அபராதத்திற்கு இலக்கு கூடாது

எப்போதுமே தேர்தலும் தேர்தல் முடிவுகளும் மக்களின் கவனத்தை ஈர்ப்பது இயல்புதான்.

எப்போதுமே தேர்தலும் தேர்தல் முடிவுகளும் மக்களின் கவனத்தை ஈர்ப்பது இயல்புதான்.  நமது நாட்டிலோ கரோனா தீநுண்மியின் இரண்டாவது அலை அனைவரின் எண்ணங்களையும் ஆட்டிப்படைத்து வருகின்றது. 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை தீவிரம் அடைந்தபோதே கரோனா தீநுண்மிப் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியது.  குறுகிய காலத்தில் பலமடங்கு வீரியத்துடன் பரவிவிட்டது. 
தினசரி ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு, உலக அளவில் மிக அதிகமான தீநுண்மிப் பரவல் கொண்ட நாடாக நமது நாடு விளங்குகின்றது. இவ்வகையில் அமெரிக்காவையும் பின்னே தள்ளிவிட்டு முன்னேறி விட்டது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் ஒரு சில வாரங்கள் முன்பு தினசரி பாதிப்பு முன்னூற்றுக்கும் கீழ் என்று இருந்தது தற்போது ஆறாயிரத்தைத் தாண்டி விட்டது. இறப்பு எண்ணிக்கையும் சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. 
பொதுமக்கள் எதிர்பார்த்ததைப் போலவே வாக்குப்பதிவு முடிந்த சில தினங்களில் கரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நிலைமையைப் பொருத்து மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என்று தெரிகிறது. இக்கட்டுப்பாடுகள் தவிர, முக கவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்களிடம் மாநிலம் முழுவதும் அபராதம் வசூல் செய்வது என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. 
கரோனா தீநுண்மிப் பரவலில் இருந்து தனியொருவர் தம்மைத் தற்காத்துக்கொள்ளவும், தம்மிடமிருந்து பிறருக்குப் பரவாமல் தடுக்கவும் முக கவசம் அணிவதும், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியம்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.  
கரோனா முதல் அலையின் வீச்சு குறைந்து பாதிப்புகளும் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் இவ்வழக்கங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டது உண்மைதான். மீண்டும் நாம் அனைவரும் முக கவசம் அணியவும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் வெகுவிரைவில் பழகிக்கொள்ள வேண்டும். 
அலட்சியம் காரணமாக இவற்றைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் முடிவினை வரவேற்கலாம். ஆனால், அதே சமயம், அந்த அபராதத்தை விதிப்பதிலும் வசூலிப்பதிலும் ஒரு தெளிவான நோக்கம் தேவை. 
தீநுண்மிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுபவர்களிடம் ரூபாய் இருநூறு முதல் ரூபாய் ஐந்தாயிரம் வரையில் அபராதம் வசூலிக்கப்படும் என்ற முடிவை அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம், அவ்வகையில் நாள் ஒன்றுக்கு ரூபாய் பத்து லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை இலக்காக நிர்ணயித்து அனைத்து மண்டலங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூபாய் பத்துலட்சம் வசூலிக்கவேண்டுமாம்.
நாள் ஒன்றுக்கு இத்தனை ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்வது, வாரம் ஒன்றுக்கு இத்தனை தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் மாநகரில் கரோனா தீநுண்மியைக் கட்டுக்குள் கொண்டுவருவது, உயிரிழப்பு விகிதத்தைக் குறைப்பது என்பவை போன்ற இலக்குகளை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கிக் கொண்டால் அதனை வரவேற்கலாம். மாறாக, அபராதத் தொகை இவ்வளவு வசூலிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பது சரியா?
நோய்த்தொற்று பரவும் விதமாகச் செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிப்பது என்ற முடிவு வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அத்தகைய நடவடிக்கை, மக்களை நெறிப்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெறுவதற்காக இருக்க வேண்டுமேயன்றி, அவர்களைக் குற்றவாளிகளாக உருவகப்படுத்துவதில் முடிந்துவிடக்கூடாது. 
ஒரு வாதத்துக்காகவே வைத்துக்கொள்வோம். சென்னை மாநகரத்தின் குடிமக்கள் அனைவரும், சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தொடங்கிவிட்டால், பிறகு இந்த அபராத வசூல் இலக்கை சென்னை மாநகராட்சி எப்படி அடையப்போகிறது? நாளொன்றுக்கு பத்து லட்ச ரூபாய் அபராதம் செலுத்தும் அளவுக்கு மக்கள் அனைவரும் தொடர்ந்து விழிப்புணர்வு அற்றவர்களாகவே இருக்கப் போகிறார்களா என்ன ?
கரோனா தீநுண்மி ஒழிப்பு என்ற மாபெரும் இலக்கினை அரசு நிர்வாகம், சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் என்ற அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து சாதிக்கவேண்டும் என்பதே எதார்த்த நிலையாகும். பொதுமக்கள் தரப்பில் அலட்சியம் காட்டும் சிலருக்கு அரசு நிர்வாகம் விழிப்புணர்வூட்டுவதுதான் சரியாக இருக்குமே ஒழிய, அவர்களை தண்டனைக்குரியவர்களாகச் சித்திரிப்பது சரியாகாது. 
சில வருடங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் பரவிய நேரத்தில், உள்ளாட்சி அமைப்புகளின்  அதிகாரிகள், பொதுமக்கள் வசிப்பிடங்களிலும், பல்வேறு அலுவலகங்களிலும் சோதனை செய்து, டெங்கு கொசு வளர்வதற்கு இடமளித்ததாகக்கூறி பலரிடமும் அபராதம் வசூலித்தனர். ஆனால், அதே உள்ளாட்சி நிர்வாகங்கள்தாம், பராமரிக்கப்படாத பொதுக்கழிப்பிடங்களும், கழிவுநீர்க் கால்வாய்களுக்கும் பொறுப்பு என்பதுதானே உண்மை?
அபராதத்திற்கு இலக்கு நிர்ணயிப்பதில் வேறொரு பிரச்னையும் இருக்கிறது. அன்றாட இலக்கிற்குரிய அபராதத்தை வசூல் செய்யமுடியாத ஊழியர்களுக்கு நெருக்குதல் ஏற்படவும், அதனால் அவர்கள் பொதுமக்களிடத்தில் கூடுதல் கெடுபிடி காட்டவும் நேரிடும். இதனால் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆங்காங்கே பூசல் எழவும் வாய்ப்பு உருவாகும். 
எப்படிப் பார்த்தாலும் அபராதம் என்பது ஓர் உயர்ந்த இலக்கை எட்டுவதற்கான வழிமுறையாக இருக்கவேண்டுமே தவிர, அதிக அபராதமே இலக்காக இருக்கக் கூடாது; இருக்கவும் முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com