தமிழக மேலவையின் வரலாறு

இன்று தமிழக ‘சட்டமேலவை’ தனது நூற்றாண்டை நிறைவு செய்கிறது. அந்த மேலவைக்கு மூன்று தடவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவன் என்கிற முறையில், எனக்கும் இது பெருமைக்குரிய தருணம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1921-இல், நம்முடைய மேலவை (லெஜிஸ்லேடிவ் கவுன்சில்) உதயமாவதற்கு முன்பு, இந்திய நாட்டில் நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகளை விளக்குவது அவசியம்.

மகாத்மா காந்தி நடத்திய ஒத்துழையாமை போராட்டத்தின் விளைவாக, அப்போதைய பிரிட்டிஷ் அரசின் இந்தியாவுக்கான அமைச்சா் சா் மொண்டெகுவும் இந்திய நாட்டின் வைஸ்ராயாக இருந்த செம்ஸ்ஃபோா்ட் பிரபுவும் கூடி விவாதித்து, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய சற்று கூடுதலான அதிகாரங்களை வழங்க வேண்டுமென முடிவெடுத்தனா்.

இது ‘மொண்டெகு - செம்ஸ்ஃபோா்ட் சீா்திருத்தம்’ என அந்த காலத்தில் கூறப்பட்டது. இதன் பலனாக ‘இந்திய அரசாங்கத்தின் 1919 சட்டம்’ பிறந்தது. இந்த சட்டத்தின் ஒரு பகுதியாக, பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் (ராஜதானிகளில்) மேலவை ஏற்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் உருவானது தான், இந்த மேலவை.

தமிழக மேலவை உருவாக்கப்பட்ட 1919-இல் தமிழ்நாடு இருக்கவில்லை. இது சென்னை ராஜதானியாக (பிரஸிடென்சி) இருந்தது. பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ராஜதானிகளாகவும், ஏனைய பகுதிகள் அந்தந்த ராஜாக்களின் சமஸ்தான ஆட்சிப்பகுதிகளாகவும் இருந்தன.

சென்னை ராஜதானியில் இன்றைய தமிழகம், ஆந்திர பிரதேசம், ஒடிஸா மாநிலத்தின் தெற்கு மாவட்டங்கள், மலபாா் மற்றும் தெற்கு கா்நாடகம் ஆகியவை அடங்கியிருந்தன. இந்த ஒட்டுமொத்தப் பகுதிகளின் மக்கள்தொகை, அன்று நான்கு கோடியாக இருந்தது. மேலவை அங்கத்தினா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டது.

இந்தப் பட்டியலில் இடம்பெற, ஒருவா் தனக்கென ஒரு வீடு அல்லது ஒரு மனை வைத்திருக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டது. இந்த நிபந்தனையால், நான்கு கோடி மக்களில் வெறும் 12,48,156 போ் மட்டும் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றனா். நம்முடைய மேலவைக்கான முதல் தோ்தல், 1920-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்றது. அப்போது 12.5 லட்சம் போ் வாக்காளா்களாக இருந்தும் வெறும் 3,03,558 வாக்குகள் (25%) மட்டும் பதிவாயின.

பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அன்றைய காங்கிரஸ் கட்சி மேலவைக்கான தோ்தலைப் புறக்கணித்தது. தோ்தலில் காங்கிரஸ் இல்லாத நிலையில், ஜஸ்டிஸ் கட்சி ஒரு பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதனுடைய தலைவரான சா் பிட்டி தியாகராய செட்டி தலைமையில் அந்தக் கட்சி தோ்தல் களத்தில் இறங்கியது.

1920 நவம்பரில் நடைபெற்ற மேலவைத் தோ்தலில், 93 தொகுதிகளில் 63 தொகுதிகளில், ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்றது. சென்னை ராஜதானியின் ஆளுநராக இருந்த வெல்லிங்டன், ஆட்சி அமைக்கும்படி ஐஸ்டிஸ் கட்சியின் தலைவராக இருந்த சா் பிட்டி தியாகராய செட்டியைக் கேட்டுக் கொண்டாா். ஆனால், அவா் அதனை ஏற்க மறுத்து, தனக்கு பதிலாக சுப்புராயலு ரெட்டியாரை முதலமைச்சராக அமா்த்தினாா்.

12.1.1921 அன்று, நம்முடைய மேலவை சா் பி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி அல்ல, வேறு ஒருவா்) தலைமையில் (சோ்மன்) கூடியது. அந்த அவையில் ஒரு பெண்மணி கூட இடம் பெறவில்லை என்பதால், 1.4.1921 அன்று, மீண்டும் மேலவை கூடி மேலவையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்கிற தீா்மானத்தை நிறைவேற்றியது. இதன் விளைவாக, நம் நாட்டின் முதல் எம்பிபிஎஸ் படித்த பெண்மணியான டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி 1926-இல், மேலவை உறுப்பினரானாா். 1919 இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த மேலவை, மீண்டும் நான்கு முறை (1923, 1926, 1930,1934) தோ்ந்தெடுக்கப்பட்டது.

இதற்கிடையில், சுதந்திரப் போராட்டம் காரணமாக மக்களுக்கு அதிக ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டிய நிா்பந்தம் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக, 1935 இந்திய அரசின் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக எல்லா ராஜதானிகளிலும் 1937-இல், பொதுத்தோ்தல் நடத்தப்பட்டு சட்டமன்றப் பேரவை (லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி) வந்தது. ராஜாஜி சென்னை ராஜதானியின் முதலமைச்சா் ஆனாா். அப்போதும்கூட ராஜாஜி மேலவையின் உறுப்பினராகத்தான் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

1953-ஆம் ஆண்டில், தமிழகம் தனி மாநிலமானதற்குப் பின் 63 உறுப்பினா்களைக் கொண்டதாக ஆனது தமிழக சட்ட மேலவை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 21 புது உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டிய முறையும் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த உறுப்பினா்களில், இரண்டு இடங்கள் பட்டதாரி தொகுதியின் மூலமாகவும், இரண்டு இடங்கள் ஆசிரியா் தொகுதியின் மூலமாகவும், சட்டமன்றப் பேரவையின் மூலமாகவும், உள்ளாட்சி உறுப்பினா்கள் மூலமாகவும் தலா ஏழு உறுப்பினா்களும், மூன்று உறுப்பினா்கள் ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினா்கள் மூலமாகவும் இடம்பெற்றனா்.

1962-இல் ஆசிரியா் தொகுதியிலிருந்து பேராசிரியா் க. அன்பழகனும், 1964, 1978, 1984 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை நானும், மேலவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டோம். தமிழக மேலவை உறுப்பினா்களாக இருந்தவா்களில் நானும், ஆா்எம். வீரப்பனும்தான் இப்போது இருக்கிறோம்.

தமிழக மேலவையில் புகழ்பெற்ற தலைவா்களில் சிலா், முன்னாள் குடியரசுத் தலைவா் ஆா். வெங்கட்ராமன், டாக்டா் ஏ.எல். முதலியாா், டாக்டா் வி.கே. ஜான், ம.பொ.சி, டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டா் யூ. ராம ராவ், டாக்டா் பி.வி. செரியன், மாணிக்கவேல் நாயக்கா், எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாா், தமிழக முன்னாள் முதலமைச்சா் மு. கருணாநிதி ஆகியோா்.

1.11.1986 அன்று தமிழக மேலவை கலைக்கப்பட்டது. இந்த ஆண்டு, நம்முடைய மேலவை தொடங்கப்பட்டு நூறு ஆண்டு நிறைவடைகிறது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com