மாநிலச் சீரமைப்பு: அம்பேத்கர் சொல்வது என்ன?

 தமிழ்நாட்டிலுள்ள சில மாவட்டங்களைக் கொண்டு "கொங்கு நாடு' என்றொரு மாநிலம் உருவாக்க வேண்டும் என்றெழுந்துள்ள குரல்களைத் தொடர்ந்து, அப்படியொரு மாநிலம் உருவாகும் என்ற ஊகங்களையடுத்து, பெரிய மாநிலங்களை சிறு சிறு மாநிலங்களாகப் பிரிப்பது நல்லதா? தீங்கானதா? ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டிருப்பது சரியா, தவறா என்ற கேள்விகள் இன்று பல தளங்களில் ஒலிக்கின்றன.
 இந்தக் கேள்விகள் புதிதல்ல. ராஜாஜி, அம்பேத்கர் போன்ற அறிஞர்கள் அன்றே இவற்றை விவாதித்திருக்கிறார்கள். அம்பேத்கர் 1956-ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி அமரர் ஆனார். அதற்கு ஓராண்டிற்கு முன் 1955-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி "மொழிவாரி மாநிலங்கள் மீதான எண்ணங்கள்' (தாட்ஸ் ஆன் லிங்குஸ்டிக் ஸ்டேட்ஸ்) என்றொரு சிறு பிரசுரத்தை வெளியிட்டார். அனேகமாக அதுதான் அவரது கடைசி நூலாக இருக்கக் கூடும். ஏனெனில் அந்தப் பிரசுரத்தை எழுதும் போதே அவர் உடல்நலம் குன்றியிருந்தார்.
 உடல் நலம் குன்றியிருந்தபோதும் அவர் இப்படி ஒரு நூலை எழுதக் காரணம் என்ன? மொழிவாரி மாநிலங்கள் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது தன் உடல் நலம் காரணமாக அவர் அதில் பங்கேற்க இயலாமல் போனது. மாநிலச் சீரமைப்பு என்ற முக்கியமான விஷயத்தில் தன்னால் வாய் மூடி மௌனமாக இருக்க முடியாது என்பதால் மாற்று வழியான எழுத்தைத் தேர்ந்தெடுத்ததாக அவரே அந்தப் பிரசுரத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் இதுவே அவர் இந்தப் பிரச்னையை எவ்வளவு முக்கியமானதாகக் கருதினார் என்பதை உணர்த்தும்.
 "நான் முன்பு பொதுவெளியில் தெரிவித்த கருத்துகளுக்கும் இங்குள்ள சில கருத்துகளுக்கும் முரண்பாடுகள் இருப்பதை வாசகர்கள் காணக்கூடும்' என்று சொல்லும் டாக்டர் அம்பேத்கர், "முரண்பாடின்மை என்ற பெயரில், சிந்திக்கும் எந்த ஒரு மனிதனையும், அவன் முன்னர் ஒரு முறை தெரிவித்த கருத்துகளோடு கட்டிப்போட முடியாது. பொறுப்புள்ள எந்த மனிதனுக்கும் மறு சிந்தனையும், எண்ணங்களை மாற்றிக் கொள்ளும் துணிவும் வேண்டும். முரண்பாடின்மையை விட பெரிதும் முக்கியமானது பொறுப்புணர்வு. சிந்தனைக்கு இறுதி என்ற ஒன்றில்லை' என்றும் சொல்கிறார்.
 மாநிலச் சீரமைப்புக் குறித்து இதற்குப் பின் அவர் கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்பதால் அந்த நூலில் அது குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகளையே இந்த விஷயத்தில் அவரது இறுதியான கருத்துகளாக நாம் கொள்ள வேண்டும்.
 அவர் தெரிவிக்கும் கருத்துகள்தான் என்ன?
 1. அரசமைப்புச் சட்டம் உருவானபோது அது 26 பகுதிகளை மாநிலமாக அங்கீகரித்தது. அவற்றில் பல இப்போதுள்ள மாநிலங்கள் அல்ல. அன்று சமஸ்தானங்களாக இருந்தவை. உதாரணமாக அன்று கேரளம் என்ற மாநிலம் கிடையாது. ஆனால் திருவிதாங்கூர் - கொச்சின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. கர்நாடகம் என்றொரு மாநிலம் கிடையாது. மைசூர், கூர்க் இரண்டும் மாநிலங்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
 இடைவிடாத கோரிக்கையையடுத்து பிரதமர் நேரு மாநில சீரமைப்பு ஆணையத்தை அமைத்தார். அது மொழிகளை அடிப்படையாகக் கொண்டு 16 மாநிலங்களை அமைக்கப் பரிந்துரைத்தது.
