காத்திருக்க வேண்டும் போராளிகள்!

காத்திருக்க வேண்டும் போராளிகள்!

சென்ற நவம்பர் 19-ஆம் தேதி நாடே திரும்பிப் பார்த்த திருநாளாகும். அது சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக்கின் பிறந்த தினம் என்பதால் மட்டுமல்ல; சென்ற ஒரு வருடமாக தில்லி எல்லைகளில் போராடி வந்த விவசாயிகள் இன்ப அதிர்ச்சி அடையுமாறு மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாள் அது.
 பிரதமர் மோடி இதனை அறிவிக்காமல் இருந்தவரை, அவரை பிடிவாதக்காரர் என்றும், சர்வாதிகாரி என்றும் விவசாயிகள் விமர்சித்து வந்தனர். பிரதமர் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்வதாக அறிவித்த பிறகு, அவரை பிடிவாதக்காரர் அல்லவென்றும், சர்வாதிகாரியும் அல்லவென்றும் விவசாயிகள் பேசியிருக்க வேண்டும்.
 அதற்கு மாறாக, "விவசாயிகளின் போராட்டத்துக்கு அஞ்சிதான் பிரதமர் இந்த நடவடிக்கை எடுத்தார்', "விவாதமில்லாமல் நிறைவேற்றிய சட்டத்தை விவாதமில்லாமல் கைவிட்டுவிட்டார்' என்றே விவசாயிகளும் சில தலைவர்களும் பேசினர்.
 அதுமட்டுமல்ல, "மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றால் மட்டும் போதாது. மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்; சென்ற ஒரு வருட காலத்தில் இறந்துபோன 700 விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு தர வேண்டும்; அவர்களுக்கு நினைவாலயம் கட்ட இடம் ஒதுக்க வேண்டும்; குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்; வேளாண் விளைபொருளான கோதுமைக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டமாக்க வேண்டும்' போன்ற கோரிக்கைகளை வைத்து, அவை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற பிரதமர், அச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்காகக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் என்றும் அவற்றை ஒரு சிறு பிரிவினர்க்குப் புரியவைக்க முடியாமல் போய்விட்டதால்தான், அவற்றைத் திரும்பப் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 போராட்டம் நடந்தபோதே "விவசாய விஞ்ஞானி' டாக்டர் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்று குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்வதாக விளக்கமளிக்கப்பட்டது. விவசாயிகளை அழைத்து 11 முறை மத்திய விவசாய அமைச்சர் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
 விவசாய சட்டத்தில் விவசாயிகள் கூறும் திருத்தங்களைச் செய்வதற்கு வழிவகுப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஆனால், விவசாயிகளோ பேச்சுவார்த்தையின்போது வழங்கப்பட்ட தேநீரைக் கூட அருந்தாமல், தாங்களே கொண்டு வந்த தேநீரையே அருந்தினர். காரணம் அதனை விவசாயிகளின் "விரோதியின் விருந்து' என்றே ஒதுக்கினர்.
 வேளாண் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தபோது, உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் போராடும் உரிமை விவசாயிகளுக்கு உள்ளதென்று அறிவிப்பு செய்ததால் விவசாயிகள் உற்சாகமடைந்தனர். ஆனால் தில்லி நகர் எல்லைகளில் வாகனப் போக்குவரத்தைத் தொடர்ந்து தடைசெய்வதை உச்சநீதிமன்றம் கண்டித்தது.
 அதுமட்டுமல்ல, இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதைப் பற்றி மத்திய அரசு பரிசீலிக்குமாறும் உச்சநீதிமன்றம் கூறியது. மூன்று வேளாண் சட்டங்களையும் இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கலாம் என்ற யோசனையும் கூறியது. இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை நிராகரிக்க முடியாமல் நிறுத்தி வைக்குமாறு மட்டும்தான் யோசனை கூறியது உச்சநீதிமன்றம்.
 மத்திய அரசும், உச்சநீதிமன்றம் கூறிய யோசனையை மதித்து மூன்று வேளாண் சட்டங்களையும் இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அந்த அறிவிப்புக்குப் பிறகு, முந்தைய எல்லைக்கே விவசாயிகள் திரும்பிவிட்டனர். விவசாயிகள் எதிர்த்துப் போராட எந்தச் சட்டமும் இல்லை. இது அவர்களுக்குத் தெரியாது. அந்தளவுக்கு அறியாதவர்களாக இருந்தனர்.
