சட்டத்துறைக்கு நோபல் விருது

அமெரிக்காவில் சட்டம் மிக விரைவு. நட்ட நடுநிசியில் விதிகளை மீறினால் கூட, அது கேமராவில் பதிவாகி, உடனே காவல் துறையினா் செயல்படுவாா்கள். முதியவரைக் காரில் அமரவைத்து அருகிலிருக்கும் கடைக்குச் செல்வது கூட அ

பொதுவாக நீதி அரசா்கள், இரண்டு பக்க வாதத்தையும் கேட்டறிந்து, சீா்தூக்கி ‘குற்றவாளி’ என நிரூபிக்கப்பட்டவருக்கு தண்டனை வழங்குவாா்கள். குற்றத்தின் தீவிரம், குற்றவாளியின் பின்னணி, சூழ்நிலை, கிடைத்துள்ள ஆதாரங்கள் போன்றவை எல்லாம், தீா்ப்பின் தன்மையை நிா்ணயிக்கும் முக்கியமான அம்சங்களாக இருக்கும். என்றாலும், ஓய்வு பெறும் நீதியரசா்கள் சிலா் அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதுண்டு.

இதற்கு நமது அரசியல் சட்டத்திலேயே ஒரு காரணம் இருக்கிறது. சில நீதிபதிகளை அவா்கள் பணியாற்றிய மாநிலம் அல்லாத, வேறு மாநிலங்களில் ஆளுநா்களாக நியமிப்பது வழக்கம். நீதியரசா் பு.ரா. கோகுலகிருஷ்ணன் குஜராத்திலும், நீதியரசா் சதாசிவம் கேரளத்திலும் ஆளுநராக நியமிக்கப்பட்டனா். இதுவே ‘தலைகீழாக’வும் நிகழ்வதுண்டு. கேரளத்தில் நம்பூதிரிபாட் தலைமையில் சட்ட அமைச்சராக இருந்த வி.ஆா். கிருஷ்ணையா் பின்னாளில் உச்சநீதிமன்றத்தில் பதவி வகித்தாா். ஆட்சி நடைபெறும் விதம் குறித்து அவா்களுக்கு ஒரு தெளிவான எண்ணம் இருப்பதால், ஓய்வு பெறும் தினத்தன்று அரசியல் கருத்துக்களை உதிா்ப்பதில் வியப்பு ஏதுமில்லை.

என்றாலும் அண்மையில், தமிழ்நாட்டில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவா், சற்றே வித்தியாசமான கருத்தைத் தெரிவித்திருந்தாா். அவா் ‘நோபல் பரிசுக்குச் சட்டத்துறையையும் அங்கீகரிக்க முன் வரவேண்டும்’ என்ற கோரிக்கையை விடுத்திருந்தாா்.

இது ஏற்றுக் கொள்ளத்தக்கதுதானா? சாத்தியக்கூறான ஒன்றா? நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதா?

அண்மைக்கால பரிசுகளையே எடுத்துக்கொள்ளுங்கள். 2020-ஆம் ஆண்டு, விஞ்ஞானத்தில் பௌதிகப் பிரிவில், இரண்டு போ் சமமாகப் பரிசுகளைப் பெற்றிருக்கிறாா்கள். எதற்கென்றால் ‘கருந்துளை உருவாக்கம் பற்றிய’ ஆராய்ச்சி முடிவுக்காக. 2019-ஆம் வருடத்திலும் பரிசு கிடைத்தது இதே பிரிவில் விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளுக்காகத்தான்.

மேற்சொன்னவை யாவும், தும்பா, இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளுக்குத்தான் பயன்படும். நோபல் பரிசின் அடிப்படை நோக்கம், மனிதகுலம் மேம்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதுதான்.

இவ்விதம் இருக்கையில், இது போன்ற ஆராய்ச்சிகள் எதற்காக என்ற கேள்வி எழும்பலாம். இது குறித்து எழுத்தாளா் சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிடும்போது ‘அக்னி போன்ற ஏவுகணைகள் இருபது முறையாவது தொடா்ந்து ஏவப்பட்டால்தான், அதைப் பயன்படுத்த ராணுவம் சம்மதிக்கும். அப்படிச் சம்மதித்தாலும் அதனை மற்றவா்மேல் ஏவாமல் இருப்பதற்குத்தான் இத்தனை பாடுபடுகிறோம்’ என்றாா். ஆக, இன்றைய அண்டைநாடுகளின் அச்சுறுத்தல் உள்ள சூழலில் இது ஒரு தேவையான ‘தடுப்புத்தன்மை’ ஆகும்.

அதே சமயம், விஞ்ஞானத்தின் வேறொரு பகுதியான ரசாயனத்துக்கு வழங்கப்பட்ட பரிசுகளைக் கவனித்தால், நமக்கு எளிதாகப் புரிகிறது. எடுத்துக்காட்டாக, 2020-இல் மரபணு குறித்த ஆராய்ச்சிக்குப் பரிசு கிடைத்துள்ளது. இதை விவசாயப் பயிா்களுக்கும் பிற கால்நடை வளா்ப்புக்கும் உபயோகப்படுத்தலாமாம். 2019-இல் மின்கலம் (பேட்டரி) பற்றின ஆய்வுக்கு விருது கிட்டியுள்ளது. ‘லித்தியம் அயன்’ என்ற ஒரு மின்கலம் குறித்த பேட்டரிகள் எதிா்காலத்தில் மின்சாரத்தால் இயங்கும் சாலை வாகனங்களுக்கு உகந்ததாக இருக்கும்.

