வரலாறு காணாத தள்ளுபடி

இலவசங்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு ரொம்ப வருடமாகவே பழக்கமானவைதான்.


இலவசங்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு ரொம்ப வருடமாகவே பழக்கமானவைதான். தொலைக்காட்சிப்  பெட்டி, மடிக்கணினி போன்றவை இதற்கு முன்பும் அளிக்கப் பட்டிருக்கின்றன. இலவசத்துக்கும், தள்ளுபடிக்கும் சிறிய வேற்றுமை உண்டு.

இப்போது கூட்டுறவுச் சங்கங்கள் தாங்கள் வழங்கியுள்ள விவசாயக் கடன், கல்விக் கடன் எல்லாமே தள்ளுபடி என்று அறிவித்திருப்பது வியப்பைத் தருகிறது. ஏனெனில், கடந்த இரண்டு ஆண்டு இயற்கையின் கருணையினால் மழை எதிர்பார்த்த வண்ணமே பெய்துள்ளது. வறட்சி இல்லை. ஒரு சில தென் மாவட்டங்களில் மட்டும் வெள்ளம் பெருக்கெடுத்தது. 

இது போன்ற காலங்களில் அரசு வங்கிகள்கூட தவணைக் காலத்தை ஒத்திப் போட்டு, அதிக வட்டி பற்று ஆகாமல் பார்த்துக்கொள்வார்கள். கரோனா நோய்த்தொற்று காலத்தில், வாடிக்கையாளர்களின் கோரிக்கை இல்லாமலே தவணை தள்ளுபடி செய்யப்பட்டது.

நிலைமை இப்படியிருக்க, கூட்டுறவு வங்கிகளின் அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி என்கிற அறிக்கை  அரசியல் உத்திதான் என்பதில் சந்தேகமில்லை. தள்ளுபடி என்பது வங்கிகளுக்குப் பழக்கமான ஒன்றுதான். 

பல்வேறு தருணங்களில், பல்வேறு காரணங்களுக்காக, வட்டி விகிதத்தைக் குறைத்தோ அல்லது அசல் தொகைக்கே கூட சலுகை காட்டியோ கடனை வசூல் செய்வார்கள். ஆனால், ஒட்டுமொத்த தள்ளுபடி என்பது அதிலும் நகைக் கடன்களும் சேர்த்து என்பது இதுவரை கேள்விப்பட்டிராதது.

இத்தகைய "ஒட்டுமொத்த' தள்ளுபடிக்கு 1989-இல் பிள்ளையார் சுழி இட்டவர் அன்றைய ஜனதா தள அரசில் அமைச்சராக பதவி வகித்த தேவிலால்தான். ஆனால் அவர், தள்ளுபடி தொகைக்கு உச்சவரம்பு ரூ.10,000 என்று நிர்ணயித்தார். மேலும் "கடன் தொகை' என்று தெரிவிக்கப்பட்டதே தவிர நகைக் கடனும் சேர்ந்தது என்று  குறிப்பிடவில்லை.

நான் தாராபுரத்தில் வங்கி மேலாளராகப் பணியாற்றிய சமயம், இந்தத் தள்ளுபடித் திருவிழா கோலாகலமாக நடந்தது, அப்போதைய கோவை மாவட்டத்தில் எங்கள் வங்கிதான் "முன்னோடி' (லீட்) வங்கி என்ற காரணத்தால், பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல பெரிய வங்கிகளுக்கு விளக்கம் அளித்தார் எங்கள் வங்கி மேலாளர்.

"நகைக் கடன் கூடவா?' என்று வேறு ஒரு வங்கியின் அதிகாரி வினா எழுப்பியபோது, "இது மத்திய அரசு உத்தரவு, சொன்னபடி செய்ய வேண்டியதுதான்' என்று பதில் வந்தது. 

தாராபுரக் கிளையில் அப்போது எழுநூற்றுக்கும் மேல் விவசாய வாராக்கடன்கள், ஆனால் தொகை என்னவோ ஒவ்வொன்றும் ரூ.10,000, 20,000 தான். இந்தத் தொகை அந்தப் பகுதி விவசாயிகளுக்கு (பெரும்பான்மை பயிர் கரும்பு) ஒரு பொருட்டேயல்ல.

