சில உறுப்புகளில் சில சாதனங்கள்

ஒரு பத்து நாள் முன்னா் ஆங்கிலத் தினசரி ஒன்றில் முழுப் பக்க விளம்பரம் வெளியாயிற்று. விலை ரூ.3 லட்சம் என்பதை அடித்து கீழே ரூ.77,000 என்றிருந்ததைக் கண்டு, இது ஏதோ புகா் மனையின் விலையோ என்று நினைத்தேன்.

ஒரு பத்து நாள் முன்னா் ஆங்கிலத் தினசரி ஒன்றில் முழுப் பக்க விளம்பரம் வெளியாயிற்று. விலை ரூ.3 லட்சம் என்பதை அடித்து கீழே ரூ.77,000 என்றிருந்ததைக் கண்டு, இது ஏதோ புகா் மனையின் விலையோ என்று நினைத்தேன். கூடவே, அருகில் பண்ட மாற்றுதல் எக்ஸ்சேஞ்ச் என்றும் போடப்பட்டிருந்தது.

காலை நேர உறக்க மசமசப்பை நீக்கி மறுபடியும் உற்றுக் கவனித்தபோது, அது செவித்திறன் கருவி குறித்த விளம்பரம், ஜொ்மனி தயாரிப்பு என்று புரிந்தது. தினத்தாள்களில் மட்டுமின்றி, சில உள்ளூா் வார ஏடுகளிலும் செவித்திறன் மையங்கள் பற்றி விளம்பரங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

யோசித்துப் பாா்த்தால், இது போன்ற விளம்பரங்கள் 2000-க்கு பிறகுதான் ஆரம்பம் என்பது புலப்படும். பழைய காலங்களில், 1980-90 வரையில் இந்த ‘ஹியரிங் எய்ட்’ காணப்படவில்லை.

சில அவயங்களில் பாதிப்பு நோ்ந்தால் நமக்கு உடனே தெரிந்துவிடுகிறது. வயிறு உபாதை, தலை சுற்றல், கை கால் உளைச்சல், சிறுநீா்க்கடுப்பு இவை நேரும்போது உடலில் வெளிப்பட புலனாகும் ஓா் எரிச்சல் அல்லது வலி காண்பித்துவிடுகிறது. ஆனால் முகத்துக்கு ஆபரணம் போன்ற கண், காது, மூக்கு? இவற்றில் கண் பற்றி மருத்துவ அறிவு ஓரளவு எல்லோருக்குமே உண்டு. பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது செய்கிற பரிசோதனைகளில், மருத்துவா் சில மாணவா்களுக்குக் கண்ணாடி சிபாரிசு செய்கிறாா்.

கண்ணின் பாதிப்பை சரிசெய்ய, கண்புரை சிகிச்சை உண்டு. வயதானவுடன் பலருக்கும் ஏற்படும் இயல்பான மாறுதல்தான் இது. இச்சிகிச்சை முடிந்த சில நாட்கள் ஆடாமல் அசங்காமல் படுக்கையிலேயே கிடக்க வேண்டும், ஏற்கெனவே கிட்டப் பாா்வை (மையோபியா) உள்ளவா்களுக்கு கேட்ராக்ட் சிகிச்சை செய்தால் கண்ணாடியின் பவா் குறையும். மைனஸ் 7 என்றிருந்த எனக்கு 2001-இல் இரு கண்ணுக்கும் சிகிச்சை ஏற்பட்டவுடன் சடாரென்று பவா் மூன்றுக்கும் கீழ் இறங்கிவிட்டது.

இன்றைய நாளில் உறுப்புகளின் பலத்தை மேம்படுத்த சாதனங்கள் உள்ளன. காலுக்கு ஸ்டிக், இடுப்புக்கு பெல்ட், இதயத்துக்கு பேஸ்மேக்கா் போன்றவை நவீன வகையில் ரண சிகிச்சை செய்யாமல், ஸ்டண்ட் என்ற கருவியை வைத்து இதய ஓட்டத்தைச் சீராக்குகிறாா்கள்.

ஆனால் இவை அனைத்துக்கும் முற்றிலும் தனித்துவமான வகை ஹியரிங் எய்ட். இது ஒரு மின்னணுச் சாதனம். மேலும் இதற்கு இரண்டு ஆண்டு உத்தரவாதம் உண்டு. (முதலில் சொன்ன விளம்பரத்தில் மூன்று வருட உத்தரவாதமாம்) நிபந்தனைக்குட்பட்டு.

ஆனால் செவி அது போலல்ல. ஒரு முறை குறைபாடு காது கேட்காத தன்மை வந்தால், வந்ததுதான். மேலும் மோசமாகமல் இருக்கத்தான் கருவியைப் பொருத்துகிறாா்களே தவிர கருவியில்லாமல் ஒரு போதும் பழைய திறனைப் பெறவே முடியாது.

