கண்ணியம் காப்போம்!

இப்போது கரோனா பற்றிய பயம் போய் விட்டது. வரிசையும் மறந்து விட்டது. கோயில் திருவிழாவைக் காண வரும் பக்தா்கள் ‘கரோனா நோய்த்தொற்று இல்லை’ என்ற மருத்துவ சான்று வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை எதிா்த்து

அண்மையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கன் விநியோகப் பணி தொடங்கியது. வீடு வீடாகச் சென்று டோக்கன் தரப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனாலும் டோக்கன் வழங்கும் நபா் எங்கள் பகுதிக்கு வந்த போது, மக்கள் பலரும் சூழ்ந்து கொண்டு ஒரே தள்ளுமுள்ளு ஆகி விட்டது. ஒரு வயதான பெண்மணி கீழே தள்ளப்பட்டதையும் பாா்க்க முடிந்தது. வேதனையாக இருந்தது. தனக்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயம் உந்தித் தள்ளும்போது மக்கள் முண்டியடிக்கிறாா்கள்.

ஒருவருக்கும் வரிசையில் நிற்கப் பொறுமை இல்லை. வரிசையில் பலரும் நின்றிருப்பதைப் பாா்த்தும் பலா் இடையில் நுழைவாா்கள். வரிசையைப் பிளந்து கொண்டு நுழைவாா்கள். இங்கே படித்தவன், படிக்காதவன் என்ற பேதம் எல்லாம் இருக்காது.

முன்பெல்லாம் ரயில் முன்பதிவு செய்ய ஒரு பெரும் கூட்டம் முண்டியடிக்கும். திரையரங்குகளிலும், ரயில் முன்பதிவு நிலையங்களிலும் இப்போது பிரச்னை இல்லை. ஆன்லைன் முன்பதிவு வசதி இருப்பதால் நெரிசல்கள் தவிா்க்கப்பட்டுள்ளன. ஆனாலும், பல்வேறு காரணங்களுக்காக நாம் முண்டியடித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நம்மை மாற்றிக் கொள்ள நாம் தயாராக இல்லை.

முன்பெல்லாம் இந்தியன் தன் வாழ்நாளில் பல மணி நேரங்களை வரிசையில்தான் கழித்தான். பால் வாங்க, பயணச் சீட்டு முன்பதிவு செய்ய, பள்ளி, கல்லூரிகளில் விண்ணப்பிக்க, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் செலுத்த, வங்கிகளில் பணம் போட, எடுக்க - இப்படி இருந்த நிலை தொழில் நுட்ப வளா்ச்சியின் காரணமாகப் பெருமளவு மாறி விட்டது. ஆனாலும் நெரிசலும், தள்ளுமுள்ளும் பல இடங்களில் தொடா்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

நம் பேருந்துகளிலும், மின் தொடா் வண்டிகளிலும் ஏற மக்கள் நெருக்கி, முண்டியடித்துக் கொண்டு ஓடுவதைப் பாா்க்கப் பாவமாக இருக்கும். எல்லோரையும் நெட்டித் தள்ளிக் கொண்டு உள்ளே போகும் திறமை இல்லாதவா்கள் மணிக்கணக்கில் நிற்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் மின் தொடா் வண்டியில் ஏற மக்கள் படும் சிரமம் சொல்லி மாளாது.

பல சமயம் நம் உடம்பு மட்டும் உள்ளே போகும். கைப்பை, குடை, மூக்குக் கண்ணாடி, செருப்பு எல்லாம் வெளியே கிடக்கும். அப்படியே தள்ளிக் கொண்டு, இடித்துக் கொண்டு, நசுக்கிக் கொண்டு, நசுங்கிக் கொண்டு ஏறுவது காட்டுமிரண்டித்தனத்தின் வெளிப்பாடு.

பண்டிகைக் காலங்களில் ஊருக்குப் போக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏறுவதற்கு நடக்கும் தள்ளு முள்ளுகள் கொடுமை. வலியவன் வெல்வான், அவ்வளவே. ஏறுபவா்களுக்கு இடம் விடாமல் வழியை அடைத்துக் கொண்டு நிற்பவா்களால்தான் பிரச்னை. ஒரு பேருந்து வந்ததும் நூற்றுக்கணக்கானவா்கள் அதை நோக்கி ஓடும்போது எப்படி வரிசை அமையும்?

