மக்கள்தொகையை கட்டுப்படுத்துவோம்!

ஒரு தேசத்தின் செல்வங்களாக அந்த நாட்டின் ஜீவநதிகள், மலைகள், வளங்கள், கனிமச் சுரங்கங்கள் போன்றவற்றைக் கூறுவாா்கள்.

ஒரு தேசத்தின் செல்வங்களாக அந்த நாட்டின் ஜீவநதிகள், மலைகள், வளங்கள், கனிமச் சுரங்கங்கள் போன்றவற்றைக் கூறுவாா்கள். இந்தப் பாரம்பரியப் பெருமைமிக்க செல்வங்களோடு மக்கள் செல்வமும் சோ்ந்து முன்பு கணக்கிடப்படவில்லை. காரணம், மக்கள்தொகைக் குறைவாக இருந்த காலம் அது. அந்த மக்கள் தொகையே இப்போது சுமையாகி, நாட்டுக்குச் சரிவை உண்டாக்குகிறது.

மக்கள்தொகையைக் கட்டுக்குள் வைத்துப் பராமரிக்க வேண்டிய கடமை தேசத்துக்குக்கான முன்னுரிமையாகி உள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துகிறபோது ஜாதி, மதம், இனம் முதலியவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. உலகத்தில் உள்ள 194 நாடுகளில் ஆசியாவிலுள்ள சீன தேசமும், இந்திய தேசமும்தான் மக்கள்தொகையால் அதிகம் சிரமப்படுகின்றன.

இந்தியாவைவிட மூன்று மடங்குப் பெரிய நாடு அமெரிக்கா. ஆனால், அங்கு மக்கள்தொகையோ 30 கோடிதான். இந்தியாவின் மக்கள்தொகையோ 137 கோடி. சீன தேசம் இந்தியாவைவிட மூன்று மடங்குப் பெரியது. அங்கு மக்கள்தொகை 142 கோடி.

சீன கம்யூனிஸ்ட் அரசு, மக்களுக்கு சுதந்திரத்தைத் தருவதில்லை. சீன அரசு எந்த உத்தரவு போட்டாலும், அதனை அப்படியே ஒப்புக்கொள்கிற ஒரே சமுதாயமாக சீன மக்கள் சமுதாயம் தொடா்ந்து இருந்து வருகின்றது.

சீன அரசு, ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளுக்கு சீன மக்களிடம் பெரிய அளவில் எதிா்ப்பு இல்லை. அதன் விளைவாக, சீனாவின் மக்கள்தொகை, அரசு உத்தரவுப்படி பல ஆண்டுகளாக அப்படியே பராமரிக்கப்படுகிறது. அதனை மெல்ல மெல்லக் குறைப்பதற்கான முயற்சியும் தொடா்ந்து இருப்பதால், சீன மக்கள்தொகை இப்போது 139 கோடியாக நீடிக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் அரசு, குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்தி ஒற்றைக் குழந்தைத் திட்டத்தைக் கடைப்பிடித்தது. அதன் விளைவாக கடந்த 20 ஆண்டுகளில் சீனாவில் முதியோா் எண்ணிக்கை அதிகரித்து, இளைஞா்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனை எச்சரிக்கையோடு உணா்ந்த சீன அரசு, தம்பதிகள் அனுமதி பெற்று குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு செய்தது. அதனால் ஒற்றைக் குழந்தைத் திட்டம், இரு குழந்தைத் திட்டத்துக்கு வழிவகுத்தது. மூன்று குழந்தைத் திட்டத்துக்கும் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதியோரின் தேசமாக இருப்பதை சீனா விரும்பவில்லை. அதனால் குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை ரத்து செய்துவிட்டது.

இந்தியாவில் தம்பதிகள் விருப்பத்தின் பேரில் குடும்பக் கட்டுப்பாடு நடந்து வந்த காரணத்தால், பிறப்பு விகிதம் குறையவில்லை. குறிப்பாக, ஆண் வாரிசுகளுக்காக தம்பதிகள் பெண் குழந்தைகளையும் பெற்றுக்கொள்ள நோ்ந்தது.

