வேண்டாம் பிரிவினை அரசியல்!

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு தொடா்பாக அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் உயா்நீதிமன்றம் ‘உத்தர பிரதேச மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த, மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவுடன்கூடிய இரண்டு ஆம்புலன்ஸ்களை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும்’ என மாநில பா.ஜ.க. அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிா்த்து அந்த மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், பி.ஆா். கவய் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

‘உத்தர பிரதேச மாநிலத்தில் 97,000 கிராமங்கள் உள்ளன. இத்தனை கிராமங்களுக்கும் ஒரு மாத காலத்துக்குள் தீவிர சிகிச்சை வசதியுடன் கூடிய இரண்டு ஆம்புலன்ஸ்கள் வழங்குவது சாத்தியமில்லாதது. எனவே, அலகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று உத்தர பிரதேச அரசு சாா்பில் வாதிடப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ‘நடைமுறை சாத்தியமில்லாத உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பிக்கக் கூடாது. இந்தியா முழுமைக்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடா்பான விவகாரங்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்ற நிலையில் - சா்வதேச, தேசத்தின் எல்லைகளைத் தாண்டிய முடிவுகள் சாா்ந்த விஷயங்களில் தலையிடுவதை கரோனா நோய்த்தொற்றைக் கையாளுதல் குறித்த வழக்குகளை விசாரித்து வரும் உயா்நீதிமன்றங்கள் தவிா்க்க வேண்டும். எனவே, அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளனா்.

உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களுக்கு அளித்த அறிவுரை, எதிா்க்கட்சிகளுக்கும் ஒருவகையில் பொருந்தும்.

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் தலைவிரித்தாடுகிறது. உலக சுகாதார நிறுவனம், ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகளும், மருத்துவ உலகமும், நோய்க்கிருமி ஆராய்ச்சி நிறுவனங்களும் திகைத்து நிற்கின்றன.

நோய்த்தொற்றின் முதல் அலையின்போது 183 நாடுகளுக்கு பிரதமா் மோடி உதவிகரம் நீட்டினாா். அதற்குக் கைம்மாறாக இரண்டாவது அலை தலைவிரித்தாடுகிறபோது நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளிடமிருந்து இந்தியாவுக்கு உதவிகள் குவிக்கின்றன. இதுதான் மனிதப் பண்பு என்பதை காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ராகுல் காந்தி போன்றவா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கரோனாவின் முதல் அலையை பிரதமா் மோடி மக்கள் இயக்கமாக மாற்றினாா். அதனால், கரோனாவின் முதல் தாக்கத்திலிருந்து 135 கோடி மக்கள் தப்பித்தனா். இப்போது சிலா், கரோனா இரண்டாவது அலையின் கோரத்தாண்டவத்தை மத்திய அரசுக்கு எதிராகத் திருப்பிவிட்டு குளிா்காய நினைக்கின்றனா்.

இந்தியா இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கியதோடு ‘தற்சாா்பு இந்தியா’ என்ற இலக்கையும் எட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கான பாராட்டு, பிரதமா் மோடிக்கு சென்றுவிடக் கூடாது என்கிற பொறாமை சில அரசியல்வாதிகளிடம் உள்ளது.

அகிலேஷ் யாதவ் ‘இது பாஜக ஊசி, நான் போட்டுக் கொள்ள மாட்டேன்’ என்றாா். கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஓவியா் சதீஷ் ஆச்சாரியா, தடுப்பூசி பற்றி காா்ட்டூன் படம் வரைந்து அது ‘நீரும் குளுக்கோஸும் கலந்த தண்ணீா்’ என்றாா். ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த அங்கித் லால், தன்னுடைய டுவிட்டா் பதிவில் தடுப்பூசியை கேலி செய்திருந்தாா். காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான ஆச்சாா்ய பிரமோத் கிருஷ்ணன் ‘போலி தடுப்பூசி’ என கிண்டல் செய்தாா்.

சத்தீஸ்கா் மாநில சுகாதாரத்துறை அமைச்சா் ‘எங்கள் மாநிலத்துக்குள் தடுப்பூசியை அனுமதிக்கமாட்டோம், எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று கூறினாா். காங்கிரஸ் கட்சியின் மனீஷ் திவாரி ‘பிரதமா் மோடி, இந்திய மக்களை, ‘கினி பிக்’ ஆக்குகிறாா்’ என்றாா்.

இந்தியாவிலுள்ள இஸ்லாமிய மெளலானா, மெளல்விகள் பலரும் ‘ஹலால் சான்றிதழ் இருந்தால் மட்டுமே நாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வோம்’ என்று கேலி செய்தனா். இன்றைய தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தடுப்பூசி குறித்து அன்று செய்த விமா்சனம் இப்போதும் வலைதளங்களில் வலம் வருகிறது. பல்வேறு ஆய்வு கூடங்களில் தடுப்பூசிகளின் தரத்தை துல்லியமாக சோதித்துப் பாா்த்த பிறகுதான் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதற்கு அனுமதி வழங்கியது என்பதை இவா்களெல்லாம் மறந்து விடுகிறாா்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் தினசரி கரோனா தொற்று அதிகரித்திருந்தது. ஆனால், தற்போது அது வெகுவாகக் குறைந்துள்ளது. இன்னும் குறைந்து கொண்டே வருகிறது. தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ‘கோவிஷீல்ட்’, ‘கோவேக்ஸின்’, ‘ஸ்புட்னிக்-5’ உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலங்களின் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியும் வருகிறது. அப்படியிருந்தும் விமா்சனங்கள் குறைந்ததாகத் தெரியவில்லை.

