இளைஞர்களைப் புறக்கணிக்கும் கட்சிகள்

இளைய தலைமுறை வாக்காளர்கள், கடந்த காலங்களைப் போலன்றி அரசியல் சூழல் குறித்து விழிப்புணர்வு கொண்டவர்களாக உள்ளனர். 35 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னத்தில் மட்டுமே முத்


தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்திற்கும் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றில் அஸ்ஸாமில் மட்டுமே பாஜக ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த 1967 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதிவிட்டு, தொடங்கிய திராவிடக் கட்சிகளின் ஆட்சி, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் திருப்பங்களை ஏற்படுத்திய தேசிய கட்சிகள், தமிழகத்தில் திராவிட கட்சிகளிடமிருந்து ஆட்சி உரிமையை பறிக்க முடியாமல் தடுமாறி வருகின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அரசியலில் இரு  துருவங்களாக இருந்தபோதிலும், தமிழகத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக முக்கியத்துவம் பெறவிடாமல் பார்த்துக்கொண்டனர். 
அதிமுகவும், திமுகவும் மாறி மாறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளைத் தங்களது கூட்டணியில் வைத்துக்கொண்டபோதிலும், அந்த கட்சிகள் வளர்ச்சி பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தின.  

அந்த இரு தலைவர்களின் காலத்துக்குப் பின்னரே, தமிழக அரசியலில் ஒரு வாய்ப்புக்கான சூழலை உருவாக்க முடியும் என தேசிய கட்சிகள் மட்டுமின்றி, மாநிலத்திலும் சில பிரபலங்கள் காத்திருந்தனர். 

அதன் தொடர்ச்சியாகவே, கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளின் மறைவைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதனை நிரப்புவதற்கு களம் இறங்குவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக்கான கனவோடு பலர் வலம் வரத் தொடங்கியுள்ளனர். 

அதனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் அரசியல் பயணத்தில் வெற்றிடம் ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய களமாக 2021 தேர்தல் அமைந்துள்ளது. 

தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 3.08 கோடி ஆண் வாக்காளர்கள், 3.18 கோடி பெண் வாக்காளர்கள், 7,246 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 33 தொகுதிகள் நீங்கலாக, மீதமுள்ள 201 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே கூடுதலாக உள்ளது.

மொத்தமுள்ள 6.26 கோடி வாக்காளர்களில், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 13.09 லட்சம் பேர் முதல் முறையாக இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அதேபோல், 19 முதல் 29 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சுமார் 1.24 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர். 

இந்த இளைய தலைமுறை வாக்காளர்கள், கடந்த காலங்களைப் போலன்றி அரசியல் சூழல் குறித்து விழிப்புணர்வு கொண்டவர்களாக உள்ளனர். 35 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னத்தில் மட்டுமே முத்திரையிட்டுப் பழக்கப்பட்டவர்கள். 

ஆனால், 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினர், சமூக ஊடகங்களினால் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக, தேர்தல் களத்தில் மாறுபட்ட சிந்தனையில் புதிய  முடிவுகளை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இளம் வாக்காளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில், வேட்பாளர் பட்டியலில் இளைய சமுதாயத்துக்கு (இளம்பெண்கள் உள்பட) குறிப்பிட்ட சதவீதம் தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான அதிமுக-வும் திமுக-வும் வாய்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 

தமிழகத்தைப் பொருத்தவரை, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, தேசியக் கட்சியான பாஜக ஆகியவை இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வழிமுறைகளை கையாளுகின்றன. சமூக ஊடகங்களை இந்த கட்சிகள் ஆயுதங்களாகப் பயன்படுத்தி, இளைஞர் சக்தியை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

அதனை எதிர்கொள்ளும் வகையிலும், எதிர்கால அரசியல் களத்தை வலுப்படுத்தும் வகையிலும், 1.24 கோடி வாக்குகளை கொண்ட இளைஞர் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய நிர்பந்தம் பிரதான திராவிடக் கட்சிகள் முன்பு இருந்தது. 

ஆனால், இந்த எதிர்பார்ப்புகள், அதிமுக - திமுக கட்சிகள் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் மூலம் பொய்த்துவிட்டன. ஐந்து முறைக்கு மேல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அறுபது வயதை கடந்த வேட்பாளர்களுக்கே திராவிடக் கட்சிகள் முக்கியத்துவம் அளித்துள்ளன. 

திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள 173 வேட்பாளர் அடங்கிய பட்டியலில், 49 பேர் முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கின்றனர். ஆனால், இந்த 49 பேரில் ஒருவர் கூட 30 வயதுக்குட்பட்டவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அதிமுக சார்பில் 176 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 15-ஆவது சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களாக இருந்த 124 பேரில், அமைச்சர்கள்  27 பேர் உட்பட 82 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பட்டியலில் இடம்பெற்றுள்ள 176 பேரில் இளைய சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.

அந்தக் காலத்தில் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களை வேட்பாளர்களாகவும் களத்தில் நிறுத்தி வெற்றிக் கனியைப் பறித்த திராவிட இயக்கத் தலைவர்கள் போன்று இன்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே திராவிடக் கட்சிகளின் ஆட்சி  தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்க முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com