 அந்தப் பரிந்துரையைக் கடுமையாக விமர்சிக்கிறார் அம்பேத்கர். அவர் "இந்தியாவை மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கும் திட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஆணையம் நினைப்பது போல அது ஆபத்தற்ற ஒன்றல்ல. அது முழுதும் விஷம். அந்த விஷம் உடனே காலி செய்யப்பட வேண்டும்' (திஸ் ஸ்கீம் ஆஃப் டிவைடிங் இண்டியா இன் தி நேம் ஆஃப் லிங்குஸ்டிக் ஸ்டேட்ஸ் கேன்னாட் பி ஓவர்லுக்ட். இட் ஈஸ் நாட் úஸா இன்னோக்கியஸ் ஆஸ் தி கமிஷன் திங்க்ஸ். இட் ஈஸ் ஃபுல் ஆஃப் பாய்ஸன். தி பாய்ஸன் மஸ்ட் பி எம்ப்டிட் ரைட் நௌ) என்று கூறுகிறார். அந்த அத்தியாயத்தின் தலைப்பே "மொழிசார்ந்த அதீத நடவடிக்கை'.
 2. இன்னொருபுறம் எல்லா மாநிலங்களும் சமச் சீராகப் பிரிக்கப்படவில்லை. அந்தப் பதினாறு மாநிலங்களில் எட்டு மாநிலங்களின் மக்கள்தொகை அன்று ஒன்று முதல் இரண்டு கோடி. நான்கு மாநிலங்களின் மக்கள் தொகை இரண்டு முதல் நான்கு கோடி, ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை நான்கு கோடிக்கு மேல். ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை ஆறு கோடிக்கு மேல்.
 "ஒரு கூட்டாட்சியில் மக்கள்தொகை முக்கியமல்ல என ஆணையம் எண்ணுவது மிகப் பயங்கரமான தவறு (மோஸ்ட் டெரிபிள் எர்ரர்). இதை காலத்தே சரி செய்யவில்லை என்றால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்' என எச்சரிக்கிறார் (மக்கள் தொகை அடிப்படையில்தான் நாடாளுமன்ற இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்).
 இவ்வாறு வாதிடும் அம்பேத்கர் மொழிவாரி மாநிலங்களின் தேவையை மறுக்கவில்லை.பலமொழி பேசும் மக்கள் கொண்ட மாநிலங்களில் மக்களிடையே உரசல்களும் மோதல்களும் ஏற்படக் கூடும் என்பதால் ஜனநாயகம் சீராகச் செயல்பட இயலாது போகும் என்பதை அவர் ஏற்கிறார். அதே நேரம் மொழிவாரி மாநிலங்கள் என்பவை, ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்பதாக இருக்க வேண்டியதில்லை.
 ஒரு மொழி பேசும் மக்கள் பல மாநிலங்களில் இருக்கலாம் என்பது அவர் கருத்து (இட் கேன் ஆல்úஸா மீன் தட் பீப்பிள் ஸ்பீக்கிங் ஒன் லாங்வேஜ் மே பி குரூப்ட் அண்டர் மெனி ஸ்டேட்ஸ் புரொவைடட் ஈச் ஸ்டேட் ஹேஸ் அண்டர் இட்ஸ் ஜூரிஸ்டிக்ஷன் பீப்பிள் ஹூ ஆர் ஸ்பீக்கிங் ஒன் லாங்வேஜ்).
 வட மாநிலங்களை ஒருங்கிணைப்பதும் தென் மாநிலங்களைக் கூறு போடுவதும் (அவர் "பால்கனிúஸஷன்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்) பிழையானது எனச் சொல்லும் அம்பேத்கர், அதற்குத் தீர்வாக வடமாநிலங்களைச் சிறு சிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்கிறார்.
 உத்தர பிரதேசத்தை மூன்றாகவும் பிகாரை இரண்டாகவும், மத்திய பிரதேசத்தை இரண்டாகவும் பிரிக்க வேண்டும் என்ற யோசனையை முன் வைக்கிறார். (2000-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்திலிருந்து உத்தரகண்ட், மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர், பிகாரிலிருந்து ஜார்க்கண்ட் ஆகியவை பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் தனி மாநிலமாயின.)