ஆனால், அத்தனை பேரும் ஏதோ சத்திய வாக்குக்குக் கட்டுப்பட்டவர்கள் மாதிரி, அப்போதைய விவசாயச் சங்கத் தலைவருக்கு அடங்கியிருந்தார்கள். "தேவிலால் உத்தரவு' அமலாவதற்கு சில வாரம் முன்புதான் ஒருவர் கடன் முற்றிலுமாக செலுத்தி அடைத்தார். பிறகு வேறு ஏதோ காரணத்துக்காக வங்கிக்கு அவர் "கடனை ஒழுங்காகத் திருப்பிக் கட்டுகிற என் மாதிரி ஆட்களுக்கு காலமில்லை' என்று கேலியாக விமர்சித்தார்.

இன்றைய அரசின் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக் கடன் (நகை உட்பட), கல்விக் கடன் எல்லாமே தள்ளுபடி செய்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "நகைக் கடன் தள்ளுபடி' என்கிற வாசகத்தின் பின்னுள்ள தர்க்கம் (லாஜிக்) நிரம்பவே உறுத்துகிறது. 

திடீரென்று ஏற்படும் அவசரச் செலவுக்குத்தான், இருபதாயிரமோ அதற்கு மேலோ கடன் பெறுவது வழக்கம். ஆறு மாசத்துக்குப் பிறகு பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போல பண்டிகை வந்தால், நகையை மீட்டு விடுவார்கள். கிராம, புறநகர் விவசாய மக்களுக்கு என்றுமே நகைகளின் மீது ஓர் உணர்வுபூர்வமான தொடர்பு உண்டு.

விவசாயிகளுக்கு, தங்கள் நிலத்தின் மீதுள்ள பற்று இன்னும் ஒரு படிமேலே என்று சொல்லலாம். பிரபல விமர்சகர் க.நா.சு.வால் போற்றப்பட்ட நாவல் சங்கரராம் எழுதிய "மண்ணாசை'. 

திருச்சிக்கு சிறிது அப்பாலிருந்த கிராமத்தில் இரண்டு ஏக்கர் நஞ்சை நிலத்தை, அறிவீனத்தாலும், மோசடியாலும் ஒரு மனிதர் அடமானம் வைத்தாராம். ஆனால் நிலம் ஜப்தி செய்யும் சூழல் வந்ததுமே, குடும்ப மொத்தமும் சிதறிப் போனதாம். இதைத் தாம் நேரில் கண்டதாகவும், "மண்ணாசை' நாவலின் பினனணி இதுதான் என்றும் சங்கரராம் தமது முன்னுரையில எழுதியிருக்கிறார்.

இந்த மண்ணாசையை, என் சக அதிகாரி நேரிடையாகப் பார்த்திருக்கிறார். பத்து வருடத்துக்கு மேல் வாராக்கடனாக இருந்த 20,000 ரூபாயை மீட்க அதிகாரி தீவிர நடவடிக்கை எடுத்தபோது, கடன்தாரின் வாரிசுகள் அழுது அரற்றி, கெஞ்சி கூத்தாடினார்களாம். 

பிறகு வட்டியில் நிறைய சலுகை பெற்று நிலத்தை மீட்டுவிட்டார்களாம். இது நிலத்தில் கிராமத்தினருக்கு இருக்கிற பிடிப்பை ஒருபுறம் காண்பிக்கிறதென்றால், மறுபுறம் விவசாயிகள் தாங்கள் வசிக்கும் இடத்தை விட்டு, வேறு இடத்திற்கு ஓடிவிடமாட்டார்கள் என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது.

இன்னொரு அம்சத்தையும் இங்க குறிப்பிடவேண்டும். கூட்டுறவு வங்கிகளில், "அபெக்ஸ்' "அர்பன்' "நில விஸ்தரிப்பு' போன்ற பல பிரிவுகள் இருக்கின்றன. விசாரித்த அளவில், கல்விக் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள நிறைய இல்லை. இதில் காலத் தவணையும் குறைவு. வட்டி விகிதமும் அதிகம். மத்திய அரசு வங்கிகள் நீண்ட கால தவணையில் கல்விக் கடன் வழங்குகையில், கூட்டுறவு வங்கிகளை நாட வேண்டிய அவசியமென்ன?

ஏற்கெனவே தமிழ்நாடு பலத்த கடன் சுமையில் திணறுகிறது. இந்தத் தள்ளுபடிகள் கடன் சுமையைக் கூட்டவே வழிவகுக்கும். நேர்மையான கடன்தாரர்களை ஏமாளிகளாக்கும் வகையில் அரசு எடுத்த முடிவு வரவேற்கத்தக்கதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com