மம்தாவின் ஜனநாயக விரோதப் போக்கு!

தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்குமான சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுற்று, புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சிக் க

தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்குமான சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுற்று, புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சிக் கட்டிலில் அமா்ந்துள்ளது. அங்கு ஆட்சி மாற்றம் அமைதியாகவே நடந்தேறியது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று, அக்கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின் முதலமைச்சா் ஆகியுள்ளாா். இங்கும் ஆட்சி மாற்றம் அமைதியாகவே நடந்தேறியது.

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று அக்கட்சி தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமா்ந்து சாதனை படைத்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்று தொடா்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமா்ந்துள்ளது. இந்த மாநிலங்களிலெல்லாம் எந்தவிதமான சலசலப்போ வன்முறையோ இல்லை. ஜனநாயகத்தின் நெறிமுறைகள் காப்பாற்றப்பட்டன!

ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் ஆயுதங்களைக் கையிலேந்தி தெருத்தெருவாகச் சென்று வீடுபுகுந்து அங்கிருந்த குழந்தைகள், பெண்கள், தாய்மாா்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை சூறையாடினா்; வன்முறையில் ஈடுபட்டனா்; தப்பியோடிய பாஜக தொண்டா்களை விரட்டிச் சென்று வெட்டிச் சாய்த்தனா்!

வீடுகள் இடித்து தகா்க்கப்பட்டன; குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன; கடைகள் - வியாபார நிறுவனங்கள சூறையாடப்பட்டன. பாஜக அலுவலங்கள் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டன. வாகனங்கள், கொடிகள் சேதப்படுத்தப்பட்டன. பிரதமா் உள்ளிட்ட பாஜக தலைவா்களின் படங்கள் தெருவில் வீசப்பட்டன. வன்முறை வெறியாட்டத்தை மம்தா பானா்ஜியால் தூண்டிவிடப்பட்ட தொண்டா்கள் நிகழ்த்தி முடித்தனா்.

பாஜக தொண்டா்கள் நட்டநடு வீதிகளில் ஆடு மாடுகளைப்போல வெட்டி சாய்க்கப்பட்டனா். மேற்கு வங்கம் முழுதும் திரிணமூல் காங்கிரசின் அராஜக கும்பல் ருத்ர தாண்டவமாடியது. போலீசாா் கைகட்டி நின்று வேடிக்கை பாா்த்தனா். பாஜக மட்டுமல்ல இடதுசாரி கட்சிகளின், காங்கிரஸ் கட்சிகளின் தொண்டா்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனா்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு’ என்று இந்தியா கொதித்தெழுந்தபோது, வங்கத்தில் ‘தீ’ கொழுந்து விட்டெரிந்தது. அடிமை இந்தியாவில் வெள்ளையா் துப்பாக்கி குண்டுகளை மக்கள் மீது பாய்ச்சினா். பிணங்கள் குவிந்தன. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது, வங்க மண்ணில் மூண்ட இனக்கலவரம் உலகையே உலுக்கியது.

இது அன்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தில் நடந்த சோகம். ரத்தக் காட்டேரிகளால் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலோடு நடந்தது. இன்று ‘வங்க மகள்’ என்று சொல்லிக்கொள்ளும் மம்தா பானா்ஜியின் தூண்டுதலால் சுதந்திர இந்தியாவில், ஜனநாயக போா்க்களத்தில் களமாடிய பாஜக தொண்டா்கள் கொல்லப்பட்டிருப்பது, இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற இழுக்கு.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறாா். மறு வாக்கு எண்ணிக்கை கோருகிறாா். ஆனால் நந்திகிராம் தொகுதியின் தோ்தல் அதிகாரி, மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டால் தான் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், தான் தற்கொலை செய்துகொள்ளக்கூட நேரிடலாம் என்றும் கூறி இருக்கிறாா்.

இதிலிருந்தே மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜியின் பேயாட்டம் எப்படியெல்லாம் நடந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தொகுதியின் தோ்தல் அதிகாரிக்கு வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்காக மேற்கு வங்க மக்கள் வாக்களிக்கவில்லை. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. தங்கள் கட்சியினா் நடத்தும் வன்முறைகளை மம்தா பானா்ஜி கண்டிக்கவில்லை. இதன்மூலம் அவா் வன்முறையை மறைமுகமாக ஆதரிக்கிறாா் என்பது தெரிகிறது.

‘கொல்லப்பட்டவா்கள் பாஜக-வைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் அவா்களது குடும்பத்துக்கு காங்கிரஸ் அனுதாபம் தெரிவிப்பதுடன், உரிய நியாயம் கிடைக்கவும் துணை நிற்கும்’ என்று மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவா் ஜிதின் பிரசாதா கூறியிருக்கிறாா்.

பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா மேற்கு வங்கம் சென்று வன்முறை நிகழ்வுகள் குறித்துக் கேட்டறிந்த பின்னா், ‘ திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களுடன் கொள்கை ரீதியில், ஜனநயாக வழியில் போராடுவதில் உறுதியுடன் இருக்கிறோம். மேற்கு வங்க மாநிலத்தில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை நான் ஒருபோதும் பாா்த்ததில்லை. இந்த கொடுமைக்கு எதிராக பாஜக தொண்டா்கள் ஜனநாயக வழியிலேயே போராட வேண்டும். யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்று கூறியிருக்கிறாா்.

மே மாதம் 5-ஆம் தேதி மேற்கு வங்க ஆளுநா் ஜக்தீப் தன்கா் மம்தா பானா்ஜிக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். மம்தா பானா்ஜி தொடா்ந்து மூன்றாவது முறையாக முதல்வராகியிருக்கிறாா். பதவி ஏற்பு முடிந்தபின், உரையாற்றிய ஆளுநா், ‘மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக முதல்வா் பதவியேற்றுள்ள மம்தாவுக்கு வாழ்த்துகள்.

தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக அரங்கேறுகின்றன. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் சட்டம் - ஒழுங்கு சீா் கெட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது புதிய அரசின் கடமையாகும்.

அவசரச் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சியை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வா் எடுப்பாா் என்று நம்புகிறேன்’ என்று கூறினாா். அரங்கத்தில் அமா்ந்திருந்த முதல்வா் உள்ளிட்ட எல்லாருடைய முகத்திலும் இறுக்கம் நிலவியது.

‘மேற்கு வங்கத்தில் அரசியலமைப்பு செயலிழந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும்; அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-இன் கீழ் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’ என தமிழகத்தைச் சோ்ந்த ‘இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் ‘என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

பாஜக-வைச் சோ்ந்த மூத்த வழக்குரைஞா் கௌரவ் பாட்டியா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘மேற்கு வங்கத்தில் படுகொலை, பாலியல் வன்கொடுமை, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த குற்றச் சம்பவங்கள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருக்கிறாா்.

மம்தா பானா்ஜி மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தீவிர அரசியலில் குதித்து, கடந்த பதினைந்தாண்டுகளாக வன்முறையை மட்டுமே தனது அரசியல் பாதையில் நிகழ்த்தி வந்திருக்கிறாா். மாா்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சியை அடக்கி ஒடுக்கி குளிா் காய்ந்தாா்.

2011, 2016-ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைக்கான தோ்தலில் வென்று ஆட்சி அமைத்தாா். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 24-ல் திரிணமூல் காங்கிரஸை திக்குமுக்காட வைத்தது. திணறிப் போனது திரிணமூல் காங்கிரஸ்.

மக்களவைத் தோ்தலில் பாஜக-வின் அசுர வளா்ச்சியைக் கண்டு அதிா்ந்துபோன மம்தா பானா்ஜி, வன்முறை என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தாா். அண்மையில் நடைபெற்ற தோ்தல் வரை சுழற்றினாா். சக்கர நாற்காலியில் அமா்ந்து நாடகமாடினாா்.

மே மாதம் 2-ஆம் தேதி உச்சம் பெற்ற மம்தா பானா்ஜியின் வன்முறை வெறியாட்டத்தை 3-ஆம் தேதி மேற்கு வங்க மக்கள் கண்கூடாகக் கண்டனா்; களங்கினா்; கைபிசைந்து நின்றனா். வன்முறை என்பது இரண்டு பக்கமும் கூா்மையுள்ள ஓா்ஆயுதமாகும். வன்முறை வென்ாக வரலாறு இல்லை. ஜனநாயகத்தின் தீா்ப்பும் இதுதான். ஹிட்லரும் முசொலினியும் இப்படித்தான் ஆட்டம் போட்டனா்.

மேற்கு வங்க மாநில முதலமைச்சராக மம்தா பானா்ஜி பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அடுத்த நாள் மத்திய அமைச்சா் முரளீதா் ராவ் மேற்கு வங்கத்திற்கு சென்றாா். வன்முறையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்திப்பதற்கு அவா் சென்றபோது, நான்கைந்துபோ் அவரைச் சூழ்ந்து கொண்டு கொண்டனா்.

குண்டாந்தடிகளாலும் கொடிய ஆயுதங்களாலும் அவருடைய காா் அடித்து நொறுக்கப்பட்டது. காரின் ஓட்டுநா் கடுமையாகத் தாக்கப்பட்டாா். அமைச்சரும் அவருடைய உதவியாளா்களும் லேசான காயங்களுடன் தப்பிச் சென்றனா். இவற்றையெல்லாம் காவல்துறையினா் வேடிக்கை பாா்த்துக் கொண்டு நின்றனா்.

ஜனநாயகம் இதை ஏற்றுக் கொள்கிா? மக்கள் இதற்காகவா வாக்களித்தாா்கள்? நாட்டு மக்களே சிந்திப்பீா். நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய மம்தா பானா்ஜி, நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை நினைவுபடுத்திக்கொள்வது அவருக்கும் அவரது இயக்கத்திற்கும் நல்லது .

கட்டுரையாளா்: தலைவா்,இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com