 தன்னுடைய கருத்துகளை கீழ்க்கண்டவாறு அம்பேத்கரே தனது நூலில் தொகுத்துள்ளார்:
 1. பலமொழிகள் பேசும் மாநிலம் என்பது முற்றிலும் கைவிடப்பட வேண்டும் (அவர் இதை எழுதும் போது பம்பாய் என்பது மாநிலமாகவும் அதில் மராத்தி, குஜராத்தி பேசும் பகுதிகள் இணைந்தும் இருந்தன).
 2. ஒவ்வொரு மாநிலமும் ஒரு மொழி பேசும் மாநிலமாகத்தான் இருக்க வேண்டும்.
 3. ஒரு மாநிலத்திற்கு ஒரு மொழி என்பதை ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்பதோடு குழப்பிக் கொள்ளக்கூடாது.
 அவரது மூன்றாவது கருத்தின் பொருள் என்னவென்றால் ஒரு மொழி பல மாநிலங்களில் பேசப்படலாம். ஹிந்தி ஹிமாசல பிரதேசம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாரில் (இப்போது உத்தரகண்ட், சத்தீஸ்கர், ஜார்க்கண்டிலும் கூட) பேசப்படுவதைப்போல, ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் தெலுங்கு பேசப்படுவதைப் போல, ஒரு மொழி ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் பேசப்படலாம்.
 இந்தியாவில் பெரிய மாநிலங்களாக இருப்பவற்றில் ஒப்பீட்டளவில் வளர்ச்சி குறைவாகவே இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். ஆகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் ஓர் உதாரணம். இப்போது அதை நான்காகப் பிரிக்கும் யோசனை அங்கு பேசப்பட்டு வருகிறது. சிறிய அலகுகளில் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன.
 தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்த தஞ்சாவூர், இப்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்போது ஐந்தாவதாகக் கும்பகோணமும் தனி மாவட்டமாகப் பிரிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சிறிய அலகுகள் நிர்வாக வசதிக்கு உதவும் என்ற கருத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 மாநிலங்களைப் பிரிப்பது என்பது இந்தியாவிற்குப் புதிது அல்ல. காங்கிரஸ் ஆட்சியில் பம்பாய் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வடகிழக்கில் சில பகுதிகளை இணைத்து நாகாலாந்து உருவாக்கப்பட்டது. ஆந்திரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான ஆட்சியில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன.
 வளர்ச்சி, மாநிலங்களுக்கிடையே சமத்துவம் என்பனவற்றைக் கருத்தில் கொண்டு மாநிலங்களைச் சீரமைப்பது குறித்து சிந்திக்க வேண்டிய தருணத்தில் இன்று நாம் இருக்கிறோம். இது குறித்த அம்பேத்கரின் நூலை, அவரைப் பின்பற்றுவதாகச் சொல்லும் தமிழக அரசியல்வாதிகளும் அறிஞர்களும் ஒரு முறை திறந்து பார்க்க வேண்டும். அம்பேத்கர் மீது மரியாதை வைத்துள்ள மத்திய - மாநில ஆட்சியாளர்கள் அவரது கருத்துகளை சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.
 தமிழகத்தில், தென்மாவட்டங்களில், கடந்த 40 ஆண்டுகளாக, தூத்துக்குடியைத் தவிர மற்ற பகுதிகளில் பெரும் தொழில் வளர்ச்சி இல்லை. மேற்குத் தமிழகத்தில் தொழில் முனைவோர் கணிசமாக இருக்கின்றனர். ஆனால், அங்கு பெருந்தொழில்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் சுய முயற்சியில் வெற்றிகரமாகச் சிறு தொழில்களை நடத்தி வருகின்றனர்.
 காவிரியின் கடைமடைப் பகுதியான டெல்டா மாவட்டங்களைப் பற்றிப் பேச்சே இல்லை. கூர்ந்து கவனித்தால் சென்னை, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின் தங்கி உள்ளன. சுருக்கமாகச் சொன்னால் தலை பெருத்து உடல் வற்றி இருக்கிறது தமிழகம்.
 ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்ற கருத்திலிருந்து விடுபட வேண்டிய தருணம் வந்து விட்டது. இது காலத்தின் கட்டாயம்.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com