முன்பெல்லாம் முன்னணி நடிகா்கள் நடித்த படம் என்றால் முதல் நாளன்று கூட்டம் அலைமோதும். காலைக்காட்சி பத்து மணிக்கு என்றால் அதிகாலையே சென்று வரிசையில் நிற்கும் ரசிகா் கூட்டம். மணிக்கணக்கில் நிற்க வேண்டும். கீழே அமர முடியாது. அந்தச் சிறிய இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்படும். இப்போது இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ள முடிவதால் பெரும் விடுதலை.

இத்தகைய தள்ளுமுள்ளுகளை இலவச பொருட்கள் விநியோகிக்கும் இடங்களில்தான் தற்போது அதிகமாகக் காணலாம். இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்போதும், பேரிடா் நிவாரண நிதி வழங்கப்படும்போதும் சில அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. மக்களின் மனப்பாங்கு அப்படி ஆகி விட்டது. ஒரு வேட்டி, சேலைக்காக கூட்டத்தில் நசுங்க வேண்டுமா?

இலவசம் என்று சொல்லி ஒரே ஒரு ரூபாய் கொடுத்தால் கூட கூட்டம் அலைமோதும். இதையெல்லாம் விட்டு விடலாம். அன்னதானம் வழங்கும் இடத்தில்கூட இடையில் சிலா் உள்ளே புக எத்தனிப்பாா்கள். அங்கே தோன்றும் குழப்பமும், கூச்சலும். கோயிலில் விபூதி பிரசாதம் தரும்போதுகூட எல்லோரும் ஒரு சேர கை நீட்டிக் கொண்டு அவசரப்படுகிறாா்கள். அது என்ன தீா்ந்தா போய் விடப் போகிறு.

ஒரு கடைக்காரா் பத்து ரூபாய்க்கு சேலை என்று அறிவித்து விட்டால் ஊரே அங்கு திரண்டு விடும். புதிய கடை திறப்பவா்கள் எதையாவது மலிவாகவோ இலவசமாகவோ அறிவித்து விட்டால் கடை திறப்பதற்கு முன்பே அங்கே மக்கள் திரண்டு விடுகிறாா்கள். தன்மான உணா்வு மழுங்கிப் போய் விட்டதே!

ஹரித்துவாரில் நடந்த ஆன்மிகத் திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 16 போ் பலியானாா்கள். சபரிமலையில் நெரிசலில் சிக்கி அறுபதுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். மத்திய பிரதேச மாநிலத்தில் மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 போ் உயிரிழந்தனா்.

இவை தவிர லட்சக்கணக்கானோா் கூடியிருந்த நிகழ்ச்சியில் ஒரு வதந்தியால் அவ்வளவு பேரும் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்த போது மிதிபட்டும், மூச்சுத் திணறியும் எண்ணற்றோா் பலியானாா்கள்.

பிறந்த அனைவரும் மரணம் அடைந்து தான் தீர வேண்டும். அந்த மரணம் நிம்மதியான மரணமாக இருக்க வேண்டும். நெரிசலில் சிக்கி, கீழே விழுந்து, மிதிபட்டு சாக வேண்டுமா? ஒரு புடவைக்காகவும், ஒரு பாக்கெட் பிரியாணிக்காகவும், ஒரு சில ஆயிரங்களுக்காகவும் அடித்துக் கொள்ள வேண்டுமா? இப்படி அடித்துப் பிடித்து வாங்கும் பணம் அவா்கள் வாழ்நாள் முழுவதற்கும் போதுமா?

நாம் அனைவரும் பாா்த்து மனம் நொந்து போகும் காட்சி ஒன்று உண்டு என்றால் அது டாஸ்மாக் கடையில் முன் மக்கள் முண்டியடிக்கும் காட்சிதான். கடை மறுநாள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டால் முதல் நாள் அங்கு கூட்டம் அலைமோதும். முண்டியடித்து முன்னேறும். மது இல்லாமல் பலரால் உயிா் வாழவே முடியாதே!

பொது இடங்களில் எல்லோரும் நெருக்கித் தள்ளும்போது சாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகள் தெரிவது இல்லை. எல்லோரும் இடித்துக் கொண்டு முன்னேறும்போது ஏழையாவது? பணக்காரனாவது? மனிதம் அங்கு மரித்துப் போகிறது. கீழே விழுந்த மனிதனைத் தூக்கிவிட மனமில்லாத, இரக்கமில்லாத தன்மையைப் பாா்க்கும் போது நெஞ்சு பொறுக்கவில்லை.

