உழைக்கத் தொடங்குவோம்

அரசின் அறிவுரைகளைக் கடைப்பிடிக்காத  சுமார் 20 விழுக்காட்டு மக்கள் உள்ளனர்.  இவர்களால்  அரசின் ஆணைகளை கடைப்பிடித்து, பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து  இருக்கும்  80 விழுக்காட்டு மக்களின் வாழ்க்கை



இன்றைய கரோனா தீநுண்மி காலத்தில் பெருந்தொற்றின் சங்கிலியைத் துண்டிக்க நினைக்கும் அரசின் முயற்சிகள் நீண்டுகொண்டேயிருக்கின்றன. ஆனாலும், அரசின் அறிவுரைகளைக் கடைப்பிடிக்காத  சுமார் 20 விழுக்காட்டு மக்கள் உள்ளனர்.  இவர்களால்  அரசின் ஆணைகளை கடைப்பிடித்து, பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து  இருக்கும்  80 விழுக்காட்டு மக்களின் வாழ்க்கை  கேள்விக்குறியாகி வருகிறது. 

கரோனா தீநுண்மிப் பரவல் இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. சுமார் 23 கோடி இந்திய மக்களை வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளி உள்ளது. அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் அவதிப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் மக்களை காப்பாற்றும் ஒரே நோக்குடன் கடமையாற்றுவது மிகவும் பாராட்டுக்குரியது. மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைத்ததன் விளவு,  பெருந்தொற்றின் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 

மருத்துவர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம். நாம் அனைவரும் அந்த தியாகச் சீலர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். தற்போது மத்திய அரசும் மாநில அரசுகளும் எடுத்து வரும் முயற்சிகளால்  விரைவில் இந்தியப்பொருளாதாரம் நல்ல நிலைக்கு மீண்டு வரும். அரசின்  நடவடிக்கைகளுக்கு மக்கள் தரும் பூரண ஆதரவு மட்டுமே இதை சாத்தியமாக்கும்.

நமது சமூகம் இயற்கையின் மாண்பினையும் சமநிலையையும் காப்பதில் அலட்சியமாக இருந்து வருகிறது. இது  ஒரு கசப்பான உண்மை. தற்போது கூட கரோனா தீநுண்மியின் தாக்கம்  நகர்புறங்களில்தான் அதிகம் என்பதை நாம் உணரவேண்டும். இனியாவது மக்களின் மனநிலை மாற வேண்டும். நகரங்களில் மக்கள்தொகை குறைந்து, மக்கள் கிராமங்களில் வாழத்தலைப்பட வேண்டும். அவர்களுக்கான வேலைவாய்ப்பினையும் வாழ்வாதாரத்தினையும் கிராமங்களில் விவசாயப்பணியில் உருவாக்கிக் கொள்ள முன்வர வேண்டும். அரசின் கொள்கைகளில் அதற்கேற்ற நடைமுறைகள் கொண்டு வரப்படவேண்டும். 

நகர்ப்புறங்களில் கிடைக்கும் எல்லா சேவைகளும் கிராமங்களிலும் கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும். நகரங்களை கிராமங்களுடன் முறையான போக்குவரத்து வசதிகளுடன் இணைக்க வேண்டும். தகவல் தொழில் நுட்ப வசதிகள் கிராமங்களிலும் தடையின்றி கிடைக்க செய்யவேண்டும். மேலை நாடுகளில் உள்ளதைப் போன்ற அறிவியல் தொழில் நுட்ப வசதிகள், விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். 

தேச நிர்மாணப்பணிகளில் இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைவரும்  ஈடுபடவேண்டும். "கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது' என்ற மகாத்மா காந்தியின் கூற்று உண்மையாகவேண்டும்.