 முந்தைய பழைய நிலை என்ன? பஞ்சாப், ஹரியாணா, தெற்கு உத்தர பிரதேச விவசாயிகளின் மத்தியில் சில சுயநலவாதிகள் செயல்பட்டு வந்தனர். விவசாயிகளுக்கும் கோதுமை வியாபாரிகளுக்கும் மத்தியில் செயல்படுகிற இடைத்தரகர்களான கமிஷன் ஏஜெண்டுகள்தான் அவர்கள்.
 அவர்களிடம் விவசாயிகள் தங்கள் அவசரச் செலவுகளுக்காக, அறுவடை செய்த கோதுமையை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தனர். அந்த ஏஜெண்டுகள் அதனை விவசாயிகளுக்குக் கைமாற்றுவார்கள். வாங்கும் விலை குறைவு; விற்கப்படும் விலை அதிகம். அந்த வகையில், ஆண்டுக்கு சுமார் ரூ. 10 ஆயிரம் கோடியை இந்த இடைத்தரகர்கள் சம்பாதித்து வந்தனர்.
 இந்த வேளாண் சட்டம் இவர்கள் மீது குறிவைத்தது. இடைத்தரகர்களை ஒழித்துக் கட்டும் திட்டமாக இச்சட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் கிடைக்குமென்று மத்திய அரசு கருதியது.
 இடைத்தரகர்கள் குறு, சிறு விவசாயிகளைத் தூண்டிவிட்டனர். அதனால் விவசாயிகள் தில்லி எல்லைகளில் அமர்ந்து போராடி வந்தனர். இரவு நேரங்களிலும் குடும்பத்திலுள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர் போராட்ட இடங்களுக்கு டிராக்டர்களில் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் தங்கிக்கொள்ள டெண்ட்டுகள் போடப்பட்டிருந்தன.
 இளைஞர்கள் பொழுதுபோக்க வாலிபால் விளையாடினர். முதியவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரவு முழுவதும் விவசாயிகளுக்கான கொண்டாட்டபுரமாகவே அந்த தில்லி எல்லைகள் இருந்தன.
 சீக்கியப் பெண்கள் சமையலில் ஈடுபட்டு சூடான சப்பாத்திகளை விவசாயிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். மழை, வெயில், குளிர் எதனையும் பொருட்படுத்தாமல் இருக்க அங்கு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
 தில்லியில் சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய மூன்று எல்லையோரங்களைத் தாண்டி, பிற மாநிலங்களில் இந்தப் போராட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடிக்கு எதிரானதாக இதனைக் கருதியதால்தான், விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தர முன்வந்தன.
 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போனது. உச்சநீதிமன்றம் கூறிய யோசனைப்படி, இரு ஆண்டுகளுக்கு இச்சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டும் பலன் இல்லை. எதிர்ப்பதற்குச் சட்டமே இல்லாத நிலையிலும் இப்போராட்டத்தை எந்த சக்திகள் நடந்தி வந்தன என்பதை எண்ணிப் பார்ப்பது நல்லது.
 விவசாயிகள் மற்றுமொரு ஆபத்தான கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்தனர். பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கோதுமை அறுவடைக்குப் பிறகு, காய்ந்துபோன அடிப்பயிர்களைத் தீவைத்து எரிப்பதற்குத் தடைவிதிக்கக் கூடாது என்றனர்.
 அதனால் புதுதில்லி நகர் முழுவதும் புகைமூட்டம். சுற்றுச்சூழலுக்குக் கேடு. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. அதனால், ஒற்றை எண் வாகனங்கள் மாற்று நாள்களில் இயக்க வேண்டும் என்ற அறிவிப்பு. ஆனாலும் புகைமூட்டம் குறையவில்லை. கோதுமைப் பயிர்கள் எரிப்பால் ஏற்படும் புகை பிரச்னை நீடித்தது. விவசாயிகளோ புகை பிரச்னைக்குக் காரணமான கோதுமை வயல்களில் தீவைப்பதைத் தடுக்கக் கூடாது என்று கூறுகின்றனர்.