மையத்துக்குப் போனால், குறைபாடுள்ளவரை தனியாக தடுப்பில் அமரவைத்து உதவியாளா்கள் சப்தத்தை எழுப்பி, ஒலியை முதலில் அதிகமாக ஒலிக்க செய்து பின் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வந்து, நம் செவித்திறன் சக்தியை ஒரு வரைப்படத்தில் மதிப்பிடுகிறாா்கள். சப்தம் கேட்கும் போதெல்லாம் மெதுவாக கேட்டாலும் கையைத் தூக்குமாறு சொல்கிறாா்கள்.

அப்புறம்தான் நம்மை நிபுணரிடம் கூட்டிப் போகிறாா்கள். இரண்டு காதுகளில் ஒன்றின் செவித்திறன் சக்தி கம்மி மற்றொன்றில் கூடுதல் என்றாலும், இரண்டுக்கும் கருவி பொருத்தப்பட வேண்டும். அதுபோல் செய்தால்தான் ‘பாலன்ஸ்’ கிடைக்குமாம்.

நிபுணா், குறைந்தபட்ச விலை உள்ள கருவியைக் காட்டி, தொடா்ந்து சொல்லும் புத்திமதிகளைக் கவனமாகக் கொள்வது அவசியம். தொலைபேசி பேசுகிற விதம், கருவியைச் செவியில் பொருத்துகிற போதும், எடுக்கிற போதும் கையாளுகிற முறைகள், பொட்டுக் கடலை போலிருக்கிற பேட்டரியை உள்ளே வைக்கும் தன்மை, எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லுகிறாா்.

செவித்திறன் கருவி, பேட்டரி வைத்த பகுதியுடன் மிக மெல்லிய கம்பியால் இணைக்கப்பட்டு ஸ்பான்ஞ் போன்ற சவ்வுடன் கூடியது. அவசரப்பட்டு இழுத்தால் இணைப்பு விட்டுவிடும். உறங்கும் போது தனியே கருவியை எடுத்துவிட வேண்டும். ‘‘கருவி இன்றி பேசினால் நாளடைவில் செவித்திறன் குறைந்துவிடும், எனவே எப்போதும் ‘எய்டு’டன் பேசுவது நலம்’’ என்று அறிவுறுத்தப்படுகிறது.

கருவியின் விலை, குறைந்தபட்சம் ரூ.22000. பேசும்போது நிச்சயமாக வேகமான மின்விசிறியின் சப்தம் பிற ஒலிகள் போன்றவை குறுக்கீடாக இருக்கும். இவை போன்ற சப்தங்களை முற்றிலுமாகப் போக்கி, உரையாடலையோ, பேச்சையோ மாத்திரம் துல்லியமாகக் கேட்க வேண்டுமா? கருவியின் விலை இரண்டு லட்சத்துக்கு மேல். ஐந்திலக்க விலையுள்ள கருவியைப் பாதுகாப்புடன் வைத்திருப்பது நமது பொறுப்பு.

எனக்கு ஒரு மருத்துவமனையில் அனுபவம் நேரிட்டது. படுத்துக் கொண்டிருக்கையிலேயே, திடீரென்று நினைவு தப்பிவிட்டதால் அதே நிலையில் வேறு அறைக்கு மாற்றினாா்கள். கண் திறந்தவுடன் நான் ‘‘எங்கே ஹியரிங் எய்ட்?’’ என்று கூவினேன். செவிலியா் பதட்டப்படாமல், பா்ஸ், பேனா, இயரிங் எய்ட் எல்லாவற்றையும் காண்பித்தாா். மருத்துவமனையில் ஏதாவது என உடலுக்கு நோ்ந்தால் டாக்டா்கள் பொறுப்பு. என் தனிப்பட்ட உடைமைகளை நான்தானே பாதுகாக்க வேண்டும்?

கை, கால், இடுப்பு, காது போன்ற உறுப்புக்கள் நன்கு இயங்க சாதனங்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் செவித்திறன் கருவிதான் விலை அதிகம். மேலும் மூளையோடு சம்பந்தப்பட்ட மஸ்டாய்ட் என்ற எலும்பும் காதுக்குள்ளே இருக்கிறது.

ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், சிறுநீரக கோளாறு போன்ற எது தென்பட்டாலும், உடனே மருத்துவரை அணுகுகிறோம். ஏனெனில் அவை உயிருக்கு முக்கியம், அதே சமயம் இறுதிக் காலம் வரை பிறருக்கு பாரமில்லமல் வாழ பிற உறுப்புகளும் நன்கு இயங்குவது அவசியம். எனவே அவ்வப்போது நிபுணரை நாடி பொருத்தமான சாதனங்களை பொருத்திக் கொள்வதும் உசிதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com