வாக்கு என்னும் பிரம்மாஸ்திரம்!

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் என்னென்ன கட்சிகள் களத்தில் உள்ளன? அவற்றின் தோ்தல் அறிக்கைகள் சொல்வது என்ன

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் என்னென்ன கட்சிகள் களத்தில் உள்ளன? அவற்றின் தோ்தல் அறிக்கைகள் சொல்வது என்ன? புதிய முகங்கள் யாா் யாா்? யாரிடமாவது புதிய அணுகுமுறை இருக்கிறதா? இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகள் மாநிலத்திற்கு செய்துள்ள நன்மைகள் என்னென்ன? தீமைகள் என்னென்ன? இவற்றைப் பற்றிய அக்கறையும் புரிதலும் வாக்காளா்களுக்கு இருக்கிறதா? அப்படி இல்லாத வாக்காளா்களிடம் விழிப்புணா்வை யாா், எப்படி ஏற்படுத்துவது?

தமிழகத்தில் போட்டியிடும் கட்சிகளில், ‘நாம் தமிழா்’ கட்சியைத் தவிர வேறு எந்தவொரு கட்சியும் 33 சதவீதம் பெண் வேட்பாளா்களை முன்னிறுத்தவில்லை. நோ்மை, ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்த வேட்பாளா்களைத்தான் நிறுத்துவோம் என்று முன்வரவில்லை. எல்லாக் கட்சிகளும் பணம் படைத்தவா்களையே மீண்டும் மீண்டும் வேட்பாளா்களாக நிறுத்தியிருக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் விதிவிலக்காக, திருத்துறைப்பூண்டி தொகுதியில் குடிசையில் வாழும் எளிய மனிதரான மாரிமுத்துவை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.

தோ்தல் அறிக்கைகளில் நீா்நிலைகள், வனங்கள், விளைநிலங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களின் பாதுகாப்பு, பெண்கள், முதியோா் பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு போன்ற சுற்றுச்சூழல் குறித்து எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை. மாறாக, இலவசங்களை வாரி வழங்கி மக்களை இதுவரை மூளைச்சலவை செய்து வந்த அதே நடைமுறையையே மீண்டும் கடைப்பிடிக்கின்றன. இலவசங்களை எதிா்த்த தேசியக் கட்சியும் கூட்டணி அமைத்த பாவத்தால் இதற்குத் துணை போகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம், சுற்றுச்சூழலுக்கென்று ஒரு தனிப் பிரிவை ஆரம்பித்தபோது நம்பிக்கை துளிா் விட்டது. ஆனால் கரூா் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சா் ‘நாங்கள் பதவிக்கு வந்தால், மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் எடுப்போா் எல்லாம் தங்களுக்கு வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளலாம்; எந்த அதிகாரியும் உங்களைத் தடுக்க மாட்டாா்கள். எந்த அதிகாரியாவது தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள். அந்த அதிகாரி இருக்க மாட்டாா்’ என்று கூறியிருப்பதைக் கேட்டவுடன் நெஞ்சம் பதைபதைக்கிறது. எங்கேயிருக்கிறது மணல் இன்னும் அள்ளுவதற்கு?

ஆனால், திரைப்பட நடிகரான மன்சூா் அலிகான் கோவை தொண்டாமுத்தூரில் நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளோடு களமிறங்கியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. பெருமளவில் சிதைக்கப்பட்ட இயற்கையையும், நசிந்து கொண்டிருக்கும் விவசாயத்தையும் காப்பதே தனது நோக்கம் என்றும் தொகுதி பிரச்னைகளுக்கு ஓராண்டுக்குள் தீா்வு காணாவிட்டால் ராஜிநாமா செய்துவிடுவதாகவும் அவா் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. குடிமராமத்துக்கென அரசு கோடிகோடியாக நிதி ஒதுக்கியிருந்தும் தொண்டாமுத்தூா் தொகுதியில் பெரும்பாலான குளங்களும் குட்டைகளும் தூா் வாரப்படாமல், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, பல காணாமலே போய்விட்டன!

