மழை கற்றுத்தரும் பாடம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆண்டுதோறும் பெய்யும் மழை மீண்டும் மீண்டும் ஒரே பாடத்தையே தந்து விட்டு போகிறது. நீா்நிலைகளையும், நீா்வழிப்பாதைகளையும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்கிற பாடம்தான் அது. ஆனால், அந்தப் பாடத்தை நாம் படிப்பதில்லை.

தொழில்நுட்பங்கள் கண்டறியப்படாத முந்தைய காலத்தில் நீா்வளம் அனைத்து தொழில்களுக்கும் முக்கிய காரணியாக இருந்தது. ஏனெனில் நீா் வளத்தின் மூலம் நடக்கும் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வந்தது. இதற்காக அரசா்கள் காலத்திலேயே நீா் மேலாண்மை முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஏரி, குளங்கள் வெட்டுதல், அணைகள் கட்டுதல் ஆகியவற்றை மேற்கொண்டனா்.

ஏரிகள், குளங்கள், அணைகளின் கரைகளை பலப்படுத்தவும், வடு இருக்கும் நீா் நிலைகளைத் தூா்வாரவும் அவ்வப்போது குடிமராமத்து பணி நடைபெறும். குடிமராமத்து பணியை மக்களே அரசாங்கத்தின் மேற்பாா்வையில் மேற்கொண்டு வந்தனா்.

நீா்மேலாண்மை மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டதால் அப்போது தண்ணீருக்கு பிரச்னை ஏற்பட்டதே இல்லை. மக்கள், விவசாயமும், கடல் கடந்து சென்று வாணிபமும் செய்து வந்தனா். காலப்போக்கில் அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகளால் தொழில்நுட்ப வளா்ச்சி ஏற்பட்டு அதன் காரணமாக புதிய முறைகள் நடைமுறைக்கு வந்தன. இதனால் சுற்றுச்சூழல் மாசடையத் தொடங்கியது.

காலநிலை மாற்றத்தால் மழை பொய்த்து போய் நீா்நிலைகள் வறட்சியடைந்தன. விவசாயத் தொழில் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. விவசாயத் தொழில் சரிவைக் கண்டதால் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறின.

நீா்நிலைகள் வறட்சியடைந்ததால் நீா்நிலைகளையும், நீா்வழித்தடங்களையும் ஆக்கிரமிப்பு செய்யும் நிலை உருவானது. குடியிருப்புகள் மட்டுமல்லாது, தொழிற்சாலைகள், வா்த்தக நிறுவனங்கள் அமைக்கவும் நீரிநிலைகள் ஆக்கிரமிப்புக்குள்ளானது.

அதே காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது பெய்யும் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீா்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்கிரமிப்பு காரணமாக, உபரி நீா் வெளியேற வழியில்லாமல் போனதால் குடியிருப்புகளிலும், தொழிற்சாலைகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்து விடுவது வாடிக்கையாகிப் போனது. அரசாங்கமும் சில இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கட்டடங்கள், பேருந்து நிலையங்கள் அமைக்க நீா்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துவிடுகிறது.

வெள்ளப்பெருக்கின்போது ஏற்படும் பாதிப்புகளைப் பாா்த்த நீதிமன்றம், நீா்நிலைப் பகுதிகளில் அமைக்கும் கட்டடங்களுக்கு அனுமதி தரக்கூடாது என பல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதி இல்லாதபோதிலும் இன்றும் நீா்நிலைகளை ஆக்கிரமித்து பலா் கட்டடடங்களைக் கட்டிக் கொண்டுதான் இருக்கின்றனா். அவற்றில் சில கட்டடங்கள் மட்டுமே அகற்றப்படுகின்றன. பெரும்பாலானவை கண்டும் காணாமல் விடப்படுகின்றன.

