காலாவதியும் கலப்படமும்

சமீபத்திய ஊடகச் செய்தி ஒன்று மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தந்தது. உறவினரின் வீட்டுக்கு இனிப்பு வாங்கிச் சென்றுள்ளார் ஒருவர். குழந்தைகள் இருக்கின்ற வீட்டுக்கு வெறும் கையுடன் போவது நம் பண்பாடு அல்ல. விருந்தினர் வாங்கி வந்திருந்த இனிப்பைத் தன் இரண்டு குழந்தைகளுக்கும் சாப்பிடக் கொடுத்துள்ளார் அந்த அம்மா. இனிப்பைச் சாப்பிட்ட உடனே சுருண்டு விழுந்திருக்கின்றன குழந்தைகள். சிகிச்சை பலனின்றி இறந்து போய் விட்டன. சற்று முன்னர் வரை துள்ளித்திரிந்த கன்றுக்குட்டிகள் காலனிடம் போய்விட்டன.
 அந்தத் தாய்க்கு எப்படி இருந்திருக்கும்? அதைவிட அந்த இனிப்பை வாங்கி வந்த உறவினரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? எல்லா விரல்களும் "அவர்தான் குற்றவாளி' என அவரைக் கை காட்டியிருக்கும் "உன்னை யார் இனிப்பு வாங்கி வரச் சொன்னது? என் குடி கெடுத்துவிட்டாயே?' என்று பெற்றவர்கள் திட்டித் தீர்த்திருக்கலாம். "ஐயோ, என் கையாலேயே என் பிள்ளைகளைச் சாகடித்து விட்டேனே' என்று அந்தத் தாயின் உள்ளம் துக்கத்திலிருக்கும். ஏதோ நோய் நொடியில் விழுந்து, சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் குழந்தை இறந்து விட்டாலே மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. துருதுருவென்று, நல்ல ஆரோக்கியத்துடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் உயிரைக் கவர்ந்து செல்ல இனிப்பு வடிவத்தில் எமன் வந்துள்ளான்.
 இனிப்பு சாப்பிட்டு உயிர் போயிருக்கிறது என்றால் அந்த இனிப்பு காலாவதி ஆனதாக இருந்திருக்கும். கெட்டுப் போய் நஞ்சாக மாறி இருக்கும். அது கெட்டுப் போனதென்று கடைக்காரருக்குத் தெரிந்துதான் விற்பனை செய்துள்ளார். அவர் தெரிந்தே செய்த இக்குற்றம் மன்னிக்க முடியாத ஒன்று. இந்தக் குழந்தைகளைப் போல வேறு இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்களோ?
 உணவுப் பொருள் பாக்கெட்டுகளின் மீது காலாவதி ஆகும் தேதியை குறிப்பிட ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ய வேண்டும் என்பது விதி. சில கடைகளில் அந்தப் பொருள்களின் காலாவதி தேதி முடிந்த பின்னர் பழைய ஸ்டிக்கரை எடுத்துவிட்டுப் புதிய ஸ்டிக்கரை ஒட்டி விற்பனை செய்வதை அறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அக்கடைகளில் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
 அனைத்து உணவுப் பொருள்களுக்குமே காலாவதி தேதி என்று ஒன்று உண்டு. பெரிய பெரிய அங்காடிகளுக்குச் சென்று சாமான்கள் வாங்கும் போது, அழகாக பளபளவென்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகில் மயங்கி, நமக்குத் தேவையே இல்லாத பலவற்றையும் எடுத்து கூடைக்குள் போட்டுக் கொள்கிறோம். பொருள்களை எடுத்துப்போகும்போது பெரும்பாலானோர் காலாவதி ஆகும் தேதியைப் பார்ப்பது கிடையாது. பலருக்கும் அந்தப் பழக்கமே இல்லை. மளிகைக் கடைகளில் மூட்டைகளில் இருந்து எடுத்து பொட்டலமாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட சாமான்களுக்குப் பழகிய பெரியவர்கள், இப்படி பாக்கெட்டுகளின் மீது ஒட்டப்பட்டுள்ள விலை மற்றும் தேதியைப் பார்க்கப் பழகவில்லை. மேலும் அந்தப் பொடி எழுத்துகளைப் படிக்க முடிவதில்லை. அதற்கான நேரமோ, பொறுமையோ இல்லை. ஆகவே காலாவதி தேதி முடிந்த பொருள்களைக் கழித்துவிட வேண்டியது கடைக்காரர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.
 உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதும் அதிகமாகி விட்டது. ஏற்றுமதி செய்யும் பொருள்களில் தரம் முக்கியம் என்பதால் அவற்றில் கலப்படம் செய்வது இல்லை. இங்கேதான் எதுவும் தப்பில்லை. தண்டனையும் பெரிதில்லை. எனவே எல்லாவற்றிலும் கலப்படம் செய்கிறார்கள். மிளகில் பப்பாளி விதைகள் சேர்க்கப்படுகிறது. பாலிஷ் செய்யப்பட்ட பருப்பு வகைகளில் பெரும்பாலும் மெட்டானில் யெல்லோ கலர் சேர்க்கப்படுகிறது. டீத்தூளில் மரத்தூள், பெருங்காயத்தூளுடன் பிசின், மிளகாய்த் தூளில் செங்கல் தூள், மசாலா தூளில் மரத்தூள்... பட்டியல் நீளும் தானியங்களின் தரத்தை உயர்த்திக் காட்டுவதற்காக உணவு தானியங்களில் செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.
 கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களைத் தின்றால் மோசமான பக்க விளைவுகள் ஏற்படும். கார்பைடால் புற்றுநோய் வரும். எத்தலினால் வயிற்று வலி வரும் என்கிறார்கள். பழங்களைப் பழுக்க வைப்பதற்காகத் தெளிக்கப்படும் ஆர்செனிக், பாஸ்பரஸ், கால்சியம், கார்பைடு போன்றவை பழங்களுக்குள்ளும் எஞ்சியிருக்கும். அதை சாப்பிட்டால் மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கடும் தலைவலி உண்டாகும். ஒவ்வாமை, வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும். செயற்கைப் பால் எப்படித் தயாரிக்கிறார்கள் தெரியுமா? குளுக்கோஸ், யூரியா, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பால் பெளடர் மற்றும் தண்ணீரைக் கலந்து தயாரிக்கின்றனர்.
 இந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் 1954-ஆம் ஆண்டு அமலாக்கப்பட்டது. இதன் பிரிவு 12-இன்படி கலப்படம் உள்ளது என நுகர்வோர் சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பலாம். கலப்படம் நிரூபிக்கப்பட்டால் அபராதமும் சிறைத் தண்டனையும் உண்டு. அவரவர்க்கு ஆயிரம் பிரச்னைகள் இதில் மாதிரி அனுப்பி அலைய யாருக்கு நேரம் இருக்கிறது? கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதைக்கூட தெரிந்துகொள்ள முடியாத அறியாமை நிறைந்தவர்கள் நாம். இதில் எங்கே புகார் கொடுக்க?
 இன்றைய அவசர யுகத்தில் உணவைத் தருவித்து சாப்பிடுவது அதிகமாகி விட்டது. அந்த உணவை எந்த லட்சணத்தில் சமைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. நாவின் ருசிக்கு அடிமையாகிப் போய் விட்ட நாம் அதன் பின்புலம் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது.
 காட்சி கட்செவி அஞ்சலில் சுற்றிச் சுற்றி வந்து நமக்குள் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. அது என்னவென்றால் பானி பூரி செய்பவர்கள் காலில் அந்த மாவைப் பிசைகிறார்கள். அழுக்குத் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். அதற்குப் பின் எங்கே பானிபூரியை மூட்டையில் பார்த்தாலும் அந்த அழுக்குக் கால்களே மனதில் வந்து போகின்றன.
 சில காய்கறிக் கடைகளில் சொத்தை, வாடியது போன்ற காய்களைத் தனியாகக் கூறுகட்டி வைத்துள்ளார்கள். அக்காய்களை வசதி இல்லாதவர்களும், சிறிய சாப்பாட்டுக் கடைக்காரர்களும் வாங்கிச் செல்வார்கள் என்பதை அறிந்தபோது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அழுகிய காய்களைத் தூரப் போடாமல் காசு பார்க்கும் புத்தியை என்ன செய்ய?
 கொலை செய்பவர்கள் கூட உணர்ச்சி வயப்பட்டோ, கோபத்திலோ பழிவாங்கும் எண்ணத்தாலோ தான் கொலை செய்கிறார்கள். ஒரு சில கொலைகள் மட்டுமே திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. ஆனால் காலாவதியான பண்டங்களை விற்பவர்களும், கலப்படம் செய்பவர்களும், சுகாதாரமற்ற முறையில் உணவைத் தயாரிப்பவர்களும் தெரிந்தேதான் இக்குற்றங்களைச் செய்கிறார்கள்.
 இனிப்பு சாப்பிட்டதால் குழந்தைகள் இறந்துபோன நிகழ்வில், அந்த இனிப்பை வாங்கி வந்தவரால் காலம் முழுவதும் நிம்மதியாக உறங்க முடியாது. கண்களை மூடினால் அந்தப் பிஞ்சுகளின் முகமும், உயிரற்ற அந்த உடல்களும், கதறி அழுதுத் துடித்த அந்தத் தாயின் வேதனையும் வந்துகொண்டே இருக்கும். அவர் மனம் அறிந்து எந்தத் தவறும் செய்யவில்லை.
