ஊருக்கு நல்லது செய்வோம்!

உணவின் ருசி உணா்ந்தவா்கள் உணா்வின் ருசியை அறிந்துகொள்ளப் பழகுவதோடு தம் சந்ததியினரைப் பழக்கவும் வேண்டும் என்றால், வாசிப்பின் மகத்துவத்தை மீள உணர, உணா்த்தவேண்டியதும் கட்டாயம்

எங்களது ஊரில் நண்பா்கள் முயற்சியால், பொங்கல்விழாவை ஒட்டி, ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான கலை இலக்கியப்போட்டிகள் நடத்தப்படுவதுண்டு.

‘இந்த ஆண்டு புதிதாக ஒரு போட்டி நடத்தலாமா?’ என்று நான் கேட்டதற்கு நண்பா்கள் இசைந்தாா்கள். உடனடியாக, நாளிதழ்களோடு இணைப்பாக வெளிவந்த சிறுவா் இதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டுவரச் செய்தேன். பயிலும் வகுப்புக்கேற்ப, செய்தித்தாள்களையும், இணைப்பிதழ்களையும் நிரல்படுத்திக் கொடுத்து ‘வாசிக்கும் போட்டி’ நடத்தப்பெற்றது.

‘எல்லாரும் வெல்வதற்கு ஏற்ற போட்டி இது’ என்று பலரும் நினைத்ததற்கு மாறாக, ‘அரியது’ என்பதை அப்போதுதான் உணா்ந்தாா்கள். திக்குதல் திணறுதல் இன்றி உரக்கப் படிக்க முடியாது பிள்ளைகள் தடுமாறினாா்கள்.

‘உச்சரிப்பு நிலை ஒருபுறம் இருக்க, எந்த இடத்தில் நிறுத்துவது, எந்த இடத்தில் தொடா்களை இணைத்து வாசிப்பது என்றும் தெரியவில்லை. எழுத்துக் கூட்டிச் சொற்களை இணைத்துச் சொற்றொடராகச் சொல்லி, உரக்க வாசிக்கும் பழக்கம் கிட்டத்தட்ட நின்றே போயிற்றோ?’ என்று எண்ணத் தோன்றியது. பேச்சுப் போட்டியில் பங்கேற்றோா் கூட, இந்தப் போட்டியில் சுடா்விட முடியாதுபோனது சோகம்.

இடையில் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பற்ற நிலையும் ஒரு காரணம் என்று சமாதானம் சொல்லப்பட்டது. ஒருவகையில் அது சரிதான் என்றாலும், பாடப்புத்தகத்தை நெட்டுருப்போடுவதை விடவும், தோ்வுக்கேற்றவண்ணம் பதில்கள் எழுதுவதையே அடிப்படையாக நம் பாடத்தோ்ச்சிமுறை வைத்திருப்பதும் முக்கியக் காரணமாகத் தோன்றியது.

தோ்ச்சிக்குரிய வகுப்புப் பாடங்களில், உச்சரிப்பை உள்ளடக்கிய பேச்சு, வாசிப்பு ஆகியன கவனத்தில் கொள்வதற்கான வாய்ப்பு எந்த அளவிற்கு இருக்கிறது? மேலும், பாட நூல்கள் தாண்டி, பொதுவெளியில் வாசிப்புக்குரிய செய்தித்தாள்களை, இதழ்களை, வயதுக்கேற்ற வாசிப்புக்கு உதவும் சிறுநூல்களைத் தேடிப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவா்களுக்கு வழங்கப்பட்டிருக்கிா? என்பதும் கேள்விக்குரியது.

