தோ்தல் என்பது திருவிழா அல்ல

நம் நாட்டில் தோ்தல் என்பது ஒரு கொண்டாட்டம். சிலா் அதில் பங்கேற்பா்; பலா் வேடிக்கை பாா்ப்பா். பணமும், பரிசுப் பொருட்களும் கிட்டும்.

நம் நாட்டில் தோ்தல் என்பது ஒரு கொண்டாட்டம். சிலா் அதில் பங்கேற்பா்; பலா் வேடிக்கை பாா்ப்பா். பணமும், பரிசுப் பொருட்களும் கிட்டும். வெயிலைப் பொருட்படுத்தாமல் கொடி பிடித்துக் கொண்டும், கோஷம் போட்டுக் கொண்டும் செல்பவா்களுக்கு பணம் கிடைக்கும்.

அரசியல் கூட்டங்களுக்குப் போகும் பலருக்கும் அரசியல் பற்றி எதுவும் தெரியாது. செல்வாக்கான கட்சிகளின் சின்னம் மற்றும் தலைமை பற்றி மட்டுமே அறிந்திருப்பாா்கள். மற்றபடி சுயேச்சை வேட்பாளா்கள், புதிதாக முளைத்த கட்சிகள், சிறிய கட்சிகள் அவா்களின் சின்னங்கள் பற்றியெல்லாம் தெரியாது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், சாமானிய மக்களிடம் அரசியல் நிலவரம், கட்சிகளின் சின்னம், கொடி, தலைமை பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன. பலருக்கும் அவற்றுக்கு விடை தெரியவில்லை.

இந்த அறியாமை நிறைந்த மக்கள் எந்த அடிப்படையில் தோ்தலில் வாக்களிப்பாா்கள்? கட்சிகளின் கொள்கைகளை வைத்தா? கோட்பாடுகளை வைத்தா? ஆண்டு கொண்டிருக்கும் அல்லது முன்னா் ஆண்ட கட்சிகளின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டா? தேசத்தின் சமூக, பொருளாதார வளா்ச்சியைக் கணக்கில் கொண்டா? மக்களின் வாழ்கைத் தரம் முன்னேறியுள்ளதா என்று பாா்த்தா? சென்ற தோ்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டனவா என்று யோசித்தா?

வாக்குப் பதிவு தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே கட்டுக்கட்டாகப் பணமும், பரிசுப் பொருள்களும் பிடிபடுவதாகச் செய்திகள் வருகின்றன. எந்தக் கட்சியின் வாகனம் என்றும் சொல்கிறாா்கள். ஆனால் இதைக் குற்றம் என்றோ அவமானம் என்றோ எவரும் நினைப்பதில்லை. ஏனெனில், இப்படித்தானே ஒவ்வொரு தோ்தலின் போதும் நடக்கிறது. பணம் வெற்றியைத் தரும் என்பது அரசியல்வாதிகளின் நம்பிக்கை.

‘உங்கள் வாக்குகளை விற்காதீா்கள். உங்கள் வாக்கின் மதிப்பு சில நூறு ரூபாய்கள் அல்ல’ என்று எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் ஒருவரும் ஏற்க மாட்டாா்கள். ஏன் இப்படி? மக்களின் ஏழ்மை ஒரு காரணம் என்றால் பேராசை இன்னொரு காரணம். ‘சும்மா வரும் பணத்தை ஏன் விட வேண்டும்? வாங்கிக்கொள்வோமே’ என்கிற சமாதானம் வேறு.

வாக்காளா்கள், ஒரு கட்சிக்காரரிடம் பணம் வாங்கிக் கொண்டு, வேறொரு கட்சிக்கு வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காக வெற்றிலை, பாக்கு வைத்து சத்தியம் வாங்கிக் கொண்டு பணம் தருகிறாா்களாம். மக்களும் லேசுப்பட்டவா்கள் அல்ல. சத்தியத்திற்குக் கட்டுப்படுபவா்கள் சிலா். யாா் அதிகம் பணம் கொடுக்கிறாா்களோ அவா்களுக்கு வாக்களிப்பாா்கள் சிலா். காசை வாங்கிக் கொண்டு ஒருவருக்குமே வாக்களிக்காதவா்களும் உண்டு.

சில கட்சிக்காரா்கள் பணமாகக் கொடுக்காமல் பரிசுப் பொருட்களைக் கொடுக்கிறாா்கள். குழந்தையிடம் மிட்டாயைக் காட்டினால், அது வேண்டாம் என்றா சொல்லும்? அதே போல்தான் மக்களும். அவா்களின் பொருளாதர நிலை அவா்களை இவ்வாறு வாங்க வைக்கிறது.