 ஆனாலும் அம்மரணத்துக்குத் தாம்தான் காரணம் என்று மன உளைச்சலில் காலம் முழுவதும் தவித்துக் கொண்டே இருப்பார். இனி எவர் வீட்டுக்குப் போனாலும் இனிப்பு வாங்கிப் போக நமக்குத் தயக்கம் ஏற்படும். குற்றவாளி கடைக்காரர் என்றாலுமே அவருக்கு மனம் சமாதானம் ஆகாது.
 உணவுத் துறையில் இருப்பவர்கள்தான் தயாரிக்கும் உணவு ஒவ்வொன்றும் தானும், தன் குடும்பமும் சாப்பிடப் போவதாக எண்ணி தயாரித்தால் அது சுத்தமாக இருக்கும், சுகாதாரமாக இருக்கும். விற்பனை செய்வோரும் இதே எண்ணத்துடன் நடந்து கொண்டால் நல்லது. "யாரோதான் சாப்பிடப் போகிறார்கள். நமக்கென்ன?' என்று நினைப்பதால் விபரீதங்கள் நடக்கின்றன. முன்பெல்லாம் "ஐயோ புற்றுநோய்' என்று நடுங்கினோம். இப்போது புற்றுநோய் என்பது சாதாரணமாகி விட்டது. அதற்கு கலப்பட உணவுப் பொருள்களும் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.
 கலப்படம் செய்பவர்கள் மனம் திருந்த மாட்டார்கள். குற்ற உணர்ச்சி இல்லாத, மனசாட்சி இல்லாத, மனிதம் மரித்துப்போன பிறவிகள், ஆகவே நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குளிர்பானம், பிஸ்கட்டுகள். இன்னபிற உணவுப் பண்டங்களை வாங்கும்போது காலாவதி ஆகும் தேதியைப் பார்த்து கவனமுடன் வாங்க வேண்டும்.
 நாம் தூரப் போட வேண்டிய தின்பண்டங்களை, காலாவதி முடிந்த பண்டங்களை ஏழைக் குழந்தைகளுக்கும், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் கொடுப்பதும் தவறு. அவர்களுக்கு ஊசிப் போன பண்டங்களைக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? அப்படிப் பார்த்தால் இச்சமுதாயத்தில் நாம் அனைவரும் குற்றவாளிகளே.
 அகிலத்தையே வெல்ல நினைத்த அலெக்சாண்டரால் கூட போகும் போது இங்கிருந்து ஒரு மண் துகளைக்கூட எடுத்துச் செல்ல முடியவில்லை. இருப்பதில் திருப்தி அடையாது மேலும் மேலும் சொத்துக்களை சேர்க்க அதர்ம வழிகளைக் கையாள்வதை நிறுத்த வேண்டும்.
 நான் படித்த ஒரு சம்பவம்: அபு ஹனிக்ஷிபா நெசவுத் தொழில் செய்து வந்த ஏழை. ஒரு முறை அவரும் இரண்டு நண்பர்களும் பாலைவனத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஒருவன் பேரீச்சம்பழம் விற்றுக் கொண்டிருந்தான். காசுக்குப் பத்து பழம் என்றான். ஒரு காசுக்குப் பழம் பொட்டலம் கட்டி வாங்கிக் கொண்டு நடந்தனர். நெடுதூரப் பயணத்திற்குப் பின் அந்தப் பொட்டலத்தைப் பிரித்தனர். அதில் 11 பழம் இருந்தது. ஹனிக்ஷிபா பதறிப் போனார். "ஐயோ அந்த வியாபாரிக்கு நஷ்டம் வந்து விடுமே' என்று புலம்பினார். மீண்டும் மூன்று காத தூரம் நடந்து போய் அவரிடம் ஒரு பழத்தைக் கொடுத்தார். அந்த வியாபாரியோ, "ஐயோ, அந்த ஒரு பழத்தை நானே விரும்பித் தான் கூடுதலாக உங்களிடம் கொடுத்தேன். பரவாயில்லை எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்.
 ஹனிக்ஷிபர் சம்மதிக்கவில்லை. "வியாபாரம் என்பதிலே விற்பவர், வாங்குபவர் என இருவரும் ஓர் உடன்பாட்டுக்கு வருகின்றனர். அதன்படிதான் இருவரும் நடக்க வேண்டும். அதிலிருந்து இருவரும் தவறக் கூடாது' என்று சொல்லி அந்த ஒரு பழத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு நடந்தார்.
 "வியாபாரத்தில் உண்மையும், நேர்மையும் வேண்டும்" அதர்ம வழியில் சேர்க்கும் சொத்து நம் சந்ததியினரை வாழ வைக்காது. 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' - எனவே உணவில் கலப்படம் செய்வது பெரிய பாவச் செயல்.
 மனம் திருந்துவோம். எல்லாக் கடைகளிலும் சோதனை மேற்கொள்வது சாத்தியமில்லை.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com