ஆய்வுக்கல்வி பாதையில் பயணிப்போம்

கல்வி என்பது அடிப்படையில் நல்லொழுக்கத்தையும் சிந்திக்கும் திறனையும் மேம்படுத்த வல்லது. அதன் இன்னொரு பலனாக, மக்கள் தங்களது பொருளாதார தேவைகளைப்  பூர்த்தி செய்யும்  கருவியாகவும் விளங்குகிறது. தரம் மிக்க உயர்ந்த கல்வி என்பது நாட்டின் பெரும் வளர்ச்சிக்கும் மக்களின் உயரிய வாழ்க்கைத் தரத்திற்கும் அடிப்படையாகும்.

உயர்கல்வியின் இன்னொரு நோக்கமும் பயனாகவும் விளங்குவது ஆய்வுக்கல்வி ஆகும். பல்கலைக்கழகங்கள், தனியார்துறை, இந்திய அரசின் ஆய்வு நிறுவனங்கள் என பல்வேறு தளங்களில், அறிவியல், பொறியியல் மட்டுமின்றி, பொருளாதாரம், விவசாயம், மருந்தியல், சரித்திரம், இலக்கியம் என பல துறைகளிலும் ஆய்வுகள்  மேற்கொள்ளப்படுகின்றன. ஆராய்ச்சி என்பது கல்வியின் நீட்சியாகவும், வளர்ச்சிக்குத்  துணையாகவும் கருதப்படுகிறது.

ஆராய்ச்சிக்காக  செலவிடப்படும் பொருள், ஈடுபடுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை குறித்த சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். அமெரிக்காவின் மக்கள்தொகையில், லட்சம் நபர்களுக்கு 440 பேர், சீனாவில் லட்சத்துக்கு 130 நபர்கள், இஸ்ரேலில் லட்சத்துக்கு 825 நபர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் லட்சத்திற்கு 27 நபர்கள். 

மேலும், ஆண்டொன்றுக்கு  அமெரிக்காவில் தனி நபர் ஒருவருக்கு 1,866 டாலர், சீனாவில் 1,368 டாலர், இஸ்ரேல் நாட்டில் 1,810 டாலர் ஆராய்ச்சிக்கென செலவிடப்படுகிறது. இந்தியாவில், தனி நபருக்கு ஆண்டொன்றுக்கு 167 டாலர் செலவிடப்படுகிறது . இத்தரவுகளுடன் இந்நாடுகளின் பொருளாதாரத்தையும் இணைத்துப் பார்ப்போம்.

அமெரிக்கா  -  23 டிரில்லியன் டாலர்;  சீனா 17 டிரில்லியன் டாலர்; ஜப்பான் 6 டிரில்லியன் டாலர்; இந்தியா 3 டிரில்லியன் டாலர்; இஸ்ரேல் 400 பில்லியன் டாலர்.

இந்தியாவின் மக்கள்தொகையில் நூற்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ள இஸ்ரேல், பொருளாதாரத்தில் எட்டில் ஒரு பங்கு உள்ளது.

மேலும், ஆய்வின் அடிப்படையில், புதிய வடிவமைப்பு, கண்டுபிடிப்பு, தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு காப்புரிமைப்  பட்டயம் (பேட்டன்ட்) பெறுவது என்பது தற்போதைய போட்டி சார்ந்த உலகத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சந்தைப் பொருளாதாரத்தில் , காப்புரிமைப் பட்டயம் என்பது பொருளாதார வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. 

இவ்விஷயத்திலும், இந்நாடுகள் நம்மை விட பல மடங்கு அதிகமாக உள்ளன. உதாரணமாக, 2018-ஆம் ஆண்டு வரை சீனா 4.5 லட்சம்,  அமெரிக்கா 3.54 லட்சம், ஜப்பான்  1.8 லட்சம்,  இந்தியா 25,000 காப்புரிமைப் பட்டயங்களைப் பெற்றுள்ளன. 

இத்தரவுகளிலிருந்து அறியப்படும் இன்னொரு தகவல், ஆராய்ச்சிக்கான அதிக செலவு செய்யும் நாடுகள் பெரும் வளர்ச்சியை - அதிவேக வளர்ச்சியை அடைகின்றன. இந்தியாவில், ஆய்வுகளுக்கான செலவு அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் பலர், ஆய்வு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதில் இரண்டுவித கருத்துகளுக்கு இடமில்லை. 

