நல்லோரைத் தேர்ந்தெடுப்போம்!

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளையும் அவற்றின் பிரசார உத்திகளையும் வாக்களிக்கப்போகும் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளையும் அவற்றின் பிரசார உத்திகளையும் வாக்களிக்கப்போகும் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு சமூக ஊடகங்களின் முயற்சிகளும், உழைப்பும் பெரும் பங்கு வகிக்கின்றன. அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் அணுகுமுறை, பிரசாரம் மேற்கொள்ளும் முறை அனைத்தும் உடனுக்குடன் மக்களை சென்றடையச் செய்வதில் பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் செய்யும் சேவைகள் சிறப்பானவை.
தங்களுக்காக பாடுபடக்கூடிய, நேர்மையான, திறமையான வேட்பாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய பெரும் கடமை வாக்காளர்களுக்கு உள்ளது. தற்போதைய கரோனா தீநுண்மிப் பரவல் அச்சுறுத்தல் சூழலில், வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்கு எந்திரங்களைத் தயார் செய்யும் வழக்கமான பணியுடன், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, வாக்காளர்களுக்கிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்தி அவர்களைப் பாதுகாப்புடன் வாக்களிக்க செய்ய வேண்டிய கூடுதல் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு வேட்பாளர் செலவு செய்ய வரைமுறை வகுத்து, செலவு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற நடைமுறை கொண்டுவரப்பட்டபோது, அதற்கான எதிர்ப்புகளும் வந்தன. அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கத் திட்டமிட்டபோது, அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி வாக்களிக்க வைப்பது சாத்தியமில்லை என்று சொன்னார்கள். இன்று அது சாத்தியமாகி உள்ளது. 
தேர்தலை நியாயமாக நடத்த வைக்கும் இது போன்ற சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த, சட்டங்கள் இயற்ற அரசு, அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். "காகிதத்தில் இருக்கும் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தாலே, நேர்மையான தேர்தலை நடத்த முடியும்' என்று சொன்னதோடு, அதனை நிரூபித்தும் காட்டியவர் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். 
பிரசாரத்திற்கு வரும் தலைவர் உரை கேட்க  நள்ளிரவு தாண்டியும் தூங்காமல் ஒலிபெருக்கி ஓசையுடன் விழித்திருக்கும் தொண்டர்கள், தனது கட்சிக்கு வாக்களிக்க, வாக்காளர்களை வாகனத்தில் அழைத்து வருவது, வாக்குச்சாவடி அருகிலேயே முகாமிட்டு வாக்காளர்களைக் கவர்வது என அனைத்தையும் ஒரே நாளில்  தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் இவர். "தூங்கிக்கிடக்கும் சட்டங்களை எழுந்து நடக்க வைத்தாலே போதும்; தேர்தலை நியாயமான முறையில் நடத்துவது சாத்தியமாகும்' என்றார் சேஷன்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏ.டி.ஆர்), தில்லி உயர்நீதிமன்றத்தில் 1999-ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. வேட்பாளர்கள், தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகளைக் குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அது கோரியது. உயர்நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, வேட்பாளர்கள் தங்கள் குற்றப்பின்னணிகளை வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டது.  
தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதும், அத்தீர்ப்பினை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்த்தன. இதை ஏற்கக் கூடாதென அன்றைய மத்திய அரசுக்கு பல விதங்களில் அழுத்தங்களைக் கொடுத்தன. பின்னர், இந்த வழக்கு மத்திய அரசின் மேல்முறையீடு மூலம்  உச்சநீதிமன்றம்வரை சென்றது. உச்சநீதிமன்றம், வேட்பாளர்களின் குற்றங்களை இனம் கண்டு வாக்களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைப்பதால், வேட்பாளர்கள், தங்கள் குற்றப் பின்னணிகளை வேட்பு மனுவில் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்தது.  
ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று 22 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானம் போட்டன. இதனாலேயே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், ஏ.டி.ஆர் அமைப்பு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகியது. அதன் விளைவாக, 2013 மார்ச் மாதம், தனது முந்தைய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. 
இதன் பின்னரே வேட்பாளர்கள் தங்கள்  வேட்புமனுவில் குற்றவியல் பின்னணிகளை குறிப்பிடத் தொடங்கினர். இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்ட வேட்பாளர்கள் பலர் தேர்தலில் போட்டியிடுவதும், தண்டனைகள் இல்லையென்றால் போட்டியிடலாம் என்ற சட்ட வாய்ப்பை காரணம் காட்டி, குற்றவழக்குகளை சுமந்தவாறே பல தேர்தல்களை அவர்கள் சந்தித்திருப்பதும், அவர்களுள் பலர் வெற்றிபெற்று தொடர்ச்சியாக சட்டப்பேரவைக்குச்  செல்வதும் பின்னரே வெளிப்படையாகத் தெரிந்தது.
