தேர்வில்லாமல் தேர்ச்சிதான் ஒரேவழி!

 கடந்த ஓராண்டாக உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்திய கரோனா தீநுண்மி பரவலால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் முழுமையாக இயங்க இயலாமல் போயின. இது ஏறக்குறைய இடைநிற்றலுக்கு சமம். இந்த நிலையில், மாணாக்கர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது, அவர்கள் மனத்தளவிலும் சோர்ந்துவிடக்கூடாது என்கிற நல்ல நோக்கத்தின் அடிப்படையில், 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
 கரோனா தீநுண்மி பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், பெருந்தொற்றுப் பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் கரோனா தீநுண்மியை ஒழிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளையும், பாதுகாப்புப் பணிகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தன.
 அதனைத் தொடர்ந்து அதனுடைய தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதிலும், கரோனா தீநுண்மி பரவல் குறித்தான விழிப்புணர்வு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கைகளை அடிக்கடி தூய்மி (சானிடைசர்) அல்லது சோப் போட்டு கழுவி சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே காரோனா தீநுண்மியின் பரவலைத் தடுக்க முடியும், முடக்க முடியும் என அழுத்தமான பரப்புரை மேற்கொள்ளப்பட்டும் பெரும்பாலானோர் கரோனாவின் ஆபத்தை உணராமல் அலட்சியத்துடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
 இதனால், மாணவர்களுடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததோடு, மாணவர்கள் வீடுகளில் இருந்தே இணைய வழியில் கல்வி கற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் 11-ஆம் வகுப்பிற்கான விடுபட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஆண்டும் இந்த நிலையில்தான், மாணவர்கள் தேர்வில்லாமலே தேர்ச்சி அடைந்தனர்.
 இந்த ஆண்டு கடந்த ஆண்டைப் போன்ற நிலை நீடிக்காது என்கிற நிலையில், தேர்வுகளை நடத்தி விடலாம் என்பதற்கான சூழலுக்காகவே மாநில அரசு காத்திருந்தது. அதனை கருத்தில் கொண்டே, இவ்வாண்டுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வந்தன.
 கரோனா தீநுண்மி பரவலும் குறைந்துதான் இருந்தது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதன் காரணமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டன.
 பின்னர் படிப்படியாக 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பாடத்திட்டங்களைக் குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான காலஅட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. மே 3-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படவிருக்கின்றன.
 10-ஆம் வகுப்பு தேர்வுக்கும் எவ்வாறெல்லாம் செயல்படலாம் என்பது குறித்து, அரசு ஆலோசித்துத்தான் வந்தது. தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும், கல்வி பயின்று வருகிற மாணவர்களின் சிரமத்தை அறிந்துதான் பாடத்திட்டங்களைக் குறைத்து தேர்வு வைத்து விடலாம் என்று அரசு திட்டமிட்டிருந்தது.
 ஆனால், தற்போது கரோனா தீநுண்மியின் பரவல் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில், மாணவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, இந்த தேர்வு இல்லாத தேர்ச்சியை அறிவிக்க வேண்டியதாயிற்று என்பதுதான் அரசின் கருத்தாக அறிய முடிகிறது.
 அனைத்து மாணவர்களுக்கும் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பாராத ஒரு அசாதாரண சூழ்நிலையைச் சந்தித்து வருகிற இந்த வேளையில், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்து 2020-21 கல்வியாண்டில் 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நெறிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது. மாணவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்றதன் மூலம் அவர்களின் கற்கும் செயல்பாட்டில் குறை நேர்ந்து விடுமோ என்கிற ஐயப்பாடும் நிலவுகிறது. தொடர் பயிற்சிதான் ஒருவரை சிறந்த வெற்றியாளராக மாற்றுகிறது.
 தேர்வுக்கான பயிற்சியும், அதனையொட்டிய கடின உழைப்பும் மாணவர்களுக்கு தேவையில்லாமல் போய்விடுகிறது என்கிற எண்ணம் ஒருபக்கம் எழுந்தாலும்கூட, சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும் என்று கூறுவதைப்போல மாணவர்களின் உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தானே மனநலம் சிறப்பாக இருக்க முடியும்?
 ஓராண்டாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. வீட்டு முடக்கத்தில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு மாணவச் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, நேரடிப் பயிற்சியின் மூலம் மாணாக்கர்களைச் செம்மைப்படுத்தும் முயற்சி என்பது இயலாமல் போய்விடுகிறது. ஆனால், இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. உலக வல்லரசு நாடுகள் கூட தடுமாறி இருக்கிறன. இந்த வேளையில், இந்த மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
 ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், மாணவர்களின் வருகை முழுமையாக இல்லை. விருப்பமுள்ளவர்கள் வரலாம் என்று அரசு அறிவித்ததால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உயிர்ப் பாதுகாப்புத்தான் முக்கியம் என்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நேரடியாக வகுப்புகளை எடுத்தாலும் கூட, ஓராண்டு கால தேர்வு நடைமுறையை ஒரு மாதத்திற்குள் முடித்தாக வேண்டிய இக்கட்டான நெருக்கடியை ஆசிரியர்களும், மாணவர்களும் சந்தித்தார்கள்.
