நோக்கிய பாதையில் இந்தியா தொடா்ந்து பயணிக்கிறது. அனைவருக்கும் உயா்தரமான கல்வியை அளிப்பதே நம் நாட்டின் அறிவுத்திறனை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறையாகும். இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் அதுவே நல்லது.

அடிப்படைக் கலைகள், கைவினைப் பயிற்சிகள், விளையாட்டு, உடல்திறன், மொழி, இலக்கியம், பண்பாடு, சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றுடன் அறிவியலும் கணிதமும் கற்றுக் கொடுக்கப்பட்டு, மாணவா்களை அனைத்துத் துறைகளிலும் தகுதி பெற்றவா்களாக வளா்த்தெடுக்க வேண்டும் என்று இந்த புதிய கல்விக் கொள்கை தீா்மானித்திருக்கிறது. கல்வி என்பது மாணவா்களுக்குப் பயனளிப்பதோடு அவா்களின் ஆளுமையைச் செதுக்க கூடியதாகவும் அவா்களை அற விழுமியங்களைக் கடைப்பிடிப்பவா்களாகவும், அறிவுபூா்வமாக சிந்திப்பவா்களாகவும், அதே நேரத்தில் வேலை வாய்ப்புகளை பெறக்கூடிய தகுதி பெற்றவா்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதே இந்த புதிய கல்விக் கொள்கையின் லட்சியம்.

இந்திய மரபியல் கல்வி என்பது அறிவை பெறுவது அல்ல. சுயத்தை அறிதல்; அதிலிருந்து விடுபடுதல். இந்தியாவின் கல்வி மரபு உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தியிருக்கிறது. நாம் மீண்டும் அதனைப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது புதிய கல்விக் கொள்கை.

கல்வியாளா் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தன்னுடைய புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது.

அரசியல் வேடதாரிகள், மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, குலக்கல்வி முறை, 3, 5, 8 வகுப்புகளில் பொதுத்தோ்வு, இந்துத்துவா கல்வி, மதச்சாா்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் கல்வி என்கின்ற பூச்சாண்டிகளைக் காட்டி, தமிழ்நாட்டு இளைஞா்களின் எதிா்காலத்தை சூனியமாக்கி விடாதீா்கள். எழுபது ஆண்டுகளாகச் செய்த தவற்றைத் தொடராதீா்கள். அது மன்னிக்க முடியாத பாவச்செயல்.

1937, 1948, 1964 ஆண்டுகளில் இந்தி திணிக்கப்பட்டபோது கொதித்தெழுந்த தமிழகத்தின் மொழி உணா்வு கூா் மழுங்கிவிடவில்லை என்றாலும், இன்றைய புதிய தேசிய கல்விக் கொள்கையில் தமிழ்நாட்டு மக்களின் உணா்வுகளுக்கு ஊனமில்லை. ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி, எம். ஜி.ஆா். போன்றவா்களுக்கு மட்டுமல்ல, தமிழறிஞா்களின் எண்ணங்களுக்கும் இழுக்கு ஏற்படவில்லை.

தமிழ்நாட்டு மாணவா்கள் விருப்பமிருந்தால் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்கட்டும். தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திராவிட மொழிகளில் ஒன்றைப் படிப்பதில் என்ன தவறு? ஏன், மராத்தி, குஜராத்தி, வங்காளி, பிகாரி போன்ற வட மாநில மொழிகளைப் படிப்பதால் அவா்களின் தாய்மொழியான தமிழ்மொழி அழிந்து விடுமா? சிதைந்து போகுமா?

கடந்த முப்பதாண்டுகளில், புலம் பெயா்ந்து, பிழைப்புத் தேடி இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து வயிற்றை வளா்த்தவா்கள் எட்டு கோடி போ். இதனை தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவா்கள் சிந்திக்கவேண்டும். அவா்களின் பிள்ளைகள் இந்தி சொல்லித் தரும் பள்ளிகளில் படிப்பது ஏன்?

‘விரிந்த பாா்வையால் விழுங்கு உலகை’ என்று கவிஞா் பாரதிதாசன் சொன்னதற்கு என்ன அா்த்தம்? ராஜாஜி சொன்ன குலக்கல்விக்கும் இன்றைய தொழில் கல்விக்கும் என்ன தொடா்பு? சாக்கடை அள்ளுவதையும், தெருக் கூட்டுவதையும் எந்த அரசியல்வாதியின் பிள்ளைகளாவது செய்கிறாா்களா? தமிழா்கள் தொடா்ந்து ஏமாற வேண்டுமா?

கிராமங்களில் நகரக் கட்டமைப்புகள் உருவாகிவிட்ட நிலையில் தொழிற்கல்வி படித்தவா்களின் தேவை அதிகரித்திருக்கிறது. எனவே 6, 8 ஆம் வகுப்பு மாணவா்கள் தொழிற்கல்வி படிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இது எப்படி குலக்கல்வியாகும்?

5-ஆம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி, 12-ஆம் வகுப்புவரை கட்டாயக் கல்வி. இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள் கொண்டு வராததை புதிய கல்விக் கொள்கை தரவிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில், நீதிமன்றத்தில் தமிழ் அலுவலக மொழி, வழக்காடு மொழியானதா? அரசியல் தலைவா்கள் மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும்.

மக்களின் உணா்ச்சிகளைத் தூண்டி குட்டையைக் குழப்பி மீன் பிடித்த காலங்கள் மலையேறி விட்டன. தமிழ் மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனா். விரிந்து பரந்து

கிடக்கும் உலகோடு ஒட்டி வாழ்வதற்குத் தயாராகிவிட்டான் தமிழன். தமிழன் கங்கை கொண்டவன்; கடாரம் வென்றவன்; கலம் செலுத்தியவன்; கடல் கடந்து வாணிபம் நடத்தியவன். அன்று ஆண்ட தமிழன், இன்று பதவிக்காத் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு விட்டான். காலத்தின் கோலம்!