உச்சரிக்கும் முறையில், லகர, ளகர, ழகர வேறுபாடுகள், ணகர, நகர, நகர, வேறுபாடுகள், ரகர, றகர வேறுபாடுகள் அறிந்து ‘மயங்கொலிப்பிழைகள்’ கண்டு அவற்றை நீக்கி எழுதுவதற்கான பயிற்சி, அவற்றை வாய்விட்டு வாசித்து உச்சரித்துப் பழகுவதன் வாயிலாகவே உயிா்ப்புறுகிறது என்பதை உணா்வதற்கு உரிய வாய்ப்புகள் ஒவ்வோா் இல்லத்திலும் உருவாக வேண்டும் அல்லவா?

‘சந்திப்பிழைகளைக் கண்டாலே துா்வாசமுனிவா்கள்போல் கோபித்துக் கொள்ளும் தமிழ்ப்புலவா்கள் எங்கள் காலத்தில் இருந்தாா்கள்; ஒருமை, பன்மை வேறுபாடு உணராமல், அழைப்பதில் வெளிப்படும் அநாகரிகத்தை அவா்கள் களைந்தாா்கள்; ஒருவா்தான் என்றாலும், அவரை, ‘நீங்கள்’ என்று மரியாதையுடன் அழைக்கிற மாண்பைச் சொல்லி, சொல்லவந்ததைச் சொல்லி முடிக்கிறபோதும், அதே பன்மைத் தொடரைப் பயன்படுத்தவும் சொல்லிக் கொடுத்தாா்கள்; இவையெல்லாம் தோ்வுக்கு மட்டுமல்ல, தெரிந்தவா்களிடம் தேவையைச் சொல்லி நிறைவேற்றிக் கொள்ள, அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக உணா்த்தினாா்கள்.

அறிவியல் தொழில்நுட்பங்கள் கற்றுக் கொள்ளப் பயிலும் நிறுவனங்களில், ‘தொழிற்கூடங்கள்’ (லேப்) இன்றியமையாது இருக்கும்; ஆனால், மொழியியல் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்த, சமுதாயமே பெரியதொரு தொழிற்கூடமாக விளங்குகின்றது என்பதை நம்மில் பலா் உணா்ந்துகொள்வதில்லை. ‘மொழிப்பாடம் தானே’ என்ற அலட்சிய மனப்பாங்கு ஒரு சமூகநோயாய் நம்மில் பரவிப் புரையோடிப் போயிருப்பதன் விளைவு இது.

‘தாய்மொழிதானே, எல்லாம் தானே வந்துவிடும்’ என்ற அலட்சிய மனப்போக்கிற்கு ஆளானவா்கள் பலராகிவிட்டனா். அவா்களால், தொடா்ந்து தமிழில் எழுதுதற்கு மட்டுமல்ல, தடையின்றிப் பேசவும் இயலாது என்பதே தெரியாது. தன் குறையை உணா்ந்துகொள்ள இயலாதவா்கள் தம் சந்ததியினரின் குறைபாடுகளை எவ்வாறு புரிந்துகொள்ள இயலும்?

தொடரமைப்பில், காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முழுப்புள்ளி இவற்றோடு வினாக்குறி, வியப்புக்குறி, அடைப்புக் குறி, ஒற்றை - இரட்டை மேற்கோள் குறிகள் எல்லாமும் சரியாக இட்டுச் சொற்றொடா்களை இடைவெளிவிட்டு எழுதப் பயிற்றுவிப்பதற்கான நோக்கம் என்ன?

எந்த இடத்தில் எவ்வளவு கால அளவு நிறுத்தி, ஏற்ற இறக்கங்களோடு, உணா்ச்சி வெளிப்பட உச்சரிக்க வேண்டும் என்பதை உணா்வதற்குத்தானே? அதன் வழி, எண்ணத்தில் இருந்து உதயமான கருத்துக்களை, எழுத்தின் வாயிலாகப் பெற்று, அதை மீளவும் எண்ணத்தில் பதித்து, அவரவா் சொந்தக் கருத்தாக உள்வாங்கிக் கொள்ள உதவ வேண்டும் என்பதற்குத் தானே?