இந்தியாவில், கல்விக்கூடங்களில் இடை நிற்றல் குறைக்கப்பட்ட போதும், உயர்கல்வி - ஆராய்ச்சிக் கல்வி சார்ந்த ஊக்கம் அளிக்கப்பட்ட போதும், ஆராய்ச்சித் துறையில் நுழைவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

நமது நாட்டில், ஏராளமான  மக்களை அடிப்படைக் கல்வி என்ற வளையத்துக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருந்தபடியால், ஆய்வு சார்ந்த கல்வி அதற்குரிய இடத்தை தொடக்கத்தில்  பெற இயலாது போய்விட்டது. ஆனால், இப்போது கள  நிலவரம் பெருமளவு  மாறியுள்ளது.  

ஆய்வுக்கூடங்களில் கண்டுபிடிப்புகள் மூலம் பெறப்படும் அறிவுசார் சொத்துரிமை, ஆய்வு முடிவுகள் தொழில் கூடங்களில் செயல் வடிவம் தரப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட  உற்பத்திப் பொருள் அல்லது புது கண்டுபிடிப்புப் பொருளாக  மாற்றப்பட்டு சந்தைக்கு வந்து, அது பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும். 

இதற்கு பல்கலைக்கழகங்கள்- ஆய்வுக்கூடங்கள் - தொழிற்கூடங்கள் மற்றும் அரசு இடையேயான நெருக்கமும் ஒருங்கிணைப்பும் அதிகரித்தல் அவசியம்.  
 இவை ஒருபுறமிருக்க, ஆராய்ச்சி - கண்டுபிடிப்பு - பொருளாதார வளர்ச்சி என்றெல்லாம் இணைத்துப் பேசப்பட்டாலும், இந்த சங்கிலியில் உள்ள மிக முக்கியமான வளையம்  ஆராய்ச்சியாளர் என்ற தனி மனிதர்தான். தேடலும் - ஆய்வுக் கண்ணோட்டமும்  மிக்க தனி மனிதர்கள் தான், ஆராய்ச்சித் துறையின் முதுகெலும்பாக உள்ளனர். 

இச்சூழலில், ஆராய்ச்சி, அதன் அவசியம், தனி  மனிதனுக்கு அது தரும் பலன்கள் குறித்த சரியான புரிதலும் கண்ணோட்டமும் பொதுவெளியில் நிலவ வேண்டும். ஆராய்ச்சி என்பது சாமானியர்களுக்கு இயலாத ஒன்று என்ற தவறான கருத்தில் இருந்து வெளிவருதல் அவசியம்.

மாறாக, அது ஆராய்ச்சியாளருக்கு  தனிப்பட்ட முறையில்  மட்டுமல்ல, அவரது அடுத்த தலைமுறையினரின் சிறந்த வாழ்விற்கும் பெரும் அடித்தளம் அமைக்க வல்லது என்ற புரிதல் ஏற்பட வேண்டும்.

உதாரணமாக,  தொடக்கப் பள்ளி முதல் சுமார் 15 ஆண்டுகள் பயின்றால், ஒருவர் இளங்கலை பட்டம் பெறுகிறார். அதற்குப் பின்னர் பணியில் அமர்ந்து பத்து வருடங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊதியமாகப் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு புறம், தொடக்கப் பள்ளியில் தொடங்கிய ஒருவர், சுமார் 20 ஆண்டுகளில், ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுகிறார்; பணிக்கு செல்கிறார். 

அப்போதிலிருந்து, ஐந்து ஆண்டுகளில் அவர், இளங்கலை பயின்ற ஒருவர் பத்து ஆண்டுகளில் அடைந்த பதவி - பெற்ற சம்பளம் ஆகியவற்றினை விட, உயர்ந்த பதவி, கணிசமாக  அதிக சம்பளம்  மற்றும் உயரிய  சமூக அந்தஸ்து ஆகியவற்றினை பெறுகிறார். இந்தப் புரிதல் மாணவர் - பெற்றோருக்கு இருப்பது அவசியம்.

குறுகிய காலப் பலன்களைக் கருத்தில் கொள்ளாமல், தொலைநோக்குப் பார்வையுடன் மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்வி நோக்கி பெருமளவில் பயணிக்க வேண்டும்.  

அப்போதுதான், நாட்டின் வளர்ச்சியும் தனி மனிதனின் வளர்ச்சியும் ஒருசேர 
உயரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com