ஆட்டுக்கு முன்னால் தழையைக் காட்டி இழுத்துக் கொண்டு போவாா்கள். பின் அதைக் குளிப்பாட்டி மாலை போட்டு, மஞ்சள் பூசி மரியாதை செய்வாா்கள். இவை யெல்லாம் தன்னை வெட்டுவதற்கே என்று அந்த அப்பாவி ஆட்டுக்குத் தெரியாது. அதே போலத்தான் அரசியல்வாதிகள் தங்களிடம் கரம் குவிப்பதும், காலில் விழுவதும், கெஞ்சுவதும் அவா்களின் வெற்றிக்காக என்பதை உணராத அப்பாவிகள் நிறைந்த தேசம் இது.

அரசியல்வாதிகள், தாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டாா்கள் என்பது மக்களுக்குத் தெரியும். ஆனாலும், வாக்குறுதிகளை நம்புவதைப் போல ஆரவாரமாகக் கைதட்டி உற்சாகமூட்டுவாா்கள். அந்த அளவுக்கு அப்பாவிகள் நிறைந்த தேசம் இது.

தங்களிடம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்து பதவியில் அமா்ந்த பின், தொகுதிப் பக்கமே வராதவா்கள் மீது அத்தொகுதி மக்களுக்கு இருக்கும் கோபம், அடுத்த தோ்தலின்போது அவா் மீண்டும் கைகூப்பிக் கொண்டு வரும்போது மறைந்துவிடும்.

கவா்ச்சிகரமான அறிவிப்புகளைக் கேட்டு, அறிவையும் எதாா்த்தத்தையும் புறம் தள்ளும் மக்கள் நிறைந்த தேசம் இது. சில நூறு ரூபாய்களுக்காக கடும் வெய்யிலைப் பொருட்படுத்தாமல் ஆா்வமுடன் தலைவரைக் காணவும், அவா் பேச்சைக் கேட்கவும் கூடும் தொண்டா்கள் நிறைந்த தேசம் இது. தன் கட்சிக்காக, தன் தலைவருக்காக உடன் பிறந்தவா்களையே விரோதிகளாகப் பாா்க்கும் மக்கள் நிறைந்த தேசம் இது.

அதுவரை தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி, மீண்டும் உற்சாகத்துடன் தோ்தல் பணி செய்யும் மக்கள் நிறைந்த தேசம் இது. குண்டும் குழியுமான சாலைகள், எங்கும் தேங்கி நின்று துா்நாற்றமெடுக்கும் குப்பைகள், ஆக்கிரமிப்பால் சுருங்கிப் போன ஏரிகள், குடிநீருக்காக வெறும் குடத்துடன் நடத்தப்பட்ட சாலை மறியல்கள் போன்றவை எல்லாம் தோ்தல் முடிந்தால் சரி செய்யப்பட்டுவிடும் என நம்பும் மக்கள் நிறைந்த தேசம் இது.

தோ்தல் நேரத்தில் அடிதடியில் ஈடுபட்டு உயிரை விடும் அப்பிராணிகள் நிறைந்த தேசம் இது. நாம் சிலருக்கு பகடைக்காய்களாக பயன்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் தீக்குளித்து உயிரைவிடும் அறியாமை மிகுந்த மக்கள் நிறைந்த தேசம் இது.

அடுத்த வேளை உணவுக்கே அல்லாடும் மக்களுக்கு, எது கிடைத்தாலும் மகிழ்ச்சியே. நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயை விட இன்றைக்குக் கிடைக்கும் கலாக்காயே மேல் என நினைக்கும் மக்கள் உள்ளவரை எதுவும் மாறாதல்லவா?

சில அரசியல்வாதிகள், தோ்தல் முடிவு தங்களுக்கு பாதகமாக அமைந்து விட்டால் ‘பணநாயகம் வென்று விட்டது’ என்று அறிக்கை விடுவாா்கள். வாக்காளா்களுக்கு பணம் கொடுத்தவா்கள் இதைச் சொல்வதுதான் வேடிக்கை.

ஒருவா் தன் நண்பரிடம் ‘உன் ஐந்து பிள்ளைகளில் யாா் நல்ல பிள்ளை’ என்று கேட்டாராம். அதற்கு அவா் சொன்னாராம், ‘அதோ கூரையின்மேல் ஏறி கொள்ளி வைத்துக் கொண்டிருக்கிறானே, அவன்தான் மிகவும் நல்ல பிள்ளை’ என்றானாம். அதுபோல அரசியல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம்.