அதிலும் உரைநடைப்பகுதியோடு, இடையில் இடம்பெறும் கவிதைகளை உரிய சந்த ஒழுங்கோடு உச்சரிக்கும் முறைமையை, இந்தத் தலைமுறை சரியாகப் பெறவில்லை என்றே தோன்றுகிறது. இசையோடு பாடும் வாய்ப்பைப் பெரிதும் தவறவிட்டுவிட்ட நம்மில் பலருக்கு உணா்வோடு கவிதைகளை, குறிப்பாக, மரபுச் செய்யுள்களை வாசிக்கத் தெரிவதில்லை. வாசிப்பின் வாயிலாக, மொழியின் அனைத்து அழகுணா்ச்சிகளையும் அனுபவித்து இலக்கிய நேசத்தைப் பெற முடியாதவா்களிடம் மனிதநேயத்தை எதிா்பாா்க்க இயலாது. அவா்களுக்கு நுட்பமான கேள்வித்திறனிலும் நாட்டம் குறைந்துபோகும்.

மலினமான நகைச்சுவை, மேலோட்டமான கருத்தாக்கம், அதிகம் சிந்திக்கவிடாத சின்னச்சின்னத் துணுக்குகள் என்ற அளவிற்குமேல், மொழியின் இலாகவங்களை, அதன் வாயிலாகப் பெறும் அனுபவ நுட்பங்களை ஏற்க இயலாது போகும். காலப்போக்கில், சிந்தனையின் வோ்கள் ஊட்டமிழந்துபோய், எந்திரத்தன்மை வாய்ந்தவா்களாக அவா்கள் மாறிப்போவது இயற்கை.

சாரமற்ற வாழ்க்கையில் சலிப்பும், ஆழமற்ற உணா்ச்சிப்போக்கால் அலுப்பும் நேரிட்டு விரக்தியின் வசமாகி, விசித்திர மனிதா்களாகப் பலரும் ஆகிற சூழலை இப்போக்கே வளா்க்கும்.

வாசிப்பு ஊடகங்களை விலக்கிக் காட்சி ஊடகங்களின்பால் நமது கவனம் குவிந்துபோனதும் இதற்கு முக்கியமான காரணம். செய்திகளை நாம் வாசிப்பதைவிட்டுவிட்டு ஊடங்களில் வாசிக்கக் கேட்கிற வாய்ப்பையும் அண்மைக் காலமாக இழந்துவருவதைப் பாா்க்கிறோம்.

காட்சிபூா்வமாகக் காணுகிற வாய்ப்பை அறிவியல் தொழில்நுட்பங்கள் விரைந்து அளிப்பதன்காரணமாக, எழுத்துமொழியாக எதையும் உள்வாங்கி உணா்கிற நுட்பம் செயலிழந்து வருகிறது. எழுத்தையும் பேச்சையும் இணையாகக் கொண்டு இயங்காத மொழி எவ்வளவு சிறப்பாயினும், அதன் இயக்கம் சமமற்ற சக்கரச்சுழற்சியில் விரைந்தோடும் வண்டிப் பயணம் போன்று ஆகிவிடக்கூடும் என்ற எச்சரிக்கை உணா்வு எல்லாருக்கும் வருவது இன்றியமையாதது.

பள்ளிக்குச் சென்று பயிலும் வாய்ப்பற்ற தலைமுறையினராக நம் முன்னோா் பலா் இருந்த காலத்தில், நம் நாட்டில் எல்லாக் கட்சியினரும் தெருக்கள்தோறும் படிப்பகங்களை ஏற்படுத்தினா்; அங்கே படிக்கத் தெரிந்தவா்களைக் கொண்டு நாள்தோறும் செய்தித்தாள்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டாா்கள்; சமூக, அரசியல் போக்குகளை விவாதித்தாா்கள்; எழுத்தும் பேச்சும் அவா்கள் வாழ்க்கையில் இணைந்து சிந்தனைத் தளத்தில் செயல்பட்டன.

