கிருஷ்ண மேனன் என்னும் நிறுவனம்!

 முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கிருஷ்ண மேனனை குறித்து எழுதிய "எ செக்யூர்ட் பிரில்லியன்ஸ்', தி இண்டியன் சொûஸட்டி ஆஃப் இன்டர்நேஷனல் லா சிறப்பு வெளியீடாக வெளியிட்ட "வி.கே. கிருஷ்ண மேனன் ரிமம்பர்ட்' ஆகிய இரண்டு நூல்களும் வி.கே. கிருஷ்ண மேனன் குறித்து இங்கே எழுத என்னைத் தூண்டின.
 கோவைக்கு சென்றால், காந்திபுரம் அருகேயுள்ள ஆர்.வி. ஹோட்டலில் தங்குவது வாடிக்கை. அங்கு, காலையில் நடைபயிற்சிக்கு செல்லும்போது "வி.கே.மேனன் சாலை' என்ற நீல வண்ண பெயர்ப் பலகை கண்ணில் படும். ஒரு ஆளுமையின் பெயரைக் கூட சரியாகக் குறிப்பிடாமல் "வி.கே. மேனன்' என்று பெயர் பலகை வைத்துள்ளார்கள். அதனால், அந்த சாலைக்கு வி.கே. கிருஷ்ண மேனன் பெயரை வைத்ததன் நோக்கமே தோற்றுவிடுகிறது.
 கேரள அரசியல் தலைவர்கள் ஏ.கே. கோபாலன், நம்பூதிரிபாடு, அச்சுத மேனன், கருணாகரன், ஏ.கே. அந்தோணி, அச்சுதானந்தன், உம்மன் சாண்டி வரை எளிமையான பகட்டு இல்லாத தலைவர்களாக இருந்தார்கள். வி.கே கிருஷ்ண மேனனும், கே.பி. உண்ணி கிருஷ்ணனும் அப்படியல்ல. எளிமையாக இருந்தாலும், தங்கள் உடை விஷயத்தில் கவனமாக இருப்பார்கள்.
 வெங்கலில் கிருஷ்ண குரூப் கிருஷ்ண மேனன் கேரளத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் அன்றைய பிரிட்டிஷ் மலபார் என்று அழைக்கப்பட்ட பகுதியில் பிறந்தார். இவருடைய குடும்பமே வழக்குரைஞர் குடும்பம். கோழிக்கோட்டில் பள்ளிப் படிப்பை முடித்து, அங்குள்ள சாமுத்திரி கல்லூரியில் பயின்று, பின் சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாறும் பொருளாதாரமும் கற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றார். அன்னி பெசன்ட்டின் "ஹோம் ரூல்' இயக்கம் மற்றும் "பிரதர்ஸ் ஆப் சர்வீஸ்' இவற்றில் முக்கிய அங்கம் வகித்தவர்.
 ஆற்றலும், தைரியமும் மிக்கவர் வி.கே. கிருஷ்ண மேனன். இங்கிலாந்து சென்று படித்தவர். உளவியலில் முதுகலை பட்டம் பெற்றார். அரசியல் அறிவியலிலும் முதுகலை பட்டம்; கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். இங்கிலாந்து பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்துள்ளார். லண்டனில் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். பிரிட்டன் தொழிலாளர் கட்சியில் இருந்தார். லண்டனில் உள்ள இந்தியா லீக் அமைப்பின் செயலராக இருந்து இந்திய விடுதலைக்கு பிரிட்டன் முழுவதும் சென்று ஆதரவு திரட்டினார்.
 பின் லண்டன் இந்திய தேசிய காங்கிரஸின் இங்கிலாந்து கிளையில் நிர்வாகியாக செயல்பட்டபோது, ஜவாஹர்லால் நேருவை சந்தித்தார். நாட்டு விடுதலைக்கு பின், நேருவின் சிறப்பு தூதராக வெளியுறவு கொள்கைகளை நெறிப்படுத்தவும், ஐ.நா.சபையில் இந்திய பிரதிநிதியாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 வி.கே. கிருஷ்ண மேனன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1953-இல் இருந்து 1956 வரையிலும், மக்களவையில் 1957 முதல் 1967 வரையிலும், மீண்டும் இரண்டாண்டுகள் கழித்து 1969 முதல் 71 வரை, மேலும் 1971 முதல் 74 வரையிலும் பணியாற்றினார்.
