ஜனநாயக ஆலயம் பலிபீடம் ஆகிவிடக்கூடாது!

ஜனநாயக ஆலயம் பலிபீடம் ஆகிவிடக்கூடாது!

 தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் ஆளும்கட்சிக் கூட்டணிக்கு ஐந்து ஆண்டுக் காலத்திற்கு ஆட்சி செய்ய உரிமை உள்ளது. அக்கூட்டணி ஆட்சி பல்வேறு நலத் திட்டங்களை நாட்டுக்குத் தருவதற்காகப் புதிய புதிய சட்டங்களை இயற்றுகிறது.
 சட்டங்கள் முதலில் மசோதாக்களாகத் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் மூலமாக மத்திய அமைச்சர வையில் விவாதிக்கப்படுகிறது. கேபினட் முடிவுக்குப் பிறகு, மக்களவையில் அந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அங்கு நிறைவேறிய பிறகு, மாநிலங்களவையில் தாக்கலாகிறது.
 அங்கு விவாதித்த பிறகு பெரும்பான்மை ஆதரவு மூலமோ குரல் வாக்கெடுப்பு மூலமோ அம்மசோதாக்கள் நிறைவேறிய பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதல் அளித்தபின் சட்டமாகிறது.
 கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஆளுங்கட்சிக் கூட்டணி எந்த மசோதாவையும் சுமுகமாகச் சட்டமாக்க முடியவில்லை. மிகச் சிரமப்பட்டது.
 உதாரணத்திற்கு, சென்ற ஆண்டு சட்டமாக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஆளும்கட்சிக் கூட்டணி அரசு மெத்த சிரமப்பட வேண்டியதாகியது. காரணம், அவற்றின்மீது விவாதம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அப்படியே அதன்மீது விவாதம் செய்தாலும், முடிவு என்ன? சட்டத்தைத் திரும்பப் பெறுவதுதானே? திரும்பப் பெற்றுவிட்ட பிறகும் விவாதம் செய்வது வீண்தானே?
 இன்னொன்று, பெண்களுக்கான திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்துவது என நிர்ணயித்த மசோதாவையும் சட்டமாக்க முடியவில்லை. அது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
 பெண்களின் திருமண வயது 21 என உயர்த்துவது, பெண்களுக்கு எதிரானது என்று சர்ச்சை எழுந்தது. முடியுமானால் ஆண்களுக்குரிய திருமண வயதையும் 21-லிருந்து 18 -ஆகக் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டது.
 மேலும் 18 வயதில் பெண்கள் தேர்தலில் வாக்களிக்க முடியும்போது, அதே வயதில் திருமணம் செய்துகொள்ளக் கூடாதா என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். பெண்களின் உடல்நலன் குறித்த அக்கறை இவர்களின் கருத்தில் தெரியவில்லை. 21 வயதில் பெண்கள் மேலும் உடல் வலுவோடு இருப்பார்கள். தாய்மைக்கு அது தகுந்த பருவம் என்ற வாதம் புறக்கணிக்கப்பட்டது நியாயமா?
 பிளாஸ்டிக் பைகளை ஒழித்து, அதற்கு மாற்றாக துணிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உகந்தது. எந்த ஆட்சியாக இருந்தாலும் இதனை மறுக்கவும் முடியாது, மாற்றவும் கூடாது. உலகம் முழுவதும் இது ஓர் இயக்கமாகிவிட்டது.
 பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை உபயோகிக்க வேண்டுமென மக்களிடம் அரசு வேண்டுகோள் விடுக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. நூறு ஆண்டுகள் ஆனாலும் பிளாஸ்டிக் பைகள் மக்குவதில்லை. இதனை எடுத்துச் சொல்லி மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படுகிறது.
 பிளாஸ்டிக் பைகள் கடலில் வீசப்பட்டாலும் அவை கடலுக்கடியில் சென்று மக்கிப் போகாமலே கிடக்கின்றன. அதனால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் ஆக்சிஜன் தருகிற கடல்பாசிகள் பாதிப்படைந்து விடுவது குறித்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
 மக்களால் எம்.பி.-யாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், மக்களவையில் இந்த மசோதா தாக்கலானால், இதனை எதிர்க்காதவராகத்தான் இருக்க வேண்டும். காரணம், மக்கள் மத்தியில் இதனைப் பற்றி தேவையான அளவுக்குப் பரப்புரை செய்யப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது அந்த எம்.பி.-க்கும் தெரியும். அதனால் அவர் இந்த மசோதாவை எதிர்க்க முடியாதவராக ஆகலாம்.
