தேசத்தின் தேவை சட்டத்தின் ஆட்சியே!

அந்நிய மன்னர்களின் ஆட்சிகளிலிருந்து இந்தியா விடுதலைபெற்ற பிறகு பாரத மக்களாகிய நாம், நமக்கு நாமே அரசியல் சட்டம் ஒன்றையும் வழங்கிக் கொண்டோம்.

அந்நிய மன்னர்களின் ஆட்சிகளிலிருந்து இந்தியா விடுதலைபெற்ற பிறகு பாரத மக்களாகிய நாம், நமக்கு நாமே அரசியல் சட்டம் ஒன்றையும் வழங்கிக் கொண்டோம். அதன்படி, தேர்தல் மூலமாக ஜனநாயக ஆட்சியை 1952 முதல் நிறுவி வந்துள்ளோம்.

மக்களாட்சி முறை நடைமுறைக்கு வந்தாலும், அரசியல் கட்சிகளில் வாரிசுகளும் தோன்றத் தொடங்கினர். வாரிசுமுறை மன்னராட்சிக்கு உரியதே தவிர, மக்களாட்சிக்கு உரியதல்ல. வாரிசுகளோ தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பதால், ஜனநாயகம் வாரிசுகளைச் சகித்துக்கொள்ள நேர்ந்தது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 450-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளிலும், அங்கீகரிக்கப்படாத 400-க்கும் அதிகமான அரசியல் கட்சிகளிலும் வாரிசுகள் வளர்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளிலும், பாரதிய ஜனதா கட்சியிலும்தான் வாரிசு அரசியல் தலையெடுக்க முடியவில்லை.

வாரிசு ஆட்சியைப் போல மற்றுமொரு இழிவான வழு, கட்சித் தலைமைக்கு இணையான இன்னொரு தலைமைக்கு இடம்தராத ஆதிக்க மனப்போக்காகும். இதன் மாற்றுப் பெயர் சர்வாதிகாரம். இந்திய அரசியல் தலைவர்களிலேயே வாரிசு அரசியலைக் கருவிலேயே கருக்கிய தலைவராக காந்திஜி பிரகாசிக்கிறார். வேறு சில தலைவர்கள் மங்கலாகத் தெரிகிறார்கள். 
கட்சித் தலைமையைக் கைப்பற்றுவது "கெட்டிக்காரத்தனம்' எனப் பேசப்படுகிறது. மாற்றுக் கட்சிக்குத் தொண்டர்கள் போய்விடுவதைத் தடுப்பதற்காகத்தான், கட்சித் தலைமை கடுமையாக நடந்து கொள்வதாகவும் சித்திரிக்கப்படுகிறது. ஆனாலும் கட்சிக்குள் அதிருப்தியாளர்கள் தளும்பத் தொடங்கி, அதனால் பலர் தப்பிச் சென்று பிற கட்சிகளிடம் தஞ்சமடைவது நிகழ்கிறது.

அதிருப்தியடைந்த அத்தகையவர்களுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல்களை சந்தித்து வென்றவர்களும் உண்டு. அதில் சமரசமாகிப் பலன் பெற்றவர்களும் உண்டு. கட்சித் தலைமை அத்தகைய சேதாரத்தை உணரத் தொடங்கிவிட்டால், கட்சியின் வெற்றிக்காகவென பழிபாவங்களைச் செய்வதற்குக்கூடத் தலைமை தயங்குவதில்லை. 
இந்தப் பின்புலத்தில் இந்தியாவில் மே மாதம் வெளியான ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் விளைவுகளை உற்றுக் கவனிப்பது அவசியமாகிறது. கேரளத்தில் எதிர்பார்த்த ஆட்சிமாற்றம் நிகழவில்லை. முந்தைய மார்க்சிஸ்ட் ஆட்சியே தொடர்ந்தது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. 

