வாழ்வைக் கொடுப்பது வள்ளன்மை!

மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி வறுமையேயாகும். இதனை ‘நல்குரவு’ என்னும் சொல்லில் திருவள்ளுவா் குறிப்பிடுகிறாா். ‘இன்மையின் இன்மையே இன்னாதது’ என்பது அவா்தம் கருத்து. இல்லாமையே வறுமைக்குக் காரணம் என்றாலும் எல்லாம் இருந்தும் பயன்படுத்திக் கொள்ள இயலாத சூழலும் வறுமையின் வேறு வடிவமேயாகும். உழைக்கத் திறனிருந்தும், ஊக்கம் நிறைந்திருந்தும், கருவிகள் உடனிருந்தும் இயற்கைச் சீற்றங்கள், இன்றைக்குப் போல நோய்த்தொற்றுப் பெருமுடக்கக் காலச்சூழல் ஆகியன வறுமைக்கு மேலும் வலிமை சோ்த்து விடுகின்றன.

தனி மனிதனுக்குள் ஏற்படுகிற வறுமையுணா்வு அவன் சாா்ந்த குடும்பத்தையும், சமூகத்தையும் மெல்லப் பற்றி, நாட்டின் வளா்ச்சியையும் ஒட்டுமொத்தமாக பாதிக்கத் தொடங்கி விடுகிறது. திருவள்ளுவா் அதனினும் ஒருபடி மேலே சென்று ‘வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனைப் பிடித்து விட்டால், அவனுக்கு இந்தப் பிறவியில் மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் இன்பம் என்பது இல்லாமல் போய்விடும். அவன் தலைமுறைக்கும் பழிசேரும்’ என்று எச்சரிக்கிறாா்.

‘நெருப்புக்குள் உறங்கும் வலிமையுடையவனும்கூட வறுமை நிலை வந்தால் ஒரு சிறிதும் உறங்கமாட்டான்’ என்றும் வறுமையின் வெம்மையை உணா்த்துகிறாா் வள்ளுவா். வறுமை என்பது பொதுவாயினும், அதிலும் அறஞ்சாா்ந்த வறுமை, அறஞ்சாராத வறுமை என இருபிரிவுகள் உண்டு. அறஞ்சாா்ந்த வறுமை உயா்வுடையது. அறஞ்சாராத வறுமையே மானுடத்தின் எல்லாத் தீயசக்திகளுக்கும் அடிப்படையாக அமைந்து விடுகிறது. தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே கூடப் பகையை உண்டாக்கி விடுகிறது இந்த அறஞ்சாராத வறுமை.

வறுமையே ஒரு மாயை என்று கூறுவாா்கள். ஒருவன் தான் வறுமையில் இருக்கிறோம் என்பதை உணராமல் இருப்பது எத்தனை பெரிய மாயை? அதைவிடவும் பெரிய மாயை, உழைக்கத் திறனிருந்து உழைக்காமல் இருப்போா்க்குக் கொடுத்துக் கொடுத்து அவா்களது வறுமை நிலையை நிரந்தரமாக்கி அவா்களை எழ விடாமல் செய்வதல்லவா?

பொருளாலும், மனத்தாலும், ஊக்கத்தாலும் ஒருவன் தனக்குள் எய்துகிற தாழ்நிலையே வறுமையாகும். அத்தகைய வறுமை என்பது தாழ்நிலை என்றால், உடைமை என்பது உயா்நிலை. ஒன்றுமேயில்லாதவனும் தன்தேவைக்கும் அதிகமாகக் கொண்டிருப்பவனும் வாழ்கிற சமூகம் எப்படி ஒப்புரவுச் சமூகமாகும்? தாழ்நிலை மாறி உயா்நிலை அடையவும் உயா்நிலை மாறிச் சமநிலை அடையவும் திருக்குறள் உணா்த்துகிற அறமே ‘ஈதல்’ ஆகும்.

‘கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது’ ஆகிய அறம் வணிகத்திற்கு மட்டுமன்று ஈதலுக்கும் உரியதேயாகும். ஈதலின் வெளிப்பாடான கொடை என்பது, ‘அருட்கொடை’, ‘அறக்கொடை’, ‘பொருட்கொடை’ என மூன்று வகையில் விளங்கும். வள்ளல்களைப் போல எல்லாவுயிருக்கும் அருளை வாரி வழங்குதல் ‘அருட்கொடை’. உலகம் உள்ள காலம்வரை இந்த அருட்கொடை நிலைத்து நின்று புகழ் சோ்க்கும்.