இளைஞர்கள் அனைவருக்கும் அரசுப்பணி இன்றைய நிலையில் சாத்தியமல்ல. அரசுப்பணி வந்தால் ஏற்கலாம். அதுவரை புதுப்புது முயற்சிகளில் இறங்க இளைஞர்கள் முன்வரவேண்டும். இளைஞர்கள் தனியாகவோ நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாகவோ அனுபவமும் திறமையும் உள்ள தொழில் ஒன்றைத் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பினை வழங்கலாம். கிராமப்புறத்தில் மேற்கொள்ளப்படும் இவ்வகை முயற்சிகளுக்கு  வங்கிகள் கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கலாம். 

கிராம மகளிர் சுய உதவி குழுக்கள் இது சார்ந்து முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் நல்ல விளைவுகளைக் காண முடியும். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் தமது பொருளாதார பங்களிப்பை ஏதாவது ஒரு வகையில் நல்க வேண்டும். ஒவ்வொரு மணித்துளியும் நேர்மையான உழைப்பைக்கொண்டு பணம் ஈட்ட முயற்சிக்க வேண்டும். முயற்சிகள் தவறலாம்.ஆனால் முயல்வதற்குத் தவறக் கூடாது.

ஏற்கெனவே மாத சம்பளம் பெற்று வருவோரின் நிலைமையையும் கூர்ந்து நோக்க வேண்டும். அவர்களில் பலருக்கு தமது  பழைய பதவிகள் பறிபோயிருக்கலாம். அல்லது வாங்கும் சம்பளம் கணிசமாகக் குறைந்திருக்கலாம். அவர்களில் சிலர் தமது அனுபவங்களைப் பயன்படுத்தி  தாமும் முதலாளியாக மாறி வாழ்வில் வளம் பெற இந்த சவாலான நேரத்தைப்  பயன்படுத்திக்கொள்ளலாம்.  நாட்டு உற்பத்தியை பெருக்குவதில் நமது பங்களிப்பை அளிக்கத் தொடங்கலாம். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.     

கிராமங்களில் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கி முறையாக சந்தைப்படுத்தலாம். அவ்வாறு செய்யும்போது உள்ளூர் சந்தையே நமக்கு தொடக்கத்தில் கைகொடுக்கும். இதனால் உள்ளூர் பணியாளர்களையும் பயன்படுத்திக் கொள்ள இயலும். இது உள்ளூர் மக்கள் வேலைதேடி வெளியூர் போகும் அவல நிலையை மாற்றும். செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். 

நாம் பெறும் இலவசங்கள் அனைத்தும் இலவசமல்ல. நாம் செலுத்தும் வரிப்பணத்திலிருந்துதான் அரசு அச்செலவினங்களை ஈடுகட்டுகிறது. இவ்வாறான இலவச உதவிகள் நம்மை நெடுநாள் சுணக்கத்தில் தள்ளிவிடும். அவை நிரந்தரத் தீர்வாக நம் நல்வாழ்வுக்கு அமையாது. நாட்டின் நிதிச்சுமையை குறைக்க வேண்டியது நம் அனைவருடைய பொறுப்பு. எளிமையான, சிக்கன வாழ்க்கை, மனிதம் காத்தல், கடுமையான உழைப்பு, பரஸ்பர உதவி போன்றவை உயிரோட்டம் பெற வேண்டும்.

வறுமை நம்வாழ்விலிருந்து மறையட்டும். வளமைக்கான வாசல்கள் திறக்கட்டும். இந்திய சந்தை உற்பத்திக் களமாக மாற வேண்டியது உடனடித் தேவையாகும். ஏற்றுமதி பெருக வேண்டும்; இறக்குமதி குறைய வேண்டும். "வாழு வாழ விடு' என்கிற தத்துவத்திற்கேற்ப அனைவரையும் வாழ விடுவோம்;  நாமும் வாழ்வோம். இந்தப் பெருந்தொற்றுக் காலம் மனிதர்களைத் தனித்திருக்கச் செய்துள்ளது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உழைக்கத் தொடங்குவதுதான் தற்போதைய தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com