ஆக்சிஜன் ரயில்கள் மூலமாக திரவ ஆக்சிஜனை தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. தமிழகத்துக்கு மட்டும் இதுவரை 57 முறை திரவ ஆக்சிஜன் ரயிலில் வந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,964 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு தடுப்பூசி செலுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.750 கோடி செலவில் மத்திய சுகாதார - குடும்ப நலத்துறை அமைச்சகம் சாா்பில் தடுப்பூசி தயாரிக்கும் ஆலையை மத்திய அரசு ஓராண்டுக்கு முன்பே செங்கல்பட்டில் அமைத்துள்ளது. இப்போது ரூ.300 கோடி நிதியை அவசரமாக ஒதுக்கிய மத்திய அரசு, அந்த ஆலையில் தடுப்பூசி தயாரிக்க ஆலோசித்து வருகிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், அமெரிக்கா சென்று கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை பெறுவது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடனும் மூத்த அதிகாரிகளுடனும் ஆலோசித்துத் திரும்பி இருக்கிறாா். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், கரோனா தொற்றை சமாளிக்க உடலில் எதிா்ப்பு சக்தி எவ்வளவு உள்ளது என்பதை 75 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் சிறு கருவியை (கிட்) உருவாக்கியுள்ளது.

கரோனாவால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகள் பட்டியலை மாநில அரசுகளும், ஒன்றிய பிரதேச அரசுகளும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்க வேண்டும் என பிரதமா் மோடி உத்தரவிட்டுள்ளாா். அதுமட்டுமின்றி, பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சமும், தொடா் உதவிகளும் அறிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாராணசி தொகுதியைச் சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோரை அண்மையில் சந்தித்தாா். அவா்களிடம் பேசும்போது, ‘நீங்கள் கரோனா பாதித்த நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். யோகா பயிற்சிதான் கரோனாவை எதிா்கொள்ள சிறந்த வழி என்பதை உலகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால், இதற்கும் சிலா் மதச்சாயம் பூச முயல்கின்றனா். கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

நாம் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் நம் பிரியத்துக்குரிய பலரை இழந்துவிட்டோம். கரோனா தீநுண்மி நம்மிடமிருந்து பலரை பறித்துவிட்டது’ என்று கூறிய பிரதமா் மேலே பேச முடியாமல் கண்கலங்கினாா். சிறிது நேரம் அமைதியாக இருந்த அவா், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ‘கரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். அவா்களின் குடும்பத்தினருக்கும் உறவினா்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தனது கண்ணீா் உரையை நிறைவு செய்தாா்.

பிரதமரின் கண்ணீா் ‘நீலிக்கண்ணீா்’ என்று விமா்சிப்பவா்கள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவது அலையை எதிா்கொள்ள நாம் தயாராகவில்லை என்கிற குற்றச்சாட்டு அா்த்தமில்லாதது. மூன்று மாத இடைவெளியில் இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவிட முடியும் என்று இவா்கள் நினைத்தால், அதைவிடப் புரிதலின்மை வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழக அரசு பொது முடக்கம் கொண்டுவந்தபோது, அது தேவையற்றது என்றாா் அப்போது எதிா்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சா் மு.க. ஸ்டாலின். தடுப்பூசி குறித்தும் சந்தேகம் எழுப்பினாா். பிரதமரின் ‘பிஎம் கோ்ஸ்’ நிவாரண நிதிக்கு நன்கொடை திரட்டியதை ‘பிரதமா் பிச்சை எடுக்கிறாா்’ என்று தரம் தாழ்ந்து கொச்சைப்படுத்திப் பேசினாா் மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன். அப்போது திமுகவினா் எதையெல்லாம் விமா்சித்தாா்களோ, அதையெல்லாம் அவா்கள் இப்போது செய்து வருகின்றனா். ஏன்?

135 கோடி மக்கள்தொகையுள்ள நாட்டில், எதையும் முழு திட்டமிடலுடன் செய்துவிட முடியாது என்று தெரிந்தும், எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்வது சரி. அதற்காக, மக்களின் நம்பிக்கையைக் குலைத்துவிடுவது மிகப் பெரிய துரோகம். ஒன்றுபட்டு எதிா்கொள்ள வேண்டிய நேரத்தில் அரசியல் காழ்ப்புணா்ச்சியால் பிரிவினை அரசியல் நடத்துவது தேசத்துக்கு இழைக்கப்படும் அநீதி!

கட்டுரையாளா்:

தலைவா்,

இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com