ஊழல் எண்ணம் கொண்ட ஒருவர் ஆட்சிக்கு வந்தால், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஊழல் செய்து, கையூட்டு வாங்குவதை கேள்வி கேட்டுத் தடுக்கும் தார்மிக அதிகாரத்தை அவர் இழக்கின்றார். இதுவே அனைத்து வித ஊழலுக்கும் அடிப்படைக் காரணம். குற்ற வழக்குத் தொடர்புடையோரை தேர்தலில் போட்டியிடத் தடுக்கும் சட்ட நடைமுறை அவசியம் தேவை.  
"கடந்த நான்கு பொதுத் தேர்தல்களில், அரசியலில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. 2004-ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினர்களில் 24% பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  2009- இல் 30%, 2014-இல் 34%, 2019-ஆம் ஆண்டில் 43% எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2018-இல்  உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள அனைத்து கிரிமினல் வழக்கு விவரங்களையும் ஊடகங்களில் வெளியிட வேண்டுமென கூறியிருந்தது. ஆனால், பல கட்சிகள் கடந்த பல தேர்தல்களில் இதனை நடைமுறைப்படுத்தாததால், இந்திய தேர்தல் ஆணையர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி ஆர்.எஃப். நரிமன், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
தங்கள் கட்சி சார்பாக தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளூர் செய்தித்தாள்களில் மட்டுமல்லாமல், தங்கள் கட்சி வலைதளங்கள், சமூக ஊடகங்களிலும் வெளியிடுவது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இத்தகைய குற்றப் பின்னணியுடைய நபர்களைத் தேர்வு செய்து தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தும் காரணங்களையும்,  அதேபோல் குற்றவியல் பின்னணி ஏதும் இல்லாத பிற நபர்களை அந்த அரசியல் கட்சிகள் ஏன் தங்கள் வேட்பாளர்களாக தேர்வு செய்யவில்லை என்பதையும் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இந்த விவரங்களை மாநில மொழி செய்தித்தாள் ஒன்றிலும் தேசிய செய்தித்தாளிலும் வெளியிட வேண்டும். இந்த விவரங்களை வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு  இரண்டு வாரங்களுக்கு முன், இவற்றில் எது முந்தியதோ அப்போது வெளியிட  வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 
இதன் விவரங்களை வேட்பாளரைத் தேர்ந்தெடுத்த 72 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்க வேண்டுமெனவும் ஆணையிட்டுள்ளனர். இதை மீறும் அரசியல் கட்சிகளை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டுமென  உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நல்ல மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க நீதிமன்றம் உதவி வருவதை இது போன்ற தீர்ப்புகள் காட்டுகின்றன.
பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழி அரசியல் என்று தப்புக்கணக்கு போடும் பலருக்கு இந்தத் தீர்ப்பு சரியான பாடமாக அமைவதோடு, நேர்மையான வேட்பாளர்களை முன்னிறுத்த அரசியல் கட்சிகள் முன்வரும் சூழலும் உருவாகியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் குறித்து நன்கு ஆராய்ந்த பின்னர் அவருக்கு வாக்களிக்கும்படி  வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் கண்காணித்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்திற்குக் கூடுதலாகத் தரப்பட வேண்டும். 
நேர்மையோடு பணியாற்றி உயர்ந்த பதவி வகிப்போர் இன்றும் உண்டு. இதுபோன்ற கண்ணியம் காப்போர் மக்கள் மன்றத்தில் நிறைந்திட வேண்டும். இவர்களைப் போன்றவர்களை எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களாக மக்கள் முன் நிறுத்த வேண்டும்.
"ஆட்சி செய்வோர் உண்மையின் வடிவாகவும், அறத்தின் இருப்பிடமாகவும், மக்களில் மேலானவர்களாகவும், குடிமக்களின் தாயாகவும் தந்தையாகவும், குடிகளின் நலனையே நாடுபவனாகவும் இருக்க வேண்டும் என்கிறது' மாபெரும் இதிகாசமான ராமாயணம்.
நேர்மை, எளிமை, தியாக உணர்வு, சேவை மனப்பான்மை போன்ற பண்புடையோர் தேர்தலில் களம் காணவும், கட்சிகளின் வேட்பாளர்களாகக் களமிறங்கவும் நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இது சார்ந்த செயல்பாடுகளுக்கு கட்சிகள் யாவும் ஓரணியில் நின்று பாடுபட்டால், எதிர்காலத்திலாவது தமிழக சட்டப்பேரவை சிறந்த மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த சபையாக மாறும்.  

கட்டுரையாளர்:  பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com