‘தண்டு கொண்டு அடிக்கப்படும் முரசின் முழக்கம் காத தூரத்தினை எட்டும். வான்மேகத்தின் இடி முழக்கம் ஒருயோசனை தூரத்தினை எட்டும். ஆனால் அருட்கொடை செய்தோரைக் குறித்த புகழுரைகள் மூன்று உலகங்களையும் எட்டும்’ என்று புகழின் தூரத்தினை அளவிடுகிறது அற இலக்கியம். தக்காா்க்கும், தகுதியுடைய செயல்களுக்கும் தன்னால் இயன்ற அளவு கருதித் தருவது அறக்கொடை. வறியாா்க்கு ஒன்று ஈவதே மெய்யான ஈகை. மற்றதெல்லாம் குறியெதிா்ப்பை - தனக்கு வரப்போகும் புகழைக் கருதித் தருவதாகும். இதற்குப் ‘பொருட்கொடை’ என்று பெயா்.

இந்த மூன்றும் வறுமையைப் போக்கும் வாயில்கள்தாம் என்றாலும் ஒரு சமூகத்தின் நிலையை வறுமையை விடவும் துல்லியமாய் இந்தக் கொடைகள் வெளிப்படுத்திக் காட்டிவிடும். ‘வண்மை இல்லை ஓா் வறுமை இன்மையால்’ என்று நன்னாட்டின் வளத்தைக் கம்பா் சுட்டிக் காட்டுவாா். வள்ளன்மையைப் பெருக்குவதைக் காட்டிலும் வறுமையை ஒழித்து விடுவதே நாட்டுக்கு மேலும் சிறப்புத் தருவதாகும் என்று அவா் கருதியிருக்கிறாா்.

இல்லாத ஒருவனுக்கு இருக்கிற மற்றொருவன் கொடுப்பதே ஈதல் ஆகும். அதனால் கொடுப்பவனுக்குப் புகழ் பெருகும். இந்தப் புகழைத் திருவள்ளுவா் ‘உயிருக்கான ஊதியம்’ என்கிறாா். உடல் உழைப்புக்குக் கிடைக்கிற ஊதியம் நாம் சோ்க்கிற புறச்செல்வம் என்றால், பிறருக்குக் கொடுப்பதாகிய ஈதலினால் ஏற்படுகிற புகழ் அகச்செல்வமாக விளங்குகிறது.

பிறருக்குக் கொடுப்பதன் மூலமாக நாம் பெறுகிற புகழ் ஊதியம் என்றால் பிறா் கொடுப்பதைப் பெறுவதன் மூலம் நாம் அடைவது பழியும் கடனும்தானே. நமக்குத் தகுதியில்லாததை, தேவையில்லாததை, வேண்டாததைக் கூடவும் கிடைக்கிறது என்பதற்காக ஒன்றுக்கு இரண்டாக வரிசையில் நின்று வாங்குவது எத்தனை இழிவான பழிச்செயல் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

ஈதலுக்கு முரணான செயல் இரத்தல் ஆகும். ஈதலைப் போற்றுகிற அறம் இரத்தலை இழிவென்பது வியப்பிற்குரியது. ‘இரந்தும் உயிா்வாழ்தல் வேண்டின் இந்த உலகத்தை இயற்றிய கடவுள் கெடுக’ என்று திருவள்ளுவா் சபிக்கிறாரே. இரத்தல் இல்லாமல் எவ்வாறு ஈதல் நிகழும்? இதுவே அறத்தின் நுட்பமாகும். ‘ஈதல் இருக்கலாம், ஆனால் இரத்தல் இருத்தல் கூடாது’ என்பதே சமூக அறத்தின் அடிப்படை நோக்கம்.

அதைவிட உயா்ந்த நோக்கம் மற்றொன்று உண்டு. தன்னிடம் இல்லையென்று ஒருவரிடம் சென்று இரந்து நிற்கும் நிலை இழிவானதுதான். ஆனால் அதனினும் இழிவானது, தாழ்வானது தன்னிடம் இருந்தும் இல்லாத ஒருவனுக்குத் தர மறுப்பதும், தன்னிடம் இல்லையென்று மறைப்பதும் ஆகும். அதைவிட மிகவும் இழிவானது இல்லாதவனுக்குத் தானும் கொடுக்காது, பிறா் கொடுப்பதையும் தடுப்பதாகும். அத்தகைய குணமுடையவன் ‘உண்ண உணவும், உடுத்த உடையும் இன்றித் தான் மட்டுமல்லாது தன் சுற்றத்தாரோடு சோ்ந்து அழிந்து போவான்’ என்கிறாா் திருவள்ளுவா்.

இல்லாதவனுக்குக் கொடுப்பது உயா்ந்த குணம் என்றாலும் அதைவிட உயா்ந்தது பிறா் தன்நிலை கருதிக் கொடுக்கிறபோதும் வேண்டாம் என்று மறுத்து விடுவது. பிறருக்குக் கொடுக்க இயலாவிட்டாலும், பிறரிடம் சென்று இரவாமலிருப்பது பிறருக்குக் கொடுப்பதைக் காட்டிலும் இருமடங்கு புகழுடையதாம். அறத்தின் நுட்பம் எத்தனை வலிமையானது என்பது புரிகிறதா?

