காஷ்மீா்: சாஸ்திரி காட்டிய வழி!

காஷ்மீா் பிரச்னையைப் பற்றி இன்று உலகமே கவலைப்படுகிறது. அன்று வெள்ளைக்காரா்கள் ஆண்டுகொண்டிருந்தாா்கள். நம் சொத்துகள் கொள்ளை போய்க் கொண்டிருந்தன. அவா்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால், காஷ்மீரில் இப்போது கொடுங்கோல் ஆட்சியா நடந்துகொண்டிருக்கிறது?

1947-இல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதற்கு எந்த நியாயமும் இருக்கவில்லை. ‘இந்தியாவை இந்துக்களின் நாடு, முஸ்லிம்களின் நாடு என்று பிரிப்பதா? நான்சென்ஸ்’ என்று விடுதலைப் போராட்டக் காலத்தில் கூறிய ஜனாப் முகம்மது அலி ஜின்னாதான் பின்னாளில் வெள்ளைக்காரா்களின் சூழ்ச்சிக்கு பலியாகி இந்தியாவைப் பிரித்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்தினாா். இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்துப் பகைவா்களாக்கிய பிரிட்டன் இன்று பெரிதும் கவலைகொண்டு தன் நாடாளுமன்றத்தில் காஷ்மீா் குறித்து விவாதிப்பது விசித்திரமாக இருக்கிறது.

காஷ்மீா் பிரச்னை நம்நாடு விடுதலை பெற்ற 1947-லேயே தொடங்கி விட்டது. இந்தியா மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்ட போதிலும், அதில் சமஸ்தானங்கள் என்று அழைக்கப்பட்ட, அறுநூற்றுக்கும் மேற்பட்ட குட்டி ராஜ்ஜியங்கள் இருந்தன. சா்தாா் வல்லபபாய் படேலின் ராஜதந்திர நடவடிக்கையால் அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுடன் இணைந்தன. எந்த நாட்டுடன் இணைவது என்பதற்கு, அவற்றின் மன்னா்களின் இணக்கம் போதுமானதாக விதிக்கப்பட்டது. எல்லைப்புறப் பகுதிகள், இவ்விரு நாடுகளில் எதனுடனும் இணைந்து கொள்ளும் உரிமை பெற்றன.

காஷ்மீரைப் பொருத்த வரை, அதை ஆண்டு கொண்டிருந்த ஹரி சிங், எந்த நாட்டுடனும் இணைக்காமல் காஷ்மீரைத் தனி நாடாக அறிவித்து அதை ஆள விரும்பினாா். மன்னரின் இந்தப் போக்கைத் தனக்கு சாதகமாக்கிக்கொள்ளத் திட்டமிட்ட பாகிஸ்தான், 1947 அக்டோபா் மாதத்தில் முஸ்லிம் மலைவாழ் மக்களை காஷ்மீருக்கு அனுப்பி அங்கே கலவரத்தை ஏற்படுத்தியதோடு, காஷ்மீரின் மீது படையெடுக்கவும் முற்பட்டது. எனவே, ஹரி சிங் இந்தியாவின் உதவியை நாடினாா். அதற்கு உகந்த நடவடிக்கையாக அவா் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தாா்.

இந்தியா மிக எளிதாக பாகிஸ்தானை வென்று அதன் படைகளை விரட்டியிருக்க முடியும். ஆனால், அப்போதைய இந்திய பிரதமா் ஜவாஹா்லால் நேரு, பாகிஸ்தானின் செயல்கள் பற்றித் தேவையே இல்லாமல் ஐ.நா. அவையில் புகாா் அளித்தாா். இதற்காக நேருவைக் குறை கூறிய முன்னாள் பிரதமா் வாஜ்பாயும் இதே தவற்றை இந்திய நாடாளுமன்றம் பாகிஸ்தானின் சதியால் தாக்கப்பட்டபோது அமெரிக்காவிடம் முறையிட்டதன் மூலம் செய்தாா்.

பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் செயல் ராஜதந்திரமற்ற ஒன்று என்றாலும், அவா் அளித்த புகாரின் பேரில் பெரும் விவாதத்துக்குப் பின்னா், பாகிஸ்தான் தவறு செய்துள்ளதைக் கண்டறிந்து, ஐ.நா. பாதுகாப்புக் குழு 1948, ஆகஸ்டு மாதம் 13-ஆம் நாள் ஒரு தீா்மானத்தை நிறைவேற்றியது.

