தொழில்துறையும் பொருளாதார மேம்பாடும்

புதிய பொருளாதாரக் கொள்கை தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அறிமுகமானபோது, பல புதிய மாற்றங்கள் உருவாகத் தொடங்கின. ஏறக்குறைய, அப்போதுதான் ஒவ்வொரு மாநிலமும் தன்னிச்சையாக செயல்பட முடிந்தது என்றே கூறலாம். ஆனால், இவற்றை சில மாநிலங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன; பல மாநிலங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தவற விட்டன. சரியாகப் பயன்படுத்திக்கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். 

அக்காலகட்டத்தில், தமிழ்நாட்டினுடைய தொழிற்சந்தையின் முகம் ஒரு புதிய வடிவில் மாறி இருந்தது. அதற்குக் காரணம், தொழில் வளர்ச்சி என்பது மாத்திரமல்ல.  புதிய பொருளாதாரக் கொள்கையின் வரவால் மட்டுமே அது தொடங்கி விடவில்லை. நீண்ட காலமாகவே மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் ஒரு மேம்பட்ட மாநிலமாகத்தான் இருந்து வந்தது. உதாரணமாக, இந்தியாவின் முதல் சைக்கிள், முதல் மோட்டார் வாகனம் போன்றவை அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில்தான் உருவாக்கப்பட்டன. பின்னர் அவை இந்தியா முழுவதும் அறிமுகமாயின. 

ஸ்டாண்டர்டு மோட்டார், அசோக் லேலண்ட் போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள், தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் துணை புரிந்த காலகட்டம் அது. இன்றைய காலகட்டத்தில் ஹூண்டாய் போன்ற பல கார் தொழிற்சாலைகள்  உருவாகியுள்ளன. ஆனால், அப்போதே ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் நிறுவனம் சென்னைக்கு அருகிலேயே தனது தொழிற்சாலையை நிறுவி கார்களைத் தயாரித்து சாதனை படைத்தது. குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி, இந்தியாவின் முதல் சொகுசு காரான "ஸ்டாண்டர்டு 2000' இங்குதான் தயாரிக்கப்பட்டது. 

அதே போல டி.டி.கே. குழுமம், டி.வி. சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ், அமால்கமேஷன்ஸ், ரானே மெட்ராஸ் போன்ற நிறுவனங்களும் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டன. தாராளமயமாக்கத்திற்கு முன்பாகவே டி.வி.எஸ்., ரானே மெட்ராஸ் போன்ற நிறுவனங்கள் வாகன உதிரிபாக உற்பத்தியின் மூலம் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமையைத் தேடித் தந்து கொண்டிருந்தன. பின்னர், 1965 காலகட்டத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) தொடங்கப்பட்டது. இதன் பலனாக ஸ்பிக், டைட்டன் போன்ற பல நிறுவனங்கள் ஒவ்வொன்றாகத் தொடங்கப்பட்டன. 
1980-களில் டாடா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் சென்னையில் தனது விரிவாக்கத்தை பெரிய அளவில் நிகழ்த்திக் காட்டியது. 1980-களின் பிற்பகுதியில் இந்தியா முழுவதும் தொழிற்சாலைகள் உருவாயின. மிகப்பெரிய தொழிலதிபர்கள் உருவாகிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைத்தது. அதாவது, பொருளாதாரம் மாற்றத்திற்குரியதாக அறிவிக்கப்பட்டபோது அதை தமிழ்நாடு பெருமளவு நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டது. 

80-களில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், பல பொறியியல் பட்டதாரிகள் 90-களின் தொடக்கத்தில் படிப்பை முடித்து வேலைக்குத் தயாராக இருந்தனர். தொழில்நுட்பக் கல்லூரிகளும், ஐ.ஐ.டி.யும், பாலிடெக்னிக்குகளும், தமிழகத்தில் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றி இருந்தன. ஆக,  தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும், நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கும் அடிப்படையில் மனித சக்தியே காரணமாக உள்ளது. எனவே, படிப்பை முடித்து வேலைவாய்ப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருந்த பொறியியல் அறிஞர்கள் தமிழக மண்ணில் அக்காலகட்டத்தில் அதிக அளவில் இருந்தனர். 
கிராமம், நகரம் ஆகிய இரு பகுதிகளுக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்து பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்புகளைப் பெற்றதனால் அடிப்படைப் பொருளாதாரம் வளரத் தொடங்கியது. 

புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 90-களுக்கும் தற்போது உள்ள 2021-க்கும் இடையில் இந்த உற்பத்திக்கான வளர்ச்சி அதிக பங்களிப்பைத் தந்திருக்கிறது. ஆட்டோமொபைல், உதிரிபாகங்கள், ஜவுளி, தோல் பொருள்கள், மருந்துப் பொருள்கள் இவற்றில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கத் தொடங்கியது. ஹூண்டாய், ஃபோர்டு, பி.எம்.டபிள்யூ போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளை தொடங்கியதும் பொருளாதார மாற்றத்திற்கு அடிகோலின எனலாம். 

