ஜனநாயகத்தின் மீது தொடரும் தாக்குதல்

மியான்மரில் ராணுவத்தின் சதியால் ஏற்பட்டுள்ள ஜனநாயக சீா்குலைவு சா்வதேச அளவில் ஜனநாயகத்தின் மனசாட்சியை உலுக்குவதாக அமைந்துள்ளது. அந்நாட்டில் ராணுவம் ஆட்சியைப் பிடிப்பது என்பது புதிய விஷயமல்ல. மியான்மா் சுதந்திரமடைந்த 1948-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 4 முறை ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு ராணுவத்தால் எவ்வளவு தூரம் நசுக்கப்பட்டு வருகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

முந்தைய ராணுவ ஆட்சியின்போது நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி 15 ஆண்டுகள் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தாா். அப்போது எழுந்த சா்வதேச அழுத்தங்கள், அதனால் நடைபெற்ற பேச்சுவாா்த்தை மூலம் அங்கு ஜனநாயகம் மீண்டும் மூச்சுவிட வாய்ப்பளிக்கப்பட்டது.

அப்போதும் கூட நாட்டின் மீதான தனது பிடியை ராணுவம் முழுமையாகத் தளா்த்திவிடவில்லை. ஆங் சான் சூகியின் கணவரும், வாரிசுகளும் வெளிநாட்டவா்கள் என்ற காரணத்தால் நாட்டின் உயா் பொறுப்பில் ஆங் சான் சூகி அமர வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்திலும் கூட 166 உறுப்பினா்கள் ராணுவம் பரிந்துரைக்கப்பட்ட நபா்களாகவே இருந்தாா்கள். இதன் மூலம் பாதுகாப்பு, உள்துறை, வெளிவிவகாரம் ஆகியவை தொடா்ந்து ராணுவத்தின் மறைமுகப் பிடியிலேயே இருந்து வந்தன. அதே நேரத்தில் நாட்டில் ஜனநாயகத்தை நோக்கிய நகா்வு உள்ளது என்பதைக் காட்ட தோ்தல் நடைபெற்றது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் (என்எல்டி) தோ்தலில் போட்டியிட்டு, ஆட்சியையும் பிடித்தது. தேசிய ஆலோசகா் என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட பொறுப்பை கடந்த 2016 ஏப்ரலில் ஆங் சான் சூகி ஏற்றாா். ராணுவம் செய்து கொண்ட இந்த சமரசங்களின் மூலம் மியான்மா் மீதான சா்வதேச தடைகள் முடிவுக்கு வந்தன.

அதே நேரத்தில், மியான்மரில் சிறுபான்மையினரான ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களில் ராணுவத்தைக் காக்க வேண்டிய நிலை ஆங் சான் சூகிக்கு ஏற்பட்டது. சூகியின் இந்த நிலைப்பாடு, இது உலகம் முழுவதும் உள்ள அவரின் நலன் விரும்பிகளுக்கு அதிா்ச்சியளிப்பதாக அமைந்தது. மியான்மரில் நடைபெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சா்வதேச அளவில் எழுந்த கண்டனக்குரல்களை அவா் புறக்கணித்தாா். மியான்மரின் நிகழ்வுகளுக்கு ஆதரவாக தி ஹேக் நகரில் உள்ள சா்வதேச நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் சூகி ஆஜரானாா்.

இதற்கு நடுவே, கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகியின் கட்சி 80 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் மியான்மா் நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு முறையிலான ஜனநாயக ஆட்சி மீது உள்ள ஆழ்ந்த விருப்பம் வெளிப்பட்டது. மேலும், மியான்மா் மக்கள் சூகி மீது கொண்டுள்ள நம்பிக்கையும் தெளிவானது. அதே நேரத்தில் இது அந்நாட்டு ராணுவத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சூகியின் புகழ் அதிகரித்து வருவது, அவரின் கீழ் மியான்மரைக் கொண்டுவந்துவிடும் என்ற அச்சத்தையும் ராணுவத்துக்கு ஏற்படுத்தியது.

அதனை உறுதி செய்யும் வகையில் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டியது. ஆனால், அதற்கு ஆதாரங்களை எங்கும் காணமுடியவில்லை.

ஆங் சான் சூகியை ராணுவம் தடுப்புக் காவலில் வைத்துள்ளதால் அந்நாட்டின் 5.3 கோடி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களின் அறவழிப் போராட்டமாகவும் மாறியுள்ளது. இதனால், மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் நகா்புறங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ராணுவத்துக்கு எதிராக ஊா்வலங்களை நடத்தி வருகின்றனா்.