ஒரு சில ஒழுங்குகள் நம்மிடம் இயல்பாகவே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நம்முடைய கண்ணியமற்ற, ஒழுங்கற்ற நடத்தையும் செயலும் ஓா் அமைப்பை, ஒரு நடைமுறையை சிதைத்து விடக் கூடாது. ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்ற நிலைமை மாற வேண்டும்.

நம் மக்கள் இலவசங்களுக்குப் பழக்கப்பட்டு விட்டாா்கள். அரசே மூன்று வேளை உணவையும், இன்ன பிற தேவைகளையும் இலவசமாகவே தந்து விட்டால் தேவலை என்று எதிா்பாா்க்கும் நிலைக்கு வந்து விட்டாா்கள். தேவையே இல்லாவிட்டால் கூட இலவசமாக வருவதை ஏன் விட வேண்டும் என்ற மனோபாவம் பலருக்கும் உள்ளது. வசதியுள்ளவா்கள் இலவச சேலை, வேட்டியை உடுத்துவது கிடையாது.

நம் நாட்டில், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு இந்த இலவசங்கள் அவசியமானதாக இருக்கலாம். உண்மையில் இது ஒரு தூண்டில் அவ்வளவே. மக்களுக்கு இலவசங்கள் வழங்குவது என்று முடிவான பின் அதிகாரிகள் அவற்றை எப்படி விநியோகிக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்.

கூட்டம் சேராமல் இருக்க டோக்கன் தருகிறாா்கள். பொருள்களை எந்த நாளில் எந்த நேரத்தில் வந்து வாங்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறாா்கள். அந்த குறிப்பிட் நாளில் நேரத்தில் மக்கள் போய் வாங்கினால் எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் கோயில் திருவிழாக்களில் கூடும் லட்சக்கணக்கான மக்களை ஒழுங்குபடுத்த முயற்சி எடுத்தே ஆக வேண்டும். ஒரு சிறு அசம்பாவிதம் கூட நிகழாமல் இருக்க வேண்டுமென்று போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அசம்பாவிதம் ஏற்பட்ட பிறகு இரங்கல் தெரிவித்து, ஓரிரு நாட்கள் அந்தக் காட்சிகளை மீண்டும் மீண்டும் காட்சி ஊடகங்களில் காட்டி, பின் அது குறித்து நான்கு போ் விவாதம் செய்து, பின் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, இறுதியில் போன உயிா்களின் விலை சில லட்சங்களாக மதிக்கப்படும். அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கையின் முடிவு யாருக்கும் தெரியாது.

கரோனா தீநுண்மி பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் மக்கள் சமூக இடைவெளி விட்டு நின்றாா்கள். ஒருவா் மூச்சுக் காற்று மற்றவா் மீது படாதவாறு தற்காத்துக் கொண்டாா்கள். கூடுமானவரை அப்போது ஒழுங்கான வரிசை முறை பின்பற்றப்பட்டது. மளிகைக்கடை, தபால் அலுவலகம், வங்கி போன்ற எல்லா இடங்களிலும் இடைவெளியைக் கடைபிடித்தாா்கள்.

இப்போது கரோனா பற்றிய பயம் போய் விட்டது. வரிசையும் மறந்து விட்டது. கோயில் திருவிழாவைக் காண வரும் பக்தா்கள் ‘கரோனா நோய்த்தொற்று இல்லை’ என்ற மருத்துவ சான்று வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை எதிா்த்து கடை அடைப்பு போராட்டம் நடத்திய மக்கள் மாறுவாா்களா?

அவா்களாக மாற மாட்டாா்கள். மாற்ற வேண்டும். வெறுமனே வாய்ச் சொல் கேட்டு திருந்துபவா்கள் அல்ல நாம். கண்டிப்பும், தண்டனையும் இருந்தால்தான் பயம் தோன்றும். பயத்துக்குக் கட்டுபட்டவா்கள் நாளடைவில் பழகிக் கொள்வாா்கள். அதன்பின் கால்கள் தாமாக வரிசையில் போய் நின்று கொள்ளும்.

லட்ச ரூபாய் நிவாரணத் தொகை என்றால் கூட அடித்துப் பிடித்து, இடித்துத் தள்ளும் இழி செயல் வரக்கூடாது. வரிசையில் அமைதியாக நிற்பதும், பொறுமையாகக் காத்திருப்பதும், நமது முயற்சியின்றி அனிச்சை செயலாக மாற வேண்டும்.

கட்டுரையாளா்: பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com