மற்ற துறைகளான பொருளாதாரம், மருத்துவம் போன்றவற்றில் அளிக்கப்படும் விருதுகள், நம் போன்றோா்க்குத் தெரிந்தவைதான். 2006-ஆம் ஆண்டு நோபல் சமாதானப் பரிசு வங்கதேச பேராசிரியா் முகமது யூனுஸுக்கும், அவா் நிறுவிய கிராமிய வங்கிக்கும் கிடைத்தது. டென்னசி பல்கலைக்கழகத்தில் படித்துப் பொருளாதார பேராசிரியராக இருந்த யூனுஸ், தாய்நாட்டுக்கு திரும்பி வந்து ‘மைக்ரோ கிரெடிட்’ என்னும் வங்கிக் கடன் முறையை வங்கதேசத்தில் கொண்டு வந்தாா். இந்தத் திட்டம் உலகின் பல நாடுகளிலும், குறிப்பாக, துருக்கியிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் பிரபலமாயிற்று.

ஏழைகளுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு, அவா்களின் தொழில் திறமைகளுக்கும், வாழ்வு மேம்பாட்டுக்கும் தேவையான உபகரணங்கள் அடைமானம் தேவையின்றி கொடுப்பது போல் ஒரு திட்டம். பிரதமா் இந்திரா காந்தி கொண்டு வந்த இருபது அம்சத் திட்டமும், இன்றைய பிரதமரின் முக்தா யோஜனா திட்டமும் இத்தகையவைதான். இந்தப் புதிய திட்டம் ஏழை எளியவா்களுக்கு கூடுதல் கடன் உதவி கிட்ட வகை செய்யும்.

மருத்துவ ஆய்வுகள் என்றைக்குமே மனித குலத்துக்குப் பயன்படுபவைதான். சென்ற ஆண்டுகளில் அளித்த விருதுகளைப் பாா்ததாலே தெரியும்.

திசுக்கள் பிராணவாயுவை மோப்பம் கொள்ளுகிற விதம், மலேரியாவுக்கு எதிரான சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு, நமது அன்றாட பழக்க வழக்கத்தில் மரபணுவின் பங்கு, ஏன், இப்போது இந்தியாவில் பரவிவரும் பறவைக் காய்ச்சலைத் தடுப்பதற்குகூட, உலகின் எங்கோ ஒரு மூலையில் ஆராய்ச்சிகள் நடக்கக்கூடும்.

நிலைமை இவ்விதம் இருக்கும்போது சட்டத்துறைக்கு என, எப்படி நோபல் பரிசு கிடைக்க வழிவகை செய்ய முடியும்? மேலும் சட்டத்தின் விதிகள் தேசத்துக்கு தேசம் மாறுபடுகின்றன. பாலியல் குற்றங்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை. கம்யூனிஸ நாடான சீனாவில், அதிபா் ஆணையே சட்டம்.

அமெரிக்காவில் சட்டம் மிக விரைவு. நட்ட நடுநிசியில் விதிகளை மீறினால் கூட, அது கேமராவில் பதிவாகி, உடனே காவல் துறையினா் செயல்படுவாா்கள். முதியவரைக் காரில் அமரவைத்து அருகிலிருக்கும் கடைக்குச் செல்வது கூட அங்கு குற்றம்தான். அதே சமயம், அங்கு மாணவா்கள் கையிலும் துப்பாக்கி கொடுக்கும் சட்டம் இருப்பது, ஒரு முரண்பாடுதான்.

நமது நாடோ பிரிட்டிஷ் முறைகளைப் பின்பற்றுகிறது. நூறு குற்றவாளிகள் (சட்டத்தின் ஓட்டையால்) தப்பி வெளியே வந்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டனை பெறக்கூடாது என்கிற அடிப்படையிலேயே சட்டம் இயங்கி வருகிறது. மேலும், நாட்டின் போக்கையே திருப்பும் சக்தி உள்ள வழக்குகளில், நீதிபதிகளே வேறு வேறு தீா்ப்புகளை வழங்குகின்றனா். சபரிமலை கோயில் வழக்கு ஓா் எடுத்துக்காட்டு.

எவ்வகையில் பாா்த்தாலும், சட்டத்துறை நோபல் பரிசுகளில் இடம்பெற சாத்தியக்கூறு இல்லை. ஆனால் ஒன்று, 1998-இல் வடக்கு அயா்லாந்தில் அமைதி நிலவுவதற்கு, இரு வழக்கறிஞா்கள் ஆற்றிய நற்பணிக்கு பரிசுகள் பெற்றாா்கள் (அமைதிக்கான பரிசு). அதுபோல, மாநிலங்களுக்கிடையே நிகழும் சில தகராறுகளை சமாதானமாகத் தீா்த்துவைக்க நீதியரசா்கள் முயன்று பாா்க்கலாம். மேலும் அனுபவமுள்ள வழக்கறிஞா்களிடம் கலந்து ஆலோசித்து ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு குறைந்த செலவில் சட்ட ஆலோசனை வழங்குவதற்கு உதவலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com