 இதேபோல, நியூட்ரினோ பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்குமானால், நியூட்ரினோவுக்காக தேனிக்குப் பக்கத்தில் உள்ள மலையின் மீது அமைக்க உள்ள ஆராய்ச்சிக் கூடத்தை யாரும் எதிர்த்திருக்க மாட்டார்கள்.
 "ஆய்வுக் கூடத்துக்காக மலையைத் தகர்ப்பதால், பக்கத்தில் உள்ள வைகை அணையே விரிசல் விடும்' என்று கூறி அரசியல்வாதிகள் மக்களை பீதியடையச் செய்துவிட்டார்கள். இது அரசியல்வாதிகளின் அறியாமையினால் செய்யப்பட்ட அவதூறு பிரசாரம்.
 இதேபோலத்தான் மக்களவையில் தாக்கலாகின்ற பல மசோதாக்கள் குறித்துப் பொதுவெளியில் விரிவாக விவாதங்களோ பிரசாரங்களோ நடைபெறுவதில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் கலந்து பேசி மசோதாக்களைத் தயாரிக்கிறார்கள். பிரதமர் தலைமையில் நடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அம்மசோதா குறித்து விளக்கி அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று பிறகே மக்களவையில் முதலில் அறிமுகப்படுத்துகிறார்கள்.
 ஆளுங்கட்சி தாக்கல் செய்த மசோதா என்பதற்காகவே எதிர்க்கட்சியினர் அதனை நிறைவேறவிடாமல் செய்கிறார்கள். அவ்வாறு செய்வதை ஆட்சிக்கு ஏற்படுத்துகிற தோல்வியாக அவர்கள் கருதுகிறார்கள்.
 இந்த எதிர்க்கட்சிகள் தேர்தலில் தோற்றுப்போன கட்சிகள். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில எம்.பி.-க்கள் ஆளுங்கட்சியைத் தோற்கடிப்பதில் மகிழ்கிறார்கள். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் முந்தைய மழைக்கால கூட்டத்தொடரில் அத்துமீறி அநாகரிகமாகச் செயல்பட்டு அவையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தினார்கள் என்பதற்கு விடியோ ஆதாரங்கள் உள்ளன.
 நடந்து முடிந்த அக்கூட்டத்துக்குப் பிறகு, அடுத்து நடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில்தான் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாகியது. அந்த 12 எம்.பி.-க்களையும் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளக் கூடாது என்று மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டார்.
 சம்பந்தப்பட்ட கட்சிகள், இந்த ஒழுங்கு நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனக் கூறி, வெளிநடப்பு செய்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக அமர்ந்து தர்னா செய்யத் தொடங்கினார்கள். சிலர் அவைக்கு உள்ளேயும் கடுமையான அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன.
 இந்த 12 பேரும் சபையில் அத்துமீறி நடந்துகொண்டதைப் பற்றி மக்கள் மன்றங்களில் சென்ற மூன்று மாதத்தில் ஒரு நாள்கூட விவாதம் செய்யப்படவில்லை; கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு நடந்திருந்தால், அந்த 12 பேரின் அத்துமீறல்கள் பொதுமக்களுக்குத் தெரிய வந்திருக்கும். மாநிலங்களவைத் தலைவர் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை பொதுமக்கள் ஆதரித்திருப்பார்கள்.
 ஆனாலும் மாநிலங்களவைத் தலைவர், நீக்கப்பட்ட அந்த உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்தாலே நீக்க நடவடிக்கையை ரத்துசெய்து விடுவதாகத் தெரிவித்தார். அவர்களோ மறுத்துவிட்டனர். மூன்று மாதங்களுக்கு முன்பே இதுபற்றி மக்களிடம் தெரிவித்திருந்தால், மக்களின் ஆதரவு இந்த ஒழுங்கு நடவடிக்கைக்குக் கிடைத்திருக்கும்.
 பொதுவெளியில் இந்த அத்துமீறல்களை மத்திய அரசு வெளியிட்டிருக்க வேண்டும். ஏனோ வெளியிடவில்லை. குளிர்காலக் கூட்டத் தொடரின்போதுதான் இந்த தண்டனை நடவடிக்கை மக்கள் கவனத்திற்கு வந்தது. மத்திய அரசு இதனை மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லத் தவறியது மாபெரும் தவறுதான்.