தமிழ்நாட்டில் மிகவும் எதிர்பார்த்த திமுக ஆட்சியே உருவானது. பகீரத பிரயத்தனம் செய்தும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாத, அதிமுக கூட்டணி ஆட்சியை இழந்தது. ஆனாலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. புதுச்சேரியிலும் ஆட்சி மாறியது. அசம்பாவிதம் எதுவும் இல்லை. அஸ்ஸாமில் முந்தைய ஆட்சியே தொடர்ந்தது. அசம்பாவிதம் எதுவும் இல்லை.

மேற்குவங்கத்தில் மட்டும் ஏனோ தேர்தல் நடந்தபோதே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. நான்கு பேர் பலியானார்கள். இதற்காக மாநில முதல்வர் தேர்தல் ஆணையத்திற்குக் கண்டனம் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் எட்டு தவணைகளில் தேர்தல் நடத்தியதை சதியென்றே முதல்வர் குற்றம்கூறி வந்ததும் நினைவுக்கூரத் தக்கது.

தேர்தல் நேரத்தில் காலில் கட்டுப்போட்டுக் கொண்டு, சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே வாக்காளர்களின் அனுதாபத்தைப் பெற்ற ஆளும்கட்சி தலைமையின் சாதுரியத்தைப் புத்திசாலிகள் புரிந்து கொண்டனர். பாமரர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனது.

ஆளும்கட்சியை விட்டு அவசரகதியில் விலகிய அதன் முக்கிய தலைவர்கள், பிரதான எதிர்க்கட்சியில் சேர்ந்து கொண்டது ஆளும்கட்சிக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. தேர்தலில் நந்திகிராம் தொகுதியில்  மாநில முதல்வருக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வி, அந்த ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது.
மாநிலத்தில் அமோகமாக வெற்றி பெற்றாலும் நந்திகிராம் தொகுதி தோல்வியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அவமானமாகக் கருதியது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஆளும்கட்சிக்குக் கிடைத்த அதீத வெற்றி அதனை நிதானம் இழக்கச் செய்தது. அதனால் அது கட்டவிழ்த்துவிட்ட வன்முறை சம்பவங்கள் மிகவும் கொடூரமானவை. 

மாற்றுக் கட்சியினர் பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பெண்களில் பலர் பாலியல் கொடுமைக்கு உள்ளானார்கள். 16 பேர் பலியானார்கள். பலர் ஊரைவிட்டே இடம்பெயர்ந்து அஸ்ஸாம் முதலிய பக்கத்து மாநிலங்களில் அடைக்கலம் ஆனார்கள். 
பலர் மருத்துவமனைகளில் சிகிச்சையின்றிக் கிடந்தனர். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய முதல்வரோ மெüனம் காத்தார். மாநிலக் காவல்துறையோ கண்களை மூடிக் கொண்டது. அமோகமாக வெற்றிபெற்ற கட்சிக்கு இவையெல்லாம் அவசியமே இல்லை. ஆனாலும் ஒருவித ஆத்திரத்தில் தலைமையானது தனது தோல்விக்குப் பழிவாங்கிக் கொண்டது போலவே இவை நிகழ்ந்துவிட்டன. 

மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகச் சென்று பார்வையிடுவதற்குத் தயாரானார். மாநில முதல்வர் அதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். ஆனாலும் அதையும் மீறி அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  "ஆளுநரே திரும்பிப் போ' என ஆளும்கட்சித் தொண்டர்கள் முழக்கமிட்டனர். ஆனாலும் ஆளுநர் பின்வாங்கவில்லை. அஸ்ஸாமில் அடைக்கலமாயிருந்த கூச் பிகார் மக்களை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். இந்த நிலையில் ஒரு கடிதம் வெளியானது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயர்அதிகாரிகள், காவல்துறை தலைவர்கள், வழக்குரைஞர்கள் என 146 பேர், நடந்த வன்முறைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று குடியரசுத் தலைவருக்குக் கூட்டாகக் கடிதம் ஒன்றை மே 27-ஆம் தேதி எழுதி அனுப்பினார்கள். இக்கடிதம் நாளேடுகளிலும் வெளியானது. 

இதேபோல உச்சநீதிமன்றமும் மேற்கு வங்க அரசுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. மேற்கு வங்க அரசோ, இவற்றையெல்லாம் கட்டுக்கதைகள் என்றும், கோமாளித்தனம் என்றும் உதாசீனப்படுத்தியதே தவிர, உரிய கவனம் செலுத்தவில்லை. 

