தோற்பதற்கான சுதந்திரம் 

கோப்புப்படம்
கோப்புப்படம்


போட்டித் தேர்வுகளில் நாம்  வெற்றியை மட்டுமே விரும்புவோம். நம் பிள்ளைகளுக்கும் அதனையே போதிப்போம். தோல்வியைச் சந்தித்த பலர், தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டதையும் அடிக்கடி காண்கிறோம். இழப்புகளை, ஏமாற்றங்களை, தோல்விகளைத் தாங்க இயலாத குணத்தின்  அடிப்படையில் தற்கொலைக்கான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

எப்பாடு  பட்டாலும் வெற்றி என்ற ஒன்றை அடைந்தாக வேண்டும் எனும் அழுத்தம், அது கிட்டாமல் போகும்போது பெரும் சிக்கல்களுக்கு வழி வகுக்கின்றது.

பொதுவாக, தோல்வியைத் தழுவும் ஒருவரை, ஏளனமாக நோக்குவது, உதாசீனப்படுத்துவதன்  மூலம் அவரை மனதளவில் முடக்கி விடுகிறோம். நமது சமுதாயத்தில் தோல்வி  என்பது சரிவர அணுகப்படவில்லை. தோல்வி குறித்த சரியான புரிதல், பார்வை, அணுகுமுறை இல்லாதிருக்கிறது. 

தோல்வி என்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அவாவினால், அதன் மீது சரியான கவனக்குவிப்பு இல்லாமல் செய்து விட்டோம் என்று சொல்லலாம்.

தோல்வி என்பது ஒரு எதிர்மறை விளைவுதான். ஆனாலும், நாம் முயன்றால் தோல்வியை  நேர்மறையாகவும் அணுக இயலும். உண்மையில் வெற்றி - தோல்வி என்ற இரண்டும், முயற்சியின் இரு பக்கங்கள். வேறு வார்த்தையில் சொல்வதானால், தோல்வியின் நீட்சியே வெற்றி. தோல்வி குறித்த  அணுகுமுறையை நாம் மாற்றிக் கொள்ளும் போது, அது நமக்குப் பெருமளவில் உதவும். 

வெற்றி நமக்குத் தராத பல நல்ல விஷயங்களைத் தோல்வி தருகிறது என்பது ஒரு நகைமுரண். வெற்றி, பலருக்கு ஒரு வித மமதை, சுணக்கம், பணிவின்மை ஆகியனவற்றை ஏற்படுத்தும்  வாய்ப்புள்ளது. 

ஆனால், தோல்வி, உள்நோக்கி பயணிக்கும் வாய்ப்பைத்  தருகிறது. பலருக்குத் தோல்விகளே வெற்றிகளை விட சிறந்த அனுபவங்களைத் தந்திருக்கின்றன. தன்னுடைய பலம், பலவீனம், வாய்ப்பு, தடைகள் போன்றவற்றை அலசும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்  தருகிறது.

தோல்வி குறித்த பார்வையின் இன்னொரு முக்கிய அம்சம் "தோற்பதற்கான சுதந்திரம்' (ஃபிரீடம் டு ஃபெயில்). பொதுவாக, ஒரு முயற்சியில் ஈடுபடுபவர், வெற்றியை மட்டுமே நாடுவார். 

ஆனால், வெற்றி - தோல்வி இரண்டில் எதுவரினும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குடையோர், பெரும் முயற்சிகளில் ஈடுபடவும், பெரிய சவாலான செயல்களில், புது முயற்சிகளில் ஈடுபடும் முனைப்பையும் காட்டுவர். அவர்கள், தோற்பதற்கு  அஞ்சாதவர்கள், துணிவு மிக்கவர்கள். 

நம்மில் பலரும், ஒரு சொகுசு வளையத்தில் (கம்ஃபோர்ட் úஸôன்) இருப்பதையே விரும்புகிறோம். ஒரு பணியில் ஈடுபடும்போது, வெற்றியை மட்டுமே அடைய வேண்டும் தோல்வியை எக்காரணம் கொண்டும் அடையக்கூடாது என்ற அழுத்தம், இலகுவாக வெற்றி அடையக் கூடிய இலக்குகளை மட்டும்  நிர்ணயம் செய்யத் தூண்டும்.  