 நமது ஜனநாயகம் முழு வெற்றி அடைய வேண்டுமானால், எந்த ஒரு மசோதாவாக இருந்தாலும், அது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கலாவதற்கு ஆறு மாதம் முன்பே அதனைப் பற்றிய தகவல்களை மக்களுக்குத் தர வேண்டும். அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், இலக்கியக் கழகங்கள், கல்லூரி மாணவர் மன்றங்கள் ஆகிய அனைத்திலுமே அரசின் மசோதாக்கள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.
 பொதுவெளியில் மசோதாக்களை விவாதித்த பிறகுதான், இரு சபைகளிலும் அம்மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
 புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தியது. புதிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்கள் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும். தாய்மொழி, ஆங்கிலம், மூன்றாவதாக விருப்பப்பட்ட ஒரு இந்திய மொழி. இவற்றில் ஹிந்தி மொழியும் ஒன்று; ஆனால், அது கட்டாயமில்லை. அதனால் ஹிந்தித் திணிப்பு என்பதற்கான முகாந்திரமே எழவில்லை. மத்திய கல்வி அமைச்சர் இதனைத் தெளிவாகக் கூறியுள்ளார். தமிழ்நாடு தவிர, பிற மாநிலங்களில் இந்த மும்மொழித் திட்டத்திற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.
 மேலும் பலருக்கும் தெரியாத கூடுதல் வசதி ஒன்று புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. அது, அந்தந்த மாநிலங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகள், பாடங்களைத் தங்கள் மாநில மொழிகளிலேயே போதிக்கலாம். தற்போது பதினொரு மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது.
 இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழிலேயே போதிக்கலாம். மாணவர்கள் தமிழிலேயே தேர்வையும் எழுதலாம். இத்தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரியும்பட்சத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் கட்சிகளுடைய அரசியல் ஆதாயத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
 அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாகவே முடிவுக்கு வந்திருக்கிறது. ஜனநாயகவாதிகள் இதனை அவமானமாகக் கருத வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகளின் வெற்றியாகக் கருதக் கூடாது. ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு இதைவிட வேறு எதுவுமே தேவையில்லை. ஜனநாயகம் வீழ்ந்தால் எதிர்க்கட்சிகளுக்கும் இடமில்லை.
 நமது நாடாளுமன்ற கட்டடம் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதால் ரூ.971 கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் உருவாகி வருகிறது. அது வெறும் கட்டடமா? இல்லை, அது ஜனநாயக ஆலயமாகும்.
 நாடாளுமன்றம் நடைபெறும்போது மக்களின் வரிப்பணம் ஒரு நிமிடத்திற்கு ரூ. 2.5 லட்சம் செலவாகிறது. ஒரு மணிக்கு ரூ. 1.5 கோடி. நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் நாடாளுமன்றம் செயல்படுகிறது. சென்ற மக்களவையில் 19 மணி நேரம் அவையில் கூச்சலும் குழப்பமும்தான் நீடித்தது. இதேபோல 95 மணி நேரம் நடந்திருக்க வேண்டிய மாநிலங்களவை, 45 மணி நேரம் மட்டுமே நடந்தது. இதனால் மக்களின் வரிப்பணம் எத்தனைக் கோடி வீண் என்பதை சிந்திக்க வேண்டும்.
 சென்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கலான பல மசோதாக்கள் அவையில் நிலவிய கூச்சல் குழப்பத்துக்கிடையேதான் தாக்கலாயின. குரல் வாக்கெடுப்பு பெரும்பான்மை மூலமே அவை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.
 ஜனநாயகத்தின் ஆலயமாக உள்ள அவைகளை ஜனநாயகத்தின் பலிபீடமாக்குவதற்குத்தான் மக்கள் இந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தார்களா?
 இனியாவது நாடாளுமன்ற அவைகளில் விவாதங்கள் மட்டுமே நடக்க வேண்டும். விதி மீறல்கள் இல்லாமல் அறிவார்ந்த கருத்துகள் சுடர வேண்டும். உறுப்பினர்கள் கண்ணியமாக நடந்து கொள்வதுதான் ஜனநாயகத்திற்குப் பெருமை சேர்க்கும்.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com