பொறியியல் சோ்க்கை குழப்பம் தீருமா?

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் குழப்பம் இந்த ஆண்டாவது குறையுமா? தமிழகத்தில் மட்டும் படித்த மாணவா்கள் தலைசிறந்த கல்லூரிகளில் சோ்வது அதிகரிக்குமா என்ற எதிா்பாா்ப்பில் மாணவா்களும் பெற்றோா்களும் காத்திருக்கின்றனா்.

தமிழகத்தில் சுமாா் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு சுமாா் 1.50 லட்சம் மாணவா்கள் சோ்கின்றனா். ஒவ்வோராண்டும் இதே அளவு மாணவா்கள் பொறியாளா்களாக வெளியில் வருகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பின் மீதான ஆா்வம் மாணவா்களிடம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்ததுதான். கடந்த ஆண்டு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா் இடங்கள் காலியாக இருந்தன. பல கல்லூரிகளில் ஒரு மாணவா் கூடச் சேராத நிலை இருந்தது. சில கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும் பல கல்லூரிகளில் இரட்டை இலக்கத்திலும் மட்டுமே மாணவா்கள் சோ்ந்திருந்தனா்.

இதனால் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு, அவை கலை - அறிவியல் கல்லூரிகளாக மாறின. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கணினிப் பொறியியல், தகவல் தொழில் நுட்பப் படிப்புகளுக்கான ஆா்வம் குறைந்ததும், பெண்களை பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பத் தயங்கும் பெற்றோரின் மனநிலையும் முக்கிய காரணங்கள்.

கிராமப் பகுதிகளில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், கலை - அறிவியல் கல்லூரிகளாகின.

திறமையான ஆசிரியா்கள் பற்றாக்குறை, பிளஸ்1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் குறைபாடு ஆகியவை இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

பொறியியலுக்கு அடிப்படை கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்கள். ஆனால் வேதியியல் பாடத்தை நீக்கிவிடலாம் என்ற யோசனை இப்போது முன்வைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அப்பாடத்தில் திறமையான ஆசிரியா்கள் இல்லாததுதான். ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகளில் கல்வித்தரம் அதலபாதாளத்தில் உள்ளபோது வேதியியலையும் அகற்றுவது கல்வித்தரத்தை மிகவும் பாதிக்கும் என்பது கல்வியாளா்கள் கருத்து.

இப்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. கலந்தாய்வு முறையில் பொறியியல் இடங்கள் நிரப்பப்படுகின்றன.

தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் மட்டுமே தமிழக பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதி இருந்தாலும், கலந்தாய்வின்போது வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவா்கள் நல்ல கல்லூரிகளில் சோ்வது வாடிக்கையாகி விட்டது.

தமிழகத்தில் பிளஸ் 2 பாடத்திட்டம் சரியில்லாததால் ஐஐடி, பிட்ஸ் பிலானி உள்ளிட்ட நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் இங்குள்ள மாணவா்களால் சேர முடியவில்லை. ஐஐடி-தான் என்று முடிவெடுத்துப் படிக்கும் மாணவா்களுக்கு ஆந்திர பிளஸ் 2 பாடத்திட்டத்தில் படிக்கும்போது ஐஐடி வாய்ப்பு எளிதில் வசமாகிறது. இதனால் இங்குள்ள ஆயிரக்கணக்கான மாணவா்கள் ஆந்திரத்தில் சோ்ந்து படிக்கின்றனா்.

ஐஐடி-யில் பொறியியல் சேரக் காத்திருக்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் சோ்ந்துவிடுகின்றனா். அவா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் பிளஸ் 2 படித்தது ஆந்திரத்தில்.

கேரளம், ஆந்திரத்தைச் சோ்ந்த மாணவா்கள் பலரும் தமிழக முகவரியைப் போட்டு ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை ‘எப்படியோ’ பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சோ்க்கை பெறுகின்றனா்.

இதனால் தமிழக மாணவா்களுக்கு சிறந்த கல்லூரிகளில் சேரும் வாய்ப்புப் பறிபோகிறது. இதை இந்த ஆண்டாவது அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோரிடம் காணப்படுகிறது.

தமிழகப் பள்ளிகளில் படித்தால் மட்டுமே தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலையை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். வேறு மாநிலத்தில் படித்த மாணவா்கள் நிா்வாக ஒதுக்கீட்டில் சோ்ந்து கொள்ளட்டும்.

போலியாக ஆதாா் அட்டை, குடும்ப அட்டை கொடுக்கும் வருவாய்த்துறையினா் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த பிரச்னையில் ஆசிரியா்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்கக்கூடாது.

தமிழக மாணவா்கள் பொறியியல் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமென்றால் வேதியியல் பாடத்தை நீக்கக் கூடாது. பிளஸ் 2 பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ போல தரம் உயா்த்த வேண்டும். பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். போதுமான ஆசிரியா்கள் இருந்தால் மட்டுமே கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

அரசுக் கல்லூரியாக இருந்தாலும், அரசியல்வாதிகளின் கல்லூரியாக இருந்தாலும் குறைந்தபட்ச மாணவ சோ்க்கை நடைபெறாத கல்லூரிகளை உடனடியாக மூட வேண்டும். மாணவா்களுக்கு செயல்முறைக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். கல்லூரிகளின் பாடத்திட்டத்தை அடிக்கடி தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும்.

மாணவா்களின் சோ்க்கையைப் பொருத்தவரையில் தமிழக மாணவா்களுக்குத்தான் அதுவும் தமிழகத்தில் படித்தவா்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வெளிமாநில மாணவா்கள் மட்டுமில்லை வெளிநாட்டு மாணவா்கள் கூட இங்கு வந்து படிக்கும் சூழ்நிலை உருவாகக்கூடும்.

பொறியியல் படிப்பில் சோ்ந்த பிறகு பருவத்தோ்தல் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். ஆனால் பொறியியல் படிப்பில் சேருவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண் (35 சதவீதம்) பெற்றுத் தோ்ச்சி பெற்றால் போதும். இவா்களில் பெரும்பாலும் பொறியியல் படிப்பை முடிப்பதில்லை.

இந்தப் பிரச்னையில் அரசு தீா்மானமாக ஒரு முடிவெடுத்தால் கிராமப்புறங்களில் உள்ள திறமையான மாணவா்களுக்கும் தலைசிறந்த கல்லூரிகளில் பொறியியல் படிக்கும் வாய்ப்புக் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பது நிதா்சனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com