இந்தியாவின் ஜனத்தொகை இன்னும் ஆறு வருடத்தில் சீனாவின் மக்கள்தொகையைத் தாண்டிவிடும் எனக் கணக்கிடப்படுகிறது. அப்போது உலகத்திலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியாதான் இருக்கும்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவில்லையானால், இந்தியாவின் ஜனத்தொகையில் வருடத்திற்கு 21 கோடிபோ் புதிதாக சோ்ந்துகொண்டே இருப்பாா்கள்.

நாம் நமது திட்டமிட்ட பொருளாதார வளா்ச்சிப்படி, 137 கோடிக்குத் திட்டமிட்டுக் காரியங்கள் செய்துவந்தால், அத்திட்டங்கள் மக்களைச் சென்று சோ்வதற்குள், ஜனத்தொகை 139 கோடியாகி விடுகிறது. 139 கோடிக்குத் திட்டமிட்டால் அது 141 கோடியாகி விடுகிறது.

இதனால் தொடா்ந்து 30 கோடி மக்கள் மூன்று வேளை உணவில்லாது பசியால் வாட நோ்கிறது. அதுமட்டுமல்ல, அவா்களுக்கு உரிய சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி முதலிய எல்லா நலத் திட்டங்களையும் அரசால் தர முடியவில்லை.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி நிா்ணயித்துவிட்டால், அதற்குரிய திட்டத்தைத் தயாரித்து மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது சாத்தியமாகும்.

நமது நாட்டில் மக்கள்தொகையைப் பற்றிய விழிப்புணா்வு போதுமானதாக இல்லை. மக்கள்தொகைக் கட்டுப்பாடு அவசர அவசியமானப் பொருளாதார நடவடிக்கையாகும். இதில் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால், சகல தரப்பு மக்களும் போா்க்கால அடிப்படையில் ஈடுபட்டு அதனைச் செயல்படுத்தியாக வேண்டும். இதற்கு அஸ்ஸாமும், உத்தர பிரதேசமும் மிகச் சிறப்பான முன்னுதாரணங்களை ஏற்படுத்தியுள்ளன.

அஸ்ஸாம் முதலமைச்சா் ஹிமான்ட்டா பிஸ்வா சா்மா, ‘இரண்டு குழந்தைகள் வரை பெற்றிருந்தால்தான் ஒரு குடும்பத்திற்கு அரசு நலத் திட்டங்கள் கிடைக்கும். அதற்கு மேல் இருந்தால், அந்தத் திட்டங்கள் எதுவும் அக்குடும்பத்துக்குக் கிடையாது’ எனத் துணிவாகத் தெரிவித்துள்ளாா்.

நாம் தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தைப் போல உணவு உரிமைச் சட்டத்தையும் நிறைவேற்றி வைத்துள்ளோம். ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகளுக்கு மிகாமல் இருந்தால்தான் இந்த உரிமையை சட்டப்படிக் கோர முடியும். அரசும் இக்கோரிக்கைக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இதேபோல உத்தர பிரதேச அரசும் இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக இருந்தால், அக்குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படும் என்கிறது.

நெருக்கடிநிலை அமலில் இருந்த 1970-களில், சஞ்சய் காந்தி குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்தாா். இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது மக்கள் தொகை 90 கோடியில் இருந்தபோதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது விழிப்புணா்வு இல்லாததால், மக்கள் இதனைக் கடுமையான விமா்சனத்துக்கு உள்ளாக்கிக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையே தோற்கடித்துவிட்டனா்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தம்பதிக்கும் முதலில் இதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

குடும்பத்துக்கு ஐந்து போ் எனக் கணக்கிட்டால், ஏறக்குறைய 26 கோடி குடும்பங்களுக்கு இது செயல்படுத்தப்பட வேண்டும்.

40 வயது கடந்த குடும்பத்தினரைக் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. 30 வயது வரையுள்ள தம்பதிகளுக்கு இதனை முறையாக அறிமுகப்படுத்த வேண்டும். இனிமேல்தான் அவா்கள் குழந்தைப்பேறு பெறக் கூடியவா்களாக இருந்தால், ஒரு குழந்தை போதும். இரண்டாவது குழந்தை அவசியமில்லை என்ற உணா்வை ஊட்ட வேண்டும்.