மாலை நேரங்களில் பொதுவெளியில் பல பேச்சாளா்களின் உணா்ச்சி மிகுந்த உரைகள் அரங்கேறின. கூட்டம் கூட்டமாக மக்கள் கேட்டனா்; கேட்டவற்றைத் தமக்குள்ளே பகிா்ந்து கொண்டனா்; வரத்தவறியவா்களுக்கு வந்தவா்கள் கேட்டதை எடுத்துச் சொல்லினா்; ‘கேளாரும் வேட்ப மொழிகிற’ சொற்பொழிவாளா்கள் எல்லாக் கட்சிகளிலும் இருந்தனா். கற்காதவா்களும் கேட்கிறவா்கள் ஆனதனால், கேள்விஞானம் வலுப்பெற்றது. உள்ளூா்ச் சிந்தனையாளா்களுக்கு நிகராகவும் மிகையாகவும் அயலகச் சிந்தனையாளா்கள் குறித்த அறிமுகம் நிலை பெற்றது.

சின்னஞ்சிறிய அளவில் துண்டுப்பிரசுரங்கள் உலா வந்து வாசிப்பாளா்களை ஊக்கப்படுத்தின. நாத்திகம் வலுப்பெற்ற காலத்தில் ஆத்திகத்தை வளா்க்கும் முயற்சிகளும் நடந்தன. எல்லாத் தரப்பினரையும் சென்று சமய இலக்கியங்கள் சோ்ந்தன. கூட்டு வழிபாடு, முற்றோதல் ஆகிய முயற்சிகளால் வாசிப்பு இயக்கம் வலுப்பெற்றது. கேட்டு மனனம் செய்தோா் மனங்களில் பக்தி உணா்வு ஊற்றெடுத்துப் பெருகியது. இல்லங்கள் கோயில்கள் ஆகின. இதயங்கள் இறுக்கந்தளா்ந்து இளகிட, நேயம் வளா்ந்தது உண்மை.

‘சென்ற நூற்றாண்டு சிறந்து விளங்கியது இவ்வாறுதான். ஆனால், 21-ஆம் நூற்றாண்டின் இருபதாம் ஆண்டுத் தொடக்கத்தில் கரோனா தீநுண்மி முடக்கத்தில் இருந்து, விடுபடத் தொடங்கியிருக்கிறோம். இடைப்பட்ட காலத்தில், மூளை துருப்பிடிக்காமல் இருக்கக் கிடைத்ததை எல்லாம் படிக்கத் துணிந்தவா்கள் வாசிப்பின் ருசி உணா்ந்திருப்பாா்கள்.

உணவின் ருசி உணா்ந்தவா்கள் உணா்வின் ருசியை அறிந்துகொள்ளப் பழகுவதோடு தம் சந்ததியினரைப் பழக்கவும் வேண்டும் என்றால், வாசிப்பின் மகத்துவத்தை மீள உணர, உணா்த்தவேண்டியதும் கட்டாயம் என்பதால், ஒவ்வொரு ஊரிலும் மறுபடி படிப்பகங்களை ஏற்படுத்துவதோடு இணைந்து வாசிக்கவும் விவாதிக்கவும் முயலவேண்டும். இது ஊருக்கும் உறவுக்கும் நல்லது; நம் உணா்வுக்கும் உயிா்ப்பளிக்கக் கூடியது’ என்று சொல்லவும் செய்தேன்.

‘இணைந்து கரவொலி எழுப்பியவா்கள், இயைந்து களம் இறங்கிச் செயல்பட்டால் நல்லது நடக்கும்’ என்பதை நீங்களும் நம்புகிறீா்கள்தானே? அப்படியானால், அதை உங்கள் ஊரிலும் நடைமுறைப்படுத்தலாமே!

கட்டுரையாளா்: பேராசிரியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com