ஆகவேதான் தொழில் வளர்ச்சியை நிர்ணயிப்பதிலும், தனியார் முதலீடுகளை ஈர்ப்பதிலும் மாநிலங்களுக்கிடையில் போட்டி உருவான 1992-ஆம் ஆண்டிலேயே தொழில் கொள்கை ஒன்றை வெளியிட்டு, ஒரு நல்ல முன்முயற்சியைத் தமிழகம் தொடங்கி வைத்தது. அக்காலகட்டத்தில்தான் தகவல் தொழில் நுட்பக் கொள்கை வெளியிடப்பட்டது. 340 கோடி ரூபாய் செலவில் பழைய மகாபலிபுரம் சாலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு என "டைடல் பார்க்' என்ற தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்றொரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவும் உருவானது. மாநிலம் முழுவதும் ஏராளமான தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களும், 57 சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் உருவாக்கப்பட்டன. 

அதிக நேரடி அந்நிய முதலீட்டைப் பெறும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வந்தது. ஃபோர்ட், ஷெல் போன்ற பெரிய நிறுவனங்களின் பி.பி.ஓ.-க்கள் தமிழ்நாட்டில்தான் இயங்குகின்றன. அவை தாராளமயமாக்கத்தையும், தமிழ்நாட்டின் சமூக நீதி திட்டங்களையும் பிரித்துவிட முடியாது என்கிற அளவிற்கு தமிழகத்தோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. இக்காலகட்டத்தில்தான் வேலைவாய்ப்பு உருவாவதற்கான பல்வேறு சூழல்கள் உருவாகின. ஆக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது மனிதவள மேம்பாட்டோடும் இணைந்திருக்கிறது. 
மக்கள்தொகையில் ஆறாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  இரண்டாவது இடத்தில் இருப்பது ஒரு மகிழ்வான செய்தியாக இருக்கிறது. 

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களில் 10-இல் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. இத்தகைய வருமானம்தான் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு மாநிலத்தின் சுகாதார வளர்ச்சி, உற்பத்தி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அடித்தளமாக இருந்தது. விவசாயத்தைச் சார்ந்திருப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதும், மாநிலத்திலுள்ள பெரும்பாலான கிராமங்கள் நகரமயமாகிக் கொண்டிருப்பதும் பின்னடைவுகள்தான்.  

மேலும், தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து போய், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் இங்கு வேலைக்காகக் குவியத் தொடங்கியிருக்கிறார்கள். இது திருப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிகமாக நிகழ்கிறது. இவை நாளடைவில் சமூக ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடும். தமிழக அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்திருப்பதாக வெள்ளை அறிக்கையில் தமிழக நிதியமைச்சர் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது. ஆந்திரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தும், ஆராய்ந்து பார்த்தும் தமிழக அரசின் வெள்ளை அறிக்கை தயார் செய்யப்பட்டதாக நிதியமைச்சகம் கருத்து தெரிவித்திருக்கிறது.

2020-21 நிதியாண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூபாய் 61,320 கோடியாக இருக்கிறது. தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் தொகை ரூ.2,63,976 ஆக உள்ளது என்று தற்போதைய அரசு குறிப்பிட்டிருக்கிறது. வரியே இல்லாத நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, மின்கட்டண உயர்வோ, பேருந்து கட்டண உயர்வோ, சொத்து வரி உயர்வோ இன்றி பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க அரசு  செயல்பட்டதை எவ்வாறு தவறென்று நாம் குற்றம் சாட்ட முடியும்? அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசாங்க அலுவலகங்களைப் பராமரிப்பது, மின்கட்டணம் ஆகியவற்றுக்கே தமிழகத்தினுடைய பெரும்பகுதியான நிதி செலவிடப்பட்டு வருகிறது. 
தற்போதைய ஆட்சியில் பொருளாதார நிபுணர்கள் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டபோதும், தாராளமயமாக்கல் கொள்கை தொடங்கிய காலகட்டத்திலும், பொருளாதார அறிஞர்களுடைய தேவை மிகவும் இன்றியமையாததாக இருந்தது. இவையெல்லாம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும். தற்போதைய கரோனா தீநுண்மி காலகட்டத்தில் நம்முடைய பெரும் வருவாய் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவே செலவிடப்பட்டு வருகிறது. அதுதான் பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கிய காரணமாகும். 

ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரியில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பங்குத்தொகை வராமல் இருக்கிறது. தமிழக அரசு பெரும் துறைகளில் இருந்தும், பொது நிறுவனங்களிடம் இருந்தும் பெரும் வருவாயை ஈட்டுவதற்கு முனைந்தால், அது ஏழை, எளிய மக்களின் மீதான வரிச்சுமையாகவே போய் முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் சார்ந்த தொழில்களையும், நீர் மேலாண்மையையும் சரியாகத் திட்டமிடுவது இன்றியமையாதது. அவையே, நிதிச்சுமையில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதற்கு உதவும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com