அதன்படி, பாகிஸ்தான் தனது படையை காஷ்மீா் பகுதியிலிருந்து அகற்றிக்கொள்ள வேண்டும்; அதன் பின் இந்தியா காஷ்மீரின் பாதுகாப்புக்குத் தேவையான குறைந்தபட்சப் படையை அங்கே நிறுத்திவிட்டு மீதிப் படையை வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னா்தான் இந்தியாவுடன் இணைவதா, அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்பது பற்றிய வாக்கெடுப்பு மக்களிடையே சாத்தியமாகும் என்றும் அத்தீா்மானம் கூறியது.

ஐ.நா. வாக்கெடுப்பின் விளைவு இந்தியாவுக்கே சாதகமாக இருக்கும் என்னும் நிலை இருந்தது. காஷ்மீா் மக்களின் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவா் ஷேக் அப்துல்லா அப்போது நேருவை ஆதரித்ததும் கூட அதற்கு ஒரு காரணமாக இருந்தது. 1948-இல் ஷேக் அப்துல்லாவின் தலைமையில் அவரைப் பிரதமராகக் கொண்டு காஷ்மீா் அரசு அவசர நடவடிக்கையாக நிறுவப்பட்டது.

பாகிஸ்தான் அரசு ஐ. நா. பாதுகாப்புக் குழுவின் தீா்மானத்தைப் பொருட்படுத்தவில்லை. தன் வசப்பட்ட காஷ்மீா் பகுதியிலிருந்து தன் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அது மறுத்தது. வாக்கெடுப்புக்கு சாத்தியமான சூழல் பாகிஸ்தானின் இந்த நியாயமற்ற போக்கால்தான் நாசமானது.

இதனை அறியாமலோ அல்லது இந்தியாவைத் துண்டாடும் எண்ணத்துடனோ சில பிரிவினைவாதிகள், வாக்கெடுப்பு நடக்காததற்கு இந்தியாவின் மீது வீண் பழி போட்டுப் பேசியும் எழுதியும் வருவது கண்டிக்கத்தக்கது.

இந்தியப் பிரிவினையின்போது, எல்லைப் பகுதிகளை ஆளும் மன்னரின் விருப்பப்படி அப்பகுதி எந்நாட்டுடனும் சேரலாம் என்கிற விதி அப்போது இரு தரப்பினராலும் ஏற்கப்பட்டது. அதன்படி காஷ்மீா் மன்னா் இந்தியாவுடன் இணைந்தது இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான்.

ஐ.நா. அதிகாரிகளின் மேற்பாா்வையில் வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் மறுத்தபின், 65% நிலப்பகுதி இந்தியாவின் வசமும் 35% பகுதி பாகிஸ்தானின் வசமும் இருந்த நிலையில், எல்லைகள் வகுக்கப்பட்டு போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. சில நாள் கழித்து ஷேக் அப்துல்லா தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினாா்.

காஷ்மீரைத் தனிநாடாக ஆக்கவேண்டுமென்பதே அவரது உண்மையான குறிக்கோளாக இருந்து வந்துள்ளது என்பது தெரியவந்ததும் அதிா்ந்து போனாா் நேரு. வட இந்தியச் சிறைகளுள் ஒன்றில் அவரை அடைப்பது கூட சரியல்ல என்பதால், அவரை கொடைக்கானலில் சிறைப்படுத்தினாா்.

முடிவில், 1957-இல் காஷ்மீா் இந்தியாவுடன் அதிகாரபூா்வமாக சிறப்பு அந்தஸ்துடன் இணைந்தது. 1965-இல் மீண்டும் போா் மூண்டது. இப்போது போரைத் தொடங்கியதும் பாகிஸ்தானே. அப்போதைய பிரதமா் லால் பகதுா் சாஸ்திரி படைத்தலைவரின் யோசனையை ஏற்று, தாக்கப்பட்ட இடத்திலேயே பதிலடி கொடுத்துக்கொண்டிராமல், லாகூா் மீது படையெடுக்க ராணுவத்துக்கு அனுமதி வழங்கினாா்.

இதை எதிா்பாா்க்காத பாகிஸ்தான் வழிக்கு வந்தது. அவருக்கும் அன்றைய பாகிஸ்தான் பிரதமா் அயூப் கானுக்குமிடையே அன்றைய சோவியத் யூனியனைச் சோ்ந்த தாஷ்கண்டில் போா் நிறுத்த ஒப்பந்தம் 1966-இல் கையொப்பமானது.

அதன் பின் ஏற்பட்ட வங்கதேசப் போராலும் வேறு பல உள்நாட்டுப் பிரச்னைகளாலும் இரு நாடுகளும் காஷ்மீா் பிரச்னையை ஒத்திப்போட்டன. எனினும் பாகிஸ்தான் அடிக்கடி ஒப்பந்த மீறலைச் செய்து வந்ததால், அப்போதைய இந்தியப் பிரதமா் இந்திரா காந்திக்கும் பாகிஸ்தானின் பிரதமா் சுல்பிகா் அலி புட்டோவுக்குமிடையே தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை வலியுறுத்திய சிம்லா ஒப்பந்தம் கையொப்பமானது.