இங்கே குறிப்பிட வேண்டியது, ஆட்சிமாற்றம் ஏற்பட்ட ஏனைய நான்கு மாநிலங்களில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாத நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் இப்படி நிகழ்ந்தது ஜனநாயகம் ஆகுமா? 
அக்கடிதத்தை எழுதிய 146 பேரும் பாஜக-வை சேர்ந்தவர்கள் அல்ல. ஜனநாயகத்தைப் பேணிக் காப்பதுதான் இந்தியாவின் இறையாண்மைக்குப் பெருமை. சர்வாதிகாரத்திற்கு மாறுவேடமிட்டு ஜனநாயகமாகக் காட்சிப்படுத்துவதைச் சகித்துக்கொள்ள முடியாது. அநாகரிகத்தின் இந்த உச்சத்தை அனுமதிக்கலாமா?

2011-இல் மேற்கு வங்க முதல்வராக இருந்த புத்ததேவ் பட்டாச்சாரியா, மாநிலத்தில் இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பைத் தருவதற்காக, வர்க்க முரண்பாட்டை மறந்து, தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு, நானோ கார் தொழிற்சாலையைக் கொல்கத்தாவில் தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தார். 
தொழிற்சாலை தொடங்க அரசே நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுத்தது. இந்த நன்மை செய்த வங்க அரசு, இதற்கு இணையான தீமை ஒன்றையும் செய்துவிட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் ஏழை விவசாயிகளின் நிலங்களும் இடம்பெற்றன. நிலத்தை இழந்த ஏழை விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுக்கு மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் மறைமுக ஆதரவும் இருந்தது. 

இதைச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர், டாட்டா நானோ கார் தொழிற்சாலையை மூடி விவசாய நிலங்களை விடுவித்தார். அதனால் பிரபலமடைந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை 2011-இல் நிறுவினார். 
2016 தேர்தலிலும் ஆட்சி தொடர்ந்தது. 2019-இல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்குக் கிடைத்த 18 எம்.பி.-க்களின் ஆச்சரியமான வெற்றியானது, பாஜக-வை மாநில ஆட்சியைக் கைப்பற்றத் தூண்டிவிட்டது. அதன் விளைவாகத்தான் மாநில திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கும், மத்திய ஆட்சிக்கும் மோதல் வலுத்தது. 

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒரு சவாலாகவே சந்தித்தது. அத்தேர்தலில் தலைமைக்குத் தனிப்பட்ட தோல்வியும், கட்சிக்கு அமோக வெற்றியும் கிடைத்தன. அதுதான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமையை நிதானம் இழக்கச்செய்து அசம்பாவிதங்கள் ஏற்படக் காரணமாகியது. 

கலவரத்தால் பாதிக்கப்பட்ட வங்க மக்களுக்காக முதல்வர் வருத்தப்படவில்லை. மாறாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சி அப்போது ஆட்சியில் இல்லையென்றும், தேர்தல் ஆணையத்தின் வசம்தான் சட்டம் ஒழுங்கு இருந்தது என்றும் சாமர்த்தியமாக வாதித்தார்.
இந்தியாவின் தேர்தல் ஆணையத்தை பிறநாட்டு அரசுகள் அணுகி, தங்கள் நாடுகளிலும் இந்தியாவைப் போல நேர்மையானத் தேர்தலை நடத்தித் தருமாறு கேட்டுக் கொண்டதை இத்தருணத்தில் நினைவுகூர்வது நமது கடமையாகும்.

இந்தியாவின் ஜனநாயக மாளிகை எதன் பொருட்டும் இடிந்துவிடக் கூடாது. தலைவர்கள் எத்துணை பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் அவர்கள் நிரந்தரமானவர்கள் அல்ல; தேசம்தான் நிரந்தரமானது. தேசத்திற்குத் தேவை சட்டத்தின் ஆட்சிதான். 

கட்டுரையாளர்:

பத்திரிகையாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com