 ஸ்காட்லாந்து தேசத்தில் கிளாஸ்கோ நகரில் நடந்த சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடியின் பேருரை, அம்மாநாட்டில் கலந்துகொண்ட 182 நாடுகளின் தலைவர்களை உணர்ச்சிபூர்வமாகச் சிந்திக்கத் தூண்டியது.
 "ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு கட்டமைப்பு' என்ற மாபெரும் முழக்கத்தை எழுப்பி, கார்பன் கழிவுகளை உலக நாடுகள் 2030-க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை பற்றி பிரதமர் மோடிதான் அனைத்து நாட்டு தலைவர்களையும் சிந்திக்கத் தூண்டியவர். இதனை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டியுள்ளார்.
 இவ்வாறு கிளாஸ்கோ மாநாட்டில் பேசிவிட்டுத் திரும்பி வந்திருக்கிற பிரதமர், தலைநகர் தில்லியில் உள்ள மக்கள் புகைமூட்டத்தில் திக்குமுக்காடுவதற்கு, மூச்சுத் திணறுவதற்கு அனுமதிப்பாரா? அப்படி அனுமதித்தால் அது முரண்பாடாகாதா?
 இடைத்தரகர்களை அப்புறப்படுத்தும் அம்மூன்று வேளாண் சட்டங்களைக் கைவிடுவது யாருக்கு வெற்றி? யாருக்குத் தோல்வி?
 பஞ்சாப், கோவா, உத்தர பிரதேசம் முதலிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே பிரதமர் அச்சட்டங்களைக் கைவிட்டுள்ளார் என்கிற விமர்சனத்தின் மறுபக்கம் என்ன?
 பிரதமர் வெற்றி பெற்றால் திரும்பவும் அவை கொண்டு வரப்படும் என்பதுதானே பொருள். இது ஏமாற்று செயலாக ஆகிவிடாதா? பிரதமர் அப்படிச் செய்வார் என்று எதிர்பார்க்கலாமா?
 வேளாண் சட்டம் அப்படி என்னதான் சொல்கிறது? விவசாய விளைபொருள்களை விவசாயிகள் கூடுதலாக விலை கிடைக்கும் ஊர்களுக்கு - அவை இந்தியாவில் எங்கிருந்தாலும் - அனுப்பி விற்பனை செய்து கொள்ளலாம் என்றுதானே கூறுகிறது. விலை அதிகம் கிடைக்கும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பி, விற்பனை செய்ய ரயில் வசதியை மத்திய அரசு தர வேண்டுமென்று 11 சுற்றுப் பேச்சுவார்த்தையில் இந்த விவசாயிகள் வலியுறுத்தி இருக்கலாமே? ஏன் வலியுறுத்தவில்லை?
 மூன்று வேளாண் சட்டங்களும் அமல்படுத்தப்பட்டால், விவசாயிகளின் சாகுபடி பூமிகள் கார்ப்பரேட் கம்பெனிகளின் வசமாகிவிடும் என்று திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டதால் குறு, சிறு விவசாயிகள் பீதியடைந்தனர்.
 மத்திய ஆட்சி அரசியல் சட்டப்படி அமைந்த ஆட்சி; மூன்று வேளாண் சட்டங்களும் இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள். இதனை ஒப்புக்கொள்ளாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
 2024 தேர்தல் வரை காத்திருந்து, தங்களுக்குத் தீமைசெய்த ஆட்சியைத் தோற்கடித்து, புதிய ஆட்சியை அமைக்கலாமே! புதிய பிரதமர் இச்சட்டங்களை ரத்துசெய்வதற்கு தனது முதல் கையெழுத்தைப் போடலாமே!
 இதற்கு மாறாக, நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய, வாகனங்களுக்கான வழித்தடங்களை மறிப்பது மறைமுக வன்முறையாகாதா?
 உச்சநீதிமன்றமே சட்டத்தை நிறுத்தி வைத்த பிறகும், போராடுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?
 ஆட்சி செய்பவர் பாஜக-வின் நரேந்திர மோடி. தனக்கு எதிரானவர்களின் கொள்கைகளை அவர் எப்படி செயல்படுத்துவார்?
 இது எப்படி ஜனநாயகமாகும்?
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com