 1969-இல் மேற்குவங்கம் மிட்னாபூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகவும், 1971-இல் திருவனந்தபுரம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பிராகவும் தேர்ந்தெடுக்கபட்டார். ஒரு முறை மும்பையிலும் போட்டியிட்டார். இப்படி அகில இந்திய அளவில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட முடியும் என்கிற அளவிலான தேசிய ஆளுமை, வி.கே.கே. மேனன் என்று பரவலாக அழைக்கப்படும் வி.கே. கிருஷ்ண மேனன்.
 இவருடைய அதிரடி நடவடிக்கைகள் அவ்வப்போது சர்ச்சையை கிளம்பும். பாதுகாப்புத்துறையை நவீனமயமாக்கினார். பாதுகாப்புதுறையின் சார்பில் சைனிக் பள்ளிகளை உருவாக்கினார். இவரால் தமிழகத்தில் கோவை அருகே உடுமலை அமராவதியில் சைனிக் பள்ளி நிறுவப்பட்டது.
 சில நேரங்களில் கோட் சூட், சிலசமயங்களில் துல்லியமான நீண்ட கதர் ஜிப்பா, கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரம், கையில் நீண்ட தடி, கிண்டலான புன்சிரிப்பு. சரளமான பேச்சு, இடையிடையே வேடிக்கையான வார்த்தைகள் எனும் நடமாடும் பல்கலைக்கழகம்தான் வி.கே. கிருஷ்ண மேனன். இவருடைய ஆங்கிலப் புலமை அபரிமிதமானது.
 ஐ.நா. மன்றத்தில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் குரலை உரக்க ஒலித்தார். வி.கே. கிருஷ்ண மேனன் 1957-இல் ஐ.நா. மன்றத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்து இரண்டு நாட்களில் மொத்தம் 8 (5+3) மணிநேரம் தெள்ள தெளிவாக தரவுகளோடு பேசியது உலகத்தைக் கவர்ந்தது. இதுவரை ஐ.நா.வில் ஆற்றிய உரையில் கிருஷ்ண மேனனின் உரைதான் நீண்ட உரையாகும்.
 புகழ் பெற்ற "டைம்' பத்திரிகை இவரை "இந்தியாவின் இரண்டாவது சக்திமிகுந்த மனிதர்' என்று புகழாரம் சூட்டியது. இந்திய அரசு இவருக்கு "பத்ம விபூஷண்' விருது வழங்கியது. "காஷ்மீர் நாயகன்' என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட இவர் மேற்கத்திய உலகால் இந்தியாவின் அதிசய மனிதராகவே கருதப்பட்டார். நுண்மான் நுழைபுலம் கொண்டவர். உலக சர்வதேச அரசியலை, உன்னிப்பாக கவனித்து அதுகுறித்த சரியான கருத்துகளை வெளியிடுவார்.
 அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் முகப்புரை இவரால் தயாரிக்கப்பட்டது. அதில் நேரு சில திருத்தங்கள் செய்து, அரசியல் நிர்ணய சபையில் ஒப்புதல் பெற்றார். அந்த முகப்புரை நேரு-க்குப் பெருமை சேர்த்தது.
 சீனப் போரின்போது, நமக்கு ஏற்பட்ட பின்னடைவால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அதனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். சீனப் போரை சரியாக கையாளவில்லை என நேரு மீது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் தீர்மானம் கொண்டு வந்தார்கள். ஆனால் தமிழகத்தைச் சார்ந்த குரல் ஒன்று கிருஷ்ண மேனனுக்கு ஆதரவாகப் பேசியது. அது திமுகவைச் சேர்ந்த நாஞ்சில் மனோகரனின் குரல். அவர் பேசியது:
 "இந்தப் படுதோல்விக்கு கிருஷ்ண மேனனை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறீர்கள். இதை நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன். முடிந்தால், மொத்த அமைச்சரவையையும் இதற்குப் பொறுப்பேற்க வையுங்கள். குறைந்தபட்சம் நேருவையும், கிருஷ்ண மேனனையும் இந்தத் தோல்விக்குக் காரணம் காட்டி, ராஜிநாமா செய்ய வற்புறுத்தித் தீர்மானம் போடுங்கள். இல்லாவிட்டால், இதை நான் ஏற்கமாட்டேன்.
 தனிப்பட்டு கிருஷ்ணமேனனை இந்தத் தோல்விக்கு காரணம் காட்டுவது, பாரத பிரதமரை அவமானப்படுத்துவது ஆகும். பொதுவாக அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வாருங்கள். அதன் அடிப்படையில் தீர்மானம் போடுங்கள்' என்று நாஞ்சில் மனோகரன் பேசியது வரலாற்றுப் பதிவு.