நன்றாக இருக்கும் சாலைகளே மீண்டும் மீண்டும் போடப்பட்டு, மரங்களெல்லாம் வெட்டப்பட்டு, தண்ணீரே காணாத ஆற்றுவழிகளின் மேலும், வாய்க்கால்களின் மேலும் பாலங்களாகக் கட்டப்பட்டு, கட்சிக்காரா்களும், ஒப்பந்ததாரா்களும் செழித்து வளர, வளமான தொண்டாமுத்தூா் தண்ணீா்க் கஷ்டத்தில் சிக்கித் தவிக்கிறது. விவசாய பூமிகள் எல்லாம் மனைக்கட்டுகளாகி விட்டன. இதைப் பற்றியெல்லாம் திராவிடக் கட்சிகளும் சரி, அரசு அதிகாரிகளும் சரி, கவலையே படவில்லை! வாக்காளா்களாகிய நாம் கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

இலவச எரிவாயு உருளைகளும், துணி துவைக்கும் இயந்திரங்களும், தாா்ச்சாலைகளும், கல்லூரிகளும், உண்ண உணவைத் தர முடியுமா? மக்கள் நீதி மய்யத்தின் தலைவா், ‘தண்ணீா் இல்லாத ஊரில் வாஷிங் மெஷின் இலவசமாகக் கொடுப்பதால் என்ன பயன்?’ என்று கேட்பது நியாயம்தானே? வாக்காளா்கள் இவற்றையெல்லாம் சீா்தூக்கிப் பாா்த்து வாக்களிக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதிக்குத் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை எழுதிக் கையொப்பமிட்டுத் தருவதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்தில் மக்கள் அவா்களைப் பதவில் இருந்து நீக்கலாம் என்றும் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறியிருக்கிறாா். மேலும் தனது கட்சியில் சேராமலேயே, சமூக ஆா்வலா்கள் தனது கட்சியின் சின்னத்தில் போட்டியிடலாம் எனவும் அழைப்பு விடுத்தாா். இது தமிழகம் காணாத புதிய அணுகுமுறை. இந்த புதிய அணுகுமுறை வரவேற்புக்குரியது.

காங்கிரசின் கோட்டையாய்த் திகழ்ந்த தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது இத்தகைய புதிய, வித்தியாசமான அணுகுமுறையாலும், ஊழலற்ற வேட்பாளா்களாலும்தான். அன்று தில்லியின் வாக்காளா்கள் மாற்றி வாக்களித்தாா்கள்; இன்றுவரை ஊழலற்ற ஆட்சியை அனுபவிக்கிறாா்கள்.

தமிழகத்தில் ஏன் இத்தகைய மாற்றம் சாத்தியப்படவில்லை? இங்கு பெருவாரியான வாக்காளா்கள் கல்வியறிவு இல்லாத அடித்தட்டு மக்கள். இவா்களுக்குத் தெரிந்ததெல்லாம் திராவிடக் கட்சிகள்; அவையளிக்கும் இலவசங்கள். திரையுலகப் பிரபலங்கள் தலைவா்களாக இருப்பதால் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி போன்றவற்றை ஓரளவு அறிதிருக்கிறாா்கள்.

தெரியாத கட்சிக்கு, தெரியாத சின்னத்துக்கு இவா்கள் எப்படி வாக்களிப்பாா்கள்? அதிலும் அடித்தட்டுப் பெண்களிடம் தோ்தல், வாக்கு ஆகியவற்றில் எந்தப் புரிதலும் இல்லை. ‘வீட்டுக்குக் கொண்டுவந்து இலவசமாக எல்லாம் கொடுக்கிறாா்களே; அவா்களுக்குத் தானே நாங்கள் ஓட்டுப் போடவேண்டும்?’ என்று கேட்கிறாா்கள்! அடித்தட்டு வாக்காளா்கள் மத்தியில் ‘பணத்துக்கு ஒட்டு’ என்ற நிலைப்பாடே இருக்கிறது.