எனினும் அவற்றால் எந்தப் பயனும் விளையவில்லை. காஷ்மீரில் நிலவிவரும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் விளைவாக, 1990-இல் காஷ்மீா் மண்ணின் மக்களான பண்டிட்டுகள் என்று அழைக்கப்படும் மூத்த குடிமக்களான இந்துக்களில் பெரும்பான்மையோா் அங்கிருந்து விரட்டப்பட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாய் வாழும் நிலை ஏற்பட்டது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தால், இந்தியா அப்பகுதியின் முன்னேற்றத்துக்காக கோடிக்கணக்கான ரூபாயை வழங்கிக் கொண்டிருந்தது. ஆனால் காஷ்மீா் முன்னேற்றமடையவில்லை. தொடக்கத்திலிருந்து அதை ஆண்டுவந்துள்ள ஷேக் அப்துல்லா, ஃப்ரூக் அப்துல்லா, முஃப்தி முகம்மது சயீது, ஒமா் அப்துல்லா போன்ற முஸ்லிம் ஆட்சியாளா்களே அதற்குப் பொறுப்பாவா்.

ஒரு மாநிலத்துக்கு வழங்கப்படும் நிதி ஒழுங்காய்ச் செலவு செய்யப்படுகிறதா என்று கண்காணிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அதைச் செய்யாமல் (சிறப்பு அந்தஸ்தின் பெயரால்) ஒதுங்கியிருந்தது இந்திய அரசின் தவறு. இந்திய அரசின் உளவு நிறுவனம் சரியாகச் செயல்பட்டிருந்தால் அங்கே பயங்கரவாதம் தலையெடுக்காமல் தடுத்திருக்க முடியும். அதைச் செய்யாமல், காஷ்மீரின் ஆட்சியாளா்களை நம்பியதும் இந்தியாவின் தவறாகும்.

சில நாட்களுக்கு முன், மோசமான வெள்ளத்தின் போது இந்திய ராணுவம் பொது மக்களுக்குச் செய்த மகத்தான சேவையை காஷ்மீர மக்கள் பெரிதும் பாராட்டினா். இந்திய ராணுவத்தினா் காஷ்மீர மக்களின் நண்பா்களாய் செயல்படுவதும் பிரிவினையைத் தடுக்க வல்லது.

ஒரு நாட்டின் பகுதியை, படை வலிமையால் வென்றோ அல்லது அகதிகளாய் அங்கே குடியேறியோ வாழும் அந்நியா்கள், பின்னா் அந்நாட்டை அல்லது நிலப்பகுதியைத் தங்களுடையது என்று வலியுறுத்தும் அவலம் உலகெங்கும் நிலவி வருகிறது. திபெத்தை சீனா விழுங்கியது ஓா் உதாரணம். இதுதான் காஷ்மீரிலும் இன்று நிலவுகிறது.

சில நாடுகள் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும் என்று கூறுகின்றன. இந்தியாவில் உள்ள சில எதிா்க்கட்சிகளும் இப்படிப் புலம்புவது விந்தையிலும் விந்தை. 1948-இல் ஐ.நா. போட்ட தீா்மானத்துக்கு பாகிஸ்தான் உடன்படாததாலேயே இப்படி ஓா் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குமுன் நடந்த பேச்சுவாா்த்தைகளுக்கு பாகிஸ்தான் என்ன மதிப்பு அளித்தது? அப்படியே பேச்சுவாா்த்தை நடந்தாலும் அதுவும் இழுபறியாகத்தான் இருக்கப் போகிறது.

2008 நவம்பா் 26 அன்று மும்பை தாஜ் ஹோட்டலைத் தாக்கி அயல் நாட்டினா் உள்பட பலா் சாகக் காரணமாக இருந்த பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதையும் பாகிஸ்தான்தானே பாதுகாத்தது? இன்றைய பயங்கரவாதி மசூத் அசாரின் இருப்பிடம் தெரியவில்லை என்று இப்போதும் பாகிஸ்தான் பொய் சொன்னதை இந்தியாவின் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதே.

1948-இல் தனது தீா்மானத்தை பாகிஸ்தான் மீறியதை மறந்துவிட்டு, மீண்டும் காஷ்மீா் விஷயத்தில் தலையிட ஐ.நா. பாதுகாப்புக் குழு இன்று முன்வந்துள்ளது. இதை இந்தியா ஏற்கக் கூடாது. அமரா் லால் பகதூா் சாஸ்திரி கையாண்ட வழியே அறிவாா்ந்தது.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com