 ஆகவே, தற்போது தேர்வு வைத்தால் மாணவர்கள் முழுமையாக அதில் ஈடுபாடு கொண்டு செயல்பட முடியாது. அதில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது.
 ஓராண்டாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு கிடப்பதால், இந்த ஆண்டு தேர்ச்சி பெற முடியாத மாணவ, மாணவிகள் அடுத்த ஆண்டு மீண்டும் கல்வியைத் தொடர வாய்ப்பு அற்றுப் போய்விடுகிறது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் போய்விட்டால், அடுத்து 11-ஆம் வகுப்பு படிப்பதற்கு மறுதேர்வு எழுதுவதற்கு அவர்கள் முயலவே மாட்டார்கள்.
 குறிப்பாக மாணவிகளுக்கு இந்த நிலை அதிகம் ஏற்படும். இதனால், கல்வியில் இடைநிற்றல் என்பது அதிகமாகி விடும். மறுதேர்வு எழுதி மீண்டும் படிப்பைத் தொடரும் மாணவிகளின் எண்ணிக்கை வெறும் 10 சதவிகிதம்தான் இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
 ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்பதை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும். இப்படி தேர்ச்சி பெறுகிற மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது என்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கக் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
 மனித குலம் இதுவைக் கண்டிராத கொடும் கரோனா தீநுண்மியை சந்திக்கின்ற இந்த வேளையில் இதுபோன்ற துயர்மிகுந்த தருணத்தை நாம் கடந்துதான் ஆக வேண்டும். இப்படிப்பட்ட நிலையில், தொடக்கக் கல்வியின் நிலையோ எண்ணிப் பார்க்க முடியாத அளவில் உள்ளது. குழந்தைகளுக்கு எழுத்தறிவு என்பதே மறந்து போய் இருக்கக் கூடும். அவர்களுக்கான எழுத்துப்பயிற்சி என்பதும், வாசிப்புப் பயிற்சி என்பதும் அவசியமானவை. வீட்டில் பெற்றோர் பயிற்சி அளிப்பது, பள்ளிகள் திறக்கப்படும்போது அவற்றை ஆசிரியர்கள் தொடர்வதற்கும் பெரும் வாய்ப்பாக அமையும்.
 பெரும்பாலும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள்தான் அரசு பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் படிக்கின்றார்கள். அவர்களுடைய பெற்றோரோ பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த "தேர்வில்லாத் தேர்ச்சி' அறிவிப்பு வரப்பிரசாதமாக அமையும்.
 எல்லாவற்றையும் திறந்துவிட்ட பிறகு, பள்ளிக்கூடத்தை மட்டுமே ஏன் திறக்கக் கூடாது என்கிற கேள்வி எந்தவிதமான மனநிலையைக் கொண்டது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பு வந்ததற்குப் பிறகு, தொற்றுப் பரவல் அதிகமானதற்குப் பிறகு, அதுகுறித்து இவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை இப்போதே நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
 பாடங்கள் நடத்தி தேர்வுகள் வைத்து ஒருவேளை மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தால், அதன் பின்னர் ரத்து செய்திருக்கலாம் என்கிற கேள்வியையும் எழுப்புவார்கள். ஆனால், இது தேர்தலுக்கான காலம். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்தலுக்கான பணிகள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும். அதன் பின்னர் மாணவர்களுக்கான தேர்வு என்பது ஒரு நியாயமான போக்காக இருக்குமா என்கிற கேள்வி எழத்தானே செய்கிறது?
 மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகாத நிலையில் கல்வியாண்டையும், பாடத்திட்டத்தையும் முழுமை செய்யாத அவர்களுக்குத் தேர்வு வைப்பது என்பது ஒருவித நிர்ப்பந்தம் ஆகாதா? அப்படியே தேர்வு வைத்தால் இவர்களுடைய திறனை எவ்வாறு நாம் தீர்மானிக்க முடியும்?
 சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் நகர்ப்புற மாணவர்கள் ஓரளவுக்குத் தேர்வுக்குத் தயாராகி விடுவார்கள். ஆனால், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி விடும். சமத்துவமும், சமூகநீதியும் பெரிதளவில் பாதிக்கப்படும். நகர்ப்புற - கிராமப்புற மாணவர்களிடையே கல்வி கற்றல் இடைவெளி அதிகமாகி விடும்.
 தேசத்தின் எதிர்காலத்தைச் சுமக்கப் போகின்றவர்கள் மாணவர்கள்தான். அவர்களுக்கான தேர்வும், கல்வி சார்ந்த முடிவுகளும் துறைசார்ந்த கல்வியாளர்களின் கருத்தறிந்தே முடிவெடுக்கப்படுகின்றன.
 கரோனா தீநுண்மி காலகட்டத்தில் இதுபோன்ற முடிவுகள் எடுத்துத்தான் ஆகவேண்டும். இல்லையென்றால், மாணவர்கள் போதிய பயிற்சி பெறாமல், ஆண்டு முழுவதும் வீட்டில் முடங்கி இருந்த நிலையில், தேர்வு என்பதை அவர்கள் மீது திணித்தால் அது வரலாற்றுப் பிழையாக ஆகிவிடும்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com