வெற்றி தோல்வியைப் பற்றிய அச்சம் இல்லாதபோது, தோல்வியையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் சாதுரியம் வளரும்போது, ஒருவர் தோற்பதற்கு சுதந்திரம் எடுத்துக் கொள்கிறார் எனலாம். அது அவரது சொகுசு வளையத்தை விரிவுபடுத்தும். மேலும், அது தோல்வியை எதிர்கொள்ளும் திறனையும் (ரிஸ்க் டேக்கிங் எபிலிடி) 
அதிகரிக்கும். 

தோற்பதற்கான சுதந்திரம் என்று கூறும்போது, தோல்வியை விரும்பித் தழுவி கொள்ளுங்கள் என்று கூறவில்லை. மாறாக,  பிறர் நடந்து செல்லாப்  பாதையில் நடக்க, வேறு வார்த்தையில் சொல்வதென்றால் புதுப் பாதை வகுக்க அம்முயற்சியில், தோற்பதற்கான  சுதந்திரத்தினை உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளுங்கள் என்றே வலியுறுத்தப்படுகிறது.

தோற்பதற்கான சுதந்திர உணர்வு, உயரிய இலக்குகளை நிர்ணயிக்க உதவும். விளையாட்டு வீரர் ஒருவர் எடுத்துக்கொள்ளும் தோற்பதற்கான சுதந்திரம், அவரது  முழுத் திறமையையும் வெளிக்கொணர ஏதுவாகிறது.

ஒரு திரைப்பட இயக்குநருக்கு வழங்கப்படும் தோற்பதற்கான  சுதந்திரம், அவரை பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடச்  செய்கிறது.

பெரும்பாலும் வெற்றியாளர்கள், தொழில் முனைவோர் ஆகியோரது  விசேஷ குணமாக இந்த தோற்பதற்கு சுதந்திரம் எடுத்துக் கொள்ளும்  குணம் இருக்கும். இத்தகைய புது முயற்சிகளில் ஈடுபடுவோர், தோல்வியை முழுதாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதல்ல;  மாறாக, அம்முயற்சியில் ஏற்படக்கூடிய  இழப்புகளைக் குறைத்துக் கொள்ளத் திட்டங்களைத் தீட்டுவர்.  

இடர்ப்பாடுகளை சரிவர கணித்து எதிர்கொள்ளும் திறன் (கால்குலேடட் ரிஸ்க்ஸ்) அடிப்படையில்  நடவடிக்கைகளை மேற்கொள்வர். மாறாக, தோற்பதற்கான  சுதந்திரம் வழங்கப்படாதவர்கள் அல்லது அதை எடுத்துக்கொள்ளாதவர்கள் அரைத்த மாவையே அரைப்பார்கள்.

 தனியார் நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த சுதந்திரத்தை ஏராளமாக வழங்குகிறது. இல்லையேல், அவர்கள் புது கண்டுபிடிப்புகளை, பொருட்களை, மருந்துகளை, உதிரி பாகங்களை, வழிமுறைகளைக் கண்டறிய இயலாது. 

அவர்கள்  பலமுறை தோல்வி அடையக் கூடும் என்றாலும் ஊக்குவிக்கப்படுவர்.  உதாரணமாக, மருந்துகள் கண்டுபிடிக்கும் நிறுவனங்களில், விற்பன்னர்களின் புது முயற்சிகளில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், 20 % வெற்றி கிட்டினாலும் அது பெரிதாகக் கொண்டாடப்படும். அதாவது  அவர்கள் பத்துக்கு எட்டு முறை தோற்பதற்கான சுதந்திரம் அளிக்கப்படுகிறது; அந்த சுதந்திரமே புது மருந்துகளை, கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்கிறது.

எனவே, வாழ்வில் முக்கியமானவை, தோல்விகளில் இருந்து பாடம் கற்பது, திருத்திக்கொள்வது மீண்டும் முயற்சியில் ஈடுபடுவது ஆகியவையே. இது மாணவ - மாணவியருக்கு சாலப் பொருந்தும்; பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இக்குணத்தினை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். இது நம் நாட்டு மக்களின் பொதுக் குணமாகவும் உருவாக வேண்டும். 

இதனையே, நம் வள்ளுவரும், 
கானமுய லெய்த  அம்பினில் யானை 
பிழைத்தவேல்  ஏந்தல் இனிது, 

என்ற குறளின் மூலம் உயரிய இலக்கினை நிர்ணயிப்பது குறித்தும், அதில் தோற்பதற்கான சுதந்திரம் குறித்தும் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com