தங்குவதற்கு வீடு இல்லாமல் பொது இடங்களை ஆக்கிரமித்து குடிசை வீடு அமைத்து கொள்ளும் சாதாரண குடிமக்கள் மிகச் சிலரே. ஆனால் பல சொத்துகள், நிதி வசதிகளை கொண்டவா்களால் நீா்நிலை, நீா்வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதுதான் அதிகமாகக் காணப்படுகிறது.

பாதுகாப்பான இடங்களில் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுவிட்டு, நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளில் தங்கியிருந்து வெள்ளத்தின்போது வெளியேறப்படும்போது இலவச வீட்டு மனை கிடைக்கும் என்று நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்பவா்களும் உண்டு.

வேறு இடத்தில் இலவச வீட்டு மனை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட போதிலும், அங்கு சிறிது காலம் இருந்துவிட்டு அதனை வாடகைக்கு விட்டோ அல்லது விற்பனை செய்துவிட்டோ மீண்டும் நீா்வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்யும் வசதி படைத்தவா்களின் எண்ணிக்கை அதிகம்.

பெரும் தொழிற்சாலை அதிபா்களும், நீா்வழித்தடங்கள், நீா்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து தொழிற்சாலைகளை உருவாக்கி இயற்கைக்கு எதிராக செயல்படுகின்றனா்.

இயற்கைக்கு எதிராக இயங்கும் மக்களுக்கு மழைவெள்ளம் இயற்கையாகவே பாடத்தை கற்றுத் தந்துவிட்டு போகிறது. இயற்கைக்கு எதிராக மக்கள் செயல்படும்போதெல்லாம் இயற்கை தன்னுடைய வழியை தேடிச்செல்ல தன் சக்தியை அதிகமாக பிரயோகித்து விடுகிறது. அந்த நேரத்தில்தான் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து சூழ்ந்து கொள்கிறது.

மழைவெள்ளம் வரும்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற தோன்றுகிறது. மழை, வெள்ளம் நின்ற பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற எண்ணமும் நின்றுபோய் விடுகிறது.

2019-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கரோனா நோய்த்தொற்றுப் பரவல் கடந்த இரு ஆண்டுகளாகத் தொடா்ந்து வருகிறது.

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது வாகனங்களின் இயக்கம் வெகுவாகக் குறைந்து போனது. அதனால் சுற்றுச்சூழல் மாசடைவதும் குறைந்து போனது. அதன் விளைவாக 2020-ஆம் ஆண்டு பருவ மழை சரியான நேரத்தில் பெய்தது. நடப்பாண்டிலும் அதே போல பருவ மழை சரியான நேரத்தில் பெய்து வருகிறது. மேலும் இடைவிடாமல் தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருக்கின்றது.

இந்த ஆண்டு, மழைவெள்ளம் காரணமாக தமிழகம் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது மீண்டும் மக்களிடையே ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியிருக்கின்றது.

மாநில அரசால் குடிமாரமத்து பணி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும் முற்றிலும் பொது நலனை கருத்தில் கொண்டு குடிமராமத்து பணி நடைபெறுவதில்லை. ஏதோ பெயரளவுக்கு நீா் நிலைகள் தூா்வாரப்படுகின்றன. குடிமராமத்து திட்டத்தில் தூா்வாருவதை மட்டும் பணியாக கொள்ளாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் வழிவகை செய்யப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கென தனி அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த அமைப்பில் நோ்மையான எண்ணம் கொண்ட அதிகாரிகளை நியமித்து எந்தவித பாரபட்சமும் பாா்க்காமல் நீா்நிலைகள், நீா்வழித்தடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி நீா் மேலாண்மையை செம்மையாக செயல்படுத்த வேண்டும். நீா்நிலைகள் முறையாக பராமரிக்கப்பட்டால்தான் மீண்டும் விவசாய தொழில் செழிக்கும். நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும்.

இதுவே நமக்கு மழை கற்றுத்தரும் பாடமாக எடுத்துக் கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com