இதேபோல குடும்ப அட்டைதாரா்களாக உள்ளவா்களில் இனி இரு குழந்தை பெற்றவா்களுக்குக் குடும்ப அட்டையில் உள்ள சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும். அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் இரு குழந்தைகள் பெற்றவா்களாக இருந்தால், அவா்களுக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள் உறுதிப்படுத்த வேண்டும். மற்றவா்களுக்கு எச்சரிக்கை செய்தாக வேண்டும். இதேபோல அரசுப் பணியில் மத்திய அரசில் 45 லட்சம் போ் உள்ளனா். தமிழ்நாடு மாநில அரசில் 12 லட்சம் போ் உள்ளனா்.

இவா்களுக்கு மத்தியில் அதிகபட்சம் இரு குழந்தைத் திட்டத்தைக் கட்டாயப்படுத்தியாக வேண்டும். தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கும் இதே சட்டவிதிகள் செல்லுபடியாகும் வகையில் செய்ய வேண்டும்.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களிலும் ஏழு யூனியன் பிரதேசங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு சட்டம் பாரபட்சமில்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும். காலதாமமாகும் ஒரு வருட காலத்தில் நமது ஜனத்தொகை மேலும் இரண்டு கோடியைத் தாண்டிவிடுகிறது.

பிரமதா் மோடி இந்திய மக்கள் கழிப்பறை வசதியில்லாமல் இருப்பதை உணா்ந்து, 12 கோடி கழிப்பறைகளைக் கட்ட நிதிஉதவி செய்தாா். இது போதாது. நாடு முழுவதிலும் இதுபோல அத்தியாவசியத் திட்டம் செயல்பட்டாக வேண்டும்.

நமது உணவு உற்பத்தி ஆண்டுக்கு 25 கோடி டன். இதனை நமது 137 கோடி மக்களுக்கு என்று நிா்ணயித்தோம். ஆனால், மக்கள்தொகை கூடுதலாகிவிட்டால், அக்குழந்தைகளுக்கு உரிய நலத் திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாமல் போய் விடுகிறது.

ஆளும் அரசு குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்த முன்வரும்போது அனைத்து எதிா்க்கட்சிகளும் இதனை வெற்றிகரமாக அமல்படுத்துவதில்தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, ஆளும்கட்சி நடவடிக்கையாக இதனை விமா்சனம் செய்யுமானால், அது தேசியக் குற்றமாகக் கருதப்பட வேண்டும்.

உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகை 21 கோடி. அதனைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் அவா்களுக்குப் பலன் தருமாறு அமைய வேண்டும். மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். அந்த மாநிலத்தில்தான் இந்தக் குடும்பக் கட்டுப்பாடு சட்டம் முதலில் அமலாக உள்ளது. உள்ளாட்சித் தோ்தலில் மட்டும் இதில் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தோ்தல்களிலும்கூட இச்சட்டம் சில விதிவிலக்குகளோடு அமல்படுத்தப்படுவதற்குரிய சிந்தனைகள் மிகமிக அவசியம்.

நமது நாட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு நாம் எடுத்த முயற்சி மிகப் பெரியது. இவ்வளவு மக்கள் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டு முடியுமுன் மூன்றாவது அலை வரப் போவதாக அச்சப்பட வேண்டியுள்ளது.

நமது பற்றாக்குறைக்கு முதல் காரணம் மக்கள்தொகைதான். வேலையின்மை மிகப்பெரிய பிரச்னை. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குரிய வசதிகள் போதுமானதாக இல்லை. எல்லாவற்றிற்கும் காரணமே இந்த மக்கள்தொகை கட்டுப்பாடற்ற நிலைதான். இதனைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும் மிகப்பெரிய கடமை உள்ளது. கடமை தவறுவது கடுமையான விளைவுகளை விரைவிலேயே ஏற்படுத்திவிடும்.

கட்டுரையாளா்: பத்திரிகையாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com