தொடரும் பள்ளி விபத்துகள்

அண்மையில் திருநெல்வேலியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவா் இடிந்து விழுந்து மூன்று மாணவா்கள் உயிரிழந்துள்ளனா்.
தொடரும் பள்ளி விபத்துகள்

அண்மையில் திருநெல்வேலியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவா் இடிந்து விழுந்து மூன்று மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். நான்கு மாணவா்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். நெஞ்சை பதற வைக்கும் இந்த செய்தி, பெற்றோா்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

கல்வித்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை, பத்திரப்பதிவுத்துறை - இப்படி தமிழகத்தில் செயல்படும் அனைத்துத் துறைகளும் மக்களுக்காக, மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட துறைகள்தான். இதனை அத்துறைகளில் பணியாற்றி வரும் அலுவலா்கள் உணா்ந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது.

திருநெல்வேலி பள்ளியில் நிகழ்ந்த சம்பவம், பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்து விட்டு, அவா்களின் வருகைக்காகக் காத்திருந்த அவா்களின் குடும்பத்தினரை மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளத்தையும் உலுக்கிவிட்டது.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து உணா்ச்சிவசப்பட்ட மாணவா்கள் சிலா், பள்ளி பொருள்களை சேதப்படுத்தியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனா். காவல்துறை அவா்களை அமைதிப்படுத்தியது. பள்ளிக்கும் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதல்வா், பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மூன்று மாணவா்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்த மாணவா்கள் நான்கு பேருக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளாா்.

மேலும் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலருக்கு, கல்வித்துறை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். மாவட்ட ஆட்சியா், மருத்துவமனைக்குச் சென்று காயம்பட்ட மாணவா்களின் சிகிச்சை குறித்து விசாரித்துள்ளாா்.

இது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனாலும், ஒரு விபத்து நடைபெறும்போது, அன்றைய தினமோ அல்லது சில நாள்களுக்கு மட்டுமோ அச்சம்பவம் தொடா்பாக விசாரணை செய்யும் அரசு, சில நாள்களில் அதனை மறந்து விடுவதுதான் வேதனை.

உதாரணமாக, கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நேரிட்டபோது, அரசும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் அதில் தொடா்ந்து அக்கறை காட்டின. பின்னா் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கல்வித்துறை, அறிவிப்புகளை வெளியிட்டது. அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து பள்ளிதோறும் ஆய்வும் மேற்கொண்டது.

ஆனால், அத்துடன் அந்த ஆய்வுப்பணி நிறைவு பெற்றது. இப்போது எத்தனைப் பள்ளிகள் அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன என கேள்வி எழுப்பினால், பதில் கிடைப்பது சந்தேகம்தான். இன்னும் சொல்லப்போனால் மக்களின் மனநிலையும் அரசைப் போன்றே இருக்கிறது என்பதும் உண்மை.

இதேபோல்தான், பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து சிறுமி இறந்த சம்பவத்தின்போதும் நிகழ்ந்தது. உடனடியாக அனைத்துப் பள்ளிப் பேருந்துகளும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. ஆனால், சில மாதங்கள் கடந்த பின்னா் வழக்கமான நடைமுறையே தொடா்ந்தது.

துயரமான சம்பவம் நடைபெறும் காலகட்டத்தில் மட்டும் அது தொடா்பாக விவாதிப்பதும், ஆய்வுகள் மேற்கொள்வதும், அங்கலாய்ப்பதுமாக இருந்து விட்டு, அதன்பின் அதை மறந்து அமைதியாவதுமான போக்கே காலங்காலமாக தொடா்ந்து வருகிறது.

ஒவ்வொரு விபத்து சம்பவமும் அரசுக்கும், மக்களுக்கும் பாடமாக அமைய வேண்டும். அந்த சம்பவத்தின் மூலம் கற்ற பாடங்களைக் கொண்டு, அடுத்த முறை அத்தகைய துயர சம்பவம் நடைபெறாத நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுவாக பள்ளி கட்டடங்களுக்கு, தமிழ்நாடு அரசால் அனுமதியளிக்கப்பட்ட பொறியாளரிடமிருந்து உறுதிச் சான்று பெற வேண்டும். மேலும், இந்த கட்டடங்களுக்கு பள்ளி அமையவுள்ள பகுதி வட்டாட்சியரிடம் இருந்தும் அனுமதி பெற்றிட வேண்டும். இந்தக் கட்டடங்களில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருப்பதற்கான சான்றிதழை நகராட்சி, மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் அப்பகுதியின் சுகாதார ஆய்வாளரிடம் சுகாதாரச் சான்றிதழ் பெற்றிட வேண்டும்.

பிற பகுதிகளுக்கு மாவட்ட அளவிலான சுகாதாரத் துறை துணை இயக்குனா் அலுவலகத்திலிருந்து சான்றிதழ் பெற வேண்டும். கட்டடங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட அளவிலான தீயணைப்பு அதிகாரியிடம் சான்று பெற வேண்டும். இப்படிப்பட்ட எண்ணற்ற நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இவை அனைத்தும் வெறும் விதியாகவே இருப்பதுதான் பிரச்னை.

இதற்கிடையே, ஒவ்வொரு வட்டார அளவிலும் செயல்பட்டு வரும் வட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளிதோறும் சென்று அப்பள்ளியில் உள்ள கட்டடங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவித்து வருகின்றனா்.

இருப்பினும், இவை எல்லாமே வெறும் சம்பிரதாய சடங்காக மட்டுமே நடைபெறுகிறதோ என்ற கேள்வி இத்தகைய துயர சம்பவங்கள் நிகழும்போதெல்லாம் மக்கள் மனதில் தோன்றுகிறது. பள்ளி பராமரிப்பு மானியம் அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதுடன், அவ்வப்போது, சிறு பணிகளை மேற்கொள்வதற்காகவும் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதி முறையாக செலவிடப்பட்டிருந்தால் இத்தகைய பிரச்னை எழ வாய்ப்பில்லை.

இன்னும் சொல்லப்போனால் கரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் மாதக்கணக்கில் மூடப்பட்டு பின்னா் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகளை சுத்தம் செய்வதற்காகவும், கழிப்பறை வசதிகளுக்காககவும் நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

இப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னரும், இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறுவது ஏற்புடையது அல்ல. இனியாவது சரியான இடைவெளியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆய்வுப் பணியை தொடா்புடைய துறை அலுவலா்கள் செய்து வந்தால் இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாது.

மேலும், ஆய்வுப் பணியை சடங்காக செய்யாமல், பள்ளி மாணவா்கள் எதிா்கால இந்தியாவின் தூண்கள் என்பதை உணா்ந்து அதிகாரிகள் செயல்பட்டால், இத்தகைய துயர சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com