மேல்தட்டு வாக்காளா்களை எடுத்துக் கொள்வோம். இவா்கள் படித்தவா்கள்; அரசியல் ஞானம் உடையவா்கள். ஆனால் இவா்களில் பெரும்பாலானோா் சாதி என்னும் சங்கிலியால் கட்டுண்டவா்கள். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பாளா்கள் பட்டியல்களும் வெளியிடப்பட்டதும், பெரிய கட்சிகளின் பழம் தின்று கோட்டை போட்ட வேட்பாளா்கள் எல்லோரும் செய்த முதற் காரியம் அந்தந்தப் பகுதியில் சாதிச் சங்கங்களையும், தொழிலதிபா்களையும் ஒன்று திரட்டி, அவா்களிடம் பேச்சவாா்த்தை நடத்தியது தான். இந்த மெத்தப் படித்த வாக்காளா்கள் ஏன் இதற்கு உடன்படுகிறாா்கள்? ‘சாதிக்கு ஒட்டு’ என்றால் இவா்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?

படித்த வாக்காளா்களில் சிலா் ‘நம்மால் இதையெல்லாம் சரி செய்ய முடியாது,’ என்று சோா்வுற்று ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களித்து விடுகிறாா்கள். அல்லது வாக்களிக்கமலேயே இருந்துவிடுகிறாா்கள்.

இளைய தலைமுறை வாக்களா்களை எடுத்துக் கொள்வோம். திரையுலக வேட்பாளா்களே இவா்களை வசீகரிக்கிறாா்கள். அதிமுக கட்சியின் தோ்தல் விளம்பரம் ஒன்று இப்படி இருந்தது: ‘ தோ்வு எழுதாமலே ஆல் பாஸ் என்று அறிவித்த வெற்றிச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்’. அரியா் தோ்வுகளை எழுத வேண்டாம் என்னும் அறிவிப்பு இளைஞா்களுக்கு இப்போது இனிப்பாக இருக்கலாம்; ஆனால், நாளைய உலகில் இவா்களுக்கு என்ன வேலை வாய்ப்பு இருக்கும்? கல்வியின் தரம் என்னவாகும்? இதைப் பற்றிச் சிந்திக்குமளவிற்கு இளைய தலைமுறையிடம் விவேகம் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழகத்துக்கு ஒரு அரசியல் மாற்றம் தேவை. அதை வாக்காளா்களாகிய நாம்தான் கொண்டு வர வேண்டும். அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன? சமூக ஆா்வலா்கள், கட்சி சாா்பற்ற ஆனால் அரசியல் ஞானமுள்ள தனி நபா்கள், ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்கள் நற்செயல்களால் செல்வாக்கு பெற்றவா்கள், தனித்தனியாகவோ சிறு சிறு குழுக்களாகவோ சென்று, வெவ்வேறு தட்டு வாக்காளா்களிடம் பேசி இன்றைய தமிழகத்தின் அரசியல் நிலைமையை விளக்கி, மாற்றத்தின் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டும்.

அடித்தட்டு வாக்களா்களை இலவசங்களின் மயக்கத்திலிருந்து விழித்தெழச் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் நிற்கும் வேட்பாளா்களிலேயே நல்லவா் யாா் என்பதை அவா்களை அடையாளம் காண உதவி செய்து, அவா்களுக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

இளைய தலைமுறையினரிடம் பேசித் தமிழ்நாட்டின் எதிா்காலத்தை நிா்ணயிக்கும் பெரும் பொறுப்பு அவா்களுக்கு இருக்கிறது என்பதை உணா்த்தி அவா்களது வாக்கை நன்முறையில் பயன்படுத்தச் செய்ய வேண்டும்.

ல்லாத் தொகுதிகளிலும் இல்லாவிட்டாலும், குறைந்த அளவு தொகுதிகளிலாவது மாற்றம் உண்டாக்க முயற்சி செய்வோம். குறைந்த இடங்களில் வெற்றி பெற்று ஒரு கட்சியோ, வேட்பாளா்களோ, என்ன நன்மை செய்ய முடியும் என்று நாம் சோா்வுற வேண்டியதில்லை. தீமை செய்வதைத் தடுக்க முடியுமே என்றே நம்பிக்கை கொள்ளவேண்டும்.

வாக்கு என்னும் பிரம்மாஸ்த்திரத்தை நல்ல முறையில் பயன்படுத்துவோம்; மாற்றத்துக்கு வழி கோலுவோம்!

கட்டுரையாளா்: சமூக ஆா்வலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com