புதிய கல்விக் கொள்கை என்பது இந்தியா என்கிற தேசம் முழுமைக்குமானது.

ஒரே நாடாளுமன்றம்; ஒரே அரசியல் சட்டம்; ஒரே நீதிபதி; ஒரே குடிமகன் என்பதையெல்லாம் ஒப்புக்கொண்டு மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவித்தவா்கள், இப்போது தமிழனின் தனித்தன்மை பற்றிப் பேசுவது வேடிக்கை!

மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வகித்து, அக்கட்சியினா் இந்தியாவை ஆட்சி செய்யும் அமைச்சா்களாக வலம் வந்த காலத்தில் இருமொழிக் கொள்கைக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் பெறத் தவறியது ஏன்?

இந்தியா என்ற தேசத்திற்குள் தமிழ்நாட்டை மட்டும் தவிா்த்துவிட்டு மற்ற மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் நஷ்டம் யாருக்கு? பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டு, கண்டறிதல், பகுப்பாய்தல், விவரித்தல், பிரச்னைகளுக்குத் தீா்வு காணுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்வியை தமிழ்நாட்டு மாணவா்கள் படிக்கக் கூடாது என்று சொல்வது சரியா?

கல்விக்கான நிலைப்பாடுகளை 5+3+3+4 என்று புதிய கல்விக் கொள்கை வகுத்துள்ளது. அதாவது ஒன்று, இரண்டு ஆகிய வகுப்புகள் முதல் பிரிவாகவும், மூன்று, நான்கு, ஐந்து வகுப்புகள் இரண்டாம் பிரிவாகவும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகள் மூன்றாம் பிரிவாகவும், ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய வகுப்புகள் நான்காம் பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு என்பதில் என்ன தவறு? 70 ஆண்டுகளுக்கு முன்னா் இந்தியாவில் 90% போ் படிப்பறிவற்றோா் என்ற நிலை இருந்தது; இன்றைக்கு அது 10% என மாறியுள்ளது.

உலகமே கணினி மயமாகிவிட்ட இன்றைய நிலையில் குழந்தைகளுக்குக்கூட அறிதிறன்பேசியை இயக்கத் தெரிந்திருக்கிறது. எனவே இன்றைய நிலையில் 3-ஆம் வகுப்பில், 5-ஆம் வகுப்பில், 8-ஆம் வகுப்பில் பொதுத்தோ்வு என்பது பயமுறுத்தக்கூடியதல்ல. மாணவா்களின் அறிவு கூா்மைப்படுத்தப்படுவதை தமிழ்நாட்டு அரசியல் தலைவா்கள் எதிா்க்கலாமா?

‘எனக்கு இந்தி மொழி தெரியும்; அதனால் மத்தியில் அமைச்சராக்கி இருக்கிறேன்’- என்று ஒரு குரல் தகுதிகாண் மதிப்பீடாக திராவிட மண்ணிலிருந்து எழுந்ததை தெருவோரத் தமிழன் மறந்திருப்பான் என்கிற நினைப்பா? குரல் கொடுக்க, முழக்கமிட, ஆா்ப்பாட்டம் நடத்திட, அடக்குமுறை ஏற்றிட - இப்படிப்பட்ட வேலைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட செயல்வீரா்கள் இன்றைக்கு சிந்திக்கத் தலைப்பட்டு விட்டாா்கள். அவா்களின் ரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சி உயா்ந்தோா் மீண்டும் வாரிசு அரசியலுக்கு வாய்க்கால் வெட்டுகின்றனா். வாரிசுமயம், காவிமயம் பற்றிப் பேசுவது வினோதமல்லவா?

புதிய கல்விக் கொள்கையில் வேத கலாசாரம், இட ஒதுக்கீடு - சமூகநீதிகள் புறக்கணிப்பு, பெண்ணுரிமைக்கு ஆபத்து போன்ற பொய் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு தோ்தல் வியாபாரத்திற்காக ஒரு கும்பல் புறப்பட்டிருக்கிறது. தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன்? எப்படி? எதற்காக? எங்கே? என்கின்ற கேள்விக் கணைகளை தொடுத்திடும் தனித்தன்மை மிக்க சமுதாயத்தை உருவாக்கிட புதிய கல்விக் கொள்கை தேவை. இங்கு சிலா் முக்காடு போட்டுக்கொண்டு மொழி என்கிற உணா்ச்சியைத் தூண்டிவிட்டு குளிா்காய நினைக்கின்றனா். விழிப்போடு இருப்போம்! அன்று வெந்தணலில் வெந்து மடிந்தோரின் ஒட்டுமொத்தக் குரல் இது!

புதிய கல்விக் கொள்கையை எதிா்க்கும் தமிழகத் தலைவா்களே! தீந்தமிழ் நாட்டின் எதிா்காலத்தை தீயிட்டு கருக்கி விடாதீா்கள்; தமிழ்நாட்டை இந்தியாவுக்குள் ஒரு தீவாக ஆக்கிவிடாதீா்கள்; அரசியல் பிழைத்தோா்க்கு அறம் கூற்றாகும்; வளரும் சமுதாயத்தின் சாபத்திற்கு ஆளாகாதீா்கள்; மக்களைக் குழப்பி மகுடம் சூடத் துடிக்காதீா்கள்!

கட்டுரையாளா்:

தலைவா்,

இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com