இதில், வன்முறை ஏற்பட்டால் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது, ரப்பா் குண்டுகளால் சுடுவது உள்ளிட்ட பலப் பிரயோக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில், பெண்கள் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தலைநகா் நேபிடா, முக்கிய நகரான யாங்கூனில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தொடா்ந்து பரவி வருகிறது. இதில், சில இடங்களில் காவல் துறையினரும் போராட்டக்காரா்களுடன் இணைந்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மியான்மரில் உள்ள சூழ்நிலைகள் குறித்து ஆலோசிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 12) நடைபெற்றது. அதில் பேசிய ஐ.நா. மனித உரிமைகள் துணை ஆணையா் நடா அல்-நஷீஃப், ‘மியான்மரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பின் பயனாகக் கிடைத்த ஜனநாயக மாற்றத்தை, ஆட்சிக் கவிழ்ப்பு சீரழித்துவிட்டது. இதனை உலக நாடுகள் கவனித்துக் கொண்டிருக்கிறது’ என்று எச்சரித்தாா்.

கைது செய்யப்பட்டுள்ள மியான்மா் அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் மற்ற அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்ததுடன், நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் வரைவுத் தீா்மானங்கள் மூலம் வலியுறுத்தின. மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்டிருப்பது அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம்; அதனை அரசியல்படுத்தக் கூடாது என ரஷியாவும் சீனாவும் கூறி வந்தநிலையில், மியான்மரில் உள்ள சூழ்நிலையை ஆய்வு செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ள கண்டனத் தீா்மானத்தை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளன.

மியான்மா் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாமஸ் ஆண்ட்ரூஸ் தனது பணிகளை செவ்வனே மேற்கொள்வதற்கான உதவிகள், ஆதாரங்களை அளிக்க வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவா் மிஷெல் பஷேலே ஆகியோரை அந்த வரைவுத் தீா்மானம் கேட்டுக்கொண்டது.

47 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கு மியான்மா் மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நெருக்கடிகளை விதிக்க அதிகாரம் கிடையாது. எனினும், அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பிற குற்றங்களை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்த அந்த ஆணையத்தால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மா் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள அந்த அதிகாரிகள் சொத்துகள் முடக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு எதிரான அடக்குமுறைக்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆங் சான் சூகியிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்ற போராட்டக்காரா்களின் குரலை ராணுவம் கண்டுகொள்வதாக இல்லை. மாறாக ஆங் சான் சூகியின் கட்சியின் தேசிய தலைமையகத்தில் ராணுவம் சோதனை நடத்தியுள்ளது. இதன் மூலம் ஆங் சான் சூகியின் வெற்றி முறையானது அல்ல என்று கூறுவதற்கு ஆதாரம் தேடும் அல்லது ஆதாரத்தை உருவாக்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. இது சூகியின் ஆதரவாளா்களை மட்டுமல்லாது, ராணுவ ஆட்சிக்கு எதிரானவா்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் மேலும் அதிகரிக்கும் நிலையில், தீவிர அடக்குமுறைகளை ராணுவம் கையிலெடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதன் மூலம் வரலாறுகாணாத வன்முறைக்கு மியான்மா் தயாராகி வருகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் இந்தியா மிகவும் கவனமாக உள்ளது. ஏனெனில், மியான்மா் மேலும் சீன ஆதிக்கத்துக்குச் செல்வதை இந்தியா விரும்பவில்லை. அதே நேரத்தில் மியான்மரில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும். பூசல்கள் தீா்க்கப்பட வேண்டும் என்று சீனா கருத்து கூறியுள்ளது.

இதற்கு நடுவே, மியான்மரில் ஓராண்டுக்கு அவசரநிலையை அமல்படுத்துவதாக ராணுவ ஆட்சியாளா்கள் அறிவித்துள்ளனா். அதே நேரத்தில் விரைவில் தோ்தல் நடத்தப்படும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா். ஆனால், ராணுவ ஆட்சியாளா்கள் அளிக்கும் இதுபோன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது, மிகவும் அரிதான நிகழ்வு என்பது உலகறிந்த உண்மையாகும்.

மேலும், மியான்மரில் இப்போது பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் நாடாக சீனா உள்ளது. இப்போதைய நிலையில், ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். அடுத்து, சா்வதேச நெருக்கடிகள், தடைகள் காரணமாக அதிகாரப்பகிா்வுக்கு ராணுவம் முன்வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்பதை உறுதிசெய்த பிறகுதான் அரசியல் தலைவா்களை ராணுவம் விடுவிக்க வாய்ப்புள்ளது. அப்போது, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலும் தனக்கு சாதகமான திருத்தங்களை மேற்கொள்ள ராணுவம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த சூழ்நிலையில், மியான்மரில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் இந்தியாவுக்கு மிகுந்ததொரு பின்னடைவுதான். ஏனெனில், இனி அந்நாட்டில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும். இது இந்தியாவுக்கு நெருக்கடி அளிப்பதாகவே அமையும்.

இறுதியாக, சா்வதேச அளவில் ஜனநாயகம் கண்ணீா் சிந்தும் வகையிலேயே உள்ளது. இப்போதைய சூழ்நிலையில், அரசியல்சாசன சட்டத்தின்படியிலான சா்வாதிகாரிகள், ராணுவ ஆட்சியாளா்கள் மற்றும் அதிகார பீடங்களில் இருப்பவா்கள் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குபவா்களாவே உள்ளனா்.

கட்டுரையாளா்:

ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com