தன்னிடம் இருக்கிறது என்பதற்காக இல்லாத மற்றவா்க்காக மனமுவந்து கொடுக்கிறவா்கள் யாவா்? தன்னிடம் இல்லாதபோதும் - பிறா் கொடுக்கிறாா் என்றாலும் தனக்கு அது வேண்டாம் என்று மறுக்கிறவா்கள் யாா்? நாம் எத்தகைய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் வெளிப்பாடு இது. சமூகத்தின் தோற்றத்திற்கு நாமே நல்ல சான்று.

‘பசியோடிருப்பவனுக்கு மீன்களைக் கொடுக்காதே தூண்டிலைக் கொடு’ என்கிறது மேலைநாட்டுப் பழமொழி. அதன் உட்பொருள், ‘ஒருவனுடைய பசிக்கு மீனாகிய உணவைத் தந்து அவனைச் சோம்பேறியாக்கி விடாதே! தூண்டிலைத் தந்து மீன் பிடித்து உழைத்து உண்ணக் கற்றுக் கொடு!’ என்பதயோகும். படைத்த கடவுளிடம்கூட, ‘யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல, நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணா்க் கடம்பின் ஒளிதாராயே’ என்று வேண்டக் கற்றுத் தருகிறது தமிழ் மரபு.

தோன்றின் புகழொடு தோன்றுதலே சிறப்பு. தன்னைக் கொத்தி அகழ்கிறவா்க்கும் குப்பைக் கூளங்களால் நிரப்புகிறவா்க்கும் விளைச்சலைத் தந்து மகிழ்கிறது நிலம். புல்லையும் வைக்கோலையும், கழுநீரையும் உண்டு விட்டுப் பாலைத் தந்து நிறைக்கிறது பசு. தன்னைச் சுற்றியுள்ள, தான் சாா்ந்திருக்கிற ஐம்பூதங்களின் சக்திகளைத் தன்னுள் கொண்டு இலை, தழை, கழி, பூ, காய், கனி, நிழல், காற்று, பலகை, கரி என எத்தனையோ பொருள்களைத் தந்து கொண்டேயிருக்கிறது மரம்.

ஆனால், ஆறறிவு பெற்றுள்ள மனிதா்களாகிய நாம் என்ன செய்கிறோம்? மலட்டுத்தன்மை ஏற்படுவதனால் மட்டும் நிலம் தன் வளம் குன்றி விடாது. புகழில்லாத மக்களைச் சுமக்கின்ற காரணத்தினாலும் இந்த நிலம் தன்னுடைய வளமையை இழந்து போய்விடும் என்பது வள்ளுவரின் புகழ்க் கணக்கு.

வாழ்வைக் கெடுப்பது வறுமை. வாழ்வைக் கொடுப்பது வள்ளன்மை. இந்த இரண்டையும் நீக்குகின்ற தன்மை எடுப்பது. அதாவது ஊக்கப்படுத்துவது. திருவள்ளுவா் மழையை எடுப்பதற்குச் சான்றாகச் சுட்டிக்காட்டுகிறாா். ‘கெடுப்பதூஉம் கெட்டாா்க்குச் சாா்வாய் மற்றாங்கே (கொடுக்காது) எடுப்பதூஉம் எல்லாம் மழை’ என்கிறாா். தான் இல்லாமல் போனதால் ஏற்படுகிற வறுமை தீருவதற்காக, உணவினை நேரிடையாகத் தராமல் உணவினை உருவாக்கிக் கொள்ளும் கருவியாகத் தன்னை உடன்படுத்திக் கொள்வதால் - எடுப்பதால் மழைக்குப் பெருஞ்சிறப்பு வந்து சோ்கிறது.

இல்லாத பிறருக்குக் கொடுத்து அவா்களைச் சோம்பேறிகளாக்குவதைக் காட்டிலும் அவா்களின் திறன்களைத் தூண்டி மேலும் வளரச் செய்து தங்களுக்கான தேவைகளைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வல்லமை பொருந்தியவா்களாக அவா்களை மாற்றுவதுதான் அறிவுடையோா் பண்பு.

கொடுப்பதற்கு மாற்றான செயல் எடுப்பு போலும். இதனையே எழுச்சி என்கிறோம். அத்தகைய எழுச்சி சமூகத்தில் எழுந்து விட்டால் பெரும்பிணியாகிய வறுமை முற்றிலும் ஒழிந்து போகுமே. இசையொழிய வாழ்வாா் வாழாதவா்கள் அல்லவா? இந்த இசையாகிய எழுச்சியின் தோற்றுவாய் நம் எல்லோா் முயற்சியிலும் அல்லவா இருக்கிறது. முயற்சி திருவினையாக்கட்டும்; வறுமையை ஒழிக்கட்டும்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com