 சாஸ்திரி மறைவுக்கு பின் இவருக்கான இடம் பொதுவாழ்வில் இல்லாமலும், எந்த வெளிச்சமும் இவர்மேல் படாமலும் இருந்தது. அந்த கட்டத்தில் 1967-இல் தமிழகத்திலிருந்து திமுக சார்பில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அண்ணாவிடம் இரண்டு மூன்று முறை கேட்டார். இதற்காக மூதறிஞர் ராஜாஜியின் உதவியையும் நாடினார். ஏனோ அந்த நேரத்தில் அவருக்கு திமுக வாய்ப்பளிக்கவில்லை.
 இந்த நிலையில், இந்திரா காந்தி பிரதமர் ஆனவுடன், இவர் சற்று ஒதுக்கப்பட்டார். பண்டித நேரு வசித்த தீன்மூர்த்தி பவனில், நடந்த கிச்சன் அரசியல்தான் அதற்குக் காரணம். நேரு-க்கு நெருக்கமான, நேரு-க்குப் பிடித்த சிலரை இந்திரா காந்தி தள்ளி வைத்தார். அப்படி தள்ளி வைக்கப்பட்டவர்களில் ஒருவர் கிருஷ்ண மேனன்.
 அதுபோல பம்பாயில் கிருஷ்ண மேனன் போட்டியிட்டபோது, தமிழர்கள் வாழும் பகுதியான தாராவி, செம்பூர் போன்ற பகுதிகளில் அண்ணா, எம்.ஜி.ஆர்., நாஞ்சில் மனோகரன் போன்றவர்களை பிரசாரத்துக்கு அழைத்துண்டு. ஆனால், இவர்கள் அங்கே செல்ல முடியாத சூழ்நிலையாக தேர்தல் களம் தமிழகத்தில் அமைந்தது.
 தான் முன்பு வெற்றி பெற்ற பம்பாயில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இவ்வளவு தகுதியிருந்தும் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. கடைசி காலத்தில் தில்லியில் வாழ்ந்தார். இறுதி காலத்தில் எழுத்து, கருத்தரங்குகள் என்று இருந்துவிட்டார்.
 தில்லியில் "தி இண்டியன் சொûஸட்டி ஆஃப் இன்டர்நேஷனல் லா' என்ற அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தார். இன்றைக்கும் அந்த அமைப்பின் கட்டடம் உச்சநீதிமன்றத்திற்கு எதிரில் கம்பீரமாக உள்ளது. தில்லி செல்லும்போதெல்லாம் அந்த கட்டடத்திற்குள் நுழையும்போது கிருஷ்ண மேனனை நினைக்காமல் இருக்க முடியாது.
 மொராக்கோ, செனான், அல்ஜீரியா, துனிஷியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு 1960-களில் பயணித்தவர்களுக்குத் தெரியும். குறிப்பாக அல்ஜீரியா நாட்டிற்குச் சென்றால், இரண்டு இந்தியர்களைப் பற்றிச் சொல்வார்கள். ஒருவர் திரையுலக நாயகர் திலீப்குமார்; மற்றொருவர் வி.கே. கிருஷ்ண மேனன். அதன்பின் மூன்றாவதாக நேருவைச் சொல்வார்கள். அப்படி வளர்ச்சியற்ற நாடுகளில் கூட வி.கே. கிருஷ்ண மேனனை அறிந்தவர்கள் இருந்தனர். ஏனெனில் ஐ.நா. மன்றத்தில் ஐரோப்பபிய நாடுகளின் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கு வாதாடியவர் அவர்.
 வி.கே. கிருஷ்ண மேனன் தலைசிறந்த அறிவாளி, தியாகி, இறுதிமூச்சு விடுகின்ற காலத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமலேயே காலமானார். திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரியான கிருஷ்ண மேனன், தனி அறையிலேயே வசித்து வந்தார். பேருந்துகளிலே அதிகமாகப் பயணிப்பார். பிரிட்டன் ஹை கமிஷனராக இருந்தபொழுது தனக்கு ஊதியம் வேண்டாமென்று மறுத்துவிட்டார். 1974-இல் தன்னுடைய 78-ஆவது வயதில் காலமானார்.
 வி.கே. கிருஷ்ண மேனன் ஒரு தனிமனிதரல்ல, அவர் ஒரு நிறுவனம். இப்படிப்பட்ட ஆளுமையான அரசியல்வாதிகளை இந்தியா பார்த்துள்ளது. "தகுதியே தடை' என்பதற்கு அவரும் ஓர் எடுத்துக்காட்டு.
 
 கட்டுரையாளர்:
 வழக்குரைஞர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com