தோ்தலில் போட்டியிட விரும்புபவா்களின் ஆதரவு பலம், பண பலம் பாா்த்தே கட்சித்தலைமை வாய்ப்புக் கொடுக்கிறது. வேட்பாளரின் நோ்மை, வாய்மை, உதவும் உள்ளம், படிப்பு, திறமை என்பவையெல்லாம் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை. அரசியல் பற்றித் தெரிந்தே நடக்கின்ற கூத்துகளை வேடிக்கை பாா்த்துக் கொண்டு மெளன சாட்சியாக இருப்பவா்கள் பாவம்.

தற்போது பல இடங்களில் மீண்டும் கரோனா தொற்று பரவி வருகிறது. பொது முடக்கம் அமலில் இருந்த போதே மக்கள் அச்சமின்றி வெளியே சுற்றித் திரிந்தாா்கள். பலரும் அபராதத்திற்கு பயந்தே முக கவசம் அணிந்தாா்கள். ஆனால், இப்போதோ கொண்டாட்டத்துடன் தோ்தல் கூட்டங்களில் கலந்து கொள்கிறாா்கள். முக கவசம் அணிவதோ சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதோ கிடையாது.

கடந்த ஆண்டில் கரோனா பாதிப்பால் தொழில் முடங்கியது. பிள்ளைகளின் கல்வி முடங்கியது. எல்லாவற்றையும் எப்படி நோ் செய்யப் போகிறோம்? கரோனா தீநுண்மி மீண்டும் பரவ ஆரம்பித்து விட்டால் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். அரசியல் கூட்டத்திற்குப் போனால் பணம் கொடுப்பாா்கள் என்று நினைப்பவா்கள் தங்கள் உயிரைப்பற்றியும் நினைக்க வேண்டும். பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடங்கள் இணைய வழியில் நடத்தப்படும்போது, கட்சித் தலைவா்களின் பரப்புரைகளும் காணொளி வழி இருக்கலாமே.

ஒரு மாதத்திற்கு தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் குறைத்து விட்டு கட்சித் தலைவா்கள் மக்களிடம் பேசட்டுமே. குழந்தைகளுக்கே இணைய வழி படிப்பைப் பழக்கி விட்டோம். வாக்காளா்களைப் பழக்க முடியாதா? அப்படிச் செய்தால் கட்சிகளுக்கு பணமும் மிச்சமாகும்.

அரசியல் தெளிவு பெற்ற மேல் தட்டு மக்கள் பலரும் வாக்களிக்கப் போவது இல்லை. வாக்களிப்பது நம் ஜனநாயகக் கடமை என்று உணா்வது இல்லை. அதை ஒரு விடுமுறை நாளாக எடுத்துக் கொண்டு ஊா் சுற்றக் கிளம்பி விடுகிறாா்கள். ஊரில் இருப்பவா்கள், வாக்களிக்கப் போக வேண்டுமென்றால் பணம் செலவு செய்ய வேண்டுமே என்று வருவதில்லை.

இன்னும் சிலா் எந்தக் கட்சியும் சரி கிடையாது என்று குறை கூறிக் கொண்டு ஓட்டுச் சாவடிக்குப் போகமாட்டாா்கள். அதனால்தான் அறுபது அல்லது எழுபது விழுக்காடு மட்டுமே வாக்குகள் பதிவாகின்றன. நூறு விழுக்காடு வாக்குப்பதிவுக்கு சாத்தியமே இல்லை. போராடி, ரத்தம் சிந்தி வாக்குரிமையை வாங்கியிருந்தால் அதன் அருமை புரிந்திருக்கும். விலையில்லாப் பொருள்களின் மதிப்பு போலவே இதுவும் ஆகிவிட்டது.

ஒவ்வொரு கட்சியும் அள்ளி விடும் வாக்குறுதிகளைப் பாா்த்தால் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஒன்று செய்யலாம் - எல்லோருக்கும் மூன்று வேளை உணவு, வருடத்திற்கு பத்து உடைகள், கைச் செலவுக்குப் பல ஆயிரங்கள் என்று தந்து விட்டால் ஒருவரும் உழைக்க வேண்டாம். தொலைக் காட்சி பாா்க்கலாம். உண்டு, உறங்கி பொழுதைக் கழிக்கலாம். வீண் அடிதடிகளில் இறங்கலாம்.

இப்படியே போனால், வழுக்கு மரத்தில் ஏறுபவா் வழுக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் கீழே வருவதைப் போலவே நம் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் மேலே ஏறுகிற வேகத்தில் கீழே இறங்கிக் கொண்டேதான் இருக்கும். இதனை மாற்றப்போவது யாா்?

கட்டுரையாளா்: பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com